நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தமிழறிஞர் அருள்நிதி இராம. இருசுப்பிள்ளை




அருள்நிதி இராம. இருசுப்பிள்ளை

  குடந்தை ப. சுந்தரேசனாரின் தமிழிசைப் பணிகளை அறிந்தோர் கோவையில் யார் என வினவிக்கொண்டு பலரைத் தொடர்புகொண்டுபார்த்தோம். அப்பொழுது து. பாலசுந்தரம் ஐயா அவர்களும், திரு. வி. செல்வபதி அவர்களும் பேராசிரியர் இருசுப்பிள்ளை அவர்களின் இல்லத்துக்கு அழைத்துச் சொன்றனர். அருள் ஒழுகும் கண்களும் அன்பு ஒழுகும் பார்வையுமாகத் தமிழ் முனிவராகக் காட்சி தந்த இராம. இருசுப்பிள்ளை அவர்கள் எங்களை இன்முகத்துடன் வரவேற்று, தம் தமிழ் வாழ்க்கையை எடுத்துரைத்தார். தமிழ் வரலாற்றில் அவர் பெயர் நிலைத்து நிற்கும் வகையில் திருவாசகச் சொல்லகராதி, திருக்கோவையார் சொல்லகராதி என்னும் நூல்களைத் தந்துள்ளமை பாராட்டினுக்கு உரியது. அவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

  வாழும் தமிழறிஞர்களுள் இராம. இருசுப்பிள்ளை அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த சிருவங்கூர் என்னும் ஊரில் இராமசாமி பிள்ளை, இருசாயி அம்மாள் ஆகியோரின் மகனாக 17.10.1928 இல் பிறந்தவர். கள்ளக்குறிச்சி நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழம் ஆகியவற்றில் உயர்கல்வி பயின்றவர். 

   இராம. இருசுப்பிள்ளை அவர்கள் ஓராண்டு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு கோவை பூ.சா.கோ. கலைக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.  பூ.சா.கோ. அறநிலைய தொழிலகத்தில் தொழிலாளர் அலுவலராகவும் கடமையாற்றியவர். கலைக்கதிர் இதழின் பொறுப்பாசிரியராக 17 ஆண்டுகள் (1953 முதல் 1990 வரை) பணியாற்றியவர். சர்வோதயம் மாத இதழின் பொறுப்பாசிரியராக ஏழாண்டுகள் பணியாற்றியவர். 

   இறையீடுபாடு கொண்ட இருசுப்பிள்ளை அவர்கள் கோவை நன்னெறிக்கழகம், கோவை கம்பன் கழகம், கோவை திருவள்ளுவர் மன்றம், கோவை இரமணகேந்திரம், கோவை சன்மார்க்க சங்கம், உலக சமுதாய சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து பணிபுரிந்த பெருமைக்குரியவர்.

இராம. இருசுப்பிள்ளை அவர்களின் தமிழ்க்கொடைகள்:

1.   எப்படிச் செய்தன
2.   வண்டி வளர்ந்த கதை
3.   தொழிலகமும் மனித உணர்வும்
4.   தொழிலகப் பாதுகாப்பு
5.   தொழில் நல்லுறவில் மேற்பார்வையாளர் பங்கு
6.   கொக்கரோ(சப்பானிய குறுநாவலின் தமிழாக்கம்)
7.   எண்ணுக நல்லன
8.   நல்ல எதிர்காலம்
9.   புத்தாண்டில் புதுவாழ்வு
10. வள்ளலாரும் வேதாத்திரி மகரிஷியும்
11. வள்ளலார் வாழ்வும் வாக்கும்
12. ஞானப்பரம்பரை
13. திருவருட்பா தினசரி தியானம்
14. நாளொரு குறள்
15. கோவை மாவட்ட சுதந்திரப் போராட்ட வரலாறு
16. தமிழ்மொழியின் தொன்மையும் மேன்மையும்
17. அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கம்
18. மனித உணர்வு மேம்பாட்டிற்கான வழிமுறைகள்
19. திருவாசகச் சொல்லகராதி
20. திருக்கோவையார் சொல்லகராதி

என்பன.

"நல்லது செய்தல் ஆற்றிராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்”

என்னும் புறநானூற்று வரிகளைத் தம் வாழ்நாள் நோக்காகக் கொண்டு தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்.

 திரு. வி.செல்வபதி, திரு. து.பாலசுந்தரம்(கோவை)

1 கருத்து:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருள்நிதி இராம.இருசுப்பிள்ளை அவர்களைப் பற்றி தற்போதுதான் அறிகின்றேன். நாங்கள் அறிந்திராத பெருமக்களைப் பற்றித் தாங்கள் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் விதம் பாராட்டத்தக்கது.