நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 24 பிப்ரவரி, 2014

தமிழியச் சிந்தனையாளர் கு.ம.கி. மறைவு


திரு. கு.ம.கி அவர்கள்

குடந்தையில் வாழ்ந்த முதுபெரும் திராவிட இயக்கச் சிந்தனையாளரும், குடந்தை நகர வரலாறு அறிந்தவரும், அண்மைக்காலமாகத் தமிழ்த்தேசியச் சிந்தனையுடன் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றியவருமான திரு. கு.ம.கி. ஐயா அவர்கள் இன்று(24.02.2014) நள்ளிரவு 2.30 மணிக்கு மாரடைப்பால் குடைந்தையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

15.02.2014 சனிக்கிழமை அன்று குடந்தைக்குக் களப்பணிக்குச் சென்றபொழுது பேராசிரியர் சிவக்குமார் அவர்கள் கு.ம.கி. ஐயாவை நான் தங்கியிருந்த அறைக்கு அழைத்துவந்தார்கள். திராவிட இயக்கம் குறித்த தொடக்க வரலாறுகளை நினைவூட்டிய கு. ம. கி. ஐயாவை அடுத்தச் சுற்றில் குடந்தை வரும்பொழுது பேசச் செய்து அவர் பேச்சைப் பதிந்துவைக்க நினைத்து உரையாடினேன். அந்தோ! இன்று காலை பொறியாளர் இராச.கோமகன் அவர்கள் தொடர்புகொண்டு ஐயா கு.ம.கி. அவர்களின் மறைவை நினைவூட்டினார்கள்.


கு.ம.கி. அவர்களின் இயற்பெயர் கிருட்டினமூர்த்தி ஆகும். இவருக்கு அகவை 70 ஆகும். இவர்தம் தந்தையார் பெயர் மருதமுத்து ஆகும். இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு மகளுமாக அமைந்த குடும்பத்தில் தமிழ் வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர்களின் தமிழ்ப்பற்றை அறிந்த கண்ணியம் இதழாசிரியர் திரு.ஆ.கோ. குலோத்துங்கன் அவர்கள் கண்ணியச் செம்மல் விருதளித்துப் பாராட்டியுள்ளார். அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான நிதி உதவியைத் தமிழக அரசு வழங்கி வருகின்றது. பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தவர். அன்னாரைப் பிரிந்து வருந்தும் குடும்பத்தினருக்கும், தமிழியச் சிந்தனையாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்!

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தமிழறிஞர் கு.ம.கி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்