நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 25 நவம்பர், 2014

திராவிட இயக்கச் சிந்தனையாளர் சேலம் கோ. வேள்நம்பி ஐயா மறைவு



தமிழறிஞர் கோ.வேள்நம்பி ஐயா

  மிகச் சிறந்த திராவிட இயக்கச் சிந்தனையாளரும், தமிழறிஞரும், பன்னூலாசிரியருமாகிய சேலம் வேள்நம்பி ஐயா இன்று 25.11.2014 வைகறை நான்கு மணியளவில் உடல்நலம் பாதிப்புற்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கிடைத்து ஆழ்ந்த துயருற்றேன். ஐயா அவர்களைப் பலவாண்டுகளுக்கு முன் அவர்தம் சேலம் இல்லம் சென்று கண்டு உரையாடியுள்ளேன். அவர்களின் குடும்பத்தாருடன் நல்ல தொடர்பில் இருந்தேன். குடந்தை ப. சுந்தரேசனார் குறித்த ஆய்விற்காக என்னைச் சந்திக்க விரும்பி அழைத்திருந்தார். பல பணி அழுத்தங்களால் நான் சேலம் செல்வதில் காலம் தாழ்ந்தது. ஐயா அவர்களை இனி காணும் வாய்ப்பை இழந்துள்ளேன். ஐயா வேள் நம்பி அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும் தமிழ்ப்பற்றாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல் உரியவாகும்.

  நாளை 26.11.2014 காலை எட்டுமணியளவில் ஐயாவின் உடல் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட உள்ளது. அவர்தம் விருப்பப்படி கருப்புச்சட்டை அணிவிக்கப்பெற்று எந்த வகையான சடங்கும் இல்லாமல் அறிவுமுறைப்படி அவர்தம் இறுதி நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

 ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பை 30.09.2012 இல் பதிந்துள்ளேன். மீண்டும் தேவை கருதி பதிகின்றேன்.

புலவர் கோ.வேள்நம்பி அவர்கள்

  சேலம் மாவட்டத்தில் தமிழறிஞர்கள் பலர் பிறந்து தமிழ் மொழிக்கும் இனத்திற்கும் பலவகையில் தொண்டாற்றியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கோ.வேள்நம்பி அவர்கள் ஆவார். 27.11.1935 இல் சி.கோபால்சாமி, திருவாட்டி கமலம்மாள் ஆகியோர்க்கு மகனாகச் சேலத்தில் பிறந்தவர் கோ.வேள்நம்பி ஆவார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் விசயராசன் என்பதாகும். 1983 இல் ஈழத்தமிழர் போராட்டம் உயர்வுநிலைக்கு வந்தபொழுது விசயன் என்ற சிங்கள மன்னன்தான் இலங்கையின் முதல் அரசனாகக் குறிக்கப்படும் வரலாறு அறிந்து சிங்கள மன்னனின் பெயரைத் தாங்குதல் தவறு என்று கருதித், தம்பெயரை மாற்றி வேள்நம்பி என்று அரசிதழில் பதிவு செய்துகொண்டார்.

  பள்ளிப் படிப்பை மேட்டூர் அணையிலும், வித்துவான் படிப்பைக் கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பெற்றவர்(1954-59). கரந்தையில் இவருக்கு ஆசிரியராக வாய்த்தவர்களுள் புலவர் ந.இராமநாதனார், ச.பாலசுந்தரம், அடிகளாசிரியர், சி.கோவிந்தராசன் ஆகியோர் குறிப்பிடத்தக்க பெருமக்களாவர்.

  தனிப்படிப்பாக இளங்கலைப்ப்பட்டம்(1969), முதுகலை(1971), பி.எட்.(1978 மண்டலக் கல்லூரி, மைசூர்), எம்.எட்(1989, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பட்டங்களைப் பெற்றவர்.

  1958 இல் இரண்டாம் நிலைத் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி, முதல்நிலைத் தமிழாசிரியர், முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர்(1989-1993) என்று பல நிலைகளில் தமிழ்ப் பணிபுரிந்துள்ளார். தமிழாசிரியர் கழகப் பொறுப்புகளிலும் இருந்து திறம்படப் பணிபுரிந்தவர்.

  1956இல் குமுதம் இதழ் நடத்திய திராவிட நாடு வேண்டும் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் மூன்றாம் பரிசுபெற்றவர் பல்வேறு விருதுகளையும், சான்றுகளையும் பெற்றவர். பலதுறை நூல்களை எழுதியுள்ளார்.

நாடகம்:

நெருஞ்சிப்பூ
முத்தமிழ்
விடியலைக் காணாத விழிகள்

கவிதை:

தனக்குவமை இல்லாதான்
வண்ணண நிலவின்  வளர்கலை
வெள்ளி உருகி விழுதுகள் ஆகி

உரைநடை:

புரட்சிக்கவிஞரின் தாலாட்டு
செய்யுள் நயம்
தமிழ் தந்த பேறு(அமெரிக்கப் பயண இலக்கியம்)
சிறகுமுளைத்த நாள்முதல்

தொகுப்பு:

தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள்(அறிஞர் அண்ணா உரைகள்)- 2009

இவர் காலத்தில் செய்த  சில தமிழ்ப்பணிகள்:

 தமிழகத் தமிழாசிரியர் கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டவர். 1985 இல் ஆசிரியர் போராட்டத்தில் சிறைத்தண்டனை அடைந்தவர். 1999 இல் சென்னையில் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்திச் சாகும்வரை போராட்டம் மேற்கொண்ட 102 தமிழறிஞர்களுள் இவரும் ஒருவர்.1979 இல் தொடங்கி 10685 சதுர அடியில் மனை வாங்கி 1991 இல் தமிழகத் தமிழாசிரியர் இல்லம் சேலத்தில் அமைத்தமை குறிப்பிடத்தக்க பணியாகும்.

  ஏர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் வாயில் அமைத்தமை. பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வகித்து வருகின்றமை.


கோ.வேள்நம்பி அவர்களின் தமிழ்க்குடும்பம்:

 புலவர் வேள்நம்பி அவர்களின் துணைவியார் பெயர் இரா.சரோசா ஆகும். இவர்களுக்கு அதியமான், கதிரவன், கால்டுவெல் என்று மூன்று ஆண்மக்களும், அன்பரசி என்ற மகளும் மழலைச் செல்வங்களாக விளங்குகின்றனர்.

அமெரிக்கா, கனடாவுக்குச் சென்று தமிழ்மணம் பரப்பிய சிறந்த பேச்சளாராகவும் கவிஞராகவும் கோ.வேள்நம்பி அவர்கள் விளங்குபவர்.

திராவிட இயக்க உணர்வு:

புலவர் வேள்நம்பி அவர்கள் மிகச்சிறந்த பகுத்தறிவுவாதியாகவும், திராவிட இயக்க உணர்வாளராகவும் விளங்குபவர். 08.02.1948 இல் மேட்டூர் அணையில் தந்தை பெரியாரைக் கண்டு அவர் சொற்பொழிவை முதன்முதல் கேட்டார். 20.09.1949 இல் ஓமலூரில் அறிஞர் அண்ணா அவர்களைக் கண்டு அவரிடமே அறிஞர் அண்ணா யார்? என்று கேட்டவர். அன்று மாலை சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்டவர்.

1950 ஆகத்து மாதம் நடைபெற்ற வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டும் என்று நடந்த பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தில் முழக்கமிட்டுச் சென்றவர்.

11.02.1963 இல் மாமா பெத்தி அவர்களின் மகன் பெயர்சூட்டு விழாவில் அறிஞர் அண்ணா அவர்களை வரவேற்றுப் பேசிய பெருமைக்குரியவர். 25.11.1971 இல் அயோத்தியாபட்டணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தந்தை பெரியார் அவர்களை வரவேற்றுப் பேசியவர்.

வேள்நம்பியின் சாதனை

 புலவர் வேள்நம்பி அவர்கள் திராவிட இயக்க வராலற்றைச் சொல்லும் வகையில் பயணம் என்ற நெடுங்கைதை நூலை எழுதியுள்ளார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று பிரிவுகளாக அமைந்த இந்த நூல் 3014 பக்கங்களைக் கொண்டுள்ளது. (வெளியீடு: சீதை பதிப்பகம், 6/6  தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை).

 அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் அருவினையாளர் விருது(05.07.2008)

 தினத்தந்தி, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருது(27.09.2008) பெற்றவர்.

சேலத்தில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்துவரும் வேள்நம்பி ஐயா அவர்கள்  பலவாண்டுகள் வாழ்ந்து தமிழுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்பதே நம் விருப்பம்.


புலவர் கோ.வேள்நம்பி அவர்களின் இல்ல முகவரி:


தமிழகம்
3/6 சி.எஸ்.ஐ. மாணவர் விடுதி பின்புறம்,
நேதாஜி நகர், அசுத்தம்பட்டி,
சேலம்- 636 007

பேசி: 0427- 2312240

கருத்துகள் இல்லை: