விபுலாநந்த அடிகளார்(1942 இல் தோற்றம்)
சிலப்பதிகாரத்தை வரி வரியாகக் கற்கும்பொழுது
புதுப்புது உண்மைகள் எனக்குப் புலனாவது உண்டு. மூல நூல் தரும் அறிவு விருந்து ஒரு புறம்
எனில் உரையாசிரியர்கள் கண்டுகாட்டும் உண்மைகள் பெருவிருந்தாகக் கண்முன் விரிந்து தெரியும்.
இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் உடனுறைந்து சிலம்பிலும் தமிழிசையிலும் தோய்ந்தமையே
இவற்றிற்கெல்லாம் காரணம் என்று பணிவுடன் தெரிவிப்பதில் மனநிறைவு அடைகின்றேன்.
சிலப்பதிகாரத்தை அண்மையில் ஊன்றிக் கற்றவண்ணம்
இருந்தேன். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுகாதையில் வரும் யாழாசிரியனின் அமைதியைப் பற்றிக்
குறிப்பிடும் வரிகள் மீண்டும் மீண்டும் நினைவில் தோன்றின. இந்த வரிகள் உணர்த்தும் உண்மையை
முழுமையாக உள்வாங்கமுடியவில்லையே என்ற ஏக்கம் எழுந்தது. யாழ் பற்றி எழுந்த யாழ்நூலைப்
படித்துப்பார்ப்போமே என்று நுழையும்பொழுது சிலம்பில் கூறப்படும் யாழ் குறித்த 25 அடிகளை
விளக்கத்தான் விபுலாநந்தர் யாழ்நூல் உருவாக்கியுள்ளார் என்று அறிந்தபொழுது வியப்பு
பன்மடங்கானது.
பன்மொழிப் புலவரான விபுலாநந்தர் இராமகிருட்டிண
மடத்துப்பணி, இலங்கைப் பேராதனை பல்கலைக்கழகப் பணி, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி என்று பல
நிறுவனங்களில் பணிபுரிந்தவர். கிழக்கிலங்கையில் சிவானந்த வித்தியாலயம் என்ற பாடசாலையை நிறுவி வழிநடத்தினார். வழக்கொழிந்த இசைக்கருவியையும் தமிழர்களின் இசையையும்
மீட்க அவர்கொண்டிருந்த இடைவிடா முயற்சி எண்ணி எண்ணி வியக்கின்றேன்.
அடிகளார் அவர்களின் யாழ்நூல் கரந்தைத் தமிழ்ச்சங்கம்
வாயிலாக 1947 இல் வெளிவந்தது. 05.06.1947 இல் திருக்கொள்ளம்பூதூரில் ஆளுடைய பிள்ளையார் திருநாளில் அக்கோயிலின் திருமுன்றிலில் அறிஞர்கள்
முன்னிலையில் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளிவருவதற்கு கோனூர் ஜமீன்தார்
பெ. ராம. ராம. சிதம்பரஞ் செட்டியார் பேருதவி புரிந்துள்ளதை நூல்வழி அறியமுடிகின்றது.
சித்திரபானு ஆண்டு, ஆவணித் திங்களில் முன்னுரை எழுதப்பட்டு, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு
நூலின் முடிவுரை எழுதப்பட்டுள்ளது. முன்னுரையும் முடிவுரையும் நூலுக்கு இணையான பெருமைக்கு
உரியன. பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழிபியல் என, 7 இயல்களால் ஆனது இந்த நூல்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் 1892 ஆம் ஆண்டு
தமிழர்களின் இலக்கிய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க ஆண்டாகும். அந்த ஆண்டில்தான்
பெரும் பேராசிரியர் உ.வே.சா. அவர்களால் சிலப்பதிகாரம் முழுமையான பதிப்பாகத் தமிழர்களுக்குக்
கிடைத்தது. அந்த ஆண்டில்தான் மார்ச்சுத் திங்கள் 29 ஆம் நாள் தவத்திரு விபுலாநந்தர்
அவர்கள் மயில்வாகனன் என்னும் இயற்பெயரில் பிறந்தார்.
கொழும்பில் வாழ்ந்த கைலாசப்பிள்ளை முதலியார்
அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்ற விபுலாநந்தர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபொழுது
தஞ்சை க. பொன்னையா பிள்ளை அவர்களிடம் இசைநுட்பங்களைக் கற்றுள்ளார்.
1936 மாசித் திங்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில்
பழந்தமிழரின் இசை சிற்பம் கலையறிவு என்ற தலைப்பில் ஆறு விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார்.
செனட் அவுசில் நடைபெற்ற இந்த விரிவுரை ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பெற்றதால் பிறமொழியினரும்
கேட்டுப் பாராட்டியுள்ளனர். இந்து நாளிதழில் (The Hindu) இவ்வுரை விவரம் வெளிவந்துள்ளது.
யாழ்க்கருவியை ஓவியமாக வரைந்து அடிகளார் விளக்கியுள்ளார். இந்த உரையை நேரில் கேட்ட
பெரும் பேராசிரியர் உ.வே.சா. அவர்கள் தனிநூலாக இதனை வெளியிடும்படிக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வுகளையெல்லாம் அடிகளாரின் முன்னுரை வாயிலாக அறியலாம்.
அடிகளாரின் உரை திருச்சிராப்பள்ளி வானொலியிலும்
(இருமுறை), சென்னை வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளது.
விபுலாநந்தரின் ஆக்கங்கள் 4 தொகுதிகளாக வெளியிடப்பெற்றுள்ளன (மதங்க சூளாமணி மொழிபெயர்ப்பு, யாழ்நூல்தவிர).இசைபற்றிய கட்டுரைகளை அதிகம் எழுதியுள்ளார். தமிழர் நாகரிகம் இலக்கியவரலாறு நாடகம் மொழியியல் தொடர்பாகவும் அவரது ஆய்வுகள் அமைந்துள்ளன.
தமிழிசை மீட்சிக்கு தவத்திரு விபுலாநந்தர்
அவர்கள் ஆற்றியுள்ள பணியும் யாழ்நூலும் விரிவான ஆராய்ச்சிக்கு உரியன.
1 கருத்து:
விபுலாநந்தரின் சிறப்புகள் அறிந்து மகிழ்ந்தேன் ஐயா.
விபுலாநந்தர் அவர்களின் யாழ்நூல் கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடு என்பதில் எனக்கு ஒரு பெருமை உண்டு.
யாழ் நூல் பற்றி நானும் ஒரு பதிவு எழுதியுள்ளேன் ஐயா. நேரம் இருக்கும் பொழுத வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்.
http://karanthaijayakumar.blogspot.com/2012/05/blog-post.html
கருத்துரையிடுக