நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்கோலசு அவர்களின் கணவர் திரு சரவணன் அவர்கள் மறைவுசெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்கோலசு அவர்களின் கணவர் திரு சரவணன் என்ற சரவணக்குமார் அவர்கள் புதுவை மாநிலம் வில்லியனூர் அடுத்த கோர்க்காட்டில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று(16.02.2014) இயற்கை எய்தினார். இன்று மாலை 4 மணியளவில் அவர்தம் நல்லுடல் கோர்க்காடு இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம்  செய்யப்பட்டது.

இத் துன்பச்செய்தியறிந்து பன்னாட்டு ஆய்வாளர்கள், அறிஞர்கள், திரு.சரவணன் அவர்களின் உறவினர்கள், கோர்க்காட்டு மக்கள், நண்பர்கள், கோர்க்காடு வருகை தந்து உடலுக்கு வணக்கம் செலுத்தினர்.

திரு.சரவணன் அவர்களையும் அம்மா உல்ரிக் அவர்களையும் பலவாண்டுகளுக்கு முன்பு அவர்களின் கோர்க்காடு இல்லத்தில் சந்தித்து அளவளாவியுள்ளேன். இருவரும் பழகுதற்கு இனிய பண்பாளர்கள். மதுரையைச் சேர்ந்த திரு.சரவணன் அவர்களும் செர்மனியைச் சேர்ந்த உல்ரிக் அம்மா அவர்களும் தமிழாராய்ச்சிக்காகக் கோர்க்காட்டில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஊரில் பல இளைஞர்களைத் தத்தெடுத்துத் தங்கள் குழந்தைகள் போல் வளர்த்துள்ளனர். ஊரே திரண்டு திரு. சரவணன் அவர்களுக்கு உரிய இறுதிக் கடமைகளைப் பொறுப்புடன் செய்தனர். அம்மாவுக்கு ஆறுதல் கூறினர். ஒரு தமிழ்ப்பெண்ணாக இருந்து அம்மா அவர்கள் அனைத்துச் சடங்குகளையும் செய்தமை எங்கள் அனைவரையும் கண்ணீர்க்கடலில் ஆழ்த்தின. கணவரை இழந்து வருந்தும் முனைவர் உல்ரிக் நிக்கோலசு அம்மா அவர்களின் துயரத்தில் பங்கெடுப்போம்!


இறுதி வணக்கத்தில் மு.இ.


இறுதி வணக்கத்தில் மு.இ, உல்ரிக் அம்மா,உறவினர்கள்,

கருத்துகள் இல்லை: