முனைவர் க.சண்முகம் அவர்கள்
துறைத்தலைவர், தமிழ்த்துறை, சிம் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்
சிங்கப்பூர் செல்வ வளம் மிக்க நாடாகவும், வேலை வாய்ப்பு நிறைந்த நாடாகவும்
விளங்குகின்றது. இங்குப் பணிபுரிபவர்கள் மேல்படிப்பு படிப்பதற்குக்
குறிப்பாகப் பகுதிநேரமாகப் படிப்பதற்குப் பெரும் உதவியாக இருப்பது “சிம்” (SIM University) பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் 2006 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது.
இப்பொழுது சற்றொப்ப 13,000 மாணவர்கள் பல்வேறு துறைகளில்
இப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றனர். சிங்கப்பூரின் ஆறாவது பல்கலைக்கழகமாக
இது விளங்குகின்றது. சிம் பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகமாகும்.
மற்ற பல்கலைக்கழகங்கள் சிங்கப்பூர் அரசின் பல்கலைக்கழகங்களாக விளங்குகின்றன.
சிம் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்குச் சிங்கப்பூர் அரசு
55 விழுக்காடு வரை நிதி உதவி வழங்குகின்றது. எஞ்சிய
தொகையை மட்டும் படிக்கும் மாணவர்கள் கட்டிப் படிக்க வேண்டும்.
சிம் பல்கலைக்கழகத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் பட்ட
வகுப்பில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகின்றது. இப்பல்கலைக்கழகத்தில்
தமிழ் பட்டப்படிப்பு படிப்பவர்கள் சிங்கப்பூர் அரசின் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணிபுரியமுடியும்.
எனவே சிங்கப்பூரில் வேறு பணிகளில் இருப்பவர்கள் சிம் பல்கலைக்கழகத்தில்
பகுதி நேரமாகத் தமிழ்ப் பட்டப்படிப்பு முடித்துத் தமிழாசிரியராகப் பணிபுரியமுடியும்.
21 வயதுக்கு மேல் உள்ளவர்கள்
சிம் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாகப் படிக்கலாம். சிம் பல்கலைக்கழகத்தின்
தமிழ்ப்பாடத்திட்டம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில்
அமைக்கப்பட்டது. 12 பாடங்களைப் படிக்க வேண்டும். மேலும் இரண்டு பாடங்களை அடிப்படைப் பாடங்களாகப் படிக்க வேண்டும். ஆக 14 பாடங்களைப் படித்துத் தேர்வு எழுதி வெற்றிபெற்றால்
தமிழில் பட்டம் பெறலாம். இதில் 7 பாடங்கள்
மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாடங்களாகவும், 5 பாடங்கள் சிங்கப்பூர்
ஆசிரியர்கள் உருவாக்கியதாகவும் உள்ளன. மாணவர்களுக்குப் பலவகையில்
பாடத்திட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பாடநூல்களின் மூலங்கள் தேர்வில் பார்வைக்குத் தரப்படும். அதனைப் படித்துச் சிந்தித்துத் தேர்வெழுத வாய்ப்பு உண்டு.
இதுவரை நடைமுறையில் இருந்த தமிழ்ப் பாடத்திட்டங்கள் 2015 ஆம் ஆண்டுடன் முடிவடைகின்றன.
2016 ஆம் ஆண்டு முதல் புதிய பாடங்கள் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட
உள்ளன. 26 புதிய பாடப்பகுதிகளுடன் அடுத்த பாடத்திட்டம் அறிமுகம்
ஆக உள்ளன.
24 ஆயிரம் வெள்ளி செலவு செய்து
சிம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வேண்டியுள்ளது.
தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்குப் பணிக்குச்
செல்லும் பொறியாளர்கள், அல்லது வேறு பணியில் இருப்பவர்கள் தங்கள் மனைவியர் தமிழாசிரியராகப் பணிக்குச்
செல்ல விரும்பினால் சிம் பல்கலைக்கழகத்தில் பகுதிநேரமாகத் தமிழ்ப் பட்டப்படிப்பு படிக்க
வைக்கமுடியும். சிங்கப்பூர் குடியுரிமை உடையவர்களும் ஆர்வமுடன்
பகுதிநேரமாகத் தமிழ் படிக்கின்றனர். சிம் பல்கலைக்கழகத்தில் தமிழ்படிக்க
விரும்புவர்களுக்குப் பேருதவியாக இருந்து பொறுப்புடன் கடமையாற்றுபவர் முனைவர் க.சண்முகம் அவர்கள் ஆவார். சிம் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில்
பெரும் பங்காற்றுவதால் இவருக்குச் சிம் பல்கலைக்கழகம் பலவகையில் ஆதரவாக உள்ளது.
பேராசிரியர் க.சண்முகம் அவர்களின் வாழ்க்கை
முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கையாகும். இவருடன் உரையாடியதிலிருந்து பேராசிரியரின் வாழ்கையைப் பற்றியும் அவர்தம் கல்விப்பயணம்
குறித்தும் அறியமுடிந்தது. மேலும் சிங்கப்பூரில் தமிழ்நிலை,
தமிழர் நிலை, தமிழ்க்கல்வி, குறித்தும் விரிவாக அறியமுடிந்தது.
முனைவர் க.சண்முகம் 16. 08.
1946 இல் மலேசியாவில் பிறந்தவர். அவர்களின் முன்னோர்கள்
தமிழகத்திலிருந்து மலேசியா சென்றவர்கள். திருநெல்வேலிப் பகுதியிலிருந்து
சென்றதால் திருச்செந்தூர் முருகன் நினைவாகச் சண்முகம் என்ற பெயர் இவருக்கு அமைந்தது.
மலேசியாவின் ஜோகூர்பார்கு பகுதியில் தோட்டத் தொழிலில் சண்முகம் அவர்களின்
பெற்றோர் ஈடுபட்டிருந்தனர். கடும் உழைப்பில் குடும்பம் நடத்த
வேண்டியிருந்தது. ஒன்பது வயதில்தான் இவருக்குப் பள்ளிப்படிப்பு
கிடைத்தது.
க.
சண்முகம் அவர்கள் இளம் வயதில் தந்தையாரை இழந்தவர். குடும்பச்சூழல் காரணமாகச் சிங்கப்பூருக்கு வந்து கலைமகள் தமிழ்ப்பள்ளியில்
ஆறாம் வகுப்பு வரை படித்தவர். அப்பொழுதெல்லாம் தமிழகத்திலிருந்தும்
மலேசியாவிலிருந்தும் ஆசிரியர்கள் வந்து தமிழ் பயிற்றுவித்துள்ளனர். க. சண்முகம் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை கடையநல்லூர் இசுலாமியர்கள்
பணம்திரட்டி நடத்திய பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்புவரை
படித்து முடித்ததும் தமிழாசிரியர் வேலை கிடைத்தது.
முன்பெல்லாம் சிங்கப்பூரில் பத்தாம் வகுப்பு
வரை அவரவர் தாய்மொழியில்தான் கல்வி பயிற்றுவிக்கப்படும். அதன் பிறகுதான் ஆங்கிலம்
ஒரு பாடமாக அறிமுகம் ஆகும். ஆசிரியர் பணியில் இணைந்த பிறகு காலைப்
பள்ளியில் ஆசிரியராகப் பாடம் நடத்துவதும், மாலைப்பள்ளியில் ஆசிரியர்
பயிற்சி பெறுவதுமாகச் சண்முகம் அவர்கள் தொடர்ந்து கல்வித்துறையில் கவனம் செலுத்தினார்.
ஆசிரியர் பணியில் இருந்தபடியே பள்ளியில்
விளையாட்டு, கால் பந்து குழுவுக்குப் பொறுப்பாளராக இருந்தார். ஆசிரியரான
பிறகுதான் ஆங்கிலம் படிக்கவே தொடங்கினார். தமிழில் ஈடுபாடு வருவதற்குத்
திரு மு.தங்கராசு அவர்களும் ( சிங்கப்பூர்
கல்வி அமைச்சில் இப்பொழுது பணியாற்றும் திரு. வேணுகோபால் அவர்களின்
தந்தையார்), ஆங்கிலத்தில் பயிற்சி கிடைக்க திரு. டி.பி.நாயுடு அவர்களும் காரணமாக
இருந்தனர் என்று நன்றியுடன் சண்முகம் அவர்கள் குறிப்பிடுவார்.
டி.பி. நாயுடு அவர்கள் தலைமையாசிரியராகப்
பணியாற்றியவர். அவரின் பிள்ளைகளுக்குச் சண்முகம் அவர்கள் தமிழைப்
பயிற்றுவிப்பது, அதற்குப் பதிலாக திரு. நாயுடு அவர்கள் சண்முகம் அவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பது என்று ஒப்பந்தம்.
இவ்வாறு சண்முகம் அவர்களுக்கு ஆங்கிலம் அறிமுகம் ஆனது. டி.பி. நாயுடு இவரைக் கேம்பிரிட்ஜ்
தேர்வுக்கு ஆயத்தப்படுத்தினார். அதன் பிறகு உயர்நிலைப்பள்ளிக்கு
உரிய ஆலங்கிலச் சான்றிதழ் படிப்புக்குத் தயார்படுத்தினார். க.
சண்முகம் அவர்கள் ஆசிரியர் பணியாற்றியபடியே ஆங்கில அறிவை வளப்படுத்திக்கொண்டார்.
தம்மைப்போல் பணியாற்றிய ஆசிரியர்கள் பட்டப்படிப்பு
படிக்க தமிழகம் வந்தபொழுது அரசின் நிதியுதவி பெற்று இவர் தம் 32 ஆம் அகவையில் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் 1980-1983 இல் அரசியல் அறிவியல் பாடத்தில்
பட்டப்படிப்பு படித்தார். மனைவி சிங்கப்பூர் அரசின் ஒலிபரப்புத்துறையில்
பணியாற்றினார். திருமணத்திற்குப் பிறகு பட்டப் படிப்பு படிக்கச்
சென்று, பட்டம் பெற்றதும் ஆங்கில ஆசிரியர் பணி கிடைத்தது.
அதன் பிறகு கல்வியியலில் பட்டயப் படிப்பு முடித்தார்(Further Professional Diploma in Education) அதன் பிறகு தலைமை ஆசிரியர்
பணிக்கு விண்ணப்பித்தார். ஓர் ஆண்டு பட்டயப்படிப்பைத் தேசியப்
பல்கலைக்கழகத்தில் படித்தார்.
மூன்று ஆண்டுகள் சிங்கப்பூர் கல்வி அமைச்சில்
துறைத்தலைவராக இருந்தார். பேராசிரியர் சண்முகம் அவர்கள் கல்வி அமைச்சில் 1991 முதல்
2003 வரை பணிபுரிந்தார். இக்காலத்தில் இலக்கணம்,
இலக்கியத்தை சிறப்பாக நடத்த பல பயிலரங்குகளை ஏற்பாடு செய்து அனைவரின்
உள்ளத்திலும் இடம்பெற்றார். சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி வளர்வதற்கு
அடிப்படைப் பணியாற்றியவர்களுள், சிந்தித்தவர்களுள் சண்முகம் அவர்களும் ஒருவர் என்று
குறிப்பிடலாம்.
அதன் பிறகு 2003-06 இல் பயிற்சி மற்றும்
வளர்ச்சிப் பாடத்தில் Master of Training & Development, மெல்பர்ன்
பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படித்தார். அதே நேரத்தில் மனிதவள
ஆற்றல் குறித்த பட்டயப் பாடத்தையும் படித்தார். 2006 ஆம் ஆண்டில்
முனைவர் பட்ட (Doctor of Education) ஆய்வைத் தொடங்கினார்.
இக்கால கட்டத்தில் சண்முகம் அவர்கள் சமூக மொழியியலும் படித்தார்.
தம் ஆய்வுக்குத் தம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில் தொடர்ச்சியாக
ஆய்வுநெறிகளின்படி ஆய்வை மேற்கொண்டு வந்தார். “சிங்கப்பூரில்
தமிழின் தற்பொழுதைய நிலை: இல்லச்சூழலில் தமிழ்மொழிப் புழக்கம்”
என்பது இவர்தம் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு.
சிங்கப்பூரில் தமிழ் காலந்தோறும் மக்கள்
பயன்பாட்டில் குறைந்து வருவதை உள்ளத்தில் கொண்டு நிகழ்த்தப்பெற்ற ஆய்வு இந்த ஆய்வாகும். சிங்கப்பூர்
1965 இல் சுதந்திரம் அடைந்தது. அதன் பிறகு தமிழைப்
பேசுபவர்களின் தொகை நாளுக்கு நாள் குறைந்துவருவதை இவரின் ஆய்வு எடுத்துரைக்கின்றது.
சிங்கப்பூரில் வாழும் 60 தமிழ்க்குடும்பங்களை நேர்காணல்
செய்தும், வினாநிரல் வழங்கியும் உற்றுநோக்கியும் ஆய்வு செய்தவர்.
மேற்கு ஆஸ்திரேலியாப் பல்கலைக்கழகத்தில் 2011 இல்
இந்த ஆய்வு நிறைவுக்கு வந்து இவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது.
1985 இல் பிலிப்பைன்சு ஆய்வாளர்
ஒருவர் Tamil Language in Singapore என்ற தலைப்பில் ஆய்வு செய்து
வீடு, கோயில்களில் தமிழ் உள்ளது என்று ஆய்வு முடிவை எழுதினார்.
க. சண்முகம் அவர்களின் ஆய்வு வழியாக
2011 ஆம் ஆண்டுகளில் தமிழ்க் குடும்பத்தில் தமிழ் இல்லை என்பது தெரியவருகின்றது.
சிங்கப்பூரில் இப்பொழுது ஆறு வயதுவரை குழந்தைகள்
தமிழ் பேசுவதில்லை. பாலர் பள்ளிகளில் சீனம், மலாய், ஆங்கிலம் பயில்கின்றனர். ஒன்றாம் வகுப்பில்தான் தமிழ்
அறிமுகம் ஆகின்றது. தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் முன்னணித்
தொலைக்காட்சிகளில் ஆங்கிலம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால் சிங்கப்பூர்த் தமிழ் வளர்ச்சியில்
அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தொடக்க வகுப்பை முழுமையாகத்
தாய்மொழியில்தான் நடத்தவேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகளிடம்
சிந்திக்கும் திறனும், அறிவாற்றலும் ஓங்கி நிற்கும் என்று பேராசிரியர்
சண்முகம் குறிப்பிடுகின்றார்.
உயர்நிலையில் இருப்பவர்கள் தமிழில் பேச வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் பேச
அனைவரும் முன்வருவார்கள். தமிழ்மொழிக்கும் பெருமை சேரும்.
தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு வருபவர்கள்
தங்கள் பிள்ளைகள் இந்தி படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதுபோல் மலையாளம்,
தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக உடையவர்கள் தங்கள் மொழியைப் பிள்ளைகளுக்குப்
பயிற்றுவிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுடன்
குடும்பத்தில் தமிழில் உரையாடுவதில்லை என்றும் இதனால் பேச்சுத் தமிழ் சிங்கப்பூரில்
குறைந்துவருகின்றது என்றும் பேராசிரியர் சண்முகம் கவலைகொள்கின்றார்.
சண்முகம் அவர்கள் சிறந்த இறை நம்பிக்கையாளர். சிங்கப்பூர் கோவில் வளர்ச்சிக்குப்
பலவகையில் துணைநின்றவர். தமிழகக் கோயில்களுக்கு அவ்வப்பொழுது
வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டவர். சிங்கப்பூரில் உள்ள காளியம்மன்
கோயிலில் சரசுவதி பாலர் பள்ளி உருவாக்கித் தமிழைக் குழந்தைகள் படிக்க வழிசெய்தவர்.
தொடக்கத்தில் 90 பிள்ளைகள் இங்குச் சேர்ந்தனர்.
இன்று முந்நூறுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் படிக்கின்றனர்.
பேராசிரியர் அவர்களின் மனைவி தொலைக்காட்சி
நிறுவனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகத் தற்பொழுது பணிபுரிகின்றார். இவர்களுக்கு இரண்டு பெண்களும்,
ஒரு மகனும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இரண்டு
பெண்களும் ஆத்திரேலியாவில் பணிபுரிகின்றனர். மகன் ஆத்திரேலியாவில்
மருத்துவம் படிக்கின்றார்.
சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் தமிழ்
பயிற்றுவிக்க முன்னணித் திட்டங்களுடன் காத்திருக்கின்றார் இந்தத் தமிழ்ப்பேராசிரியர்.
நன்றி: அந்திமழை மாத இதழ், பிப்ரவரி 2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக