நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 17 ஜூன், 2026

சிவசைலச் செலவு ...

 

 

 சிவசைலத்தில் மு. இளங்கோவன்

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் பிறந்த தா. பொன்னம்பலம் பிள்ளை அவர்கள்  திருவிதாங்கூர் அரண்மனையில் தீர்வைத்துறையில் ஆணையராகப் பணியாற்றியவர். இவர் தம் பணியோய்வுக்குப் பிறகு சிவசைலம் என்னும் ஊரில் வாழ்ந்து 28. 12. 1935 இல் இயற்கை எய்தினார் என்ற குறிப்பினை அறிந்த பிறகு தமிழகத்தின் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் உள்ள சிவசைலம் என்னும் ஊருக்குச்  சென்று வர வேண்டும் என்று முடிவுசெய்தேன். அதற்கு வாய்ப்பாகத் தெரிந்த நண்பர்களிடம் சிவசைலம் செல்லும் பாதை, போக்குவரவு, தங்குமிடம் குறித்த விவரங்களைப் பேசிப் பெற்றுக்கொண்டேன். அவ்வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி, மாற்றுப்பணியில் இப்பொழுது திருமுதுகுன்றத்துக் கொளஞ்சியப்பர் கல்லூரியில் பணியாற்றும் என் அருமை நண்பர் முனைவர் கி. அப்பாதுரை அவர்கள் என் சிவசைலப் பயணத்துக்குத் திட்டம் அமைத்துத் தந்தார்கள்.

04. 06. 2026 இரவு குற்றாலத்தில் தங்கிக்கொள்வதற்குரிய வசதிகளை எலும்புமுறிவு மற்றும் முடநீக்கியல் மருத்துவ வல்லுநரான மருத்துவர் ச. முத்துராமன் அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள். அவர்களின் திட்டப்படி குற்றாலத்தில் இரவு தங்குவது எனவும், காலையில் எழுந்து குற்றாலத்து அருவியில் நீராடிவிட்டு, தென்காசி காசி விசுவநாதர் கோவிலுக்குச் செல்வது எனவும் பிறகு காலைச் சிற்றுண்டி முடிப்பது எனவும் முடிவானது. 

இரவு தங்கும் விடுதியின் முன்றிலில் நின்றபொழுது குளிர்காற்று மெல்ல வீசியது. “விசும்பிலிருந்து துளி வீழ்தல்” தொடர்ந்தது. காற்றும் மழையும் கலந்து, அளவே பெய்து உலக உயிர்களை உய்வித்துக்கொண்டிருந்தன. வைகறைப்பொழுது வரை இச்சூழல் வளர்ந்தது. அதிகாலையில் எழுந்து, சிறிது நடந்தேன். ஓட்டுநர் தினேஷ் அவர்கள் 6. 45 மணிக்கு மகிழுந்தில் விடுதிக்கு வந்தார். இருவரும் குற்றாலம் ஐந்தருவி நோக்கிச் சென்றோம். சாரல் பருவம் தொடங்கியதால் மக்கள் ஆர்வமாக நீராடித் திரும்புவதும், புதியவர்கள் அருவி நோக்கி விரைவதுமாக இருந்தனர். 

“மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி,    குலையார் வாழைத் தீங்கனி மாந்துங் குற்றாலம்” என்ற ஞானசம்பந்தரின் பாடலடிகள் நினைவுக்கு வந்தன.  குற்றாலக் குறவஞ்சியில் இடம்பெறும் மலைவளத்தை என் மனம் எண்ணிப்பார்த்தது. திரிகூட இராசப்பக் கவிராயரின் வானரங்கள் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தன.  என் கண்கள் இங்கு ஏதேனும் பழைய வளமனைகள் உள்ளனவா? என்று தேடிக்கொண்டிருந்தன. மிகப்பெரும் அரசர்கள் தங்குமளவுக்குத் திருவனந்தபுரத்து அரண்மனைக்கு உரிமையான அரச வளமுனைகள் இயற்கை எழில் சூழ்ந்த திருக்குற்றாலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். 

