நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //
குடந்தை ப.சுந்தரேசனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குடந்தை ப.சுந்தரேசனார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் ஆவணப்படம் வெளியீடு



     இருபதாம் நூற்றாண்டில் தமிழிசைக்கு ஏற்றம் சேர்த்த பெருமக்களுள் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் குறிப்பிடத்தக்கவர். இவர்தம் வாழ்க்கையையும் தமிழிசைப் பணிகளையும் முனைவர் மு.இளங்கோவன் ஆவணப்படமாக்கி, உலகின் பல பகுதிகளிலும் திரையிடுவதற்கு வாய்ப்பமைத்துள்ளார். ஈராயிரம் ஆண்டு வரலாறுகொண்ட தமிழ்ப் பண்ணிசையின் சிறப்பினை அறிவதற்குப் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிடப்படவும் திரையிடப்படவும் உள்ளது. தமிழார்வலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

அழைப்பில் மகிழும்
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

நாள்: 04.04.2017 செவ்வாய்க்கிழமை/நேரம் : மாலை: 6 மணிமுதல் 8 மணி வரை
இடம்  : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க வளாகம்,
             62, அப்பாச்சி நகர் மெயின் ரோடு,   கொங்கு நகர் , திருப்பூர் - 641 607

நிகழ்ச்சி நிரல்


வரவேற்புரைதிரு.T.R. விஜயகுமார் அவர்கள்
                           பொதுச்செயலாளர் , திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்

ஆவணப்படம் வெளியீடு   : திரு.K.P.K.செல்வராஜ்  அவர்கள்
                       தலைவர்,    திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

முதல்படி பெறுதல் : திரு.ராஜா.M.சண்முகம் அவர்கள்
                                   தலைவர் , திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்
  
சிறப்புரை  : முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

நன்றியுரை : Rtn. K.P.K.பாலசுப்ரமணியன் அவர்கள்
 செயலாளர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்.

சனி, 27 ஜூன், 2015

தமிழிசை மீட்சி குறித்த ஆவணம்…





  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் தமிழிசை வளர்ச்சிக்கு ஓர் இலக்கிய நிகழ்வு 1972 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் நாள் மாலை ஆறுமணிக்கு நடைபெற்றுள்ளது. அக்காலத்தில் தமிழ் உணர்வு தழைத்த உணர்வாளர்கள் முன்னின்று இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளனர்.  தஞ்சை மாவட்ட உலகத் தமிழ்க் கழகம் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திரு. சு.அறிவுறுவோன் அவர்களும், பெரம்பூர் ப. கண்ணையன் அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டமையை அறியமுடிகின்றது. பாவலர் தரங்கை. பன்னீர்ச்செல்வனார். பேராசிரியர் இரா. இளவரசு, புலவர் எண்கண் மணி உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளார். எம் ஆவணப்படத்தில் இணைக்கத் தகுந்த இந்த அழைப்பிதழ் ஆவணம் நேற்றுதான் கிடைத்தது (26.06.2015). திருவாரூரில் புலவர் எண்கண் மணி ஐயா இல்லிலிருந்து நன்றியுடன் பெற்றுவந்தேன். 

சனி, 11 ஏப்ரல், 2015

திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் அறிமுகம்!




மு.இளங்கோவனுக்கு இலக்கியச் செம்மல் என்ற விருதினைத் திருவையாற்றில் வழங்கிப் பாராட்டும் காட்சி. தஞ்சை மருத்துவர் கலைமாமணி சு. நரேந்திரன், புலவர் தங்க.கலியமூர்த்தி, 
இசைக்கல்லூரி முதல்வர் ஸ்ரீ வித்யா, தமிழறிஞர்கள், மாணவர்கள் 

   திருவையாறு அரசு இசைக்கல்லூரியும், திருவையாறு இளங்கோ கம்பன் இலக்கியக் கழகமும் இணைந்து பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தைத் திரையிட்டு மாணவர்களுக்குப் பண்ணாராய்ச்சி வித்தகரின் பணிகளை அறிமுகம் செய்தன. குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் இந்தக் கல்லூரியில்  விரிவுரையாளர் பணியில் முதன்முதல் இணைந்து தேவாரம் உள்ளிட்ட திருமுறைகளை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆவணப்பட அறிமுக நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் அ. ஸ்ரீவித்யா வரவேற்று உரையாற்றினார்., இக்கல்லூரியில் தொடக்க காலத்தில் பணியாற்றிய குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களின் வாழ்க்கையையும், தமிழிசைப்பணிகளையும் எங்கள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய முன்வந்த தமிழறிஞர்களுக்கு நன்றி என்று ஆர்வமுடன் தம் உரையில் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இசைத்துறை மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வதற்கு இந்த ஆவணப்படம் பெரும் தூண்டுகோலாக இருக்கும் என்று பேராசிரியர் அ.ஸ்ரீவித்யா நம்பிக்கை தெரிவித்தார்.

குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழிசை வாழ்வையும் ஆராய்ச்சியையும் அறிமுகம் செய்யும் இந்த ஆவணப்படத்தின் பாடல்களைக் கேட்டும், பார்த்தும் சுவைத்த இசைத்துறை மாணவர்கள் படத்துடன் ஒன்றிப் பலரும் கண்ணீர்விட்ட காட்சி அவையினரின் உள்ளத்தை அசைத்தது. இசைத்துறைப் பேராசிரியர்கள் பலரும் தங்கள் கல்லூரியின் மூத்த பேராசிரியரின் வாழ்வு ஆவணமானது குறித்துப் பெரிதும் நன்றி தெரிவித்தனர்.

  புலவர் தங்க. கலியமூர்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, அறிமுக உரையாற்றினார்.

  நிகழ்ச்சியில் தஞ்சை மருத்துவர் சு. நரேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு ஆவணப்பட இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு இலக்கியச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். குடந்தை ப. சுந்தரேசனார் தமிழிசை உலகுக்கு மிகப்பெரிய பணியாற்றியவர். அவர்தம் வாழ்வும் பணியும் அறியப்படாமல் இருந்த சூழலில் இன்று உலகம் முழுவதும் அவரின் தமிழிசைப்பணிகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதனைச் செய்த மு.இளங்கோவனை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன் என்று மருத்துவர் சு. நரேந்திரன் குறிப்பிட்டார். இசைப்பேராசியர் சு. வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார்.

  மாலையில் திருவையாறு ஓய்வூதியர்கள் சங்க அரங்கில் பொதுமக்களுக்கான திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்களும் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களுடன் பழகியவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப் பணிகளை நினைவுகூர்ந்தனர்.

   தஞ்சைப்பகுதியில் வாழும் தமிழறிஞர்கள் இராம. செல்வராசு, கரந்தை செயகுமார், தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் பா. ஜம்புலிங்கம், புலவர் அறிவுறுவோன், புலவர் மா. திருநாவுக்கரசு, திருச்சி இமயவரம்பன், திருவாரூர் புலவர் எண்கண் சா. மணி, புரவலர் அ.மோகன்தாசு, திருச்சி ஈகையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 இசைக்கல்லூரி முதல்வர் சு. ஸ்ரீவித்யா அவர்களின் வரவேற்புரை

மருத்துவர் சு. நரேந்திரன் அவர்களின் பாராட்டுரை


 ஆவணப்படத்தை ஆர்வமுடன் பார்க்கும் இசைக்கல்லூரி மாணவர்கள்

புதன், 4 பிப்ரவரி, 2015

இலண்டனில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் ஆவணப்படம் அறிமுகம்

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை . சுந்தரேசனார் ஆவணப்படத்தைத் திரு . நாகதேவன்  வெளியிட, திருவாட்டி தவமணி மனோகரன் பெற்றுக்கொள்ளும் காட்சி

 இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகமும், இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும் இணைந்து இந்த ஆண்டு, சனவரித் திங்கள் 31ஆம் நாள், தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாளைத் தலைவர் பூ.நாகதேவன் தலைமையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடின.


செயலாளர் இர. அன்பழகன் விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்று உரையாற்றினார்.

பொங்கல் விழாவை ஆடல், பாடல், கவிதை, திருக்குறள் சொற்பொழிவு போன்ற கலை நிகழ்ச்சிகளோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். கலை நிகழ்ச்சிகளைத் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மிகச் சிறப்பாக வழங்கினார்கள்.

இவ்விழாவில், முனைவர் மு.இளங்கோவன் எழுதி இயக்கிய 'பண்ணாராய்ச்சி வித்தகர்' குடந்தை .சுந்தரேசனார் பற்றிய ஆவணப்பட முன்னோட்டக் காட்சிகள் திரையிடப்பட்டன. பின்னர், இந்த ஆவணப்படத்தைத் தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு பூ.நாகதேவன் வெளியிட, திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியை திருவாட்டி தவமணி மனோகரன் அவர்கள் முதல் படியைப் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் அறுநூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் பூபதி ராஜ் நன்றி உரை நிகழ்த்த, நிகழ்ச்சி இனிதே முடிந்தது.



வியாழன், 5 ஜூன், 2014

சிலப்பதிகாரக் கானல்வரியும் குடந்தை ப.சுந்தரேசனார் விளக்கமும்…



புலவர் நா. தியாகராசன்( தலைவர், மாதவி மன்றம், பூம்புகார்)

சிலப்பதிகாரம் குறித்தும் அதன் கதையமைப்பு, இசைக்கூறுகள் குறித்தும் அறிஞர் பெருமக்கள் பலர் அளிக்கும் விளக்கங்களைக் கேட்டுக் கேட்டு அவ்வப்பொழுது மகிழ்வதுண்டு. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றார் பாரதியார். அறிஞர் வீ. ப. கா. சுந்தரம் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது “பத்தாண்டுகள் படித்தேன். சிலப்பதிகாரம் கொஞ்சம் விளங்கியது. அறுபதாண்டுகளாகப் படிக்கின்றேன். இன்னும் சில இடங்களில் ஐயம் உள்ளது” என்றார்.

சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு உரைக்கும் நூல் மட்டுமன்று. தமிழர்களின் மலையளவு இசையறிவை விளக்கும் ஒப்பற்ற நூலாகும். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐந்து நிலத்திற்குமான இசையைப் பொருத்தமாக அங்கங்கு இளங்கோவடிகள் வைத்துள்ளார்.  ஒவ்வொரு பாடலடிகளிலும் மிகப்பெரிய உண்மைகளைப் பொதிந்துவைத்துள்ளார். சிலப்பதிகாரத்தை வல்லார்வாய் கேட்கும்பொழுது அரிய உண்மைகள் வெளிப்படும்.

பலவாண்டுகளாக அறிஞர் குடந்தை ப. சுந்தரேசனாரின் இசையுரைகளை நாடாக்களிலிருந்து வட்டாக்கிக் கேட்டு வருகின்றேன். அண்மையில் பூம்புகார் சென்றபொழுது புலவர் நா. தியாகராசன் அவர்கள் பழைய ஒலிநாடா ஒன்றைப் பாதுகாப்பாக வைத்திருந்ததைக் காட்டி, இந்த நாடாவில் குடந்தை ப.சுந்தரேசனார் பாடிய கானல்வரிப் பாடல்கள் உள்ளன என்றார். அதனை உடனே கேட்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு மேலிட்டது.

1971 ஆம் ஆண்டு காவிரிப்புகும்பட்டினத்தின் கடற்கரையில் சித்திரை முழுநிலவு நாளில் இந்த நாடாவில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது என்ற குறிப்பையும் புலவர் அவர்கள் சொன்னார்கள். ஆனால் அதனைக் கேட்கமுடியாத அமைப்பில் அந்த நாடா இருந்தது. spool tape recorder இருந்தால் நம் கையினுக்குக் கிடைத்த ஒலிநாடாவைக் கேட்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. ஐயாவிடம் அந்த நாடாவைப் பெற்று வந்தேன். புதுச்சேரி முழுவதும் அலைந்து பார்த்தோம். இந்த வகைக் கருவி கிடைக்கவில்லை. முகநூலில் இதுகுறித்த உதவி கேட்டபொழுது திரு. எஸ். வி. சேகர் உள்ளிட்ட நம் நண்பர்கள் பலவகையில் வழிகாட்ட முன்வந்தனர். 

இதனிடையே ஒலிப்பொறியாளர் ஒருவரைப் பற்றி அண்ணன் தேவா நினைவூட்டினார். கடந்த வெள்ளியன்று சென்னைக்குச் சென்று என் கையில் இருந்த ஒலிநாடாவைக் கொடுத்து எம் பி. 3 வடிவில் மாற்றித் தரும்படி அந்த ஒலிப்பொறியாளரைக் கேட்டோம். அவர் வேறொரு நிறுவனத்திற்கு அனுப்பி வட்டில் மாற்றி, இன்று(04.06.2014) வழங்கினார். ஒலித்தூய்மை செய்து கேட்கும் தரத்தில் என் கையினுக்கு நாடா இன்று கிடைத்தது. அரிய புதையல் ஒன்று கிடைத்த மன மகிழ்வைப் பெற்றேன். இரண்டு வட்டில் முதற்படியும், அடுத்த இரண்டு வட்டில் ஒலித்தூய்மை செய்த வடிவும் கிடைத்தன.

ஒரு வட்டில் 25 நிமிடமும் இன்னொரு வட்டில் 45 நிமிடமும் என சற்றொப்ப 70 நிமிடங்கள் சிலப்பதிகாரக் கானல்வரிக்குக் குடந்தை ப. சுந்தரேசனார் விளக்கம் சொல்கின்றார்.(எஞ்சிய சில மணித்துளிகள் அறிஞர் மு. வ. அவர்களின் பேச்சு உள்ளது). சிலப்பதிகாரத்தை ஐயா ப.சு. அவர்கள் எவ்வளவு நுட்பமாகப் படித்துள்ளார் என்பதும் எவ்வளவு பெரிய இசைப்பேரறிவு அவர்களுக்கு இருந்துள்ளது என்றும் இந்த நாடாவைக் கேட்டு வியப்புற்றேன். மரபு வழியான விளக்கங்களைத் தகர்த்தெரிந்து இசை நுட்பம் கலந்த விளக்கம் தருவது பாராட்டும்படியாக உள்ளது. இந்த இசை உண்மைகளை விளக்க மற்ற நூல்களிலிருந்து விளக்கம் காட்டுவது ப. சு. வின் பேரறிவுக்குச் சான்றாகும்(எ.கா. சங்கதி= இயைபு).

கானல்வரியை விளக்கும்பொழுது திங்கள் மாலை வெண்குடையான், மருங்கு வண்டு சிறந்தார்ப்ப, கரிய மலர் நெடுங்கண், கயலெழுதி வில்லெழுதி, தீங்கதிர் வாள்முகத்தாள், நுளையர் விளரி நொடி தருதீம் பாலை எனும் பாடல்களுக்கும் கட்டுரைப்பகுதிகளுக்கும் அளித்துள்ள விளக்கங்கள் மிகச் சிறப்பாக உள்ளன.


தமிழிசையின் மேன்மையை விளக்கும் சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதிக்குக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் அளித்த விளக்கத்தை நாற்பத்தியிரண்டு ஆண்டுகளாக, கங்காரு தன் குட்டியைப் பாதுகாப்பதுபோல் பாதுகாத்துத் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் செயல்பட்ட புலவர் நா. தியாகராசன் அவர்கள் உலகத் தமிழர்களால் போற்றப்பட வேண்டிய பெருமகனார் ஆவார். இவரைப் போலும் மிகச் சிறந்த தமிழ்த்தொண்டர்களைக் கொண்டாடும் அளவிற்கு நம் தமிழ்நாடு இன்னும் முன்னேறவில்லை என்று கவலைகொண்டு, அன்னார் நிறைவாழ்வுவாழ நெஞ்சார வாழ்த்துகின்றேன்.

மாதவி மன்றத் தலைவர் புலவர் நா. தியாகராசனுடன் மு.இ, (பூம்புகாரில் படப்பிடிப்பின்பொழுது, 20.05.2014)

திங்கள், 2 ஜூன், 2014

சென்னையில் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாக் காட்சிகள்


முனைவர் ஔவை நடராசன் தலைமையில் திரு. மோகன் குறுவட்டை வெளியிட மு. இளங்கோவன் பெற்றுக்கொள்கின்றார்.

  சென்னை, திருவான்மியூரில் அமைந்துள்ள சரசுவதி வெங்கட்ராமன் பள்ளியில் 01.06.2014 மாலை 4 மணிக்குக் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவைப் ப.சு. அவர்களின் மாணவர்கள் மா. வயித்தியலிங்கன், மா. கோடிலிங்கம் ஏற்பாடு செய்து நடத்தினர். 

  முனைவர் ஔவை நடராசன் ஐயா தலைமையில் நடைபெற்ற இந்த நூற்றாண்டு விழாவில் குடந்தை ப.சுந்தரேசனார் பாடல்கள் அடங்கிய குறுவட்டு வெளியிடப்பட்டது. திரு. மோகன் அவர்கள் வெளியிட மு. இளங்கோவன் பெற்றுக்கொண்டார். திரு. மோகன், பேராசிரியர் மா. வயித்தியலிங்கன், திரு. மா. கோடிலிங்கம், பேராசிரியர் செல்வகணபதி, திரு. விசய திருவேங்கடம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினர். களக்காடு சீதாலெட்சுமி அவர்களின் பண்ணிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


இறைவாழ்த்து திரு. மா. கோடிலிங்கம்


குறுவட்டினைப் பெறும் காட்சி


முனைவர் ஔவை நடராசன் தலைமையுரை


முனைவர் மு.இளங்கோவனின் முயற்சியைப் பாராட்டும் விழாக்குழுவினர்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

குடந்தை ப.சுந்தரேசனாரின் சுவடுகளைத் தேடி…


திரு. வைத்தியலிங்கம் அவர்கள் ( குடந்தை ப. சுந்தரேசனாரைப் புரந்த பெருமக்களுள் ஒருவர்)

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வின்பொருட்டு செய்திகள் திரட்ட நேற்று (22.02.2014) சென்றுவர நேர்ந்தது. தாவரத் தகவல் தொகுப்பாளர் இரா. பஞ்சவர்ணம் ஐயா அவர்களும் அவர்களின் உறவினர் திரு. இராஇளங்கோவன் அவர்களும் உடன் வர நானும் சென்றேன். முதலில் தில்லைக்கோயிலின் தமிழ்வழிபாடு குறித்த வரலாற்றுச் செய்திகளை அறிய சிதம்பரத்திலுள்ள தமிழ் ஆர்வலர்கள் பலரைக் கண்டு உரையாடி உண்மை வரலாறு அறிந்தேன்
சிதம்பரம் நகர மன்றத்தின் முன்னாள் தலைவர் வி.எம்.எசு.சந்திரபாண்டியன் அவர்கள்

சிதம்பரம் நகரமன்றத்தின் முன்னாள் தலைவர் திரு. வி.எம். எசு. சந்திரபாண்டியன் அவர்கள் சிதம்பரம் வரலாறு குறித்த பல செய்திகளை ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார். தமக்குள்ள பல்வேறு அரசியல் பணிகளுக்கு இடையே பல்வேறு நூல்களைக் காட்டியும் ஆவணங்களைக் காட்டியும் எங்களிடம் வி.எம்.எசு. அவர்கள் உரையாடியமை எங்களுக்குப் பெரு மகிழ்வாக இருந்தது. அவர்தம் இல்லத்தில் அரிய நூலகம் ஒன்று உள்ளமையும் அதில் உள்ள நூல்கள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதையும் நினைத்து என் நூலகத்தின் பரிதாப நிலையை மனதில் நிறுத்திப்பார்த்தேன். அதியமானின் உலைக்கூடம்போல் என் நூலக நூல்கள் சிதறிக்கிடப்பதை நம் இல்லம் வருவோர் அடிக்கடி குறிப்பிட்டுச் சரிசெய்யச்சொல்வார்கள். 

தில்லை அம்பலத்தில் தமிழ் முழங்க மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் அவர்கள் செய்த முயற்சியும், பிச்சாவரம் குறுநில மன்னர்களின் பொறுப்பில் சிதம்பரம் கோயில் இருந்தமையையும் அறிஞர்கள் சிலர் எடுத்துக்கூறினர். சோழப்பேரரசர் காலம் முதல் சிதம்பரத்தில் அமைந்த இறைவழிபாடு குறித்த பல்வேறு செய்திகள் கிடைத்தன.

அடுத்ததாகச் சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்வேதம் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த திரு வைத்திலிங்கம் ஐயா அவர்களை மாநாட்டுக்கூடம் சென்று அழைத்துக்கொண்டேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் அரங்க. பாரி அவர்களைச் சந்திக்கும்பொருட்டுத் தமிழ்த்துறைக்குச் சென்றோம். அங்கு அமர்ந்தபடி குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய செய்திகளை என் காணொளிக் கருவியில் பதிந்துகொண்டேன். சற்றொப்ப 45 நிமிடங்கள் குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய நினைவுகளைத் திரு. வைத்தியலிங்கம் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் தேவாரத்தைப் பயிற்றுவிக்கும் விரிவுரையாளராகக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் மூன்றாண்டுகள் பணிபுரிந்தமை இங்கு நினைவிற்கொள்ள வேண்டிய செய்தியாகும்.


 பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரின் தமிழிசைப் பணி, தமிழ் இலக்கிய ஈடுபாடு, பிறமொழி படிக்க நேர்ந்தமைக்கான காரணங்கள், அவரின் இயல்புகள், வாழ்க்கை முறை, குடும்பம், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடைபெற்ற அவரின் விரிவுரை, தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் அவர்களைப் போற்றி மதித்தமை, ஐயா அவர்களின் இறுதிக்கால வாழ்க்கை என்று பல செய்திகளைப் பெற முடிந்தது. பெரும் புதையல் அகழ்ந்து பெற்ற மகிழ்ச்சி கிடைத்தது. ஒத்துழைப்பு நல்கிய அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு மீண்டோம்.

திரு.இரா.பஞ்சவர்ணம் ஐயா, திரு. வைத்தியலிங்கம் ஐயா, மு.இ, முனைவர் அரங்க.பாரி அவர்கள்


திரு.இரா.பஞ்சவர்ணம் ஐயா, திரு. வைத்தியலிங்கம் ஐயா, இரா.இளங்கோவன், முனைவர் அரங்க.பாரி அவர்கள்

புதன், 16 அக்டோபர், 2013

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914 - 09. 06.1981) நூற்றாண்டு விழா


பண்ணாராய்ச்சி வித்தகர் 
குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914 - 09. 06.1981) 

     “பண்ணாராய்ச்சி வித்தகர் எனவும்ஏழிசைத் தலைமகன்எனவும் திருமுறைச் செல்வர்எனவும் போற்றப்பட்ட குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப்பணி தமிழ் இலக்கிய வரலாற்றில் போதிய அளவில் இடம்பெறாமை ஒரு குறையே ஆகும். பரிபாடல், சிலப்பதிகாரம், பன்னிரு திருமுறைகள், நாலாயிரப் பனுவல், சிற்றிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசைநுட்பங்களைப் பாடி எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவராகக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் விளங்கினார்கள். தமிழகத்தின் பல ஊர்களில் வாழ்ந்த தமிழன்பர்கள் இப்பெருமகனாரின் இசையார்வம் அறிந்து இயன்ற வகையில் துணைநின்றுள்ளனர். ஆயினும் இப்பெருமகனாரின் முழுத்திறனையும் எதிர்காலத் தமிழ்க் குமுகம் முற்றாக அறியும் வண்ணம் இவர் நூல்கள் பாதுகாக்கப்படாமல் போனமையும் தமிழிசை உரைகள் காற்றில் கரைந்தமையும் நம் போகூழ் என்றே சொல்ல வேண்டும்.

தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லைஎன்ற கூற்றுக்கு ஏற்பத் தமிழிசை பரப்பிய இப்பெருமகனாரின் சிறப்புகளை உலகம் வாழ் தமிழர்கள் அறியும் வண்ணம் நினைவுகூரவும், ஆவணப்படுத்தவும் தமிழன்பர்கள் சிலரின் துணையுடன் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவினை நடத்த முடிவுசெய்துள்ளோம். உலக அளவில் இதற்கான ஓர் ஆய்வறிஞர் குழுவும், கருத்துரை வழங்கும் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

புதுவையிலும் தமிழகத்திலும் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதுடன் தமிழர்கள் நிறைந்து வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், அமெரிக்கா, கனடா, குவைத், பிரான்சு உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடுவதற்குத் தமிழர்கள் முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும்படித் தமிழ் அமைப்புகளை அன்புடன் வேண்டிக்கொள்வதுடன், தமிழக அரசு குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடவும் நூல்களை நாட்டுடைமை ஆக்கவும் தமிழிசை ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம். மேலும் நூற்றாண்டு நினைவாக இசைக்கல்லூரி ஒன்றிற்குக் குடந்தை ப. சுந்தரேசனாரின் பெயரை வைக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய குறிப்புகள்

தஞ்சாவூர் மாவட்டம் குடந்தையில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர்.

திருவநந்தபுரம் இலக்குமணபிள்ளை அவர்களிடம் தமக்கிருந்த இசையீடுபாட்டைச் சொல்லி இசை கற்பிக்கும்படி வேண்டினார். ப.சுந்தரேசனாரின் இசை ஈடுபாட்டைப் பாராட்டிய இலக்குமணபிள்ளை அவர்கள் அங்குத் தங்கிப்படிக்க வாய்ப்பின்மையைச் சொல்லிக் குடந்தைக்கு அனுப்பி வைத்தார்.

ப.சுந்தரேசனார் முதன்முதல் (பிடில்)கந்தசாமி தேசிகர் என்பவரிடம் இசைபயின்றார். பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சிலகாலம் இசைபயின்றார். அதன்பின்னர் 1935 முதல் ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாகக் குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் அவர்களிடம் செவ்விசை பயின்றுள்ளார்.

ப.சுந்தரேசனார் அவர்கள் 1944 இல் திருவாட்டி சொர்ணத்தம்மாளை மணந்தார்.

ப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் ஈடுபாடுகொண்ட அன்பர்களால் ஆடுதுறையில் 1946 இல் அப்பர் அருள்நெறிக்கழகம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. ஆடுதுறை திரு.வைத்தியலிங்கம் அவர்கள் இப்பணியில் முன்னின்றார். நாகைப்பட்டனத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர்கோ கோவை.இளஞ்சேரன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத் தமிழ்ச்சங்கத்தில் ப.சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்துறையில் இலால்குடி) ப.சு.நாடுகாண் குழு செயல்படுகின்றது.

1949 முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பு இசையாசிரியராகவும், 1952சூலை முதல் 1955 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

அருட்செல்வர் நா.மகாலிங்கனார், நீதியரசர் செங்கோட்டுவேலனார் முதலானவர்கள் ப.சுந்தரேசனார் இசையில் திளைத்தனர். இவர்தம் அருமை அந்நாள் முதலமைச்சர்கர்களாக விளங்கிய கலைஞர் மு. கருணாநிதி. ம.கோ.இராமச்சந்திரனார்(எம்.ஜி.ஆர்) முதலானவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன.

ம.கோ.இராமச்சந்திரனார் வள்ளுவர்கோட்டத்தில் இவர்தம் பாடலைக்கேட்டு வியப்புற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களால் சிலகாலம் தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ப.சுந்தரேசனார் அவர்களுக்கு விபுலானந்தரின் தொடர்பு கிடைத்ததும் சிலப்பதிகார இசையாய்வில் தோய்ந்தார். குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர்(திருக்களம்பூர்) என்ற ஊரில் 1947 இல் நடைபெற்ற விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் அடிகளார் வியந்து போற்றும் வண்ணம் ப.சுந்தரேசனார் அரியவகையில் யாழ்நூலின் சிறப்பினை விளக்கியபொழுது அடிகளார் வியந்து பாராட்டினார்.

இவர் பஞ்சமரபு(1975) நூலுக்கு உரைவரைந்தமையும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

ப.சுந்தரேசனார் அவர்களின் வழிவழி வாரிசுகளாகச் சிலரை உருவாக்கியுள்ளார் அவர்களுள் திரு.வைத்தியலிங்கம், திரு.கோடிலிங்கம் குறிக்கத்தக்கவர்கள்.

குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் ப.சுந்தரேசனாரின் புகழை நினைவுகூர்ந்தவர்களில் முதன்மையானவர்.

குடந்தை.சுந்தரேசனாரின் தமிழ்க்கொடை:

1.இசைத்தமிழ்ப்பயிற்சி நூல்(1971) திருப்பத்தூர்(முகவை)த் தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு
2.முதல் ஐந்திசைப்பண்கள்(1956) பாரி நிலையம்,
3.முதல் ஐந்திசை நிரல்,
4.முதல் ஆறிசை நிரல்,
5. முதல் ஏழிசை நிரல்
முதலான நூல்களை எழுதியவர்.

மேலும் ஓரேழ்பாலை, இரண்டாம் ஐந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல், பரிபாடல் இசைமுறை, பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ் அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம், சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமையக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள், தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய இசைத்தமிழ்க்குறிப்புகள், இசைத்தமிழ்-தமிழிசைப்பாடல்கள், இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின.

தமிழிசை குறித்த ப.சுந்தரேசனார் அவர்களின் முடிவுகள் :

1.தமிழ்மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.
2.முல்லை நில மக்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவிகளையும் கண்டுபிடித்தனர்.
3.முதலில் குழல்கருவி ஐந்து துளைகளைக்கொண்டிருந்தது. அதுபோல் ஐந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன்படுத்தப்பட்டது.
4.ஐந்து துளைகளின் வழியாக எழுந்த ஐந்து இசைகளே ஆதி இசையாகும்.
5.குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது.
6.இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.
7.முதல் ஐந்திசைபண்ணின் இசைநிரல் முதலியன 1.தாரம், 2.குரல், 3.துத்தம், 4.உழை, 5.இளி என்பன
8.முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம் எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று மோகனம் என்று வழங்கப்படுகின்றது.
9.இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி, செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி எனப்படுகிறது.
10.மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம், வடுகு எனப் பண்டு பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.
11.நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.
12.ஐந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.
13.தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்தமிழகத்தில் வழங்கப்பட்ட இசையேயாகும்.
14.பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும், திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன.

நன்றி:
பாவாணர் தமிழ்க்குடும்பம்(நெய்வேலி)
பேராசிரியர் சிவக்குமார்(குடந்தை)
நினைவில் நிற்கும் குடந்தைக் கதிர். தமிழ்வாணன்
திரு.ஆ.பிழைபொறுத்தான்(மேலமுடிமண்)

மேலும் விரிவுக்கு என் பழைய கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.







வியாழன், 17 மே, 2007

சிலப்பதிகார உரைகளும் பஞ்சமரபு வெண்பாக்களும்

தமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின் நுட்பங்களை அறிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாரின் உரை பெரிதும் துணைசெய்கின்றன. இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது. அவர்கள் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு என்பது குறிப்பிடத் தக்கது. பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகார நூலின் விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளது. அவ்வெண்பாக்கள் விளக்கும் செய்திகளை இங்குத் தொகுத்து நோக்குவோம்.

பஞ்சமரபு அறிமுகம்

பஞ்சமரபு என்னும் நூலை இயற்றியவர் சேறை அறிவனார் என்னும் புலவராவார்.இவர்தம் காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. எனினும் பஞ்சமரபு வெண்பாக்களின் செய்தியும், சிலப்பதிகாரச் செய்தியும் மிகுதியும் ஒத்துள்ளன. பஞ்சமரபு நூல் வெண்பாக்களால் அமைந்த நூல். சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் ஐந்தொகை என்பதாகும். சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை எனும் பாயிரவரி இதனை மெய்ப்பிக்கும். இந்நூலின் காலப்பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

பஞ்சமரபு நூல் தமிழகம் முழுவதும் வழக்கில் இருந்துள்ளது. பகுதி, பகுதியாக மக்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். தெய்வசிகாமணி கவுண்டர் என்பவர் முதன்முதல் பஞ்சமரபு நூலின் ஒரு பகுதியை (1973) வெளியிட்டார். பின்பு குடந்தை ப. சுந்தரேசனாருடன் இணைந்து (1975) உரையுடன் வெளியிட்டார். 1991 இல் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் ஆய்வுரையுடனும், விளக்கத்துடனும் பஞ்சமரபு வெளிவந்தது.

கிடைக்காத நூல்களின் பட்டியலில் இருந்த பஞ்சமரபு, நூலாக்கம் பெற்றதும் சிலப்பதிகார உரைகள் தெளிவு பெற்றன. இசைகுறித்த உண்மைகள் குன்றின் மேலிட்ட விளக்காகத் தெரி ந்தன. சிலப்பதிகார இசையாய்வு புதுப்பாதையைக் கண்டது. சிலப்பதிகாரத்தை வெளியிட்ட உ.வே.சா பஞ்சமரபைப் பெயராளவில் அறிந்திருந்தார். சிலம்பின் ஒன்பதாம் பதிப்பில் பேராசிரியர் மு. அருணாசலம் அவாகள் 24 பஞ்சமரபு வெண்பாக்களைத் தொகுத்துப் பின்னிணைப்பாக வழங்கினார். பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் 30 மேற்பட்ட பஞ்சமரபு வெண்பாக்கள் சிலப்பதிகார உரையில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். நுட்பமாக ஆராயும் பொழுது இந்த எண்ணிக்கை மிக வாய்ப்புள்ளது.

சிலப்பதிகார உரையாசிரியர் அரும்பதவுரைகாரர் பஞ்சமரபு வெண்பாக்களை முழுமையாகக் கையாளாமல் முதலும், முடிவும் காட்டும் போக்கினராக உள்ளார். அடியார்க்கு நல்லார் முழுமையாகக் காட்டுகிறார். ஆனால் இப்பாடல் எந்தநூல் என்பதை உய்த்துணர்ந்தே அறிஞர்கள் வந்தனர். பஞ்சமரபு நூல் வெளிப்பட்ட பிறகே உண்மை உலகிற்குத் தெரியவந்தது.
சிலப்பதிகாரக் காலத்திற்கும், உரையாசிரியர் அடியார்க்குநல்லார் காலத்திற்கும் இடைவெளி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகும். எனவே அடியார்க்கு நல்லார் சிலம்பின் இசையுண்மைகளை அறியப் பஞ்சமரபே துணை செய்துள்ளது. அடியார்க்குநல்லார் உரை சிலம்பின் சில பகுதிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. குறிப்பாக இசையுண்மைகள் மண்டிக்கிடக்கும் கானல்வரிக்குக் கிடைக்காமல் போனதால் பஞ்சமரபினை அடியார்க்கு நல்லார் எந்த அளவு பயன்படுத்தியுள்ளார் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.

அரங்கேற்று காதை உரையிலும், ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வெண்பாக்கள்தான் சிலப்பதிகார இசையுண்மைகளை விளக்கிக் காட்டுகின்றன. புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. இவற்றுள் அரங்கேற்று காதையில் 23 வெண்பாக்களையும், ஆய்ச்சியர் குரவையில் ஏறத்தாழ 11 வெண்பாக்களையும் பயன்கொண்டுள்ளார்.

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்சமரபின் ஒரே வெண்பாவை வேறுவேறு இடங்களிலும் பயன்படுத்துகிறார்.

1. ஓங்கிய மூங்கில் ......(3 :26 ; 17 :20)
2. சொல்லு மதிற்களவு...(3 :26 ; 27 :20)
3. இருவிரல்கள் நீக்கி....(3 :26 ; 17 20)
4. வளைவாயரு...........(3 :26 ; 17 20)

என்னும் வெண்பாக்கள் இதற்குச் சான்றாகும்.

வெண்பாக்கள் உணர்த்தும் செய்திகளின் சுருக்கம்

1. யாழ் நான்கு வகைப்படும்.
(அ) பேரியாழ் (ஆ) மகரயாழ் (இ) சகோடயாழ் (ஈ) செங்கோட்டு யாழ் என்பன.

2. நால்வகை யாழுக்குரிய நரம்புகளின் எண்ணிக்கை
பேரியாழ் 21 நரம்புகள்.
மகரயாழ் 19 நரம்புகள்.
சகோடயாழ் 14 நரம்புகள்.
செங்கோட்டியாழ் 7 நரம்புகள்.

3. வங்கியம் (துணைக்கருவி) செய்வதற்குரிய மரங்கள்
(அ) மூங்கில் (ஆ) சந்தனம்(இ) செங்காலி (ஈ) கருங்காலி (உ) உலோகம் (வெண்கலம்)

4. துளைக்கருவி(புல்லாங்குழல்) செய்யும் மரம் தேர்ந்தெடுத்தல்.

5. துளைக்கருவியின் அளவு (புல்லாங்குழல்).

குழலின் முழுநீளம் 4 5=20 விரலம்.
குழல்வாயின் சுற்றளவு 4 1/2விரலம்
துளைவாயின் துளையளவு-நெல்லரிசியளவு
மூடியதுளையிலிருந்து வாய்த்துளை-2 விரலம் முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

6. துளைக்கருவியின் பகுப்பு தும்பு முகப்பக்கம், வளைவாய்ப்பகுதியிலிருந்து முறையே 2,2 அங்குலம்
(மொத்தம் 4- அங்குலம்) நீக்கி எஞ்சியுள்ள 16-விரல் நீளத்தில் துளையிடுக. இதில் வாய்த்துளையிலிருந்து ஒரு விரல்நீக்கி, மீதியுள்ள ஒன்பது விரல் நீளத்தில் 8-துளைகள் இடவேண்டும்.(ஒரு விரலம் என்பது 3/4 அங்குலம்)

7. ஏழு துளைகளுக்கு உரிய ஏழு விரல்கள்.
(அ) இடக்கையின் ஆள்காட்டி விரல் (ம1) மெல்லுழைக்கு
(ஆ) இடநடுவிரல் வன்துத்தத்திற்கு(ரி2)
(இ) இட மோதிர விரல் குரலுக்கு (ச)

(அ) வலக்கையின் ஆள்காட்டி விரல் மென்தாரத்திற்கு(நி1)
(ஆ) வலக்கையின் நடுவிரல் வன்விளர¤க்கு (த2)
(இ) வலக்கையின் மோதிரவிரல் இளிக்கு (ப)

8. ஒலியின் தோற்றம் பற்றி வெண்பாவின் செய்தி உள்ளது.

9. இசைக்கு ஐம்பூதங்களின் இன்றியமையாமை.

10. காற்றின் வகைகள்

11. பத்து நாடிகள்

12. பூதங்களின் பரிணாமம்.

13. ஆளத்தி பற்றிய செய்திகள் (ஆலாபணை)

14. பண் என்பதற்கான காரணங்கள¤ன் விளக்கம்

15. வட்டப்பாலைக்கு மண்டிலம் அமைத்தல்

16. பன்னிரு இராசி வீடு பற்றிய செய்திகள் உள்ளன.

17. செம்பாலைக்கு நேர்பாலையான கோடிப்பாலை (கரகரப்பிரியா) பற்றிய செய்திகள் உள்ளன.

18. செம்பாலையின் நரம்புகளுக்கு மாத்திரை கூறல்.

19. தொல்காப்பியர் குறிப்பிடும்நான்கு நிலத்திற்கும் உரிய பெரும்பண்களுக்கு உரிய இன்றைய இராகங்களைக் கூறுகிறது.

20. வலமுறையில் அலகு பிரித்தலைச் சில வெண்பா உணர்த்துகின்றன.

நிறைவாக...

சிலப்பதிகாரத்தை உணர உரையாசிரியர்களின், பங்களிப்பையும், பஞ்சமரபு வெண்பாக்களின் பங்களிப்பையும் மேலே கண்டோம். சிலம்பின் அடிப்படை இசையுண்மைகளைப் பஞ்சமரபு வெண்பாக்கள் தாங்கியுள்ளன. பல செய்திகளை இவ்வெண்பாக்கள் தன்பால் கொண்டுள்ளன.

(19,20-05-2007 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இ.ப.த.ம. கருத்தரங்கில் படிக்கப்பெற்ற கட்டுரை)

முனைவர் மு. இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,
புதுச்சேரி - 605003