நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 28 பிப்ரவரி, 2013

வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் இணையத் தமிழ் அறிமுகம்



வேலூர் சாயிநாதபுரத்தில் அமைந்துள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் இணையத் தமிழ் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது. வள்ளல் ந.கிருஷ்ணசாமி முதலியார் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழ்த்துறை நடத்தும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது. இக் கல்லூரியில் பயிலும் மாணவிகள், பணிபுரியும் பேராசிரியர்கள் வேலூர் சார்ந்த மற்ற கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற உள்ளனர். மேலும் வேலூரில் வாழும் தமிழ்ப்பற்றாளர்களும் கலந்துகொண்டு தமிழ் இணைய அறிமுகம்பெற உள்ளனர்.

நாள்: 02.03.2013 (சனிக்கிழமை)
நேரம்: காலை 10 மணிமுதல்
இடம்: டி பிளாக், கருத்தரங்கக் கூடம், டி.கே.எம்.கல்லூரி, வேலூர்

பேராசிரியர் முனைவர் அ . தட்சணாமூர்த்தி அவர்கள்



 பெரும்பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி அவர்கள்
சங்க இலக்கிய நூல்களிலும், மொழிபெயர்ப்புத் துறையிலும் மிகச்சிறந்த புலமையுடையவர் பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி அவர்கள் ஆவார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டையில் 10.04.1938 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் அய்யாசாமி நெடுவாண்டார்- இராசம்மாள் ஆவர்.

தொடக்கக் கல்வியை மன்னார்குடிப் பள்ளியிலும் இடைநிலைக் கல்வியைக் குடந்தை அரசினர் கல்லூரியிலும் முடித்தவர்(1955-57). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பி.ஏ(ஆனர்சு) தேறியவர்(1958-61). பி.எட்.பட்டத்தையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பெற்றவர்.

திருவாரூரில் உள்ள வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 1962 இல் முதனிலைத் தமிழாசிரியராகப் பணியில் இணைந்தார். அதனையடுத்து மன்னம்பந்தல் ஏ.வி.சி.கல்லூரியில் தமிழ் பயிற்றுநராகப் பணியாற்றினார்(19965-67). பூண்டி புட்பம் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும்(1967-91), மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும் விளங்கிய பெருமைக்குரியவர்.

முனைவர் அ. தட்சணாமூர்த்தி அவர்கள் எப்பொழுதும் படித்துக் கொண்டிருக்கும் இயல்புடையவர். சங்க இலக்கியங்களிலும், தமிழர் பண்பாடு குறித்த கல்வியிலும் ஆழ்ந்த சிந்தனையுடையவர். தமிழ் இலக்கியங்களை இசையுடன் பாடி விளக்க வல்லவர்.

1973 இல் இவர் எழுதி வெளியிட்ட தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூல் இவர் புகழ்சாற்றும் சிறந்த நூலாகும். 1990 இல் பாரதிதாசன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். இதில் அழகின் சிரிப்பு, காதலா கடமையா, தமிழச்சியின் கத்தி  நூல் பகுதிகள் அடங்கும். அகநானூற்றையும்(1999), நற்றிணையையும்(2000) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். மேலும் ஐங்குறுநூறு, குறுந்தொகை உள்ளிட்ட நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

பேராசிரியர் அ.தட்சணாமூர்த்தி அவர்கள் பத்துப்பாட்டு நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவர்தம் பதிப்பு மூலம், ஒலிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பு, குறிப்புகள் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் முயற்சியால் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை இந்த நூலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், இலக்கிய அமைப்புகளில் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்றிய பெருமைக்குரியவர். பெருமைக்குரிய அறிஞர்களிடம் படித்த இப்பெருமகனாரிடம் படித்தவர்கள் பலரும் தமிழகத்தில் புகழ்பெற்ற அறிஞர்களாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

நன்றி: முனைவர் இராமர் இளங்கோ, முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி

புதன், 27 பிப்ரவரி, 2013

முனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள்


 முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள்

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோயில் என்னும் ஊரில் திருவாளர்மு.வெங்கடாசலம்- செல்லம்மாள் ஆகியோர்க்கு மகனாக 06.04.1943 இல் பிறந்தவர்.

திருவிடைமருதூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்து, குடந்தை அரசுக் கல்லூரியில் புகுமுக வகுப்புக் கல்வியையும் இளங்கலைத் தமிழ் இலக்கியக் கல்வியையும் முடித்தவர்(1961-64). காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரிடம் தமிழ் பயின்ற பெருமைக்குரியவர்.

தஞ்சாவூர் பூண்டி திருபுட்பம் கல்லூரியில்22.06.1968 இல் இளநிலை விரிவுரையாளராகப் பணியில் இணைந்தும், 1968-70 இல் வேலூர் ஊரிசு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தும் பணியாற்றினார். 1970 இல் அரசுக் கல்லூரியில் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பெற்றுத் திருவண்ணாமலை, திருச்சி பெரியார் கல்லூரி, கும்பகோணம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் அமைந்த அரசுக் கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியவர்.

 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறைத் தலைவராகவும், பொறுப்புப் பதிவாளராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

கல்வெட்டு, சமூகப்பணி, முதியோர் கல்வி ஆகியவற்றில் சான்றிதழ்களும் படைப்பிலக்கியம், மொழியியல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சியும் பெற்றுள்ளார். 35 ஆண்டுகளாக ஆசிரியப் பணியாற்றியவர்.

இவரது நூல்கள் ஆராய்ச்சிக் கட்டுரை, கவிதை, செய்யுள் -நாடகம், சிறுகதை, இளைஞர்களுக்கான வழிகாட்டி என்ற பல்வேறு துறைகளில் அமைந்துள்ளன. இவர் ஒரு சீரிய இலக்கிய ஆய்வறிஞர்; சிறந்த பேச்சாளர். ஆங்கில நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் பேரறிவு பெற்றவர்.

பல கல்விநிறுவனங்களின் பாடநூல் குழுக்களிலும் தேர்வுக் குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார். அனைத்துலகக் கருத்தரங்குகள், கவியரங்குகள் ஆகியவற்றிலும் பங்கு பெற்று வருகின்றார். அனைத்து இந்திய வானொலியில் முப்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். தமிழகப் பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைப் பொழிவுகள் நிகழ்த்திய பெருமைக்குரியவர்.

இலக்கியப்பணி,     கல்விப்பணி ஆகியவை தவிர, பேரா. கு.வெ.பாலசுப்பி்ரமணியன் அவர்கள் தமிழகத்திற்கு வருகை தரும் இந்தியத் தலைவர்கள் மற்றும் நடுவண் அரசு அலுவலர்களுக்குத் தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தின்போதுமொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகின்றார். 16 முனைவர் பட்ட மாணவர்களுக்கும் 24 ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களுக்கும் நெறியாளராகச் செயல்பட்டுள்ளார்.

முனைவர் கு.வெ.பா. வின் தமிழ்க்கொடை

சங்க இலக்கியத்தில் புறப்பொருள்(1986)
சங்க இலக்கியத்தில் வாகைத்திணை
சங்க இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும்
ஆய்வுக்களங்கள்
சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள் (1994) தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு
இலக்கியச் சிந்தனைகள்
இலக்கிய நிழல்
கலம்பகத் திறன்
தமிழ் வீரநிலைக் கவிதை(2006 முனைவர் க. கைலாசபதியின் முனைவர் பட்ட ஆய்வேடு மொழிபெயர்ப்பு)

நிலாக்கால நினைவுகள்(கவிதைகள்)

துண்டு, (சிறுகதை)
நரசிம்மம்(சிறுகதை)
தாயத்து(சிறுகதை)

வண்டார்குழலி(காப்பியம்) தமிழக அரசின் பரிசில் பெற்றது

கயற்கண்ணி(நாடகம்)

இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு
தினமும் ஒரு தேவாரம்
சைவ சித்தாந்த அடிப்படைகள்
சிற்ப ரத்னாகரம்
அருணகிரியார்
முதலான நூல்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தஞ்சாவூரில் தமிழ் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பேராசிரியர் முனைவர் அ. ம. சத்தியமூர்த்தி அவர்கள்



முனைவர் அ. ம. சத்தியமூர்த்தி அவர்கள்

பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த அம்மாசத்திரத்தில் வாழ்ந்த திருவாளர் அ.மகாலிங்கப் படையாட்சி அவர்களுக்கும் அஞ்சலைக்கும் ஒரே மகனாகப் பிறந்தவர்(22.05.1954). மராட்டிய அரசரின் மனைவி  பெயரில் உருவாக்கப்பட்ட சத்திரம் - அம்மணி அம்மாள் சத்திரம் என்று பெயர்பெற்றுக் காலப்போக்கில் அம்மாசத்திரம் என்று இவரின் ஊர் பெயர் பெற்றது. இந்த ஊரில் சத்திரத்தில் இருந்த தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர்(1958-63). அதனை அடுத்துத் தேப்பெருமாள் நல்லூரில் அமைந்த நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை(1963-66)பயின்றவர். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் சிறியமலர் உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயின்றவர்.

