சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங் மாநகரத் தந்தை தியோ கோ பின் அவர்கள் மு.இளங்கோவனுக்கு நினைவுப் பரிசில் வழங்கல் அருகில் பொறியாளர் மூர்த்தி அவர்கள்.
சிங்கப்பூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ளும்படி பொறியாளர் மூர்த்தி அவர்கள் என்னைத் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் போன்றவர்கள் நாட்டுப்புறவியல் துறையில் எனக்கிருந்த ஈடுபாட்டை அறிந்து என் பெயரை நிகழ்ச்சிக்கு முன்மொழிந்துள்ளனர். தமிழ் வள்ளல் திரு. முஸ்தபா போன்றவர்களும் என் வருகை அமையவேண்டும் என்று ஆர்வம் காட்டினர். சிராங்கூன் டைம்ஸ் இதழாசிரியர் திரு. அலி அவர்களும் திரு.பாலு.மணிமாறன் உள்ளிட்டவர்களும் திரு.குழலி, திரு.நிலவன், பொறியாளர் சலுப்பை புருசோத்தமன் உள்ளிட்ட தோழர்களும் பாவாணர் பற்றாளர் ஐயா கோவலங்கண்ணனார் அவர்களும் என் வருகைக்குக் காத்திருந்தனர்.
திட்டமிட்டபடி சென்னையில் 21.01.2011 வானூர்தி ஏறிச் சிங்கப்பூரை அடைந்தோம். முதல்நாள் (22.01.2011) சிங்கப்பூரில் தங்கியிருந்ததையும், நண்பர்களைக் கண்டதையும் தஞ்சாவூர் சின்னப்பொண்ணு அவர்களுடன் நாட்டுப்புறப் பாடல் ஒத்திகையில் ஈடுபட்டதையும் முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். படித்திருக்கலாம்.
இனி 22.01.2011(ஞாயிறு) நிகழ்வுகள்...
காலை நெடுநாழிகை ஓய்வில் இருந்தேன். நண்பர் மன்னார்குடி இராசகோபால் அவர்கள் இல்லத்தில் காலையுணவு. அவரும் அவர்களின் துணைவியாரும் மருத்துவமனைக்குப் பல் மருத்துவரைப் பார்க்கச்சென்றனர். நான் வீட்டிலிருந்தபடி எனக்கு வந்த மின் மடல்களைப் படிப்பதில் கவனம் செலுத்தினேன். பதிவு ஒன்றும் வெளியிட்டேன். மீண்டும் ஓய்வில் இருந்தேன்.
பகலுணவுக்குப் பிறகு சிறிது ஓய்வெடுத்து நான்கு மணிக்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் புறப்பட்டோம். அதற்குள் என்னை அழைத்துச் செல்வதற்கு என் மலேசியா நண்பர் திரு. முனியாண்டி ஆசிரியர் அவர்கள் தம் மகிழ்வுந்தில் சிங்கப்பூர் விழா நடக்கும் இடத்துக்கு வந்திருந்த செய்தி எனக்குக் கிடைத்தது. அரங்கில் என் வருகைக்காகக் காத்திருந்த முனியாண்டி அவர்களைக் கண்டு மகிழ்ந்தேன். எங்கள் பகுதி சார்ந்த பல இளைஞர்கள் அங்கு வந்து கூடினர். அனைவரும் ஒன்றாகப் படம் எடுத்து ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம்.
அண்ணன் இரசீத் அலி அவர்களை அரங்கில் கண்டு அறிமுகம் ஆனேன். பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்களையும் வேறு பல அன்பர்களையும் கண்டு வணங்கினேன்.
பொறியாளர் முத்துமாணிக்கம் என்ற அன்பர் திரு.மூர்த்தி அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்து விழா ஏற்பாடுகளைக் கவனித்து வந்தார். தஞ்சாவூரிலிருந்த ஓர் அன்பர் விழாவுக்காக வந்திருந்தார்.
பொங்கல் விழாவுக்கு நகரின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் வந்திருந்து பொங்கல் வைத்துப் பொங்கினர். 111 பானைகள் பொங்கல் வைக்கப்பட்டன. மாட்டு வண்டி ஊர்வலத்துக்கு மாடுகள் பிடித்துவரப்பட்டு மாநகர மேயர் திரு தியோ கோ பின் அவர்கள் வண்டியில் ஏறிக் காட்சி தர, விழாத் தொடங்கியது. நகரின் குறிப்பிட்ட தெருக்களில் மாட்டு வண்டி ஊர்வலம் வந்தது.
பல சீனமொழி பேசும் நண்பர்கள் வேட்டி அணிந்துகொண்டும் பல சீனப்பெண்மணிகள் பொங்கல் வைத்தும் மகிழ்ந்தனர். மாநகரத் தந்தை அனைத்துப் பொங்கல் பானை வைத்த பெண்களையும் தனித்தனியாகப் பாராட்டினார். தொலைக்காட்சி நிறுவனத்தினர் படம் எடுத்தனர். குருதிக்கொடை வழங்கும் நிகழ்வும் சார்பு நிகழ்வாக நடந்தது. மாநகரத் தந்தை தியோகோ பின் அவர்கள் அரங்க நிகழ்ச்சிக்கு வந்தார். 5.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. நாட்டுப்புறக் கலைஞர் தஞ்சாவூர் சின்னபொண்ணு அவர்கள் வரவேற்புப் பாடலையும் மாநகரத் தந்தையைப் புகழ்ந்து உரைக்கும் பாடல்களையும் பாடினார். நான் இரண்டு நாட்டுப்புறப் பாடல்களைப் பாடினேன். பின்னர் மாநகரத் தந்தை தியோ கோ பின் பேசினார். எங்களுக்கு நினைவுப் பரிசில் வழங்கினார்.
பொங்கலிட்டவர்கள் பாராட்டப்பெற்றனர். பிறகு முறைப்படியான நாட்டுப்புறப் பாடல் கலை நிகழ்ச்சி தொடங்கியது. சிங்கப்பூர் திரு.நாதன் தலைமையிலான இசைக்கழுவினர் கருவிகள் முழக்கினர்.
தஞ்சாவூர் சின்னபொண்ணு அவர்களின் கணவர் திரு. குமார் அவர்கள் தவில் என்னும் இசைக்கருவியை இசைத்து எங்களை ஊக்கப்படுத்தினார். நானும் பல நடவுப் பாடல்களைப் பாடினேன்.
இடையிடையே தமிழில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களின் சிறப்பைப் பாடி விளக்கினேன். நாட்டுப்புறப் பாடல்களைத் திரைத்துறையினர் பயன்படுத்துவதையும் இலங்கை, மலையாள நாட்டுப்புறப் பாடல்களையும் பாடிக் காட்டினேன். சின்னபொண்ணு அவர்கள் திரையில் பாடிய, ஒலி நாடாக்களில் பாடிய பல பாடல்களைப் பாடி அவையினரை மகிழ்ச்சிப் படுத்தினார். என் பாடல்கள் சிலவற்றுக்குப் பின்குரல் கொடுத்துப் பாடலைச் சிறக்கச் செய்தார். வெளிநாட்டில் வாழும் பொதுமக்களிடம் நான் கலந்துகொண்டு அரங்கில் குழுவுடன் இசைக்கருவிகளுக்கு இடையே பாடியது இதுதான் முதல்முறை. புதிய பட்டறிவாக இருந்தது. திரு.வினாயகம் என்ற இளைஞரும் பாடினார். காதல்பாடல்களை அவர் பாடினார்.
இரவு ஒன்பது முப்பது மணியளவில் எங்கள் கலை நிகழ்வு நிறைவுற்றது. உணவு உண்டோம். அனைவரிடமும் விடைபெற்று, திரு.முனியாண்டி அவர்களுடன் மன்னார்குடி இராசகோபால் இல்லம் வந்து சேர்ந்தோம்.
இரவு ஓய்வுக்குப் பிறகு காலை 5.30 மணிக்கு மலேசியா புறப்படுவது எங்கள் திட்டம். அப்படியே நடந்தது. திரு.முனியாண்டி அவர்களுக்குச் சிங்கப்பூர் பாதை புதியது. அவருக்குத் தூக்க கலக்கம் இருந்தது.
நான் தயங்கியபடியே மகிழ்வுந்தில் இருந்தேன். எங்களுக்குச் சரியான வழியை இராசகோபால் தாளில் குறித்துத் தந்தார். அந்த வழியில் வந்து ஒருவழியாகச் சிங்கப்பூர் எல்லையை நெருங்கினோம்.
அங்கு எங்களுக்கு இரண்டு நிமிடத்தில் வெளியேற இசைவு கிடைத்தது. சில கல் தொலைவில் நாங்கள் மலேசியா எல்லையில் நுழைவுதற்கு இசைவுபெற்றோம். அதுவும் இரண்டு நிமிடங்களில் முடிந்தது. இன்னும் நம் கற்கால சென்னை நடைமுறைகள் என்னை மருளச்செய்தன. பொழுது மெதுவாக விடிவதை உணர்ந்தேன். மலேசியத் தாய் எங்களுக்கு இளங்காலைக் கதிர்களை அனுப்பி, வரவேற்றாள். மலேசியாவின் நெடுஞ்சாலையில் எங்கள் மகிழ்வுந்தை நண்பர் முனியாண்டி அவர்கள் சிறப்பாக ஓட்டி வந்தார். அவருக்கு உறக்கம் வராமல் இருக்க பேச்சு கொடுத்தபடியே வந்தேன்.
வழியில் உள்ள நெடுஞ்சாலைக் கடைகளில் அதன் அழகைக் கண்டு முன்பே மகிழ்ந்துள்ளதால் வழியில் குளித்து உணவு முடிக்கத் திட்டம். ஆனால் முனியாண்டி அவர்கள் போகும் வழியில் மலாக்கா நகரம் உள்ளது அங்குச் சில முதன்மையான இடங்கள் உள்ளன கண்டு மகிழலாம் என்றார். அண்ணன் அறிவுமதி அவர்கள் முன்பு மலாக்க பற்றியும் அங்குள்ள மலாக்கா செட்டிகள் பற்றியும் எனக்குச் சொன்னமை நினைவுக்கு வந்தன.
காலைச் சிற்றுண்டியை ஒரு தமிழர் கடையில் உண்டு முடித்தோம். பிறகு நகர்வலம் அமைந்தது. மலாக்கா என்பது மலேசியாவில் குறிப்பிடத்தக்க ஒரு நகரம் ஆகும் அங்குப் போர்ச்சுக்கல் நாட்டினர் ஆட்சி செய்திருந்தமைக்கான பல நினைவிடங்கள் உள்ளன.
டச்சுக்காரர்களின் நினைவிடங்களும் உள்ளன. கோட்டைகள், தெருக்கள், கப்பல்கள் பழைமை மாறாமல் பாதுகாக்கப்படுகின்றன. யாவற்றையும் நினைவுக்காகப் படம் எடுத்துகொண்டோம். பார்க்க வேண்டிய பகுதிகளைப் பார்த்துவிட்டு மீண்டும் நெடுஞ்சாலைக்கு வழிதெரியாமல் சுற்றிச் சுற்றி வந்தோம். ஒரு வழியாக நெடுஞ்சாலை வந்தது. இரு மருங்கும் செம்பனை மரங்களும் இயற்கைக் காட்சிகளும் அமைந்திருந்தன. கண்டு வியந்து வந்தேன்.
குளிப்பதற்கு இடம் தேடும்பொழுது திரு.முனியாண்டி அவர்கள் ஐம்பது கி. மீட்டர் உள்ளே அடங்கியிருந்த பெந்திங் என்ற தம் ஊரில் உள்ள தம் வீட்டுக்குச் செல்வோம் என்றார். முன்பொரு முறையும் முனியாண்டி அவர்களின் வீட்டுக்குக் கோவலனைப் போல் இரவில் சென்று வைகறையில் வெளியேறியுள்ளேன். சரி இந்த முறை வீட்டைப் பார்க்கலாம் என்று சென்றேன். குளித்து முடித்து ஓய்வுக்காகப் படுத்தேன். பத்து நிமிடத்தில் எழுப்பி, எனக்காகப் பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் கோலாலம்பூரில் காத்திருப்பதாகச் சொன்னார்.
இருவரும் கிள்ளான் வழியாகக் கோலாலம்பூர் மலேசியா பல்கலைக்கழகம் சென்றோம். பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் அன்பொழுக வரவேற்றுப் பகலுணவுக்கு அழைத்துச்சென்றார். மலேசியத் தமிழ் இலக்கியப் போக்கு பற்றி உரையாடியபடியே உண்டு மகிழ்ந்தோம். மீண்டும் மலேசியா பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் சிலபொழுதுகள் படித்தேன். நான்கு மணிக்கு மொழித்துறையில் மாணவர்களுக்கு உரையாற்றும் ஒரு வாய்ப்பைப் பேராசிரியர் உருவாக்கியிருந்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் இன்றைய நாளில் மலேசியாப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியருமான முனைவர் கி. கருணாகரன் அவர்களும் கலந்துகொண்டு என் உரையைச் செவிமடுத்தார்கள். இந்தியவியல்துறை துறைத்தலைவர் பேராசிரியர் குமரன் அவர்களும் கலந்துகொண்டார். மாணவர்கள் 35 பேர் அளவில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து இரவு உணவு உண்டு நான் பேராசிரியர்கள் குடியிருப்பில் பேராசிரியர் மோகன்லால் அவர்களுடன் தங்கினேன். பேராசிரியர் மோகன்லால் அவர்கள் மைசூர் நடுவண் மொழிகள் நிறுவனத்தில் பேராசிரயர் க. இராமசாமி அவர்களுடன் பணிபுரிந்த பட்டறிவுகளையும் தம் முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பழங்குடி மக்களிடம் களப்பணியாற்றிய பட்டறிவுகளையும் நினைவுகூர்ந்தார்.
25.01.2011 காலை 7.15 மணிக்குப் பல்கலைக்கழகம் புறப்பட்டோம். 5 நிமிடத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்தோம். 21 பேராசிரியர்கள் மொழித்துறையில் உள்ளனர். பேராசிரியர் மோகன்லால் கணிப்பொறியில் தன் வருகையைப் பதிந்துகொண்டார். அவருக்கு முன்பாக 7 பேர் வந்து பெயரைக் கணிப்பொறியில் பதிந்துள்ளதைப் பேராசிரியர் காட்டி, அவர்களின்
கல்வியார்வத்தையும் பணி ஈடுபாட்டையும் காட்டினார். கண்ணாரக் கண்டு மகிழ்ந்தேன்.
பேராசிரியர் மோகன்லால் அவர்கள்
நாங்கள் இளம் முனைவர் பட்டம் படிக்கும்பொழுது பத்து மணிக்குரிய பல்கலைக்கழகத்திற்கு எங்கள் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் 8 மணிக்கு வந்துவிடுவார். நாங்கள் சிலர் 7.30 மணிக்கு வந்துவிடுவோம். இவை யாவும் பேரறிஞர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களின் மாணவர்களிடமும் அவர்களின் கொடிவழி மாணவர்களிடமும் பதிந்துள்ள நற்பண்புகளாகும்.
காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மலேயா பல்கலைக்கழகம்
பணிநேரத்தைக் கொண்டது. ஆனால் 7 மணிக்கே பேராசிரியர்களும் மாணவர்களும் வரத்தொடங்கினர். என் நினைவுகள் நம் கல்வி நிலையங்களின் பக்ககம் ஓடியது.
இசைவுகளும், தற்செயல் விடுப்புகளும், ஈட்டிய விடுப்புகளும், மருத்துவ விடுப்புகளும், பேறுகால விடுப்புகளும், மதவிழாக் கொண்டாட்டங்களும், உள்ளூர் விடுப்புகளும், கோடை விடுமுறை, குளிர்கால விடுப்புகளும் அரசு விடுப்புகளும் போதாமல் காலை 9 மணிக்குக் கல்லூரி, பல்கலைக்கழகம் என்றால் 10 மணிக்கு வந்து நுழைவதும். வந்து நுழைந்ததும் கொண்டுவரும் உணவுப் பெட்டகத்தைத் திறந்து கடை பரப்புவுதும், 11 மணிக்குத் தேநீருக்குப் பறப்பதும் பிறகு பகல் உணவு, பிறகு மீண்டும் தேநீர், சிறப்பு இசைவில் மூன்று மணிக்குப் பை தூக்குவதும் என்ற நிலையிலிருந்து நாம் என்று விடுபடுவோம் என்ற பெரிய ஏஏஏஏக்கமே எனக்குப் படர்ந்தது.
