நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 5 பிப்ரவரி, 2011

தமிழ் நாள்காட்டி

இணையத்தை ஆக்கமான செயலுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் நான் கண்ணுங் கருத்துமாக இருப்பேன். அதனைவிடுத்துக் குழுப்போர்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து வருகின்றேன்.

அவ்வப்பொழுது பலர் என்னைப் பற்றி மாறுபட்ட கருத்துகளை முன்வைக்கும்பொழுது என்மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வதை மட்டும் வழக்கமாகக் கொள்வேன். அவ்வாறு தவறைச்
சுட்டிக்காட்டுபவர்களை நன்றியுடன் போற்றுவேன். என்னைப் பற்றித் தவறான செய்திகளைப் பரப்புபவர்களுக்காக இரக்கப்படுவது மட்டும் உண்டு. தமிழுக்கு, தமிழருக்கு ஆக்கமான பணிகளைச் செய்பவர்கள் யாராக இருப்பினும் அவர்களையும் அவர்களின் பணியினையும் போற்றுவதைக் கடமையாகக் கொண்டுள்ளேன்.

அந்த வகையில் இணையத்தில் தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்தவர்களிடம்
தனிப்பட்ட முறையில் நட்பாடுவதும் உண்டு.

அண்மையில் திரு.பிரின்சு என்னாரெசு பெரியார் என்னும் தோழரின் முயற்சியில் உருவான தமிழ்நாள்காட்டி என்னும் தலைப்பிலான செய்தி கண்டு அதனைப் படித்தேன்.

எங்கள் அண்ணன் வே.இளங்கோ அவர்களின் தந்தையாரும் தமிழ் இன உணர்வாளருமான கல்பாக்கம் வேம்பையன் ஐயா அவர்களின் முயற்சியில் உருவான தமிழ்நாள்காட்டியை இணையத்தில் பார்வையிட்டுப் பயன்கொள்ளும் நன்முயற்சியைப் பிரின்சு மேற்கொண்டிருந்ததைக் கண்டு வியந்தேன்.

கல்பாக்கம் வேம்பையன் ஐயா பல ஆண்டுகளாகத் தமிழ்நாள்காட்டியைச் சிறிய வடிவில் கூடுதல் படிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதும் இலவசமாகப் பரப்பி வருபவர்.தமிழகத்தில் தமிழ்நாள்காட்டி முயற்சியில் கல்பாக்கம் வேம்பையன் அவர்களின் பணி பாராட்டத்தக்கது. இணையத்தில் பிரின்சு அவர்களின் முயற்சியால் அந்த நாள்காட்டியைக் கண்டபொழுது இதுவன்றோ தமிழ்ப்பணி என்று போற்றினேன்.

என் வலைப்பூவில் இடப்பக்கத்தில் உள்ள அதனைத் தாங்களும் தங்கள் நண்பர்களும் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கின்றேன். தங்கள் வலைப்பூவிலும் இணைத்துக்கொள்ளலாம். இதுபோன்ற தமிழாக்கப் பணிகளில் ஈடுபடும்படி கணினி நுட்பம் தெரிந்த தமிழ்ப்பற்றாளர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

1 கருத்து:

PRINCENRSAMA சொன்னது…

தங்களின் பணிகளுக்கு மத்தியில் இது ஒன்றும் இல்லை அய்யா! ஆயினும் பலரும் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தங்களின் ஊக்கத்திற்கு நன்றி!