நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 1 நவம்பர், 2014

தமிழறிஞர் முதுகண்ணன் அவர்கள் மறைவு





 அறிஞர் முதுகண்ணன் அவர்கள்

புதுவையில் வாழ்ந்த மூத்த தமிழறிஞரும் பன்னூலாசிரியருமான முதுகண்ணன் அவர்கள் தம் 86 ஆம் அகவையில் இன்று (01. 11. 2014) புதுச்சேரியில் இயற்கை எய்தினார். இவர் மறைமலையடிகள், திரு.வி.க, மு. வ, பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழறிஞர்களுடன் நெருங்கிப்பழகிய பெருமைக்குரியவர். அன்னாரின் புகழுடல் நாளை (02.11.2014) புதுச்சேரியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவர் ஆதிரை, தேற்றுமொழித் திரட்டு, சுடர்மணிகள், மணமகளுக்கு உள்ளிட்ட நூல்களை எழுதியவர். அன்னாரின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

முதுகண்ணன் அவர்கள் புதுவைச் சித்தன்குடியில் வாழ்ந்த இரத்தின. முனிசாமி, கண்ணம்மாள் ஆகியோரின் இரண்டாம் மகனாக 08.04.1928 இல் பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் துரைக்கண்ணு என்பதாகும். இவர் தம் பெயரை இளமையில் முனி. துரைக்கண்ணன் என்று எழுதினார். பின்னால் அதனைச் சுருக்கி மு. து. கண்ணன் என்று அமைத்து எழுதினார். இதுவே பின்னாளில் முதுகண்ணன் ஆனது.

புதுச்சேரியில் தொடக்கத்தில் திண்ணைப்பள்ளியில் பயின்ற இவர், பின்னர் புதுச்சேரி, மாதாக்கோயில் தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சேர்ந்து பிரெஞ்சுமுறைக் கல்வி பயின்றுவந்தார். முதுகண்ணன் ஆறாம் வகுப்பு பயின்றபொழுது தமிழாசிரியராகச் சிவ. கண்ணப்பா அவர்கள் இருந்தார். ஏழாம் வகுப்பில் பயின்றபொழுது பாவேந்தர் பாரதிதாசன் இவருக்கு ஆசிரியராக இருந்தார். பள்ளியில் படிக்கும்பொழுது ஒளி என்ற கையெழுத்து ஏட்டில் பாடல்கள் எழுதியுள்ளார். 1945 இல் இவர் தமிழ்ச்செர்த்திபிகா என்ற தேர்வில் வெற்றிபெற்றார். 1946 இல் இவர் தமிழ் பிரவே வகுப்பில் பயின்றபொழுது அறிஞர் இரா. திருமுருகனார் உள்ளிட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது.

தம் இல்லத்துக்கு முத்தமிழ் இல்லம் என்று பெயர் சூட்டியவர் முதுகண்ணன். முதுகண்ணன் அவர்கள் இளமையிலேயே தூய தமிழில் உரையாடும் இயல்பைப்பெற்றவர். 1947 இல் ம.பொ.சி. அவர்களை அழைத்துவந்து தமிழரசுக்கழகக் கிளையின் சார்பில் பேசச்செய்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1951 - 52 இல் தமிழ்ப்புலவர் வகுப்பில் பயின்றார். அப்பொழுது அறிஞர் வெள்ளைவாரணனார், மு. அருணாசலம் பிள்ளை, அகப்பொருள் அமிர்தலிங்கனார், அ. சிதம்பரநாதனார் உள்ளிட்டோரிடம் கல்வி கற்ற பெருமைக்குரியவர்.

1953 இல் தம் தாயார் பெயரில் அச்சகம் தொடங்கினார். அது கண்ணம்மை அச்சகம் எனப் பெயர் தாங்கியது. இவரின் அச்சகத்திற்கு வரும் திருமண அழைப்பிதழ்களைப் பிழை நீக்கி அச்சிட்டு வழங்குவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.

முதுகண்ணன் அவர்கள் 1955 இல் கும்பகோணத்தில் வாழ்ந்த மருதமுத்து, பார்வதி ஆகியோரின் மகளாகிய ஞானாம்பாள் அவர்களைப் புதிய முறையில் மணந்துகொண்டார். சீர்திருத்தமுறையில் இம்மணம் அமைந்தது. இவர்களுக்குத் தேமொழி, மணிமொழி, அருள்மொழி, மென்மொழி, வாய்மொழி, தமிழ், ஆதிரை என மக்கள்செல்வங்கள் எழுவர் உள்ளனர். 1969 இல் இவர் ஆதிரை என்ற பாவியத்தை எழுதத் தொடங்கி  பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நூல் முற்றுப்பெற்றது. முத்தொள்ளாயிரம்,  நளவெண்பா அமைப்பில் இவர் வெண்பா யாப்பில் இந்த நூலை யாத்துள்ளார்.




தூய தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய முதுகண்ணனார் அவர்கள் முதுமை காரணமாக இன்று (01.11.2014) இயற்கை எய்தியமை புதுச்சேரி அன்பர்களுக்குப் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.



கருத்துகள் இல்லை: