நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

தமிழிசைக் காவலர் நா. வரதராசலு நாயுடு அவர்கள்



                     என்.வரதராசலு நாயுடு(என்.வி.நாயுடு)
    
  பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் வாழ்வை ஆவணப்படுத்தும்பொழுது தமிழுக்குத் துணைநின்ற பல பெரியோர்களின் வாழ்வியலை அறியமுடிந்தது. அவர்களுள் கோவையில் வாழ்ந்த நா. வரதராசலு நாயுடு அவர்களும் ஒருவராவார். என்.வி.நாயுடு என்று அறியப்பட்ட அப்பெருமகனார் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களை ஆதரித்த பெருமக்களுள் ஒருவர். என்.வி.நாயுடு பற்றி எழுத்தாளர் நாஞ்சில்நாடன் ஐயா அவர்களிடம் வினவியபொழுது திருவாளர் நாயுடு அவர்களைப் பற்றியும், அவர்களின் குடும்பத்தினர் பற்றியும் அரிய செய்திகள் பலவற்றைத் தந்தார். இப்பொழுது கோவையில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்துவரும் திரு. து. பாலசுந்தரம் ஐயா அவர்களின் தொடர்புஎண்ணை அளித்து அவர்களுடன் தொடர்புகொள்ளச் சொன்னார். கோவைக்குப் பயணமானேன்.

   திரு. து. பாலசுந்தரம் ஐயா அவர்கள் என் கோவை வருகையை அறிந்து நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து திரு. என்.வி.நாயுடு அவர்களின் மகள் வாழும் இல்லத்திற்கு அழைத்துச் சொன்றார். திருவாளர் நாயுடு அவர்களின் கல்வி, பணி, இசை ஈடுபாடு அறிந்து மகிழ்ந்தேன். மிகச் சிறந்த இசையீடுபாடு கொண்டிருந்த நாயுடு அவர்களிடம் மிகப்பெரும் இசைத்தொகுப்புகள் இருந்து சரியாகப் போற்றப்படாமல் இடம்மாறியுள்ளது. திருவாளர் நாயுடு அவர்கள் தொகுத்து வைத்திருந்த இசைத்தொகுப்புகளை மீட்டு வெளியுலகுக்குத் தந்தால் இசைவரலாறு மேம்படும்.

  நா. வரதராசலு நாயுடு அவர்கள் கோவை பீளமேட்டில் 1922 இல் வேளாண் குடியில் காங்கல்லார் மரபில் தோன்றியவர். முதுகலைப் பட்டமும் சட்டத்துறையில் பட்டமும் பெற்றவர். 1939 இல் இலண்டனில் காப்பீட்டுக் கணிப்புத்துறையில் F.I.A. (Fellow of the institute of Actuary ) என்ற பட்டம் பெற்றவர். இப்பட்டம் பெற்ற இந்தியர்கள் மூவரில் இவரும் ஒருவர்.

  மேற்கண்ட கல்வித்தகுதிகளால் இவர்கள் யுனைடெட் இந்தியா இன்சூரன்சு நிறுவனத்திலும் பின்னர் இந்நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் மண்டலத் துணை மேலாளராகப் பணியாற்றினார். பின்னர் தேசிய சேமிப்பு ஆணையராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மீண்டும் தாய் நிறுவனமான எல்..சியில் நிர்வாக இயக்குநராக இருந்து 1971 இல் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். தம் பணிக்காலத்தில் நேர்மையும் ஒழுங்கும் நிறைந்த அதிகாரி என அனைவராலும் பாராட்டப்பட்டவர். தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலத்தில் மிகப்பெரும் புலமை பெற்றிருந்தார். கம்பராமாயாணத்தை ஆழ்ந்து படித்ததால் பிறமொழி இலக்கியங்களில் உள்ள ஒப்புமைப் பகுதிகளையும், நுட்பங்களையும் எடுத்துக்காட்டி விளக்கும் பேராற்றல் பெற்றிருந்தார். மற்ற நூலாசிரியர்களிலிருந்து கம்பர் தனித்து நிற்கும் இடங்களை எல்லாம் நாயுடு அவர்கள் தம் கைப்படியில் குறித்து வைத்திருந்தார். அதனைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு அவர் குடும்பத்தாரால் அப் படி வழங்கப்பட்டுள்ளது.

   திரு. என்.வி. நாயுடு அவர்கள் கம்பராமாயணத்தில் மிகச் சிறந்த புலமை பெற்றவர்கள். காப்பிய இமயம் என்ற இவரின் நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். இவரின் இலக்கிய ஈடுபாட்டை நாஞ்சில்நாடன், “வால்மீகி இராமாயணம், கம்பரின் இராம காதை, துளசிதாசரின் இராம சரித மானசம், அத்யாத்ம இராமாயணம், காளிதாசனின் ரகுவம்சம் ஆகிய நூல்களை மூலமொழியில் கற்றுத் தேர்ந்து பேரறிஞர் N.V.நாயுடு என அறியப்பட்டவர் அவ்வப்போது எழுதிவைத்த கட்டுரைகளும், குறிப்புகளுமே காப்பிய இமயம்ன்னும் நூல் என்று அறிமுகம் செய்வார். 

  இரணிய வதைப் பரணி, ஆண்டாள் பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட நூல்களின் பதிப்பாசிரியராகவும் விளங்கியவர். தமிழிசைக்கும், தமிழ் இலக்கியத்தின் மேம்பாட்டிற்கும் உழைத்த என்.வி.நாயுடு அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் நினைவிற்கொள்ளவேண்டியவர்.

கருத்துகள் இல்லை: