நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 10 நவம்பர், 2014

முதுபெரும் தமிழறிஞர் ஆ. சிவலிங்கனார் மறைவு





தொல்காப்பிய உரைவளப் பதிப்புகள் வழியாகத் தமிழுலகிற்குப் பெரும்பணியாற்றிய மூத்த தமிழறிஞர் ஐயா ஆ.சிவலிங்கனார் அவர்கள் 09.11.2014 நள்ளிரவு 11.45 மணிக்கு இயற்கை எய்தினார்கள். இன்று(10.11.2014) மாலை 4 மணிக்கு அன்னாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தமிழன்பர்களின் நல்வணக்கத்திற்காக ஐயாவின் உடல் புதுச்சேரி, கதிர்காமம், வ.உ.சி. தெருவில் உள்ள(கங்கையம்மன் கோயில் எதிரில்) அவர்தம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், தமிழ் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

புலவர் ஆ. சிவலிங்கனார் குறித்து 22.09.2008 இல் நான் எழுதிய கட்டுரையைத் தேவை கருதி மீண்டும் வெளியிடுகின்றேன்.

அறிஞர் ஆ.சிவலிங்கனார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தொல்காப்பிய உரைவளப் பதிப்புகளால் புகழ்பெற்றவர் அறிஞர் ஆ.சிவலிங்கனார்.இவர் கடலூர் புதுவண்டிப் பாளையத்தில் (கரையேறவிட்ட குப்பம்) 30.11.1922 இல் பிறந்தவர். பெற்றோர் ஆறுமுகனார் - பொன்னம்மாள்.நெசவாளர் குடும்பத்தில் பிறந்த ஆ.சிவலிங்கனார் தொடக்கக் கல்வியைக் கடலூர் நகராட்சி(முனிசிபல்)பள்ளியில் பயின்றவர்.

  பிறகு கடலூரில் புகழ்பெற்று விளங்கிய ஞானியார் மடத்தில் தம் இருபதாம் அகவை வரை பயின்றவர்.ஞானியார் மடத்தில் பயின்றபொழுது இவருக்கு ஐந்தாம் பட்டத்தில் இருந்த சிவசண்முக மெய்ஞான சிவவாக்கியார் சுவாமிகள் ஆசிரியராக விளங்கிச் சமய நூல்களைப் பயிற்றுவித்துள்ளார்(இச் சுவாமிகள்தான் தந்தை பெரியாருக்கு நெருங்கிய நட்புரிமை கொண்டவர்.அக்காலத்தில் சமூகச்சிந்தனையுடன் விளங்கியவர்.இசுலாமிய, கிறித்தவ மதம் சார்ந்தவர்களும் இவர்களிடத்துத் தமிழ்ப்பாடம் கேட்டுள்ளதை அறியமுடிகிறது.

  ஞானியார் மடத்தில் படித்தகாலை அறிஞர் சிவலிங்கனார்க்குத் தமிழ் இலக்கணங்களில் நல்ல பயிற்சி அமைந்தது.அங்குப் பணிபுரிந்த உருத்திரசாமி ஐயர் (வீரசைவ மரபினர்) ஆசிரியராக விளங்கி இவருக்கு நல்லமுறையில் தமிழ் இலக்கியங்களைப் பயிற்றுவித்தார்.

  அறிஞர் ஆ.சிவலிங்கனார் திருவையாறு கல்லூரியில் தமிழ்பயின்று தம் புலமையை வளர்த்துக்கொண்டார்(1936-1940).அப்பொழுது திருவையாறு கல்லூரியில் கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை,புருசோத்தம நாயுடு,கோவிந்தசாமி பிள்ளை,சோமசுந்தர தேசிகர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் நம் சிவலிங்கனார் அவர்களுக்கு ஆசிரியப் பெருமக்களாக இருந்துள்ளனர்.புருசோத்தமநாயுடு அவர்கள் அணியிலக்கணம்,தொல்காப்பியம் பொருளதிகாரம் பயிற்றுவித்ததையும்,சோமசுந்தர தேசிகர் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பயிற்றுவித்ததையும், வேங்கடாசலம் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம் சொல்லதிகாரம் பயிற்றுவித்ததையும் அறிஞர் சிவலிங்கனார் குறிப்பிடுகிறார்.

  திருவையாற்றுக் கல்வியை முடித்த கையோடு அக்காலை வேலை கிடைப்பது மிக அரிதாக இருந்தமையால் தம் வகுப்புத் தோழர் உதவியால் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகச் சிவலிங்கனார் இணைந்தார்.பின்னர் 1942 முதல்-1972 வரை மயிலம் சிவஞான பாலயசுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியர் பணியில் இணைந்தார்.

  இவர் காலத்தில் மயிலத்தில் பேராசிரியர் அடிகளாசிரியர், சுந்தரசண்முகனார், துரைசாமி ஐயர்,குமாரசாமி ஆசாரியார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் தமிழ் பயிற்றுவிக்கும் பணியில் ஈபட்டிருந்தனர். மயிலம் கல்லூரியில் ஓய்வுபெற்ற பிறகு 1973 இல் சேலம் மோகனூர் சுப்பிரமணியம் தமிழ்க்கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்தார்.தாம் பயின்ற கடலூர் ஞானியார் மடத்தில் 1974 முதல் 1979 வரை மடாலயப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

  அறிஞர் க.வெள்ளைவாரணனார் அவர்கள் விரும்பியாங்கு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பிய உரைவள வெளியீட்டுப் பணியில் ஈடுபட்டுத் தொல்காப்பிய உரைவள நூல்கள் பல தொகுதிகளாக வெளிவர உதவினார்.

  அறிஞர் ஆ.சிவலிங்கனார் அவர்களின் துணைவியார் பெயர் மங்களம் என்பதாகும். இவர்களுக்கு ஆறு ஆண்மக்கள்,இரண்டு பெண்மக்கள்.மக்களும் சுற்றமும் சூழ நல்ல உடல்நலத்துடன் அறிஞர் ஆ.சிவலிங்கனார் புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார். சமய நூல்களைப் பதிப்பிப்பதிலும், இலக்கிய,இலக்கண ஆய்வுகளில் ஈடுபடுவதிலும் தம் அரிய வாழ்க்கையை ஈடுபடுத்தி வருகிறார்.

அறிஞர் ஆ.சிவலிங்கனார் அவர்கள் பல்வேறு இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.செந்தமிழ்ச்செல்வி,தமிழ்ப்பொழில்,தமிழ்மாருதம், செந்தமிழ், மக்கள் சிந்தனை,வீரசைவ முரசு என்னும் இதழ்கள் குறிப்படத்தகுந்தன.தமிழகம்,புதவை சார்ந்த பல்கலைக்கழங்களிலும் பல அறிவு அரங்குகளிலும் தொடர்ந்து உரையும் பொழிவும் வழங்கி வருகிறார்.


  தமிழகப் புலவர் குழு உறுப்பினராகவும்,தமிழக அரசு அமைத்த தமிழ் இலக்கண நூல் மீண்டும் உருவாக்குதல் குழுவின் வல்லுநர் குழு உறுப்பினராகவும் பணிபுரிந்தவர்.இவர்தம் தமிழ்ப்பணியை மதித்த பல நிறுவனங்கள் இவரைத் தக்க வகையில் போற்றியுள்ளன.மயிலம் மடம் இவரை ஆதீனப் புலவராக அறிவித்துப் புகழ்கொண்டது(1954).சிவநெறிப்புலவர் என்னும் பட்டம் வழங்கி மதுரை ஆதீனம் மகிழ்ந்தது(1956).உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொல்காப்பியச் செம்மல் என்னும் பட்டம் வழங்கியது(1997).

  அரசர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு உருவா ஐம்பதாயிரம் பண முடிப்புப் பெற்றவர்(2000).இவரிடம் தமிழ் பயின்றவர்களுள் மயிலம் 19 வது பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், பேரூர் தவத்திரு சாந்தலிங்கசாமி அவர்கள், முனைவர் வை.இரத்தினசபாபதி, முனைவர் த.பெரியாண்டவன், தெ.முருகசாமி உள்ளிட்ட அறிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

பேராசிரியர் ஆ.சிவலிங்கனாரின் குறிப்பிடத்தகுந்த நூல்களுள் சில:

01.தொல்காப்பியம் உரைவளம்(27 பகுதிகள்,உ.த.நி.வெளியீடு)
02.தொல்காப்பியம் எழுத்ததிகாரம்-இளம்பூரணம் விளக்கக் கட்டுரைகள்
03.அகத்தியர்கள்
04.எட்டாந் திருமுறை
05.மூலன் தமிழ்
06.தொல்காப்பியர் கூறும் உள்ளுறையும் இறைச்சியும்
07.மாணிக்கவாசகர் சமயமும் காலமும்
08.பெரியபுராணப் பெண்மணிகள்
09.தமிழ் இலக்கண உணர்வுகள்

உரைகள்

10.திருவெங்கைக் கலம்பகம் உரை
11.சிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல் உரை
12.திருவெங்கை உலா உரை
13.திருக்கூவப்புராண உரை
14.சிவஞான பாலய சுவாமிகள் பதிகம் உரை... உள்ளிட்ட நூல்களையும்,

தொல்காப்பியம் உரைவளம்,எழுத்து,மொழிமரபு
தொல்காப்பிய உரைவளம்
தொல்காப்பிய உரைவளம்,பொருள்.
மாணிக்கவாசகர் காலமும் சமயமும்
அகத்தியர்கள் பற்றிய ஆய்வு நூல்
தமிழ் இலக்கண உணர்வுகள்
சித்தரும் சிவஞானியும்
போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.


தொடர்புக்கு: பேசி : 0413 -2273519

மேலும் படிக்க



  

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா