வெள்ளி, 14 ஜனவரி, 2011
புதுவை முதல் சென்னை வரை...
இணையம் கற்போம் நூலைக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் வழங்கிமகிழும் மு.இ...
ஒரு கிழமையாக ஓய்வில்லாதபடி செலவுகள் அமைந்தன.
சென்ற காரிக்கிழமை(08.01.2011) காலையில் சென்னை புறப்படுவதற்குத் திட்டமிட்டேன். புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதும், மாலையில் சென்னை முகப்பேரில் தங்கி மறுநாள்(09.01.2011) காலையில் சமத்துவப் பொங்கலில் பங்கேற்பதும் திட்டம். காரிக்கிழமை காலையில் என் மக்கள் தேர்வு எழுதிய மதிப்பெண் அறிக்கை தருகின்றார்கள் என்றும் நான் கட்டாயம் வரவேண்டும் என்று அடம்பிடித்தனர். எனவே அங்குச்சென்று மதிப்பெண் அறிக்கை வாங்குவது இன்றியமையாத வேலையாக இருந்தது. இதனிடையே காரைக்குடியிலிருந்து திருக்குறள் திலீபன் அவர்களும் அவர்களின் தந்தையாரும் புதுவையில் வேறொரு நிகழ்ச்சிக்கு வருவதாகவும் என் இல்லம் வந்து சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர். அவர்களுக்காகக் காத்திருந்தேன். வந்தார்கள்.
இரண்டுமணிநேரம் உரையாடினோம்.அவர்களிடம் விடைபெற்று, காலத்தாழ்ச்சியுடன் சென்னைக்குப் பகலில் புறப்பட்டேன். காரிக்கிழமை மாலை 6 .30 மணிக்குச் சென்னைக் கண்காட்சிக்குச் சென்றேன். அண்ணன் கூழமந்தல் உதயகுமார் எனக்காகக் காத்திருந்தார். விழிகள் பதிப்பகம் சென்று ஐயா வேணுகோபால் அவர்களைக் கண்டேன். சண்டே இண்டியன் அரங்கில் திரு.சுந்தரபுத்தன் இருந்தார். கழகம்,மணிவாசகர் பதிப்பகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம்,புதிய தலைமுறை உள்ளிட்ட பல அரங்குகளில் புதியதாக வந்த நூல்கள் பற்றி வினவினேன்.
புத்தகக் கண்காட்சி அரங்கிலிருந்து வெளியே வந்தேன். வரும் வழியில் புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியரும் என் பழைய நண்பருமான கவிஞர் நந்தலாலா அவர்களைக் கண்டு உரையாடினேன். அண்ணன் அறிவுமதி அவர்களின் அறையில் 1997 இல் ஒன்றாக நாங்கள் இருந்து பணிதேடிய பழைய நினைவுகளை அசைபோட்டோம். அவருக்கு என் இணையம் கற்போம், நாட்டுப்புறவியல் நூல்களைப் பரிசளித்தேன்.
நந்தலாலா அவர்கள் வடமொழி புராணங்கள்,இதிகாசக் கதைகளில் மிகப்பெரிய பயிற்சி உடையவர்.தொனி பற்றி நன்கு அறிந்தவர். அது குறித்த பல நூல்களைக் கற்றவர். அப்பொழுது நான் பணி வாய்ப்பு இல்லாமல் நம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு உழன்ற காலம். அதனால் கவிஞர் நந்தலாலா அவர்களின் தொனி பற்றிய செய்திகளை அரைகுறையாகக் கேட்பேன். அதுபோல் இன்றையப் பாடலாசிரியர் முனைவர் முத்துக்குமார் அவர்களுக்கு "இசை" என்று நாங்கள் அழைக்கும் அண்ணன் சாந்தகுமார் அவர்கள் பாடல் எழுதும் பயிற்சி வழங்குவார்கள். இருவரும் பாடல் கோர்ப்பு வேலைகளில் இருப்பர். இவற்றையெல்லாம் நான் நம்பிக்கை இன்றியே கேட்டுக்கொண்டிருப்பேன்.அனைவரும் தங்கள் விடாப்பிடியான முயற்சியால் அவரவர் துறைகளில் முன்னேறியமை மகிழ்ச்சி தருகின்றது. அண்ணன் அறிவுமதி அவர்கள் எங்களுக்கு வளர்ப்புத் தந்தை என்று சொன்னால் மிகையில்லை. இது நிற்க.
இரவு முகப்பேர் நிகழ்ச்சிக்கு விருந்தினன் என்பதால் அங்குத் தங்க வைக்க விழாக்குழுவினர் நினைத்தனர். ஆனால் என் நாகர்கோயில் நண்பர் இயக்குநர் செல்வதரன் எழும்பூரில் ஒருவிடுதியில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். ஐயா செந்தீ நடராசன் அவர்களும் எங்களுடன் அறையில் உரையாடி மகிழ்ந்தார். நடு இரவு அனைவரும் உறங்கினோம். காலையில் எழுந்து 6.30 மணி அளவில் புறப்பட்டு 7 மணிக்கு முகப்பேர் சென்றோம். பொங்கல் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கலை பண்பாட்டுத்துறை ஆணையர் திரு. மணி அவர்களும் நானும், திரைப்பட நடிகை ஒருவரும், மருத்துவர் ஒருவருமாகப் பங்கேற்றோம். நகரத்தில் வாழ்ந்தாலும் அனைவரும் சிற்றூர்புற ஆர்வலராக இருந்தமை மகிழ்ச்சி தந்தது.
காலையில் குடிப்பதற்குக் கேழ்வரகு கூழ் வழங்கினர். நான் ஆர்வத்துடன் ஒரு வெங்காயத்துடன் கேட்டு வாங்கி உண்டேன். அதன்பிறகு கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. நான் சில நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மகிழ்வூட்டினேன். பொய்க்கால்குதிரை ஆட்டம், மயிலாட்டம், பறையிசை எனச் சென்னை மாநகரைத் துயிலெழுப்பினோம். மாட்டு வண்டி பூட்டப்பெற்று நகர்வலம் வந்தனர். பெண்கள் கோலப்போட்டியில் கலந்துகொண்டனர். இடையில் நண்பர் தளவாய் வந்து அறிமுகம் ஆனார். அவருடன் நெடு நாழிகை உரையாட இயலாமல் பிரிந்தோம்.
பொங்கல் சிறப்பாகப் பொங்கினர். காலையில் பத்துமணிக்கு நிகழ்ச்சிகள் ஓரளவு நிறைவுக்கு வந்தன. அனைவரிடமும் விடைபெற்று, மீண்டும் புத்தகக் கண்காட்சிக்கு வந்தேன். பல அன்பர்களைக் கண்டேன். மாலை 4.30 மணிவரை கண்காட்சியில் இருந்தேன்.
நண்பர் திரு ப.சரவணன் அங்கு வந்தார். அவரின் சில பதிப்பு முயற்சிகளை முன்பே அறிவேன். இருவரும் பெருமழைப்புலவரின் பதிப்பு முயற்சி பற்றி உரையாடத் தொடங்கினோம். ப.சரவணன் அவர்கள் 1998 இல் கொடுக்கூர் ஆறுமுகம் கொலைச்சிந்து என்ற ஆய்வேட்டைப் படியெடுக்க எனக்கு உதவியவர்.முன்பின் அறிமுகம் இல்லாத நான் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை நேரில் கண்டு நன்றி சொன்னேன். திரு.சரவணன் போன்றவர்கள் தமிழில் மிகப்பெரும் பேரறிவு பெற்றதனால் பல்கலைக்கழகத்திற்குள்ளோ, கல்லூரிக்குள்ளோ நுழையமுடியாதபடி நம் பேராசிரியர்கள் பார்த்துக்கொண்டனர்.
தமிழாய்வாளர் ப.சரவணன்
எனவே அவர் படிப்பும் ஆய்வும் பள்ளிக்கூடத்தில் சிறிய மாணவர்களுக்குக் கிடைத்து வருகின்றது என்று அறிந்து வருந்தினேன். இவர்களைப் போன்றவர்களை வெளியே வைத்திருப்பதற்கு உயர்கல்வித்துறை சார்ந்தவர்கள் வெட்கி, நாண வேண்டும். உரையாடல் இன்றையக் கல்வித்துறையின் சீர்கேடு பற்றி அமைந்தது. தரமற்ற ஆசிரியப்பெருமக்கள் கல்வித்துறையில் மலிந்து தமிழைச் சீரழிப்பதை இருவரும் பேசி வருந்தினோம். இன்றைய நிலை நீடித்தால் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குத் தமிழ் வளர்ச்சி என்பதற்கு வாய்ப்பில்லை என்பது புலனானது.
தமிழ் எழுத்துச்சீர்திருத்த முயற்சியினரின் இரண்டகச் செயல்பற்றியும், கிரந்தத்திணிப்பு பற்றியும், கணினி,இணையப் பயன்பாட்டு வளர்ச்சியை வரவேற்காத தமிழக நிலையைப் பற்றியும் பேசி வருந்தி நின்றோம். நேரம் போனதே தெரியவில்லை. கண்காட்சிக்கு வந்த புத்தக ஆர்வலர்கள் எங்களை, உரையாடலைக் கவனிக்காதவர்களாய்க் கையில் சுஜாதாக்களையும்,சாரு நிவேதாக்களையும்,சோதிட, பக்திப் பனுவல்களையும் வாங்கிச்சென்றவண்ணம் இருந்தனர். இடையில் பல அன்பர்கள் தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் எனப் பலரைக் கண்டு உரையாடினேன். பேராசிரியர் ஆறு.அழகப்பன் அவர்களை உணவுக்கூடத்தில் கண்டு வணங்கினேன்.
ஞாயிறு மாலை ஆறு மணிக்கு இரகமத் அறக்கட்டளையின் புத்தக நிறுவனம் திறப்பு விழாவுக்குச் சென்றேன். அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை, கவிப்பேரரசு வைரமுத்து, சிற்பி, அப்துல் இரகுமான், மேத்தா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வுக்கு ஐயா சிங்கப்பூர் முஸ்தபா அவர்கள் வரும்படி அன்பு அழைப்பு விடுத்திருந்தார். நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடந்தது.பல நண்பர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடம் என் இணையம் கற்போம் செம்பதிப்பு நூலை அன்புடன் வழங்கி வாழ்த்துப்பெற்றேன். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அழகிய அணிந்துரை அந்த நூலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இரவு அனைவரிடமும் விடைபெற்று மீண்டும் நள்ளிரவு புதுச்சேரி வந்தேன்.
பிறகு ஒரு கிழமையாகக் கல்லூரிப் பணி. பொங்கலை ஒட்டி என் பிறந்த ஊர் சென்று ஒரு நாள் பொங்கலிட்டு மகிழ எண்ணியுள்ளேன்.
அனைவருக்கும் புத்தாண்டு,பொங்கல் நல் வாழ்த்துகள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
நற்றாமரைக்கயத்து நல்லன்னம் போல் கற்றாரைக்கற்றாரே காமுறுவர். வேறென்ன சொல்வது ஐயா?
கருத்துரையிடுக