திரு. வைத்தியலிங்கம் அவர்கள் ( குடந்தை ப. சுந்தரேசனாரைப் புரந்த பெருமக்களுள் ஒருவர்)
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு
ஆய்வின்பொருட்டு செய்திகள் திரட்ட நேற்று
(22.02.2014) சென்றுவர நேர்ந்தது. தாவரத் தகவல்
தொகுப்பாளர் இரா. பஞ்சவர்ணம் ஐயா அவர்களும் அவர்களின் உறவினர்
திரு. இரா. இளங்கோவன் அவர்களும் உடன் வர
நானும் சென்றேன். முதலில் தில்லைக்கோயிலின் தமிழ்வழிபாடு குறித்த
வரலாற்றுச் செய்திகளை அறிய சிதம்பரத்திலுள்ள தமிழ் ஆர்வலர்கள்
பலரைக் கண்டு உரையாடி உண்மை வரலாறு அறிந்தேன்.
சிதம்பரம் நகர மன்றத்தின் முன்னாள் தலைவர் வி.எம்.எசு.சந்திரபாண்டியன் அவர்கள்
சிதம்பரம் நகரமன்றத்தின்
முன்னாள் தலைவர் திரு. வி.எம். எசு. சந்திரபாண்டியன் அவர்கள் சிதம்பரம் வரலாறு குறித்த
பல செய்திகளை ஆர்வமுடன் பகிர்ந்துகொண்டார். தமக்குள்ள பல்வேறு அரசியல் பணிகளுக்கு இடையே பல்வேறு நூல்களைக் காட்டியும் ஆவணங்களைக் காட்டியும் எங்களிடம் வி.எம்.எசு. அவர்கள் உரையாடியமை எங்களுக்குப் பெரு மகிழ்வாக இருந்தது. அவர்தம் இல்லத்தில் அரிய நூலகம் ஒன்று உள்ளமையும் அதில் உள்ள நூல்கள் மிகச்சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதையும் நினைத்து என் நூலகத்தின் பரிதாப நிலையை மனதில் நிறுத்திப்பார்த்தேன். அதியமானின் உலைக்கூடம்போல் என் நூலக நூல்கள் சிதறிக்கிடப்பதை நம் இல்லம் வருவோர் அடிக்கடி குறிப்பிட்டுச் சரிசெய்யச்சொல்வார்கள்.
தில்லை அம்பலத்தில்
தமிழ் முழங்க மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார்
அவர்கள் செய்த முயற்சியும், பிச்சாவரம் குறுநில மன்னர்களின் பொறுப்பில்
சிதம்பரம் கோயில் இருந்தமையையும் அறிஞர்கள் சிலர் எடுத்துக்கூறினர். சோழப்பேரரசர் காலம் முதல் சிதம்பரத்தில் அமைந்த இறைவழிபாடு குறித்த பல்வேறு
செய்திகள் கிடைத்தன.
அடுத்ததாகச் சிதம்பரத்தில்
நடைபெற்ற தமிழ்வேதம் மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த திரு வைத்திலிங்கம் ஐயா அவர்களை
மாநாட்டுக்கூடம் சென்று அழைத்துக்கொண்டேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்
தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் அரங்க. பாரி அவர்களைச் சந்திக்கும்பொருட்டுத்
தமிழ்த்துறைக்குச் சென்றோம். அங்கு அமர்ந்தபடி குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய செய்திகளை என் காணொளிக் கருவியில் பதிந்துகொண்டேன்.
சற்றொப்ப 45 நிமிடங்கள் குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய நினைவுகளைத் திரு. வைத்தியலிங்கம்
அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் தேவாரத்தைப்
பயிற்றுவிக்கும் விரிவுரையாளராகக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் மூன்றாண்டுகள் பணிபுரிந்தமை
இங்கு நினைவிற்கொள்ள வேண்டிய செய்தியாகும்.
பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரின்
தமிழிசைப் பணி, தமிழ் இலக்கிய ஈடுபாடு, பிறமொழி படிக்க நேர்ந்தமைக்கான காரணங்கள், அவரின் இயல்புகள், வாழ்க்கை முறை, குடும்பம், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில்
நடைபெற்ற அவரின் விரிவுரை, தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் அவர்களைப் போற்றி மதித்தமை,
ஐயா அவர்களின் இறுதிக்கால வாழ்க்கை என்று பல செய்திகளைப் பெற முடிந்தது. பெரும் புதையல் அகழ்ந்து பெற்ற மகிழ்ச்சி கிடைத்தது. ஒத்துழைப்பு
நல்கிய அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு மீண்டோம்.
திரு.இரா.பஞ்சவர்ணம் ஐயா, திரு. வைத்தியலிங்கம் ஐயா, மு.இ, முனைவர் அரங்க.பாரி அவர்கள்
திரு.இரா.பஞ்சவர்ணம் ஐயா, திரு. வைத்தியலிங்கம் ஐயா, இரா.இளங்கோவன், முனைவர் அரங்க.பாரி அவர்கள்
1 கருத்து:
தங்களின் பதிவு மூலமாக பல அறிஞர்களைப் பற்றிய அரிய தகவல்களை அறிந்தோம். தொடர்புடைய நிகழ்வுகளைத் தாங்கள் இணைத்துத் தந்துள்ள விதம் மனதில் பதிந்தது. நன்றி.
கருத்துரையிடுக