
எழுத்தாளர் சங்கமித்ரா
பெரியாரியல் அறிஞரும் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் வடநாட்டிற்குச் சென்று மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியவரும், பன்னூலாசிரியரும், இதழாசிரியருமான அறிஞர் சங்கமித்ரா அவர்கள் இன்று (07.04.2012) காலை திருச்சிராப்பள்ளி -தென்னூரில் உள்ள மணிகண்டன் பிளாசா குடியிருப்பில் உள்ள அவர்தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். சங்கமித்ராவுக்கு அகவை 72 ஆகும். நாளை 08.04.2012 காலை எட்டுமணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்பெறும்.
பலவாண்டுகளாக என்னுடன் நல்ல தொடர்பில் இருந்த எழுத்தாளர் சங்கமித்ரா அவர்களை மருத்துவர் நா.மாசிலாமணி அவர்கள் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். சங்கமித்ரா அவர்கள் எழுதிய ஓர் எருதும் சில ஓநாய்களும் என்னும் நூல் புகழ்பெற்ற ஒன்றாகும். வங்கியில் மேலாளராகப் பணியாற்றிப் பலருக்கும் உதவியாக வாழ்ந்தவர். தன்னம்பிக்கை நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். சங்கமித்ரா பதிலளிக்கிறார், பெரியார் முழக்கம் உள்ளிட்ட பல இதழ்களை நடத்தியவர்.
சங்கமித்ரா அவர்கள் எழுத்தாளர் கி.இரா அவர்களை உயர்வாக மதித்தவர். புதுச்சேரிக்கு வரும்பொழுது மறவாமல் எழுத்தாளர் கி.இரா அவர்களைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். சங்கமித்ராவின் இறப்புச்செய்தி அறிந்ததும் கி.இரா. அவர்கள் பெரிதும் வருந்தினார்கள்.
சங்கமித்ரா அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.