காலை ஒன்பது மணியளவில் இந்தியவியல் துறையில் துறைத்தலைவர் குமரன் அவர்கள் மாணவர்களை ஒன்றுகூடச்செய்து நான் உரையாற்றுவதற்கு உரிய வாய்ப்பை உருவாக்கியிருந்தார்கள்.
ஒரு வகுப்பறையில் கூடினோம். உரையாற்றும் என்னை அறிமுகம் செய்துவைத்தார். நானும் தமிழக நாட்டுப்புற இலக்கியம், பிற இலக்கியம் சார்ந்து உரையை அமைத்தேன். பிற்பகுதியில் தமிழ் இணைய அறிமுகத்தையும் அமைத்தேன். பல மாணவர்களுக்கு இணையம் முன்பே அறிமுகம். நான் கூறிய பல செய்திகள் அவர்களுக்குப் புதியதாக இருந்ததையும் உண்ரந்தேன்.
கூட்டம் நடந்த அரங்கில் மாணவர்கள் மிகுதியானதால் இடநெருக்கடி ஏற்பட்டது. எனவே சிறிய இடைவெளியில் பெரிய அரங்கில் மாணவர்கள் ஒன்றுகூடினர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் திரண்டதை அறிந்து மகிழ்ந்தேன். ஒரு மணி நேரம் என்ற என் உரை இரண்டு மணி என்றாகி, மூன்று மணிநேரம் என நீண்டது. அனைவரிடமும் மகிழ்ச்சியுடன் விடைபெற்றேன். இணைப் பேராசிரியர் சபாபதி, பேராசிரியர் இராசேந்திரன், இணைப்பேராசிரியர் முனைவர் கிருட்டினன் ஆகியோரைக் கண்டு உரையாடி மீண்டேன். நல்ல பட்டறிவாக இதனை உணர்ந்தேன்.
25.01.2011 பிற்பகல்…
கிள்ளானில் இருந்த திரு.மாரியப்பனார் அவர்களைக் காண்பதை நோக்காகக் கொண்டு அவர் இல்லம் சென்றேன். மாரியப்பனார் தமிழகம் வந்துள்ள செய்தி அறிந்து அவர்களின் குடும்பத்தினரைக் கண்டு உரையாடி மீண்டேன். என்னை அழைக்க மீண்டும் முனியாண்டி அவர்கள் மகிழ்வுந்தில் வந்தார். இருவரும் பெட்டாலிங் செயா என்று பகுதியில் உள்ள நூலக அரங்கம் சென்றோம்.
திரு.இளந்தமிழ் அவர்களின் ஏற்பாட்டில் கூடியிருந்த அன்பர்கள் நடுவே இரண்டுமணி நேரம் தமிழ் இலக்கியம் நாட்டுப்புறப் பாடல்கள், சிலப்பதிகாரம் பற்றி உரையாற்றினேன். மலேசியா தொலைக்காட்சி சார்பில் என்னை நேர்காணல் செய்ய திரு. இராமாராவ் அவர்கள் வந்திருந்தார். தமிழ்ப்பற்றுடைய அவர்கள் கேட்ட வினாக்களுக்கு விடை தந்தேன்.
மறுநாள் மலேசியாவில் என் நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. இது நிற்க
26.01.2011 காலை 9.30 மணிக்கு மலேசியா கோலாலம்பூர் தொடர்வண்டி நிலை அருகில் தனியார் பேருந்து ஒன்றில் பேராசிரியர் மன்னர் அவர்கள் என்னை ஏற்றி விட்டார். மலேசியாவின் கவின்பெறும் வனப்பைக் கண்டவண்ணம் சிங்கப்பூர் நோக்கி எங்கள் பேருந்து விரைந்தது. சாலை ஒழுங்கால் செலவு களைப்புத் தெரியவில்லை. ஐந்து மணி நேரத்தில் சிங்கப்பூர் வந்து சேர்ந்தேன்.
பகல் 3.30 மணிக்குச் சிங்கப்பூர் வந்த என்னை வரவேற்க என் நண்பர் பொறியாளர் புருசோத்தமன் மகிழ்வுந்துடன் காத்திருந்தார். பகலுணவு உண்டேன்.
முசுதபா கடையில் சில பொருட்கள் வாங்கிக்கொண்டேன். சிங்கப்பூர் பொங்கல் விழா நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு. மூர்த்தி அவர்கள் மீண்டும் தம் நண்பர்களுடன் வந்து இணைந்துகொண்டார்.
மீண்டும் கடையில் அவர் வற்புறுத்தலில் மீன் குழம்புடன் சிறப்பு உணவு உண்டோம். எங்கள் மகிழ்வுந்து 7 மணிக்குப் புறப்பட்டது. அரை மணி நேரத்தில் சாங்கி வானூர்தி நிலையம் வந்தோம்.
எங்களுக்கு முன்னதாக திரு ரசீத் அலி அவர்கள் வந்திருந்தார்கள். அனைவரும் என் பெட்டியை ஒழுங்கு செய்து பொருள்களை அடுக்கி உரிய ஆய்வுகளை முடித்து என்னை வானூர்தி நிலையத்தின் உள்ளே அனுப்பிவைது, நீங்கா விடைபெற்றனர். மிக எளிதான பாதுகாப்பு ஆய்வுகளை முடித்து இரவு 9.15 மணிக்கு வானூர்தி புறப்பட்டது. இந்திய நேரப்பட்டி 10.45 மணியளில் சென்னை வந்தேன்.
அங்கிருந்து பேருந்தேறிப் புதுவைக்கு விடியற்காலை 3.30 மணிக்கு வந்து சேர்ந்தேன்.
பேராசிரியர்கள் குமரன், மன்னர், சபாபதி, கிருட்டினன் மற்றும் பார்வையுறும் மாணவர்கள்
மலேயா பல்கலைக்கழகத்தின் இந்தியவியல்துறை துறை மாணவர்கள்
மொழித்துறை மாணவர்கள்,பேராசிரியர்கள்(ஒரு பகுதியினர்)
மலேசியா அரசு தொலைக்காட்சிக்கு நேர்காணல்
மொழித்துறை மாணவர்கள், பேராசிரியர்கள்
பேராசிரியர் சுப.திண்ணப்பன் மற்றும் நண்பர்கள்
மலாக்காவில் பழைய கோட்டை
மலாக்காவில் பழைய கப்பல்
எழுத்தாளர் இரசீத் அலி,மு.இளங்கோவன், சின்னப்பொண்ணு
பெட்டாலிங் செயா நூலக அரங்க நிகழ்வில் கலந்துகொண்டவர்களுடன் மு.இ, பேராசிரியர் மன்னர், இராமாராவ், இளந்தமிழ்
இந்தியவியல் துறை மாணவர்கள்
பரமேசுவரி(சீனப்பெண்-தமிழ் பாடகி),சின்னப்பொண்ணு,மு.இ
மு.இ,சின்னப்பொண்ணு அவர்களுடன்
பொறியாளர் மூர்த்தி, மு.இ, முத்துமாணிக்கம், புருசோத்தமன் (வழியனுப்ப வானூர்தி நிலையில்)
3 கருத்துகள்:
சிங்கையில் நடந்த நிகழ்வுகளையும் மலேசியா பயணம் மற்றும் அங்கு நடந்த நிகழ்வுகள் மாணவர்களுடனான உரையாடல்கள் என அழகாக பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்க ஐயா,
இங்கு நடைபெற்ற பொங்கல் விழாவில் நேரில் வந்து பார்க்க இயலவில்லை என்ற வருத்தத்தை நீங்கள் பகிர்ந்துகொண்ட புகைப்படங்கள் மூலம் நேரில் பார்த்த உணர்வு.... மீண்டும் என் நன்றிகள் பல உங்களுக்கு ஐயா
உங்களின் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா
நன்றி
என்றும் நிறைந்த நட்புடன்
உங்கள். மாணவன்
ஐயா! தங்களது சிங்கைப்பயணக்கட்டுரை அருமையான பகிர்வு. தங்களின் பன்முகத்திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் அறிந்து பெரு மகிழ்ச்சி. தொடரட்டும் தங்கள் பணி.
ஐயா! தங்களது சிங்கைப்பயணக்கட்டுரை அருமையான பகிர்வு. தங்களின் பன்முகத்திறமைகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் அறிந்து பெரு மகிழ்ச்சி. தொடரட்டும் தங்கள் பணி.
கருத்துரையிடுக