இந்தத் திருக்குற்றாலத்தில்தானே 110 ஆண்டுகளுக்கு முன்னர்க் கோடைக்காலத்தில் ஓய்வெடுக்க வந்த பரோடா மாமன்னர் சயாஜிராவ் கெய்க்வார் அவர்களைத் தா. பொன்னம்பலம் பிள்ளை அவர்கள் மூன்று முறை சந்தித்துத் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க ஆகும் செலவை ஏற்குமாறு வேண்டிக்கொண்டார் என்ற நினைவு எனக்கு வந்தது. இந்தச் சந்திப்புக்குப் பரோடா அமைச்சர் உயர்திரு வி. பி. மாதவராவ் துணையாக இருந்துள்ளார் என்பதையும் படித்துள்ளேன்.  

தா. பொன்னம்பலம் பிள்ளை அவர்கள் திருவிதாங்கூர் அரண்மனையில் தீர்வைத்துறையில் ஆணையராகப் பணியாற்றிய பெரும் பொறுப்பின் காரணமாகவும், அறிவாற்றலில் உயர்நிலையில் இருந்துள்ளமை காரணமாகவும் பரோடா மன்னரை நட்புடன் அனுகித் தமிழின் தொன்மை குறித்து உரையாடியுள்ளார். தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் சிறப்புரைத்தபொழுது இதனை மராத்தியில் மொழிபெயர்த்து வழங்க இயலுமா? என்று பரோடா மன்னர் ஆர்வமுடன் உரையாடியுள்ளார். தமிழும் மராத்தியும் அறிந்த மொழி வல்லுநர்கள் தமிழகத்தில் அரிது என்பதால் பொது மொழியாக விளங்கிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்குமாறும் பரோடா மன்னர் ஆர்வமுடன் தெரிவித்துள்ளார். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள மொழிபெயர்ப்பு அறிஞர்களுக்கு எழுதித் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் பொன்னம்பலம் பிள்ளை அந்நாளில் முயன்றுள்ளார். 

தமிழ்நாட்டு அரசர்களும், திருமடங்களும், நகரத்தார் பெருமக்களும் அக்காலத்தில் தமிழுக்கு ஆற்றிவரும் சிறு சிறு பங்களிப்பை மட்டும் எடுத்துக்காட்டி, தமிழுக்கு முற்றாக உதவுவார் இல்லாத நிலையைக் குறிப்பிட்டு, பரோடா மன்னருக்குத் தொல்காப்பிய மொழிபெயர்ப்புக்கு நல்கை வழங்குமாறு தா. பொன்னம்பலம் பிள்ளை எழுதியுள்ள மடல் அவர்தம் தமிழ்ப்பற்றிற்குக் கட்டியம் கூறுவது ஆகும். 

தொல்காப்பிய மொழிபெயர்ப்புக்கு இரண்டு ஆண்டுக்கு ஆகும் செலவு என்ற வகையில்  உருவா இருபதாயிரமும், தமிழ் ஆங்கிலத் தட்டச்சுப் பொறிகள் வாங்கும் செலவுக்கு ஐந்தாயிரமும் என இருபத்தைந்தாயிரம் உருவாத் தொகையை வழங்கியுதவுமாறு பரோடா மன்னர் மனம் வைக்க வேண்டும் என ஆங்கிலத்தில் வரைந்தனுப்பிய தா. பொன்னம்பலம் பிள்ளையின் மடலின் செய்தியைப் படித்தபொழுது இவர்தம் தமிழ்ப்பற்றும் தொல்காப்பியப் பற்றும் எனக்கு விளங்கியது. 

இத் தொல்காப்பிய மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடத்தக்க அறிஞர் வழக்கறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை என்று தா. பொன்னம்பலம் பிள்ளை அடையாளம் கண்டு, பரிந்துரைத்தது அவர்தம் பெரும்புலமையைக் காட்டுகின்றது. இத்தொல்காப்பியத் தொண்டில் ஈடுபட்ட தா. பொன்னம்பலம் பிள்ளை பரோடா மன்னரைக் குற்றாலத்தில் உள்ள எந்த வளமனையில் சந்தித்திருப்பார்? என்று தேடிக்கொண்டிருந்த விழிகள் வெளியூர் உந்து வண்டிகள் சாலைகளில் விரைந்துகொண்டிருந்ததையும் கவனித்தன. 

.ஐந்தருவி அருகில் உள்ள நிறுத்தத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, அருவி நோக்கி நடந்தோம். கூட்டம் அளவாக இருந்தது. காலை 7 மணி முதல் 7.30 மணி வரை அருவியில் உச்சி முதல் உள்ளங்கால் வரை நனைந்தேன். தலைமுடிகளில் நீண்டநாள் குடியிருந்த அழுக்கு அகன்றது. உடலில் ஒட்டிக்கிடந்த எண்ணெய்ப் பிசுகு இருந்த இடம் தெரியவில்லை. “புறந்தூய்மை நீரான் அமைந்தது”. குளிர்ந்த நீரில் நீராடிப் புத்துணர்வுபெற்றேன். என்னைப் போலவே ஒவ்வொருவரும் ஆர்வமுடன் நீராடினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு அருவி நீராடல் வாய்த்தது. மீண்டும் எப்பொழுது இக்குளியல் வாய்ப்பு அமையும் என்ற ஏக்கத்துடன், மகிழுந்தில் ஏறி, நேரே விடுதிக்கு வந்தோம். உடைமாற்றித் தென்காசிக்குப் புறப்பட்டோம். 

தென்காசியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவிலின் கவினார்ந்த வனப்பில் மூழ்கினேன். கோபுர வாயிலில் குளிர்ச்சியுடன் வீசிய மென்காற்று உள்ளத்துக்குப் புதுத்தெம்பு ஊட்டியது. கோவில் வலம் முடிவுற்றது. தென்காசி உணவகத்தில் காலை உணவுக்குக் காத்திருந்த ஓருரு மணித்துளிகளில் எங்களுடன் மருத்துவர் முத்துராமன் அவர்களும் வந்து இணைந்துகொண்டார்கள். சிற்றுண்டி முடித்துச் சிவசைலம் செல்வதற்கு அணியமானோம். 

மருத்துவர் ச. முத்துராமன் அவர்கள் அன்புமொழிகள் சிலவற்றை அப்பொழுது எம்மிடம் மொழிந்தார். இங்கிருந்து கடையம் செல்லுமாறும் அங்கு எங்களுக்காகக் காத்திருக்கும் நல்லாசிரியர் கல்யாணி சிவகாமிநாதன் அவர்களுடன் ஆழ்வார்குறிச்சி செல்லுமாறும், அங்கிருந்து சிவசைலம் சென்று ஆய்வுப்பணிகளை முடிக்குமாறும் கூறினார். அதற்கு வாய்ப்பாகத் தம் மகிழுந்தையும் ஓட்டுநரையும் அனுப்புவதாகக் கூறியதுடன், இரவு நெல்லையில் என்னைப் பேருந்தில் ஏற்றிவிட்டு வருமாறு தம் ஓட்டுநருக்கு இசைவு தந்தார். மறவாமல் திருநெல்வேலி அல்வா வாங்கி எனக்கு வழங்குமாறும் சொல்லிவிட்டு மருத்துவர் முத்துராமன் அவர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். மருத்துவர் ச. முத்துராமனைப் போன்ற நல்லோர்கள் என் வாழ்வில் எதிர்ப்படுவதால்தான் என்னால் இயங்கமுடிகின்றது. எம்மைப் போலும் ஆய்வார்வம் கொண்டவர்கள் தமிழ்ப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடமுடிகின்றது. மருத்துவர் ச. முத்துராமன் போன்ற நல்லோர்கள் “உள்ளூர்ப் பயன்மரம்போல்” புகழுடன் விளங்கத் தமிழ்த்தாய் அவருக்கு நல்லருள் புரியட்டும். 

கடையம் என்னும் ஊர் பாரதியார் வாழ்ந்தமை காரணமாகவும் அவரின் மனைவியாரின்  பிறந்த ஊர் என்பதாலும் தமிழக வரலாற்றில் புகழ்பெற்ற ஊராகும். இவ்வூரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவரும் கல்யாணி சிவகாமிநாதன் அவர்களின் இல்லத்தை அடையாளம் கண்டு அடைந்தோம். ஐயாவிடம் என்னை மீண்டும் அறிமுகம் செய்துகொண்டு, மகிழ்ச்சியாக உரையாடத் தொடங்கினேன். நேற்று இரவே தென்காசித் திருவள்ளுவர் கழகத்தில் கண்டு உரையாடியுள்ளேன். என் ஆய்வு நோக்கத்தை நேற்றிரவே சொன்னதால் தம் இல்லத்தின் நூலகத்தில் இருந்த பேராசிரியர் செல்வகணபதியால் உருவாக்கப்பெற்ற  சைவசமயக் களஞ்சியம் பத்துத் தொகுதிகளையும் எடுத்து வழங்கினார். இதில் தா. பொன்னம்பலம் பிள்ளையின் வரலாறு ஏதேனும் பதிவுற்றுள்ளதா? என்று பார்த்தேன். 

கல்யாணி சிவகாமிநாதன், மு.இளங்கோவன்

சிவஞானபோதம் போன்ற நூல்களைப் பதிப்பிக்கவும் அத்தகைய நூல் ஒன்றுக்கு ஆங்கிலத்தில் முன்னுரை வரையவும் ஆற்றல் பெற்றவராகத் தா. பொன்னம்பலம் பிள்ளை விளங்கியவர்கள். பாளையங்கோட்டைச் சைவசபையின் தலைவராக இருந்து, சபையின் நோக்கம் கொள்கைகள் வரைந்த அப்பெருந்தகையாளர். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் மாநாட்டிற்குத் தலைமை வகித்த பெருமைக்குரியவர். அவர் குறித்த விவரம் யாதொன்றும் அக்களஞ்சியங்களில் இடம்பெறவில்லை என்பதைப் படித்துத் தெரிந்துகொண்டேன். 

கல்யாணி சிவகாமிநாதன் தமிழ்ப்பற்றும், சிவனியப்பற்றும் நிறைந்த சால்பினர். தென்காசி, ஆழ்வார்குறிச்சி, சிவசைலம் பகுதியில் அனைவருக்கும் அறிமுகமானவர். பல்லாயிரம் மாணவர்களைப் பாங்குடன் உருவாக்கியவர். நாங்கள் இருவரும் உரையாடியபடியே, மகிழுந்தில் ஏறிக்கொண்டு முதலில் சிவசைலம் பரமகல்யாணி கோவிலுக்குச் சென்றோம். கோவிலின் அமைப்பையும் வனப்பையும் பார்த்தோம். அங்குக் கோவில் பணியாளர்களிடம் தா. பொன்னம்பலம் பிள்ளையின் மரபினர் யாரேனும் சிவசைலம், ஆழ்வார்குறிச்சிப் பகுதியில் உள்ளனரா? என்று வினவினோம். கோவிலின் எதிரில் அமர்ந்திருந்த அகவை முதிர்ந்த துறவியர்கள் சிலரையும் வினவினோம்.

 

மு. இளங்கோவன், கல்யாணி சிவகாமிநாதன். (சிவசைலம் கோவில்) 

உயிர்ப்புடன் விளங்கும் சிவசைலம் பரமகல்யாணி கோவிலின் நந்தி சிலை

அதன் பிறகு சிவசைலம் ஊருக்குச் சென்று, நெடுங்காலம் அவ்வூரில் வாழும் பழைமையான குடும்பத்தினர் பலரைக் கண்டு உரையாடி, விவரம் பெற முனைந்தோம். எங்களுக்கு எந்த வகையான குறிப்பும் கிடைக்கவில்லை. கடனா நதி அணைக்கு அருகில் உள்ள மலையடிவாரப் பகுதிதான் சிவசைலம். மழைக்காலத்தில் மிகப்பெரும் வளம் வாய்ந்த பகுதியாக விளங்கும் ஊர் இதுவென அறிந்தோம். அமைதியான ஊராகத் தெரிந்தது. வேளாண்மை வளம் நிறைந்த ஊராகவும் விளங்குகின்றது. இரவு நோரங்களில் கரடி முதலிய காட்டு விலங்குகள் இப்பகுதிக்கு வரும் என்று ஊரார் உரைக்க, அறிந்தோம். அவற்றை எதிர்கொள்ளும் முறைகளை மக்கள் தெரிந்துவைத்து, இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்கின்றமையையும் தெரிந்துகொண்டோம். இது நிற்க.

