புதன், 9 பிப்ரவரி, 2011
தமிழறிஞர் கா.ம. வேங்கடராமையாவின் நூல்கள் நாட்டுடைமை
பேராசிரியர் கா.ம. வேங்கடராமையா அவர்கள்
தமிழறிஞர் பேராசிரியர் கா.ம. வேங்கடராமையாவின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள காரம்பாக்கத்தில் 1911-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் நாள் பிறந்தார் கா.ம. வேங்கடராமையா. பெற்றோர் கா.கிருட்டினையர்-வேங்கடசுப்பம்மாள். சென்னை இலயோலா கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். இவர் செங்கல்பட்டுத் தூய கொலம்பா உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், திருப்பனந்தாள் சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராகவும், தமிழ், சமசுகிருதம், பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் இருக்கையில் ஆய்வாளராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரிய கையெழுத்துச் சுவடிப் புலத்தின் தலைவராகவும், திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளராகவும் அரும் பணியாற்றியுள்ளார்.
தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.எனினும் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டு தமிழ்ப்பணியாற்றினார். தமது தமிழ்த்தொண்டுக்காகக் கல்வெட்டாராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி, சைவத் தமிழ் ஞாயிறு, சிவநெறிச் செல்வர் உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
1994-ஆம் ஆண்டு மறைந்த வேங்கடராமையா, இலக்கியக் கேணி, சோழர் கால அரசியல் தலைவர்கள், கல்வெட்டில் தேவார மூவர் உள்ளிட்ட 19 நூல்களை படைத்துள்ளார்.மராட்டியர் கால வரலாற்றை அறிவதற்குத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாக இவர் உருவாக்கிய மராடியர் மோடி ஆவணங்கள் குறித்த நூல் புகழ்பெற்ற ஒன்றாகும்."தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்" நூலின் வழியாக மராட்டியர் காலத் தமிழகத்தை அறியலாம்.
திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் பணிபுரிந்த இவர் கண்டிப்புக்கும் கடமைக்கும் பெயர் பெற்றவர். திருப்பனந்தாள் திருமடத்தின் சார்பில் அரிய தமிழ்நூல்கள் பல வெளிவருவதற்கும் இவர் உழைத்துள்ளார்.காசித்திரு மடத்தின் வெளியீடுகளுள் திருக்குறள் உரைக் கொத்துப் பதிப்புகள் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்கும்போது, எம்.எசு.பூரணலிங்கம் பிள்ளை, வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஆர்.இராசகோபால ஐயங்கார், வ.வெ.சு.ஐயர், ரெவரண்ட் லாசரசு ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தகுந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.
கா.ம. வேங்கடராமையா அவர்கள் என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களின் தந்தையார் ஆவார்.
பேராசிரியரின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவரது நூல்கள் அனைத்தையும் அரசுடைமையாக்குவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, அவரது பிறங்கடைகளுக்கு மரபுரிமைக்கான பரிவுத் தொகையாக உருவா. 15 இலட்சம் நிதி வழங்கவும் ஆணையிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக