நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 1 ஜனவரி, 2011

குறுந்தொகையில் இடம்பெறும் ஒருத்தல் எருதா? பன்றியா?


காட்டுப் பன்றி

சங்க இலக்கியத்தில் சில சொற்கள் இடத்திற்கு ஏற்பப் பொருள்கொள்ளும் பாங்கில் உள்ளன. ஓரிடத்தில் ஒரு பொருள் தரும் சொல் பிறிதொரு இடத்தில் பிரிதொரு பொருளைத் தருவது உண்டு. அவ்வகையில் குறுந்தொகையை மொழிபெயர்த்து வரும்பொழுது, ஒருத்தல் என்ற சொல்லை மொழிபெயர்க்க முயன்ற என் நண்பரும் பிரஞ்சுப் பேராசிரியருமான முனைவர் வெங்கடசுப்பராய நாயக்கர் அவர்கள் ஒருத்தல் என்ற சொல்லை எவ்வாறு மொழிபெயர்ப்பது என்று ஓர் ஐயத்தை எழுப்பினார்.

அயல்மொழிக்குத் தமிழ்நூல்கள் செல்லும்பொழுது உரியவாறு செல்ல வேண்டும் என்பதில் விருப்பம்கொண்ட நானும், பேராசிரியரும் குறுந்தொகையில் இடம்பெறும் ஒருத்தல் பற்றி எண்ணிப் பார்த்தோம்.

ஒருத்தல் இடம்பெறும் பாடல் பின்வருமாறு அமைகின்றது.

"உவரி யொருத்த லுழாது மடியப்
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற்
கடிதிடி யுருமிற் பாம்புபை யவிய
இடியொடு மயங்கி யினிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுண் மாலைப்
பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை
தாநீர் நனந்தலை புலம்பக்
கூஉந் தோழி பெரும்பே தையே" (குறுந்தொகை 391)

பொன்மணியார் என்னும் புலவர் இயற்றியது இப்பாடல்.

தலைவனைப் பிரிந்து வருந்திய காலத்தில் தோழியை நோக்கி, "கார்காலம் வந்தது. மயில்கள் கூவின; அவை பேதைமை உடையன போலும்" என்று தலைவி கூறியதாக இப்பாடலுக்கு அறிஞர்கள் துறை விளக்கம் தருகின்றனர்.

உ.வே.சா. தரும் பாடலின் பொருள்: "தோழி எருதானது வெறுத்து, உழாமல் சோம்பிக் கிடக்கும்படி, மான் வெம்மையோடு கிடந்த, மழை நீங்கிய முல்லை நிலத்தில் விரைந்து இடிக்கும் உருமேற்றினால் பாம்புகளின் படம் அழிய இடியோடு கலந்து மழை இனிதாகப் பெய்தது. அங்ஙனம் பெய்த பெரிய மழையொடு பொருந்தித் தலைவரைப் பிரிந்த மகளிர் செயலறும்படி வந்த துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில் மலரையுடைய கொம்பிலிருந்த, போழ்ந்தால் போன்ற கண்களையுடைய மயில்கள் பாய்கின்ற நீரையுடைய அகன்ற இடம் தனித்து வருந்த கூவுகின்றன"

பெரும் பேராசிரியர் உ.வே.சா.அவர்கள் ஒருத்தல் என்பதை எருது என்று பொருள்கொண்டு உரை வரைகின்றார். இதே பாடலுக்கு உரை வரைந்த பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் ஒருத்தல் என்பதற்குப் "பன்றி" என்று பொருள்கொள்கின்றார்.

"பன்றிகள் வெறுத்து நிலத்தைக் கிளைக்காமல் சோம்பிக் கிடப்ப, மான்கள் வெம்மையுற்ற மழை வறந்த முல்லை நிலத்தில் விரைந்து இடிக்கின்ற இடியானே பாம்புகளின் படம் அழியும்படி இடியோடே கலந்து மழை பெய்யா நின்றது."

இருபெரும் அறிஞர்களும் இரு பொருள் கொள்வதால் எதனை ஆள்வது என்று எங்களுக்கு ஐயம் ஏற்பட்டது. இதுகுறித்த இலக்கண இலக்கியங்கள் நிகண்டு நூல்கள் பலவற்றையும் பார்த்தேன்.

பிங்கல நிகண்டில்

"கவரி யானை பன்றி கரடி
யுரிய வாகு மொருத்தற் பெயர்க்கொடை" (பிங்கல நிகண்டு 2563)

என்னும் நூற்பாவில் ஒருத்தல் என்னும் சொல் மேற்கண்ட(கவரிமான், யானை, பன்றி, கரடி) விலங்குகளைக் குறிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எருது பற்றி இடம்பெறாமை கவனத்தில் கொள்ளத்தகும்.

தொல்காப்பியத்தில்

"புல்வாய் புலியுழை மரையே கவரி
சொல்லிய கராமொ டொருத்த லொன்றும்" (தொல்.பொருள்.மரபு.590)

"வார்கோட்டி யானையும் பன்றியு மன்ன" (தொல்.பொருள்.மரபு.590)

"ஏற்புடைத் தென்ப வெருமைக் கண்ணும்" (தொல்.பொருள்.மரபு.590)

வரும் நூற்பாக்களில் ஒருத்தல் என்பது பன்றியைக் குறிக்கின்றது.

குறுந்தொகையில் இடம்பெறும் பாடல் முல்லைநிலப்பாடல் என்பதாலும் முதற்பொருள், கருப்பொருள்,உரிப்பொருள் யாவும் தெற்றென விளங்கித் தோன்றுவதாலும் பாடல் உணர்த்தும் சூழலாலும் ஒருத்தல் என்பதற்குப் பெருமழைப் புலவர் கண்ட பன்றி என்ற சொல்லே பொருத்தமாகத் தெரிகின்றது.

ஒருத்தல் என்னும் சொல் குறுந்தொகை 396 ஆம் பாடலில் யானையையும் குறிக்கின்றது. "ஓமை குத்திய உயர்கோட் டொருத்தல்"(396:4)(பொருள்: ஓமை மரத்தைக் குத்திய உயர்ந்த கொம்பையுடைய ஆண் யானை)

இது நிற்க.

குறுந்தொகை 179 ஆம் பாடலில் கடமா என்று ஒரு விலங்கு குறிக்கப்படுகின்றது. அந்த விலங்கு எது?எவ்வாறு இருக்கும்? என்று பிரஞ்சுப் பேராசிரியர் வினா எழுப்பினார்?

"கல்லென் கானத்துக் கடமா வாட்டி,
எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன;
செல்லல்-ஐஇய!-உது எம் ஊரே;
ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த
குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்
பேதை யானை சுவைத்த
கூழை மூங்கிற் குவட்டிடையதுவே.

(பொருள்: கல்லென்னும் ஆரவாரத்தையுடைய காட்டின்கண் கடமாவை நீ அலைப்பப் பகற்பொழுதும் மங்கியது; நாய்களும் நின்னுடன் வேட்டையாடி இளைப்பை அடைந்தன. எனவே நீ உன் ஊருக்குப் போகற்க; உயர்ந்த மலைப்பக்கத்தில் இனிய தேனிறாலைக் கிழித்த கூட்டமாகிய பசிய மூங்கில்களின் குருத்தைத் தின்ற, ஆழ்ந்த வாயையுடைய பேதைமையுடைய யானை தின்றதனால் கூழையாகிய மூங்கிலையுடைய உச்சியின் இடையே உள்ளதாகிய அஃது எமது ஊராகும். எனவே எம்மூர் அருகில் இருப்பதால் இரவில் தங்கிச் செல்க என்பதாம்)

இது பகலில் வந்து தலைவியுடன் அளவளாவிய தலைவனை நோக்கி, எம் ஊருக்கு வந்து இரவில் தங்கிச் செல்வாயாக என்று தோழி கூறுவதாகத் துறை அமைந்துள்ளது.
குட்டுவன் கண்ணன் என்ற புலவர் இயற்றியது.

இப்பாடலில் மலையும் அதில் உறையும் கருப்பொருளும் உரியவாறு சங்கப் புலவரால் காட்டப்பட்டுள்ளது. குறிஞ்சி நிலத்துக்குரிய ஒழுக்கமும் இங்கு நுண்மையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கடமா என்னும் சொல்லுக்கு ஒருவகை விலங்கு என்றே உரையாசிரியர்கள் குறிப்பு வரைகின்றனர்.இருப்பினும் கடமா பற்றி வேறு விளக்கங்கள் தமிழ் நூல்களில் இருக்கின்றனவா? என எண்ணிக்கொண்டிருக்கும்பொழு காட்டுப்பசு என்று இளம் அகவையில் நான் படித்தது நினைவுக்கு வந்தது.

மேலும் பாவாணர் கடம் என்றால் காடு என்று எழுதியதாகவும் நினைவு.வேங்கடம்(திருப்பதி) என்றால் வெப்பம் நிறைந்த காட்டுப்பகுதி என்று பொருள் என்று படித்ததாக நினைவு. எனவே கடம்+ ஆ= காட்டுப்பசு; காட்டுப்பசு என்று குறிக்கலாம் என்றேன்.போதிய சான்றில்லாததால் என் கருத்தையும் அழுத்திக்கூறாமல் இருந்தேன். கடமா பற்றித் தொடர்ந்து எண்ணியபடி இருந்தேன். ஆமா என்றால் காட்டுமாடு அல்லது எருது,இது நாவால் தடவினால் சாவு நேரும் என்று கருதப்படுகிறது என்று செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலி (முதல் மடலம்,இரண்டாம் பாகம்,ப.109)யின் விளக்கம் கண்டேன்.சிறப்பாக இருந்தது.

"அந்தழைக் காடெலாந் திளைப்ப வாமானினம்" (சீவக சிந்தாமணி,1902) எனவும்,

"ஆமானினந் திரியும் தடஞ்சாரல்" (தணிகை.களவு.333)

எனவும் பிற்கால நூல்களில் ஆமா பதிவாகியுள்ளது.

இணையத்தில் தேடியபொழுது கடமா, காட்டுப்பசு, காட்டா, மரை, கட்டேணி, காட்டுபோத்து என்று பல பெயர்களில் வழங்கப்படுவதை அறிந்தேன்.மேலும் இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகளில் இந்தக் காட்டுப்பசு இனம் இருப்பதையும் அதன் உருவத்தையும் விலங்கினப் பெயரையும் அறிந்து மகிழ்ந்தேன்.


கடமா

தமிழ் விக்கிப்பீடியாவில் கடமா பற்றி சுவையான செய்திகள் கீழ்வருமாறு காணப்படுகின்றன.

"கடமா ஒரு பகல் விலங்காகும். இது காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் சுறுடசுறுப்புடன் இரை தேடும். பெரும்பாலான அதிக வெட்பமான மதிய நேரங்களை மரநிழல்களில் கழிக்கும். தற்சமயம இவ்விலங்கு வாழும் காடுகளில் மனிதர்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்ப்பதற்கு இரவு நேரங்களில் இரை தேடுகின்றது. இவற்றின் இருப்பிற்கு நீர் மிகவும் அவசியமானதாக இருந்தாலும் நீர் எருமைகளை போல இவை நீரில் புரளுவதில்லை. கடமா மந்தைகள் 2 முதல் அதிகபட்சமாக 40 நபர்களைக் கொண்டதாக இருக்கும். ஒரு மந்தையை வயதான ஆண் தலைமையேற்று நடத்திச் செல்லும். மந்தையின் ஒரு நபர் எச்சரிப்பு ஒலி எழுப்பினால் அனைத்தும் கனப்பொழுதில் காட்டிற்குள் ஓடி மறைந்துவிடும்.

இனப்பெருக்க காலத்தில் எருதுகள் மந்தைகளில் இருந்து விலகித் தனித்துப் புணர்வதற்காகப் பசுக்களைத் தேடிச்செல்லும். பெரும்பாலும் பெரிய உடலைக் கொண்ட எருதையே பசுக்கள் இனப்பெருக்கம் செய்யத் தேர்ந்தெடுக்கும். புணரும் போது எருதுகள் தனித்துவமான் ஒலியெழுப்பும், அவ்வொலி சுமார் 1.6 கி.மீ சுற்றளவு கேட்டக்கூடியதாக இருக்கும்.
இவை புல், செடிகள் மற்றும் பழங்களை உணவாக உட்கொள்ளும். இவற்றின் இயற்கை எதிரிகள் புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற கொண்றுண்ணிகள் ஆகும்."

எனவே கடமா என்றால் காட்டுப்பசு என்று பேராசிரியர் மொழிபெயர்க்கலாம் என்று குறிப்பிட்டேன்.

3 கருத்துகள்:

Periannan Chandrasekaran சொன்னது…

ஐயா
ஒருத்தல் என்பது தொல்காப்பிய மரபியல் நூற்பா புல்வாய் முதலான விலங்குகளின் பெயராகச் சொல்லவில்லையே. அவற்றின் ஆண் என்று குறிக்க ஒருத்தல் என்பதுவும் இன்னொரு சொல் என்றுதான் கூறுகிறது.
ஒருத்தல் "ஏற்புடைத்து என்ப எருமைக்கண்ணும்" என்பதனால் எருமைக்கும் ஆகுமென்றும் என்று சொல்கிறது.

ஆகவே "ஒருத்தல் என்பது பன்றியைக் குறிக்கின்றது", "ஒருத்தல் என்னும் சொல் குறுந்தொகை 396 ஆம் பாடலில் யானையையும் குறிக்கின்றது" என்று பன்றியையோ யானையையோ நேரடியாகச் சொல்ல அடிப்படையில்லை; அவற்றின் ஆணையே குறிக்கும்.

இதுபோல் சிறந்த ஐயங்கலையும் ஆய்வுகளையும் வெளியிடுமைக்குப்பாராட்டுகள்.
நன்றி.
பெரியண்ணன் சந்திரசேகரன்

L N Srinivasakrishnan சொன்னது…

அருமையான கட்டுரை

நா. கணேசன் சொன்னது…

அன்புள்ள மு. இளங்கோ,

கடமா அல்லது கடமான் என்னும் மான் தென்னிந்தியாவின் திராவிட மொழிகள் அனைத்திலும் வழங்குவது. விலங்கியல் பெயர் rusa unicolor. ஆங்கிலத்தில் Sambur என்ற இந்திப்பேரைச் சொல்வர்.

http://groups.google.com/group/mintamil/msg/41daccf9c10694d8

நாஞ்சில் நாட்டில் திசைச்சொல்லாக மிழா/மிளா என்றும் சொல்வதுண்டு. ஆனால், இலக்கிய ஆட்சி இல்லாத சொல் அது.

நா. கணேசன்