 

கோவில் எதிரில் வாழ்ந்துவரும் துறவியரிடம் நாடித்துடிப்பு அறிதல்(மு.இ)

சிவசைலத்தில் பலரைக் கண்டு, உரையாடி, தா. பொன்னம்பலம் பிள்ளை குறித்த விவரம் பெறுவதற்குள் பகலுணவுப் பொழுது நெருங்கியது. அங்குள்ள “முருகன் மெஸ்” என்னும் சிறு உணவகத்தில் பகலுணவை முடித்தோம். அக்கடையின் உரிமையாளரிடம் விவரம் சொல்லி, அங்கு ஏதேனும் “சமாதி”  உள்ளனவா எனவும், வேறு தடயங்கள் உள்ளனவா என்றும் பார்த்தோம். ஒரு சிவலிங்கம் அமைக்கப்பெற்ற சமாதி ஒன்று உள்ளது என்றும் அது பிற்காலத்தில் அமைக்கப்பெற்றது என்றும், கூடுதல் விவரம் தெரியவில்லை என்றும் உணவக உரிமையாளர் கூறினார். அந்தச் சமாதியையும் அழைத்துக்கொண்டுபோய் காட்டினார். இதுவும் நிற்க. 

ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் இருவரின் தொடர்பில் முயன்றும் யாதொரு குறிப்பும் விவரமும் பெறமுடியவில்லை,. அதுபோல் ஆழ்வார்குறிச்சியல் பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரியிடம் பேசியும் விவரம் கிடைக்கவில்லை. பரம கல்யாணி கல்லூரிக்கு அருகில் உள்ள மூத்த அறிஞர் ஒருவரைக் கண்டு உரையாடியும் யாதொரு விவரமும் கிடைக்கவில்லை. 

மனம் தளாராமல் நானும் கல்யாணி சிவகாமிநாதன் அவர்களும் கடையத்துக்குத் திரும்பினோம். ஐயாவிடம் ஏதேனும் குறிப்புகள் கிடைத்தால் தொடர்புகொள்ளுங்கள் என்று கூறினேன். அவரின் இல்லத்தில் ஐயாவைப் பாதுகாப்பாக விட்டுவிட்டுத், திருநெல்வேலிக்கு மகிழுந்து புறப்பட்டது. சாலைகளில் தமிழகத்துக் கனிமவளங்கள் (மணலும் கல்லும்) அயல் மாநிலங்களுக்கு எந்த வகையான கட்டுப்பாடும் இல்லாமல் சரக்குந்துகளில் செல்வதைக் கண்ணாரக்கண்டு, மனமார வருந்திக்கொண்டு, நெல்லையை அடைந்தேன். 

பாளையங்கோட்டைச் சைவசபையின் தலைவராகத் தா. பொன்னம்பலம் பிள்ளை பலமுறை இருந்துள்ளார். சபையின் சட்ட திட்டங்களை வரைந்து அளித்தவர்; நெல்லைப் பகுதியில் சைவ சமயப் பணியில் முழுமையாக ஈடுப்பட்டிருந்தவர். தென்காசியில் சைவசபையின் நான்காவது மாநாட்டை நடத்தியவரும் இவரே ஆவார். இவரின் படத்தினையும், வாழ்க்கைக் குறிப்பினையும் அறியும் நோக்கில் இரண்டாவது முறையாகச் சைவ சபைக்கு வந்தேன். சைவசபையில் தேடிப்பார்த்தும் எந்தக் குறிப்பையும் பெற இயலவில்லை. இவரின் நூல்கள் ஏதேனும் உள்ளனவா? என்று பார்க்க நினைத்தும் நூலகர் இன்மையால் எதனையும் பார்வையிட இயலவில்லை. 

ஆயிடை, சைவசித்தாந்தப் பேரறிஞர் சி. சு. மணி ஐயா இல்லத்தில் ஏதேனும் தா. பொன்னம்பலம் பிள்ளை குறித்த விவரம் கிடைக்கும் என்ற நோக்கில் அருகில் இருந்த மணி ஐயா இல்லம் சொன்றோம். அவர்தம் திருமகனார் மெய்கண்டான் அவர்களிடம் உரையாடி, தா. பொன்னம்பலனார் நூல்கள், குறிப்புகள் ஏதேனும் தங்கள் தந்தையாரின் நூலகத்தில் உள்ளனவா என்று வினவிப் பார்த்தேன். அத்தகைய நூல்கள் எதுவும் இல்லை என்பதைத் தம் உடன்பிறந்த அக்காவுடன் உரையாடியும் உறுதிப்படுத்தினார். 

சி சு. மணி அவர்கள் சைவ சமய நூல்களுக்கு உரைவரைந்த பேரறிஞர் ஆவார். சிவஞானபோதத்துக்கு அரிய உரை வரைந்தவர். சைவ சபையின் தலைவராக இருந்தவர். அவர்தம் இல்லம் அறிஞர்கள் சந்திப்புக்கு உரிய இடமாக அந்நாளில் விளங்கியுள்ளது. எனவே சி.  சு. மணி அவர்களின் நூலகத்தில் தா. பொன்னம்பலம் பிள்ளையின் நூல்கள், அவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அங்கு வினவியும் யாதொரு குறிப்பும் கிடைக்கவில்லை. சி. சு. மணி அவர்கள் உரைவரைந்த  சிவஞானபோதம் நூலினை மட்டும் ஆயிரம் உருவாவுக்கு வாங்கிக்கொண்டு, மெய்கண்டான் அவர்களிடமிருந்து விடைபெற்றேன். 

மீண்டும் சைவசபையை நெருங்கியதும் பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்கள் எனக்காகக் காத்திருந்தார்கள். பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்கள் சைவ சபையின் தலைவராகப் பணியாற்றியவர். என் பல்வேறு ஆய்வுகளுக்குத் துணைநிற்பவர்கள். இந்த முறை நூலகத்தில் உள்ள நூல் பட்டியலைப் பார்த்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் வந்த எனக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, கன்னியாகுமரியில் தமக்கு இருந்த பணியை முடித்த கையோடு, பாளையங்கோட்டை சைவசபை வாயிலுக்கு வந்து காத்திருந்தார்கள். இருவரும் இதுகுறித்து முன்னமே பல முறைப் பேசியுள்ளோம். சைவசபை நூலகத்தைப் பயன்படுத்த முன்பொருமுறை முனைந்தும் முடியவில்லை. வண்ணப்பூச்சில் அப்பொழுது சைவசபை நூலகம் மூடியிருந்தது 

தா. பொன்னம்பலம் பிள்ளை குறித்த முழுமையான வரலாறு எங்கும் கிடைக்கவில்லை என்றும் இதற்காகப் பல ஊர்களுக்கு அலைந்தும் முன்னேற்றமான செய்தியைப் பெறமுடியவில்லை என்றும் முனைவர் கட்டளை கைலாசம் அவர்களிடம் தெரிவித்தேன். தொடர்ந்து தேடுங்கள். விரைந்து நல்ல குறிப்புகளைத் திரட்டுவதற்கு முயற்சி மேற்கொள்வோம் என்று எனக்கு அமைதி கூறி, என்னை ஊக்கப்படுத்தினார்கள். 

பாளையங்கோட்டை சைவசபை வளர்ச்சியில் தா. பொன்னம்பலம் பிள்ளை அவர்களுக்குப் பெரும் பங்கு உள்ளதால் அவர் பற்றிய குறிப்புகள் இங்குள்ள நூலகத்தில் இருக்கும் எனவும், விரைந்து இங்குள்ள நூல்களின் பட்டியலை ஒருமுறை பார்த்து, எனக்கு விவரம் சொல்லுங்கள் எனவும் அவரிடம் கூறினேன். தொலைதூரச் செலவு மேற்கொண்டிருந்தமையால் அயர்வாக இருந்த பேராசிரியர் கட்டளை கைலாசம் அவர்களுக்கு விடைகொடுத்து, அவர்களிடமிருந்து நெல்லைக் கோவிலுக்கு வந்தேன். 

