நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 14 பிப்ரவரி, 2011

முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணையம் அறிமுகம்


இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை இரகமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இணைய அறிமுக விழாவும், தமிழ்த்தாத்தா உ.வே.சா.தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழாவும் 12.02.2011 காரி(சனி)க் கிழமை பிற்பகல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பிற்பகல் 2.00 மணிக்குத் தமிழ் இணைய அறிமுக விழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் அவர்கள் நிகழ்ச்சி பற்றியும், இணையத்தின் தேவை பற்றியும் எடுத்துரைத்தார். புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சி பற்றியும் தேவை பற்றியும் மாணவியர் பயன்பெறும் வகையில் காட்சி விளக்கத்துடன் உரை நிகழ்த்தினார்.

தமிழ்த்தட்டச்சு தொடங்கி, தமிழ் இணையத்தின் பல்வேறு பயன்பாடுகளை விளக்கினார். ஸ்கைப் வசதியைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் உரையாடமுடியும் என்ற வாய்ப்பையும் எடுத்துரைத்தார்.

சிங்கப்பூரில் உள்ள உத்தமத்தின் செயல் இயக்குநர் திரு.மணியம் அவர்கள் இணைய இணைப்பில் வந்து மாணவியர்களுக்குத் தமிழ் இணையப் பயன்பாட்டை விளக்கிச் சிறிது நேரம் ஊக்க உரை வழங்கினார். இரண்டே முக்கால் மணி நேரம் தமிழ் இணைய அறிமுகம் நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். ஆசிரியர்களுக்கும் இந்த உரை மிகுதியும் பயன்பட்டது. நிறைவில் பயன்பெற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

மாலை 5 மணிக்குப் பள்ளியின் வளாகத்தில் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இலக்கிய மன்றத்தின் நிறைவு விழா நடைபெற்றது. திரு.நாகரத்தினம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். திரு. பஷீர் அவர்கள் முன்னிலையேற்றார். பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசளிப்பும் நடைபெற்றது.

இன்றைய கல்வி, பொருளாதார வளர்ச்சி சமூகத்தின் சமயம் / கலாச்சாரம்/ தாய்மொழி இவற்றை மேம்படுத்துகின்றதா? சீரழிக்கின்றதா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் மாணவியர்கள் கலந்துகொண்டு உரை வழங்கினர். முனைவர் மு.இளங்கோவன் நடுவராக இருந்து மாணவியர்களின் கருத்துகளைச் சீர்தூக்கி இன்றைய கல்வியும் பொருளாதாரமும் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றிருந்தாலும் மக்களை இவைச் சீரழித்து வருகின்றன என்ற தீர்ப்புரையை வழங்கினார். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர்த் தமிழன்பர் திரு.முஸ்தபா அவர்கள் நிகழ்ச்சி சிறப்புறத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்து ஊக்கப்படுத்தினார்கள்.


சிங்கப்பூர் மணியம் அவர்களுடன் ஸ்கைப்பில் உரையாடும் 
இரகமத் பெண்கள் பள்ளியின் மாணவி


தமிழ் இணையப் பயிலரங்கில் மாணவியர்கள்,ஆசிரியர்கள்


தமிழ் இணையப் பயிலரங்கில் மாணவியர்கள்,ஆசிரியர்கள்


தமிழ் இணையப் பயிலரங்கில் மாணவியர்கள்


தமிழ் இணையப் பயிலரங்கில் மாணவியர்கள்


உ.வே.சா.தமிழ் இலக்கிய மன்ற நிறைவு விழா

கருத்துகள் இல்லை: