நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 19 பிப்ரவரி, 2014

கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் தொடக்க விழா!


தமிழ் உறவுடையீர்! வணக்கம்.

அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தித் தமிழரின் பெருமையைக் கடல்கடந்த நாடுகளிலும் பரப்பியவன் மாமன்னன் இராசேந்திர சோழன் ஆவான். அவனின் தலைநகரமான கங்கைகொண்டசோழபுரம் சற்றொப்ப முந்நூறாண்டுகளுக்கு மேல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குத் தலைநகரமாக ஒப்புயர்வற்று விளங்கிப் புகழொளி வீசியதைத் தாங்கள் அறிவீர்கள்! இம்மாநகரில் கருவூர்த் தேவர், ஒட்டக்கூத்தர், செயங்கொண்டார், சேக்கிழார், கம்பர் உள்ளிட்ட புலவர் பெருமக்கள் வாழ்ந்து தமிழ் வளர்த்தமையை வரலாற்றின் பக்கங்களில் படிக்கின்றோம்.

அண்மையில் வாழ்ந்து மறைந்த தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் தாயார் கங்கைகொண்டசோழபுரத்தில் பிறந்தவர் என்பதும், கங்கைகொண்ட சோழபுரக் கோயில்  வரலாறு பற்றி உ.வே.சா. அவர்கள் தம் தன்வரலாற்று நூலில்  எழுதியுள்ளார் என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கது. இத்தகு பெருமைக்குரிய ஊரைச் சார்ந்து அமைந்திருக்கும் ஒவ்வொரு ஊரும் ஒரு வரலாற்றைச் சுமந்து நிற்கின்றது. எடுத்துக்காட்டாக மாளிகைமேடு, உள்கோட்டை, இடைக்கட்டு, கடாரங்கொண்டான், கொக்கரணை, யுத்தப்பள்ளம், சுண்ணாம்புக்குழி, பள்ளிவிடை, பரணம், ஆயுதக்களம், குருகாவலப்பர்கோயில், மெய்க்காவல் புத்தூர், வீரசோழபுரம், கொல்லாபுரம், கடம்பூர், உலகளந்தசோழன்வெளி, மீன்சுருட்டி, வானதிரையன் குப்பம், வானவன்நல்லூர், வாணதிரையன் பட்டினம், விக்கிரமங்கலம், தென்கச்சிப்பெருமாள் நத்தம், நாயகனைப்பிரியாள், வானவன்மாதேவி, சோழன்மாதேவி என உள்ள ஊர்களின் பெயர்கள் ஒவ்வொன்றும் வரலாற்றைச் சுமந்து நிற்கின்றன

இந்தப் பகுதியில் பிறந்த பெருமக்களுள் பலர் தமிழாராய்ச்சித்துறை, அரசியல் துறை, ஆட்சித்துறை, மருத்துவத்துறை, பொறியியல்துறை, சட்டத்துறை, திரைத்துறைகளில் பேரும் புகழும் பெற்றவர்களாக விளங்கி வருகின்றனர். இப்பகுதியில் பிறந்த பலர் அயல்நாடுகளில் பல்வேறு பணிகளில் சிறப்புற்று விளங்கிப் பிறந்த ஊருக்குப் பெருமைசேர்த்து வருகின்றனர். இப்பகுதியில் பிறந்த பலரும் தமிழ்ப் பற்றுடையவர்களாகவும், தமிழார்வம் கொண்டவர்களாகவும் விளங்கி வருகின்றனர்.

இத்தகு தமிழார்வம் கொண்டவர்கள் இணைந்து கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் என்னும் பெயரில்  தமிழ்ச்சங்கத்தினைத் தொடங்கியுள்ளோம். தமிழ் அறிஞர்களை அழைத்து இச்சங்கத்தின் வழியாகக் கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் தொடர்ந்து தமிழ் இலக்கியக் கூட்டங்கள் நடைபெறவும், தமிழ்ச்சொற்பொழிவுகள் நிகழவும் திட்டமிட்டுள்ளோம். மாணவர்களுக்குத் தாய்மொழியில் ஈடுபாடு ஏற்படுவதற்கு உரிய பல்வேறு செயல்திட்டங்கள் உள்ளன. இவ்வமைப்பு அரசின் பதிவுபெற்ற அமைப்பாகும். இஃது அரசியல், கட்சி, சாதி, சமய வேறுபாடு இல்லாமல் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அமைப்பாகும். தமிழ்க்கலைகளையும், கலைஞர்களையும் பாராட்டி ஊக்குவிப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது

கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் அமைப்பின் தொடக்க விழா எதிர்வரும் 2014, மார்ச்சுத் திங்கள் 29 ஆம் நாள் காரி(சனி)க்கிழமை கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற உள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்திலும், அருகில் உள்ள ஊர்களிலும் வாழும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் ஒன்றிணைந்து தம் பிறந்த ஊரில் எடுக்க உள்ள இந்த விழாவில் தமிழகத்தின் புகழ்பெற்ற தமிழறிஞர்கள், அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், சட்டத்துறை, நீதித்துறை சார்ந்தவர்கள், ஊர்ப்பெருமக்கள் கலந்துகொண்டு உரையாற்றவும், உரைகேட்கவும் உள்ளனர். அனைவரின் ஒத்துழைப்பையும், வழிகாட்டலையும் கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம் எதிர்நோக்கியுள்ளது. தமிழ்ச் சங்கத்தின் தொடக்கவிழா சிறப்பாக நடைபெறப் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுப் பணிகள் சிறப்பாக நடந்துவருகின்றன. பொறியாளர் இராச. கோமகன் அவர்களின் தலைமையில் ஒரு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முதன்மை வாய்ந்த நிகழ்ச்சிக்குத் தமிழார்வளர்களை அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்!

சித்தாந்த இரத்தினம்பழமலைகிருட்டினமூர்த்தி(குவைத்து)(தலைவர்)
முனைவர் மு.இளங்கோவன் (செயலாளர்)
திரு. கா. செந்தில் (பொருளாளர்)
கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம்

அலுவலகம்:

கங்கைகொண்டசோழபுரம் தமிழ்ச்சங்கம்,
தமிழ் மாளிகை, கீழைச் சம்போடை
கங்கைகொண்டசோழபுரம் (அஞ்சல்), 
உடையார்பாளையம் (வட்டம்), 
அரியலூர் மாவட்டம்- 612 901. தமிழ்நாடு

செல்பேசி: + 94420 29053 / 73739 72333 / 99439 53653 /


மின்னஞ்சல்:  muelangovan@gmail.com

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கங்கை கொண்ட சோழபுரம் தமிழ்ச் சங்கம் செம்மாந்தப் பணியாற்ற வாழ்த்துக்கள் ஐயா

Dr B Jambulingam சொன்னது…

மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு என்ற பல நிலைகளில் கங்கைகொண்ட சோழபுரம் தமிழ்ச்சங்கம் அரும் சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.