நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 29 செப்டம்பர், 2008

மொழியியல் அறிஞர் முனைவர் பொன்.கோதண்டராமன்(பொற்கோ)


மு.இளங்கோவனுக்கு முனைவர் பொற்கோ அவர்கள் பாவேந்தர் மரபுப்பாவலர் பட்டம் அளித்துப் பணமுடிப்பு வழங்கல்,29.04.2002(பாவேந்தர் பாசறை சென்னை, கோப்புப் படம்)

தமிழ் அறிஞர்களும் மொழியியல் அறிஞர்களும் பொற்கோ என அழைக்கும் முனைவர் பொன் கோதண்டராமன் அவர்கள் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் இரும்புலிக் குறிச்சி என்னும் ஊரில் 1941 சூன்மாதம் ஒன்பதாம் நாள் பிறந்தவர்.

பிறந்த ஊரான இரும்புலிக்குறிச்சியில் தொடக்கக் கல்வியைப் பயின்ற பொற்கோ அவர்கள் மேல்நிலைக் கல்வியைப் பொன்பரப்பி என்னும் ஊரில் நிறைவு செய்தவர்.திருப்பனந்தாளில் அமைந்துள்ள புகழ்பெற்ற செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ்ப்புலவர் படிப்பை நிறைவு செய்தவர். அதன்பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல்,முதுகலைப் பட்டங்களைப் பெற்ற பெருமைக்கு உரியவர்.மொழியியல் துறையில் முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றவர்.மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் பட்டமும்,சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டமும் பெற்ற பெருமைக்கு
உரியவர்.

முனைவர் பொற்கோ அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தம் கல்விப்பணியைத் தொடங்கியவர்(1969-70,1972-73).பின்னர் இலண்டன் பல்கலைக்கழகதில் உள்ள கீழையியல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வியல் பகுதியில் ஈராண்டு(1970-72) பணிபுரிந்த பெருமைக்குரியவர். சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை அறிஞராகவும்(1973-74), இணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்(1974-77).மேலும் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்க ளில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

அவ்வகையில் நியூயார்க் இசுடோணிபுரூக்(1973)நார்த்வெசுடன் பல்கலைக்கழகம்,அமெரிக்கா(1974), சப்பானில் உள்ள டோக்கியோ காக்கூசுன் பல்கலைக்கழகத்திலும் (1990,1993,1996) பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனிடையே சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையில் இணைப்பேராசிரியராக 1977 இல் பணியில் இணைந்தார். பணியுயர்வு பெற்று பேராசிரியராகவும்(1985) துறைத்தலைவராகவும் விளங்கினார். கீழைக் கலையியல் ஆய்வுப் பிரிவுக்கு இயக்குநராகவும், மொழியியல் ஆய்வுகளுக்கு இயக்குநராகவும் பெருமையுறப் பணிசெய்த பெருமைக்கு உரியவர்.

பொற்கோ அவர்களின் தகுதியையும் பெருமையையும் உணர்ந்த அரசினர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராக அமர்த்தி அழகுபார்த்தனர்(24-06-1999-23-06.2002).இவர்தம் காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் ஐந்து விண்மீன்தரத் தகுதியைப் பெற்றது.பொற்கோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தராகப் பணிபுரிந்தபொழுது பல்கலைக்கழக நல்கைக்குழு உயர்சிறப்புத்திறன் பல்கலைக்கழகம் என்னும் விருதும்,30 கோடி உருவா நிதியும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. நல்கைக்குழு இந்தியாவில் முதன்முதல் ஐந்து பல்கலைக் கழகங்களுக்கு இவ்விருதை வழங்கியதில் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முனைவர் பொற்கோ அவர்கள் மொழியியல்,தமிழ் இலக்கணம், தமிழிலக்கியக் கொள்கைகள், திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம், யாப்பியல்,தமிழ்-சப்பானியமொழி ஒப்பீடு உள்ளிட்ட பலதுறையில் வல்லவராக விளங்குபவர்.நாட்டுப்புறவியலிலும் இவருக்கு ஈடுபாடு உண்டு.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை எழுதியுள்ளார்.250 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்துள்ளார்.இவர் ஆய்வு மாணவராக விளங்கியபொழுது எழுதியகட்டுரைகளைக் கண்ட எமனோ உள்ளிட்ட மொழியியல் அறிஞர்கள் இவர் புலமையைப் பாராட்டியுள்ளனர்.முனைவர் பொற்கோ அவர்களின் மேற்பார்வையில் 39 பேர்
முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

100 பேருக்கு மேல் இளம் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளனர்.முப்பத்தைந்து ஆண்டுகளாக பயிற்றுவித்தலிலும்,ஆய்வுத்துறையிலும் பட்டறிவு உடையவர்.மிகச்சிறந்த பாவலராக விளங்கி மாணவப்பருவத்தில் கோதை வளவன் என்னும் பாவியம் பாடியவர்.

அண்ணாபல்கலைக்கழகம்,மருத்துவப்பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் தமிழ்வழிக்கல்வி குறித்தும் கலைச்சொல்லாக்கம் தொடர்பாகவும் கருத்துரை வழங்கியவர். பல்கலைக்கழக நிதிநல்கைக்குழுவின் 15 பேர் கொண்ட மொழி வல்லுநர் குழுவில் இருந்து கடமையாற்றியுள்ளார்.

கல்விப்பயணமாக இங்கிலாந்து,அமெரிக்கா,சிங்கப்பூர்,மலேசியா,சப்பான்,தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார்.பன்னாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரைகள் வழங்கவும், உரையாற்றவுமாக இப்பயணம் அமைந்துள்ளது.

தமிழுக்கும் சப்பானிய மொழிக்கும் நெருங்கிய உறவு உள்ளதை அறிஞர் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து உலகிற்கு வெளிப்படுத்தியவர். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, செர்மனி, ஆலந்து, உருசியா, சப்பான், மலேசியா, தென் ஆப்பிரிக்கா,மொரீசியசு முதலான நாடுகளிலிருந்து தமிழ் படிக்க வந்த மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்றுவித பெருமைக்கு உரியவர்.

முனைவர் பொற்கோ அவர்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, வங்காளம்,சப்பானிய மொழிகளை அறிவார்.பல உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் இவரைத் தக்க வகையில் பாராட்டிப் பயன்கொண்டன. அவற்றுள் யுனெசுகோ நிறுவனத்தின் ஆய்வறிஞர் என்ற வகையில் அமெரிக்காவின் இரு பல்கலைக்கழகங்களில் மொழி இலக்கிய ஆய்வு,உயர்கல்வி நடை முறைகளை நேரில் பார்வையிட்டவர். திராவிட மொழியியல் கழகத்திற்காக வட இந்தியப் பல்கலைக்கழகங்களில் மொழிக்கல்வி குறித்து ஆய்ந்து அறிக்கை வழங்கியுள்ளார்.மலேசியப் பல்கலைக்கழகம் இவரை மொழித்துறைக்குப் புறநிலை அறிவுரைஞராகச் சிறப்பு நிலையில் பணிநியமணம் செய்தது.

தமிழக அரசின் கலைமாமணி விருது(1997)மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவைச் செம்மல்(2007) உள்ளிட்ட பல பெருமைப் பரிசில்களைப் பெற்றுள்ளார்.

தமிழகத்துப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் கல்விக்குழு, பாடத்திட்டக்குழு, அறிஞர் குழுக்களில் இடம்பெற்றவர்.இவை தவிர உலக அளவிலான பல நிறுவனங்களில் உறுப்பினராகவும் , அறிவுரைஞராகவும் உள்ளார். அழகப்பா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆட்சிமன்றக்குழுவில் இருந்து கடமையாற்றியவர். இப்பொழுது குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்திலும்,அழகப்பா பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தருக்குப் பதிலாகப் பணியாற்றிய இடைக்கால நிருவாகக்குழுவில் இவர் உறுப்பினராக இருந்து பணியாற்றியவர்.

முனைவர் பொற்கோ அவர்கள் புலமை என்னும் ஆராய்ச்சி இதழைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்திவருகிறார்.மேலும் பல இதழ்களுக்குச் சிறப்பாசிரியராக இருந்து பணிபுரிகிறார். தற்பொழுது குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தில் அறிவுரைஞர் குழுவில் இடம்பெற்று பணிபுரிகிறார்.சென்னைப் பல்கலைக்கழகப் பணி ஓய்வுக்குப் பிறகு பல்வேறு நூலாக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.திருக்குறளுக்கு உரை வரைந்தமை, இக்காலத்தமிழ் இலக்கணம் வரைந்தமை குறிப்பிடத்தக்க பணிகளாகும்.

சென்னையில் ஒவ்வொரு மாதமும் படிக்கத் தகுந்த நூல்கள் நினைக்கத் தகுந்த மேலோர் என்னும் வரிசையில் தமிழர்கள் படிக்க வேண்டிய நூல்களையும் தமிழர்கள் நினைக்கவேண்டிய அறிஞர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.இவர்தம் துணைவியார் மருத்துவர் பூங்கோதை அம்மா அவர்கள் காந்த மருத்துவத்தில் புகழ்பெற்று விளங்குபவர்.

முனைவர் பொற்கோ அவர்கள் தாம் கல்வி பயிலும் காலத்தில் தமிழ்மறவர் பொன்னம் பலனார், பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா,முனைவர் கு.சுந்தரமூர்த்தி, பேராசிரியர் தா.ம.வெள்ளைவாரணம் தமக்கு தமிழ் மரபு இலக்கண அறிவை ஊட்டினார்கள் எனக்குறிப்பிடுவார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், ச.அகத்தியலிங்கம், செ.வை.சண்முகம்,ந.குமாரசாமி இராசா, பி.எசு.சுப்பிரமணியம், முத்து சண்முகனார் உள்ளிட்டோர் மொழியறிவை ஊட்டினார்கள் எனக் குறிப்பிடுகிறார்.அதுபோல் உலகப் புகழ் பெற்ற அறிஞர்களான எமனோ,லீசு,மார்,சுசுமு ஓனா உள்ளிட்டவர்களின் அன்பையும், அறிவாற்றலை யும் நினைவுகூர்கிறார்.

முனைவர் பொற்கோ அவர்களின் முகவரி:

முனைவர் பொற்கோ,
பூம்பொழில்,
மதன்மிதிலா அடுக்ககம்,
16,ஆறாவது குறுக்குத்தெரு,
சாத்திரிநகர்,அடையாறு,
சென்னை-600 020,தமிழ்நாடு
செல்பேசி: + 91 9840150110


காலத்திற்கேற்ற தமிழ் இலக்கணம் பற்றிய நூல்


மொழியியலைப் பயிற்றுவிக்க உதவும் அரிய நூல்


யாப்பு தொடர்பிலான நூல்


இலக்கணம் பற்றிய செய்திகள் உள்ள நூல்


இலக்கணம் குறித்த அரிய நூல்


தமிழாய்வுகளை ஆங்கிலத்தில் சுட்டும் நூல்


இலக்கணம் பற்றிய புதிய சிந்தனைகள் உள்ள நூல்


சப்பானிய தமிழ் மொழி உறவு குறிப்பிடும் அரிய நூல்


மாணவப்பருவத்தில் எழுந்த பாவியம்

2 கருத்துகள்:

S.Lankeswaran சொன்னது…

தங்களின் தமிழ்ப்பணி மென்மேலும் வளர வாழ்த்துகின்றேன்.

Thamizhan சொன்னது…

பொற்கோவின் பொன்னான உழைப்பதனை
சொற்கோவாய் இளங்கோவின்
எழுத்தினிலே
போற்றிடவே தமிழுலகம்
அறிந்தே
தொடரட்டும் அவரது பணியே
தமிழாய்
வாழ்த்திடுவோம் மனமகிழ்ந்து
தமிழாள்!