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் பள்ளிக்கல்வியை முடித்தபிறகு குடந்தைக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் இயற்கை அறிவியல் பிரிவில்(Natural Science) சேர்ந்து பயின்றவர். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் 1971-74 வரை பயின்றவர். முதுகலைக் கல்வியும் இக்கல்லூரியில் அமைந்தது. முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேறிய பெருமைக்குரியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ மேற்பார்வையில் தொல்காப்பிய மரபியல் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டார். தமிழ் நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்(1980-84).

30.03.1977 இல் பானுமதி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுத் திருமணம் புரிந்துகொண்டவர். மக்கட்செல்வங்களாகச் செந்தமிழ்ச்செல்வி, அன்பரசி என்ற பெண் மக்களும், மகேந்திரன் என்ற ஆண் மகவும் உள்ளனர். திருமதி பானுமதி சத்தியமூர்த்தி அவர்கள் குடந்தைத் தமிழ்ப்பேரவை என்னும் அமைப்பை நிறுவித் தமிழறிஞர்களுக்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியும், அரிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும் தமிழ்ப்பணியில் இணைந்துகொண்டார்.

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் 13.09.1984 இல் இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியில் இணைந்தவர். பின்னர் விழுப்புரம், தஞ்சாவூர், குடந்தைக் கல்லூரிகளில் பணியாற்றி இப்பொழுது சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிவருகின்றார். முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்களின் மேற்பார்வையில் மூவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பத்திற்கும் மேற்பட்டோர் இளம் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். அரசு கல்லூரி ஆசிரியர் கழக உறுப்பினாரக இருந்து ஆசிரியர்களின் மேம்பாட்டுக்காக நடைபெற்ற பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறையில் இருந்தவர்.

முனைவர் ம.சத்தியமூர்த்தி அவர்களுக்கு இலக்கணம், இலக்கியம், பதிப்பியல், நாட்டுப்புறவியல், தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்களின் வாழ்வியல், ஒடுக்கப்பட்டோர் வாழ்வியல் உள்ளிட்ட துறைகளில் ஈடுபாடு உண்டு.

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்களின் தமிழ்க்கொடைகள்:

1.   தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்வும் பணியும் 1992
2.   தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள்  1994
3.   தியாகச் செம்மல் எல்.கிருஷ்ணசாமி பாரதியார்  1995
4.   தமிழ் நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆய்வு  1997
5.   திருப்புறம்பயத் தமிழறிஞர் இரா. கிருஷ்ணமூர்த்தி 1997
6.    இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் பு.ம.ஆதிகேசவ நாயகர் 1999
7.   தொல்காப்பிய மரபியல் ஓர் ஆய்வு 2000
8.    தமிழுலகம் நினைக்க மறந்த தமிழறிஞர்கள்(விரிவாக்கப் பதிப்பு) 2001
9.   ஒடுக்கப்பட்டோர் உரிமைப்போரில் சமூகநீதிக் காவலர் 2002
10. குடந்தைக் கல்லூரித் தமிழறிஞர்கள் 2004

முனைவர் ம.சத்தியமூர்த்தி பதிப்பித்த நூல்கள்

1.   ஆய்வுலகில் பண்டாரத்தார் பணிகள் (1992)
2.   தி.வை.சதாசிவப் பண்டாராத்தார் ஆய்வுக்கட்டுரைகள் (1998)
3.   மன்னான் சின்னாண்டிக் கதைப்பாடல் (1999)

முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் சதாசிவப் பண்டாரத்தார் நூற்றாண்டு விழா, கு.கோதண்டபாணி நூற்றாண்டு விழா, ஆதிகேசவ நாயகர் நூற்றாண்டு விழாவையும், மயிலை சீனி.வேங்கடசாமி நூற்றாண்டு விழாவையும் பாவாணர் நூற்றாண்டுக் கருத்தரங்கினையும், மேலும் பல இலக்கிய நிகழ்வுகளையும் பொறுப்பேற்று நடத்திய பெருமைக்குரியவர்.

திருமழபாடி பேராசிரியர் அ.ஆறுமுகம் அவர்கள்



முனைவர் அ.ஆறுமுகம் அவர்கள்

திருமழபாடியில் வாழ்ந்துவரும் பேராசிரியர் அ.ஆறுமுகம் அவர்கள் தம் பணி ஓய்வுக்குப் பிறகும் தொடர்ந்து நூல்களை எழுதியும், பதிப்பித்தும் வெளியிட்டும் பேராசிரியர்களுக்கு முன்னோடியாக விளங்கிவருகின்றார். அண்மையில் இவர் வெளியிட்டுள்ள தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் என்ற நூலைப் படித்து மகிழ்ந்தேன். செய்திகளைத் திரட்டுவதிலும் அவற்றைப் பகுத்து வெளியிடுவதிலும் பேராசிரியர் அவர்கள் தேனீபோல் தொடர்ந்து உழைப்பவர்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சி. தங்கமுத்து உள்ளிட்ட தலைமாணாக்கர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். பெரும் புலமை பெற்றிருந்தாலும் அடக்கமும் எளிமையுமாக வாழ்ந்து வருபவர். சமூகத்தில் மறக்கப்பட்டவர்களின் வரலாற்றை ஆர்வமாக எழுதியதில் பேராசிரியர் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் அ.ஆறுமுகம் அவர்களின் தமிழ்வாழ்க்கை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், சாத்தநத்தம் என்ற ஊரில் வாழ்ந்த திருவாளர் அமிழ்தம், அருணாசலம் ஆகியோரின் மகனாக 11.06.1933 இல் பிறந்தவர். 19 ஆண்டுகள் பள்ளியிலும், 19 ஆண்டுகள் கல்லூரியிலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். சங்க இலக்கியத்தில் குடும்பம், உடைமை, அரசு என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். திருமழபாடியில் தமிழ்ச்சங்கம் நிறுவியும், திருவள்ளுவர் சிலை எடுப்பித்தும், தமிழறிஞர்களைத் திருமழபாடிக்கு அழைத்துச் சிறப்புச் செய்தும் தொண்டாற்றியவர். 2010 இல் தாய் தந்த வாழ்க்கைத்தேன் என்ற தலைப்பில் விரிவான தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

கவிதை நூல்கள், கட்டுரை நூல்கள், தன்வரலாறு, வாழ்க்கை வரலாற்று நூல்கள், நாட்டுப்புற இலக்கிய நூல்கள், திருக்குறள் உரை, கட்டுரை நூல்கள் என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.

பாவேந்தர் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி இவர்தம் படைப்புகளை வெளியிட்டு வருகின்றார். உலகத் திருக்குறள் மையத்தின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். மாணவர்கள் திருக்குறளை ஒப்புவிக்கும் வகையில் திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

முனைவர் அ.ஆறுமுகனாரின் தமிழ்க்கொடை

1.   பூம்புகாரின் புதுவரவு (1970)
2.   பாவேந்தரின் தமிழியக்கம் ஓர் ஆய்வு (1984)
3.   நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும் (1984)
4.   திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (1993)
5.   குறள் விருந்து (1993)
6.   வாழ்க்கை இலக்கியம் (1994)
7.   சங்க இலக்கியத்தில் குடும்பம், உடைமை, அரசு (1994)
8.   திருக்குறள் நினைவேடு (1996)
9.   வளர்தமிழ் வழிகாட்டி (1996)
10. என்னையே நான் (தன்வரலாறு), (1997)
11. பாவேந்தர் தந்த பரிசு (1997)
12. சிலம்பும் நாட்டார் உரையும் (1998)
13. திருக்குறளில் புதிய பார்வை (1998)
14. ஊர்வல உணர்வுகள் (1999)
15. ஆற்றங்கரைக் குயில் (1999)
16. மணிக்குறள் நூறு (2000)
17.  வழியடைக்குங்கல் (2000)
18. எண்ணித்துணிக (2000)
19. அகமும் அழகும் (2001)
20. குயில் தந்த முத்தம் (2001)
21. ஆந்திரங் கண்ட அருந்தமிழ்(முனைவர் சிங்காரவேலர் வரலாறு) (2001)
22. சிலம்பின் மூன்று ஒலிகள் (2003)
23. தன்மானத் தமிழ் மறவர் (2003)
24. கவிவேந்தரின் கருத்துச்சோலை (2003)
25. பிறந்த மண்ணின் பிடிவரலாறு (2004)
26. அந்தமிழ்கண்ட அந்தமான்(பயண நூல்) (2004)
27. வாழ்வியல் வளங்கள் (2005)
28. திருக்குறள் கையேடு (2005)
29. ஆ.செ.த.வாழ்க்கை வரலாறு (2005)
30. படைப்புவேந்தரின் பன்முகப் பார்வை (2006)
31. திருக்குறள் தெளிவும் கருத்தும் (2007)
32. தமிழில் வெண்பா இலக்கியங்கள் (2007)
33. அரசியல் இமையம் அண்ணா (2009)
34. முந்துமா முதுமை,களப்பணித்தொகுப்பு (2009)
35. தமிழராய் வாழ்வோம் (2010)
36. தாய் தந்த வாழ்க்கைத் தேன் (தன்வரலாறு) (2012)
37. வண்டமிழ் வளர்த்த வரதராசனார் (2011)
38. தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் (2012)







முனைவர் கா.செல்லப்பன் அவர்கள்



முனைவர் கா.செல்லப்பனார் அவர்கள்

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் முனைவர் பட்ட ஆய்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட சூழலில் நான் விண்ணப்பித்திருந்தேன்(1992-93). நேர்காணலுக்கும் அழைக்கப் பெற்றிருந்தேன். அப்பொழுது நான் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்யும் நிலையில் இருந்தேன்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தினனாக நான் இருந்தாலும் அதிகம் அந்த ஊருக்குச் சென்றதில்லை. முதன்முதலாக அந்தப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்குச் சென்ற பொழுது நண்பர் திரு. நாராயண நம்பி(பெரியார் கல்லூரிப் பேராசிரியர்) அங்கு ஆய்வுமாணவராக இருந்தார். அப்பொழுது திரு. தமிழ்மாறன்(பெரியார் பல்கலைக்கழகம்) அவர்களும் ஆய்வுமாணவராக இருந்தார். இவர்கள் வழியாகப் பேராசிரியர் அரு. மருததுரை அவர்களின் அறிமுகம் கிடைத்தது.

முனைவர் பட்ட ஆய்வுமாணவரைத் தேர்ந்தெடுக்க ஒரு எழுத்துத்தேர்வும், பின்னர் நேர்காணல் தேர்வும் நடந்தது. ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பலர் பரிந்துரையுடன் வந்திருந்தனர். அந்த நிலையில் தங்கப்பதக்கம், சான்றிதழ்களுடன் நேர்காணல் அறைக்குள் நுழைந்த என்னை அறிஞர்குழு தகுதியானவனாகத் தேர்ந்தெடுத்தது. என்னைத் தேர்ந்தெடுத்ததில் பெரும்பங்காற்றியவர் முனைவர் கா.செல்லப்பன் அவர்கள் என்று பின்னாளில் அறிந்தேன். தகுதிக்கும், திறமைக்கும் ஆர்வத்திற்கும் மதிப்பளிப்பதில் முனைவர் கா.செல்லப்பனார் அவர்கள் எப்பொழுதும் தயக்கம் காட்டுவதில்லை.

பல்கலைக்கழகத்தில் நான் ஆய்வுமாணவனாகச் சேர்ந்த பிறகு ஒரு முறை நன்றி சொல்லி வர அவர்களின் துறைக்குச் சென்றிருந்தேன். பல்வேறு பணிநெருக்கடிகளில் இருந்தாலும் அன்புடன் அழைத்து வாழ்த்துச் சொல்லிப் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பிலான என் ஆய்வு சிறக்க டி.எஸ்.எலியட்டின் மரபும் தனித்திறனும் என்ற கட்டுரையை விளக்கி வாழ்த்துரைத்து அனுப்பினார்கள்.
(முனைவர் கா.செல்லப்பனார் அவர்களுடன் ஒரு மாநாட்டில் மு.இ.)

அதன் பிறகு பல்வேறு கருத்தரங்குகள், ஆய்வரங்குகளில் ஐயாவைச் சந்தித்து உரையாடியுள்ளேன். அவர்களின் தமிழ்ப்பற்றும் ஆங்கிலப் புலமையும் கண்டு நான் பலநாள் வியந்தவன். மாணவப்பருவத்தில் பேராசிரியர் கா.செல்லப்பனார் அவர்கள் சேக்சுபியரின் அனைத்து நாடகங்களையும் மனப்பாடமாகச் சொல்வார்களாம். என் பேராசிரியர் மருதூர் வேலாயுதம் அவர்கள் கா. செல்லப்பனாரைப் பற்றி மணிக்கணக்கில் உரையாற்றுவார். இத்தகு பெருமைக்குரிய பேராசிரியர் கா. செல்லப்பனாரின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

முனைவர் கா.செல்லப்பன் அவர்கள் பெருமைமிகு வாழ்க்கை

ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள முனைவர் கா.செல்லப்பன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் பாகநேரியில் காசி. விசுவநாதன் - சௌந்தரம்மாள் ஆகியோரின் மகனாக 11. 04. 1936 இல் பிறந்தவர். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இடைநிலை(இண்டர்மீடியட்) வகுப்பும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) வகுப்பும் பயின்றவர்.  அறிஞர் தெ.பொ.மீ அவர்களின் அழைப்பில் அவர் மேற்பார்வையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிகழ்த்தியவர்(1975).

புதுக்கோட்டை, கும்பகோணம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் அரசு கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். இங்கிலாந்து நாட்டின் நிதியுதவி பெற்று அந்த நாட்டுக்குக் கல்வி கற்கும்பொருட்டுச் சென்றுவந்த பெருமைக்குரியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை மையம் திருச்சிராப்பள்ளியில் இயங்கியபொழுது 1976- இல் பணிபுரிந்து 1978 இல் பேராசிரியராகப் பணி உயர்வுபெற்றார். இவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1982 இல் தொடங்கப்பட்டதும் ஆங்கிலத்துறையில் பெருமைமிகு பேராசிரியராகப் பணியாற்றி 1996 இல் ஓய்வுபெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புநிலைப் பேராசிரியராகவும், தமிழ்நாட்டு அரசின் அங்கில மொழித்துறையின் இயக்குநராகவும் இருந்து 2001 வரை பணியாற்றினார்.


தமிழிலும் ஆங்கிலத்திலும் மேடைகளில் கேட்டார் உளங்கொள்ளும் வகையில் பேசும் ஆற்றல்பெற்ற பேராசிரியர் கா.செல்லப்பனார் தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் பல நூல்களை எழுதியுள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குமாகப் பல அரிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

எங்கெங்கு காணினும் சக்தி (ஒப்பாய்வு), Bharathi the visionary Humanist(மொழிபெயர்ப்பு), தோய்ந்து தேர்ந்த தளங்கள் முதலியன இவரது படைப்புகள். சிலம்புச்செல்வர் ம.பொ.சி யின் விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, இந்திய விடுதலைப் போரில் தமிழகம், மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் வள்ளுவம், கலைஞரின் குறளோவியம், தென்பாண்டிச் சிங்கம், மீசை முளைத்த வயதினிலே உள்ளிட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்.

சாகித்ய அகாதெமிக்காக விவேகானந்தர், குற்றாலக் குறிஞ்சி(கோவி மணிசேகரன்) மொழிபெயர்ப்பு, தாகூரின் கோரா(Gora) (மொழிபெயர்ப்பு) உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இலக்கியத்தில் பழம்புதுமை புதுப்பழைமை(மீரா பதிப்பகம்), ஒப்பியல் தமிழ்(எமரால்டு பதிப்பகம்), ஒப்பிலக்கியக் கொள்கைகளும் செயல்முறைகளும்(உ.த.நி. வெளியீடு), தமிழில் விடுதலை இலக்கியம், திருக்குறள் முதல் கிரிக்கெட் வரை(பாவை பதிப்பகம்), விடுதலைச் சிட்டும் புரட்சிக்குயிலும்(நியூ செஞ்சுரி), இலக்கியச்  சித்தர் அ.சீனிவாச இராகவன் எனப் பல நூல்களை எழுதிய பெருமைக்குரியவர் நம் கா.செல்லப்பனார் அவர்கள். சென்னையில் வாழ்ந்துவரும் பேராசிரியர் கா.செல்லப்பனார்  இலக்கியப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.

(குறிப்பு: என் கட்டுரைக் குறிப்புகளை எடுத்துப் பயன்படுத்தும் குறுங்கட்டுரையாளர்கள் எங்கிருந்து எடுக்கப்பெற்றது என்ற குறிப்பை- இணைப்பைப் பதிவு செய்யும்படி வேண்டுகின்றேன்)

திங்கள், 25 பிப்ரவரி, 2013

பேராசிரியர் க. இராமசாமி அவர்கள்



                                            பேராசிரியர் க. இராமசாமி அவர்கள்

செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக விளங்கும் முனைவர் க. இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 10.10.09.1948 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர் கந்தசாமி- வள்ளியம்மாள் ஆவர். தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார் அவர்கள் வழியாகத் தமிழ் உணர்வுபெற்ற முனைவர் க. இராமசாமி அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாக இளம் அறிவியலில் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆய்வு செய்து மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். ஆங்கிலம், இந்தி, வங்களாம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளை அறிந்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் இருந்தவர். 1983 முதல் 2003 வரை மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் (CIIL) துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மைசூரில் பணியாற்றிய காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர். தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பலவகையில் பாடுபட்டுள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் நல்ல ஈடுபாடுகொண்ட பேராசிரியர் க. இராமசாமி அவர்கள் சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் “புரட்சி செய்” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் வாச்பாய் அவர்களின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்.

இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பெற்றதும் அதன் பொறுப்பு அலுவலராக இருந்து நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர். 

முனைவர் க. இராமசாமி அவர்களின் முயற்சியில் தொல்காப்பியம் முற்றோதல், பத்துப்பாட்டு முற்றோதல், பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழியில் படித்தல் உள்ளிட்ட குறுவட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. செம்மொழி விருது வழங்கல், ஆய்வுத்திட்டங்களுக்கு நிதிநல்கை, நூலக உருவாக்கம், ஆய்வறிஞர்கள் பணியமர்த்தம், கருத்தரங்குகள் தமிழகமெங்கும் நடத்த ஆவன செய்தமை என்று பல பணிகள் நடைபெற்றன. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணிகள் பலவற்றிற்குக் கால்கோள் இட்ட பெருமை முனைவர் க. இராமசாமி அவர்களுக்கு உண்டு.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

என் திருப்பூர் செலவு...




 தமிழ்ச்செம்மல் கே.பி.கே. செல்வராசு அவர்கள்
(தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்)

திருப்பூருக்கு நான் சென்றது இதுதான் முதன்முறைச் செலவு, பேராசிரியர் செ. திருமாறன் அவர்களின் தொடர்பால் பார்க்சு கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான தமிழ் இணையப் பயிலரங்க நிகழ்வுக்காக அழைக்கப்பெற்றிருந்தேன். திட்டமிட்டவாறு செலவு சிறப்பாக அமைந்தது. அமெரிக்காவில் வாழும் நண்பர் தில்லை அவர்கள் வழியாகத் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. கே.பி.கே. செல்வராசு ஐயா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் அமைந்தது.

23.02.2013 காலை 10 மணிக்குக் கல்லூரியில் நிகழ்ச்சி தொடங்கியது. திரு.செல்வராசு ஐயா அவர்களும் நானும் ஒரே நேரத்தில் கல்லூரிக்கு வந்து சேர்ந்தோம். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம். என் நூல்களை ஐயாவுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். அவர்களும் வெளியிட்ட நூல்களை எனக்கு வழங்கி மகிழ்ந்தார்கள். கல்லூரி முதல்வர் திரு. திருமாறன் அவர்கள் எங்களை எதிர்கொண்டு அழைத்துக் கல்லூரிச் செயலரிடம் அறிமுகம் செய்தார். தேநீர் விருந்தோம்பலுக்குப் பிறகு அரங்கிற்குச் சென்றோம்.
    
கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள், பிற கோவைக் கல்லூரியின் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், ஈரோடு கல்லூரி மாணவர்கள், திருப்பூரின் மற்ற கல்லூரி சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு இருந்தது. பார்க்சு கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கூட்டுமுயற்சியில் நிகழ்ச்சி முழுநாளும் தொய்வின்றி நடந்தது.

கல்லூரிச் செயலர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.கே. செல்வராசு, கல்லூரி முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் ஆகியோரின் உரைகளுக்குப் பிறகு நான் தமிழ் இணையம் குறித்த அறிமுக உரையாற்றினேன். தேநீர் இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கின் முதன்மை உரை அமைந்தது. அனைவருக்கும் குறிப்பேடுகள், எழுதுபொருள்கள் வழங்கப்பட்டிருந்தன, ஆர்வமுடன் அனைவரும் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

பகல் உணவுக்குப் பிறகு மீண்டும் மூன்று மணி நேரம் பயிலரங்கம் தொடர்ந்தது. செய்முறைக் காட்சிகள் செய்துகாட்டப்பட்டன. பிறகு பங்கேற்பாளர்களின் கருத்துரைகள் எழுத்திலும் பேச்சிலுமாகப் பெறப்பட்டன. அனைவரும் மிகச்சிறப்பாக நிகழ்ச்சி அமைந்ததை எடுத்துரைத்தனர். பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்கள் தங்கள் கல்லூரியில் பயிலரங்கம் நடத்த அழைப்பு விடுத்தனர். ஓய்விருக்கும்பொழுது தவறாமல் கலந்துகொள்வேன் என்று உறுதிகூறி அனைவரிடமும் பிரியா விடைபெற்றேன்.



பங்கேற்ற பேராசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்



பங்கேற்ற பேராசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்



பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்




                               பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்

நிகழ்ச்சி முடிந்து மாலை ஆறு மணிக்கு விடுதிக்கு வந்தேன்.  திரு. கே.பி.கே. செல்வராசு ஐயா அவர்கள் விடுதிக்கு வந்து என்னை அழைத்துகொண்டு அருகில் இருந்த அவர் அலுவலகம் சென்றார். நம் அன்பிற்குரிய செல்வராசு ஐயா மிகப்பெரிய நிலையில் துணி, நூல் வணிகம் செய்வதுடன் தமிழுக்கு அவ்வப்பொழுது இயன்ற உதவிகளைச் செய்துவருகின்றார். பெட்னா விழாவுக்குப் புரவலராக இருந்து அவ்வப்பொழுது உதவுவது இவர் வழக்கம் என்று அறிந்தேன். பல மாணவர்களின் படிப்புக்கும் அமைதியாக உதவி வருவதை நண்பர்கள் வழியாக அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். நல்ல தமிழ்ப்பற்றாளரை நண்பராக அறிமுகம் செய்துவைத்த நண்பர் தில்லை அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லியாக வேண்டும்.

திரு. செல்வராசு ஐயா அவர்களின் ஏற்பாட்டில் டாலர் நகரம் நூலாசிரியர் திரு. ஜோதிஜி அவர்கள் வந்திருந்தார். இவருடன் முன்பே இணையவழித் தொடர்பு அமைந்திருந்தமை அப்பொழுதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. இருவரும் செய்யும் பணிகளை நினைவுகூர்ந்தோம். என் நண்பர் வெட்டிக்காடு இரவிச்சந்திரன், சேலம் இலட்சுமணன் ஐயா வழியாகத் திரு. ஜோதிஜி அவர்களைப் பற்றி அறிவேன். எங்கள் இருவரையும் பேசிக்கொண்டு இருக்கும்படி சொல்லிவிட்டு இடையில் சில குடும்பக் கடமைகளுக்காக ஐயா செல்வராசனார் அவர்கள் புறப்பட்டார்கள். நாங்களும் சிறிது நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றுக்கொண்டோம்.


திரு. ஜோதிஜி, திரு. கே.பி.கே.செல்வராசு, மு.இளங்கோவன்


நான் அறைக்குத் திரும்பியதும் கல்லூரியிலிருந்து என்னை வழியனுப்ப நண்பர்கள் வந்திருந்தனர். இரவு உணவுக்காக ஒரு சிறந்த உணவகத்திற்கு அழைத்துச் சொன்றனர். திருப்பூரில் கோழியிறைச்சிக்காக அமைக்கப்பெற்றிருந்த "கொக்கரக்கோ" உணவகத்தில் சிறப்பு உணவுக்கு ஆயத்தம் செய்திருந்தனர். நல்ல தூய்மையான, சுவையான உணவு. அனைவரும் உண்டு மகிழ்ந்தோம். 

விடுதிக்குத் திரும்பிப் பொருள்களை எடுத்துகொண்டு அவிநாசிக்கு மகிழ்வுந்தில் வந்தோம். ஒரு மணி நேரம் காத்திருந்து நள்ளிரவில் பேருந்தேற்றிவிட்டனர். அன்புடன் விருந்தோம்பிய திரு.சு. சந்நாசி திரு.கார்த்தி, பேராசிரியர் மு. சாமிசுந்தரம் மற்ற பேராசிரிய நண்பர்கள், கல்லூரி முதல்வர் திரு. செ. திருமாறன் ஐயா, பயிலரங்கில் பங்கேற்ற பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், கல்லூரி நிருவாகத்தினர் அனைவருக்கும் நன்றியுடையேன். இந்தப் பயிலரங்கம் தமிழ் இணைய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்கப் பயிலரங்கமாக அமைந்தது.

சனி, 23 பிப்ரவரி, 2013

உணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடங்கியது…

பயிலரங்கக் காட்சிகள்



                                                       பயிலரங்கக் காட்சிகள்


                                                                பயிலரங்கக் காட்சிகள்


பயிலரங்கக் காட்சிகள்


                                                             பயிலரங்கக் காட்சிகள்

திருப்பூர் பார்க்சு கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று(23.02.2013)காலை 10 மணிக்குத் தொடங்கிப் பகல் 1.30 மணிவரை நடைபெற்றது. இதில் தமிழ் இணைய வளர்ச்சி வரலாறு விளக்கப்பட்டது. பிற்பகல் உணவுக்குப் பிறகு பேராளர்கள் அரங்கில் கூடியுள்ளனர்.
இந்தப் பயிலரங்கில் திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பார்க்சு கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே தொடங்கியது…





கல்லூரி முதல்வர் திருமாறன் அவர்கள் வாழ்த்துரை

திருப்பூர் பார்க்சு கல்லூரியில் தேசிய அளவிலான தமிழ் இணையப் பயிலரங்கம் இன்று 23.02.2013 காலை 10 மணிக்குத் தொடங்கியது. மாலை 5.மணி வரை நடைபெறும்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

பார்க்சு கல்லூரியின் செயலாளர், திரு. பெ. இரகுராஜன் அவர்கள் தலைமையில் பயிலரங்கத் தொடக்க விழா நடைபெற்றது. பேராசிரியர் மு. சாமிசுந்தரம் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.

பார்க்சு கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ஜெ. திருமாறன் அவர்கள் தமிழ் இணையத்தின் தேவையை வலியுறுத்தி வாழ்த்துரை வழங்கினார்
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர், திரு. கே.பி.கே.செல்வராசு அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.

புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பயிலரங்கத்தின் நோக்கம், பயிலரங்கின் வழியாக இதுவரை நடந்துள்ள முயற்சிகளை எடுத்துரைத்துத் தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றி வருகின்றார்.

திரளாக மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.