நெல்லையப்பர் கோவிலை இந்த முறை இரண்டுமணி நேரம் அமைதியாகப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. கட்டடக்கலையின் உச்சமாக அக்கோவில் விளங்குவதைக் கண்டு கண்டு மகிழ்ந்தேன். நம் முன்னோர்களின் சிற்ப அறிவு போற்றத்தகுந்தது. பொறியியல் தொழில்நுட்ப அறிவில் மேம்பட்ட நம் மவர்களின் கலைத்திறனை எண்ணி எண்ணிப் பெருமிதம் கொண்டேன். வேலைப்பாடு அமைந்த தூண்களும் அதனைப் பொருத்திப் பல நூறு ஆண்டுகளாக உயிர்ப்போடு வைத்திருக்கும் ஆற்றலையும் அதற்கு மக்கள் நல்கிவரும் ஆதரவையும் நினைத்தபொழுது உவகையால் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது. வெளிநாட்டில் இக்கோவில்கள் இருந்தால் வருவாய் ஈட்டடும் பெரும் காட்சி சாலைகளாக மாற்றி அமைத்திருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். ஆமெரிக்க, ஆத்திரேலியா, நோர்வேசிய நாடுகளில் ஒரு மர வீட்டைக் காட்டி, எங்களிடம் நுழைவுக்கட்டணம் பெற்ற அந்த நாட்டு நிலையையும் நம் கலைச்செல்வங்களைப் போற்றிப் பாதுகாக்க இயலாத அறியாமை நிலையையும் எண்ணி வருந்தினேன். இதுவும் நிற்க. 

தொல்லிசையும் கல்லிசையும் என்ற எங்கள் ஆவணப்படப்பிடிப்புக்காக முன்பு ஒருமுறை நெல்லைக் கோவிலின் இசைத்தூண்களைப் படமாக்கியமை நினைவுக்கு வந்தது. அப்பொழுது ஆறுமுகனார் கோவிலில் இருந்த தாள சக்கரத்தை நீர் ஊறிய தன்மையில் படமாக்கிக் கொண்டுவந்திருந்தோம். அங்கிருந்த அந்த தாள சக்கரத்தை இப்பொழுது மீண்டும் அமைதியாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். தாள சக்கரம் அமைந்துள்ள உரிய இடம் எது? என வினவிச் சென்றேன். அழகிய வண்ணம் பூசப்பெற்று, தாளசக்கரம் அடையாளம் காணமுடியாதபடி பாதுகாப்பாக இருந்தது. பசுவந்தனை, சி. பிச்சாண்டி அண்ணாவி உருவாக்கிய தாளசக்கரம் என்ற இசையறிவுச் சட்டகத்தின் சிறப்பு எம் மக்களுக்குத் தெரியவில்லையே - யாராலும் கவனிக்கப்படாமல் உள்ளதே என்ற ஏக்கத்தோடு கோவிலிலிருந்து புறப்பட்டேன். 

கோவிலைப் பார்த்துவிட்டுத் திரும்பும்வரை ஓட்டுநர் தினேஷ் எனக்காகக் காத்திருந்தார். இருவரும் சிற்றுண்டி முடித்தோம். இரவு 9.30 மணி வரை மீண்டும் காத்திருந்து, நெல்லை, வண்ணாரப்பேட்டைப் பேருந்து நிறுத்தத்தில் என்னைப் பாதுகாப்பாகப் பேருந்து ஏற்றிவிட்டு தினேஷ் அவர்கள் விடைபெற்றுக்கொண்டார். சற்றொப்ப பதினான்கு மணிநேரம் என் ஆய்வுத்தேடலில் துணைநின்ற தினேஷ் போன்ற நண்பர்கள் என் நினைவில் எப்பொழுதும் நிறைந்திருப்பர்.

கருத்துகள் இல்லை: