நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 14 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் காட்டும் கரிகாற்சோழன்


குடந்தைக் கல்லூரியின் கருத்தரங்கில் மு.இளங்கோவன்

 தமிழக அரசர்களின் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் துணைபுகின்றன. சங்க நூல்களில் மூவேந்தர்கள் பற்றியும் (சேரர்கள் 20, சோழர்கள் 18,பாண்டியர்கள் 14) குறுநில மன்னர்கள், படைத்தலைவர்கள் (ஏறத்தாழ 150 பேர்) பற்றியும் அயல் நிலங்களில் வாழ்ந்த அரசர்கள் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன (மேற்கோள்: சங்க கால மன்னர்களின் காலநிலை, தொகுதி1,ப.1). புலவர்கள் அகத்துறை, புறத்துறை சார்ந்த பாடல்களை இயற்றும்பொழுது உவமை வழியாகவும், சில புலவர்கள் நேரடியாகவும் பண்டைத் தமிழக அரசர்கள் பற்றியும், பிற தேயத்து அரசர்கள் பற்றியும் குறிப்புகளைத் தந்துள்ளனர். இவ்வாறு குறிப்புகள் காணப்பட்டாலும் இன்னாருக்குப் பின்னர் இன்னார் அரசாண்டார்கள் என்று உறுதிபடக் கூறுவதற்குச் சான்றுகள் குறைவாக உள்ளன. அவ்வாறு காணப்படும் சான்றுகளைக் கொண்டு முடிந்த முடிபாக வரலாற்றைப் பதிய முடியாமல் அறிஞருலகம் கருத்துவேறுபட்டு நிற்கின்றது. அவ்வகையில் கரிகாற் சோழன் வரலாறும் அறிஞர்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டைக் கொண்டுள்ளது.

கரிகாலன் தந்தை

 கரிகாலன் வரலாற்றை ஆராய்வதற்கு நமக்குப் புறநானூறு, அகநானூறு, பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம்,மணிமேகலை உள்ளிட்ட நூல்கள் பெருந்துணைபுரிகின்றன. இவற்றுள் பொருநராற்றுப் படையில் இடம்பெறும் அரசன் கரிகாலன் எனவும் பட்டினப் பாலையில் இடம்பெறும் அரசன் திருமாவளவன் எனவும் அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. இவ்வாறு குறிப்பிடப்படும் இருவரும் ஒருவரா, வேறானவர்களா எனவும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. மயிலை சீனி.வேங்கடசாமி, தி.வை.சதாசிவ பண்டாரத்தார், புலவர் கோவிந்தன், அறிஞர் பே.க.வேலாயுதம் உள்ளிட்டவர்களின் கருத்தை எடுத்துரைத்துக் கரிகாலன் வரலாற்றை இக்கட்டுரை ஆராய முனைகிறது.

 கரிகாலனின் சிறப்பை நாம் முழுமையாக அறிவதற்குக் கலிங்கத்தை ஆண்ட காரவேலனின் கல்வெட்டு நமக்கு உதவுகிறது.காரவேலன்(கி.மு 176-163) என்பவன் கலிங்கத்தை 13 ஆண்டுகள் ஆண்டவன்.அவன் 11 ஆம் ஆட்சியாண்டில் (அதாவது கி.மு.165 இல்) தமிழகத்தை வென்றுள்ளான். அவனின் அத்திகும்பா கல்வெட்டில்" இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத் "திரமிள சங்காத்தம்" (தமிழர் கூட்டணியை) உடைத்தேன் என்று குறிப்பு உள்ளது.இதனைப் பொருநராற்றுப்படையாலும் உணரலாம்.

முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில்,

"முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல"

என மூவேந்தரும் கூடியிருந்த காட்சி பேசப்படுகிறது.எனவே கரிகாலன் அவையில் இக்கூட்டணி உருவானது என்று உணரலாம்.

 கலிங்க நாட்டிற்கு மேற்கே வடுகர் நாட்டைத் தமிழர்கள் ஆண்டுள்ளனர். 113 ஆண்டுகள் கூட்டணியாக இருந்து தமிழர்கள் வடபுலம்வரை ஆண்டதால் கலிங்கர்களால் தமிழர்களை வெல்லமுடியவில்லை.பின்னாளில் இந்தப் பகுதியை இரேணாட்டுச் சோழர்கள் ஆண்டனர்.

 கி.மு.278 இல் வடக்கிலிருந்து ஒரு படையெடுப்புத் தமிழகத்தின் மேல் நடக்கிறது(கி.மு.300 இல் மௌரியர் படையெடுப்பு நடந்துள்ளதையும் இங்குக் கவனிக்க வேண்டும். சந்திரகுப்த மௌரியன் எடுத்த மோவூர் படையெடுப்பு இதுவாகும்). கி.மு.278 இல் சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரன் என்பவன் படையெடுத்தபொழுது தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்த்தனர்.வடக்கே 16 அரசர்களை எதிர்த்து, பாடலிபுத்திரம் திரும்பினான். சந்திரகுப்தன் படையெடுப்பு வடுகர் நாட்டின் வழியாக நடந்தபொழுது வடுகர்களும் படையுடன் சேர்ந்து தமிழகம் வந்தனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க வடுகர்நாட்டை வென்று 113 ஆண்டுகள் தமிழர் கூட்டணி ஆண்டது.இவ்வாறு தமிழர் கூட்டணியான திரமிள சங்கார்த்தம் உருவாக அடிப்படைக் காரணமாக விளங்கியவன் கரிகாலனே ஆவான் (கி.மு.278). இவன்தான் கூட்டணிக்கு முதன்மை தந்திருக்க வேண்டும். ஏனெனில் வடநாட்டுப் படையெடுப்பால் முதலில் பாதிக்கப்படுவது சோழநாடே ஆகும். எனவே சோழ அரசன் கரிகாலன் தலைமையில் படை அமைக்கப்பட்டிருக் கலாம்.

 கரிகாலன் காலத்தில் சோழநாட்டுக்கு இரண்டு தலைநகரங்கள் இருந்துள்ளன.உறையூரைத் தலைநகராகக்கொண்டு தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் அரசாண்டான். கழுமலத்தைத் (சீர்காழி) தலைநகராகக் கொண்டு கரிகாலனின் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி அரசாண்டான். இளஞ்சேட்சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தான். உடன் பிறப்பு இவனுக்கு இல்லை. இரும்பிடர்த்தலையார் என்ற புலவரால் வளர்க்கப் பெற்றவன். பொருநராற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் இவன். இவன் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகும். கழுமலத்திலிருந்து பின்னாளில் நெய்தலங்கானல் தலைநகரானது. நெய்தலங்கானல் என்பது இன்று பூம்புகாருக்கு மேற்கே ஐந்துகல் தொலைவில் நெய்தல்வாசல் எனப்படுகிறது.

 திருமாவளவன் நெய்தலங்கானத்திலிருந்து ஆட்சி செய்த இளஞ்சேட் சென்னியின் மகனாவான். மாவளத்தான் என்று இளமையில் அழைக்கப்பட்டான். பின்னர்த் திருமாவளவன் எனப்பட்டான். திருமாவளவனின் அண்ணன் நலங்கிள்ளியாவான். நலங்கிள்ளிக்குப் பிறகு அவன் மகன் நலங்கிள்ளி சேட்சென்னி என்பவன் சில காலம் அரசாண்டான். பின்னர் இறந்துபட்டான். அதன் பிறகு திருமாவளவன் அரசேறினான். உடன் இருந்த மன்னர்களை வென்றதுடன் வடநாட்டு மன்னரையும் இலங்கை மன்னரையும் இவன் வென்றான். காவிரிக்குக் கரையமைத்ததும், உறையூரிலிருந்து தலைநகரைப் பூம்புகாருக்கு மாற்றியதும் இவனே. காவிரியை இவன் கி.மு.11 ஆம் ஆண்டு பார்வையிட்டான் எனப் பே.க.வேலாயுதம் குறிப்பார்(பக்கம் 12). பட்டினப்பாலை இவன் மீது பாடப்பட்ட நூலாகும். அதனைப் பாடிய கடியலூர் உருத்திருங்கண்ணனார் அவர்களுக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான். இவனுக்குக் கரிகாலன் என்ற பெயரும் உண்டு என்பதை மணிமேகலை வழியாக அறியமுடிகிறது.

 திருமாவளவனின் காலத்தில் தொண்டைநாட்டை ஆண்டவன் தொண்டைமான் இளந்திரையன் ஆவான். திருமாவளவனின் மகன் செங்கணான் ஆவான். இவன் காலத்தில் சேரநாட்டை ஆண்டவன் கணைக்கால் இரும்பொறை. சோழநாட்டின் மேல் படையெடுத்துத் தோற்றவன். செங்கணானின் படை வலிமை பற்றி குறிப்பிடும் அயல்நாட்டுப் பயணியான பிளைனி, "இந்த நாட்டில் மற்றொரு நகரமும் இருக்கிறது. அதன் பெயர் கதுமுலா என்பதாகும். அந்நகரம் கடற்கரையில் உள்ள பட்டினமாக விளங்குவதோடு, பல நாட்டு மக்கள் வணிகம் செய்யும் இடமாகவும் விளங்குகிறது. மற்றும், ஐந்து நதிகள் ஒன்றுகூடிக் கடலில் விழும் இடத்தில் உள்ளது.அதன் அரசினிடம் வலிமை வாய்ந்த 1600 யானைப் படைகள் உள்ளன.150 ஆயிரம் காலாட்படைகளும்,5000 குதிரைகளும் உள்ளன" என்று குறிப்பிடும் பிளைனியின் காலம் கி.பி.23-79 ஆகும்.இங்குக் குறிப்பிடப்படும் கதுமலா என்பது கழுமலமாகிய சீர்காழியைக் குறிக்கும்.

 வலிமை வாய்ந்த படையுடைய செங்கணானுடன் கழுமலம் என்ற ஊரில் கணைக்கால் இரும்பொறை பொருது தோற்றவன்.

 கோப்பெருஞ்சோழனுக்கு இரு மகன் இருந்தனர்.மூத்தவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்;இளையவன் இளஞ்சேட் சென்னி.

 காரவேலன் கி.மு 165 இல் படையெடுத்து வந்தான். 11 ஆண்டுகள் படைதிரட்டித் தமிழகத்தை நோக்கி வந்தான். திருக்கோவிலூருக்கு அருகில் காரவேலன் படையும், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் படையும் பொருதன. திருமுடிக்காரியின் முள்ளூர் மலையில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஒளிந்தான். உறையூர் காரவேலன் வசமானது. அங்கிருந்து பெரும்படையுடன் மதுரைக்கு வந்தான்.

 காரவேலன் படை மதுரை சென்று திரும்பியபொழுது சோழர் படைதிருப்பித் தாக்கக் காரவேலன் படை தோற்றது. காரவேலன் படையினர் தோற்றதுடன் பாழி என்ற ஊரில் வீரர்கள் சிலர் ஒளிந்துகொண்டனர்."குடித்தம் ஆதலின் பாழி" என்னும் குறிப்பு இதனை உறுதிப் படுத்தும்.

 உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தவன். எனவே தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி என்ற தொடர் உறுதிப்படுத்தும். கரிகாலன் பொறுப்பில் வடுகர் நாடு ஆளப்பட்டது.இவன் ஆணை பெற்று இரேணாட்டுச்சோழர்கள் ஆட்சி செய்தனர். இரேணாட்டுச் சோழர்கள் என்பவர்கள் கரிகாலன் மரபினர் என்பர்.

 கரிகாலனின் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆவான். இவன் கழுமலத்தைத் (சீர்காழி) தலைநகராகக் கொண்டவன். இவன் காலத்தில் சேரநாட்டில் உதியஞ்சேரலும், அந்துவஞ்சேரலும் ஆட்சிபுரிந்துள்ளனர். மேலும் பாண்டியநாட்டில் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி ஆட்சி செய்தவன். வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியுள்ளார். உறையூரிலிருந்து ஆட்சி செய்தவன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியாவான். உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தவன். கரிகாலனின் காலம் புலவர் மாமூலனார் காலமான கி.மு.325- கி.மு.278 ஆகும். இவன் மீது சேரன் பெருஞ்சேரலாதனும் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் பதினொரு வேளிரும் கூடிப் படையெடுத்தனர். வெண்ணியில் போர் நடந்தது.சேரன் புறப்புண் நாணி உயிர்விட்டான். பாண்டியன் கொல்லப்பட்டான்.

 கரிகாலனைப் பாண்டிய நாட்டுக் கருங்குளவாதனார் பாடியுள்ளார். அவர் பிறந்த கருங்குளம், "கரிகால சோழ நல்லூரான கருங்குளம்" எனக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனவே கருங்குளம் உள்ளிட்ட பகுதிகள் கரிகாலனுக்கு உரிமையுடையதாக இருந்தது.

 கரிகாலனுக்கு ஆண் வாரிசில்லை. ஒரே மகள் ஆதி மந்தி ஆட்டனத்தியை மணந்தாள். எனவே கரிகாலனுக்குப் பிறகு அவன் மரபு இல்லாமல் போனது என்று அறிஞர் பே.க.வேலாயுதம் குறிப்பர் (சங்க கால மன்னர் வரிசை).

 கரிகாலனைப் பொருநராற்றுப்படை ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் பின்வருமாறு புகழ்ந்துரைக்கிறார்.

 வென்ற வேலினையும், அழகிய தேர்களையும் உடைய இளஞ்சேட் சென்னியின் மகன் எனவும் முருகனது சீற்றத்தைப் போலச் சீற்றத்தையும், பகைவருக்கு அச்சத்தையும் தரும் தலைவன் கரிகாலன். தாயின் வயிற்றிலிருக்கும்பொழுதே அரச உரிமையைப் பெற்றவன். தன் பகைவர்கள் தன் வலியறிந்து ஏவல் செய்யவும், அவ்வாறு ஏவல் செய்ய மறுத்த பகைவர்களின் நாடுகள் கவலைகொள்ளவும் அரசாட்சி செய்தவன். கடல்மேல் தோன்றும் கதிரவன் ஒளிவீசியவாறு விண்ணில் உலா வருவது போல் பிறந்த நாள்தொட்டு தம் ஆட்சியைச் சிறப்புறச் செய்தவன். யாளியின் குட்டி,பால் உண்டலை மறவாத இளம் பருவத்திலேயே ஆண் யானையைக் கொன்றதுபோல், பனம்பூவை அணிந்த சேரனையும், வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனையும் வெண்ணிப் போரில் வென்றவன், ஆத்திமாலை அணிந்தவன், கரிகால் பெயருடையவன் என்று குறிப்பிடுகிறது.

"வென் வேல்
உருவப் பல்தேர் இளையோன் சிறுவன், 130
முருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,
தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப,
பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி, 135
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,

ஆளி நல் மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி 140
முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென,
தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,
இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை
அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்,
ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த 145
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்,
கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன்"(பொருநர்.129-148)

என்னும் பாடலடிகள் கரிகாலனின் வரலாறு உணர்த்துகின்றன.

கரிகாலன் பற்றி மாமூலனார்(கி.மு.325-250) பாடிய அகநானூற்றுப்பாடலில்

"கனவ ஒண் படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென" (அகம் 55,9-13)

(ஒளிபொருந்திய படையுடைய கரிகாலனுடன் வெண்ணிப் போர்க்களத்தில் போரிட்டபோது புறப்புண்ணிற்குப் பெரிதும் நாணிய சேரலாதன் தான் தோல்வியடைந்த போர்க்களத்திலேயே வாள் ஏந்திய கையுடன் உண்ணா நோன்பு இருந்து உயிர்நீத்தான் என்ற குறிப்பு காணப்படுகிறது). எனவே கரிகாலனின் வெண்ணிப்போர் பற்றி அறியமுடிகிறது.

கரிகாலன் பற்றி பரணர்(கி.மு.325-கி.மு.250) கூறும் கருத்துகள்

கரிகாலன் பற்றி பரணர் அகநானூற்றில் பல குறிப்புகளைத் தருகின்றார்.

"விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
பீடு இல் மன்னர்" (அகம்,125,16-21)

விரிந்த தலையாட்டம் கொண்ட விரைவாக ஓடும் குதிரைப்படையுடன் கூடிய பகைவருக்கு அச்சம் தரும் பெரிய வாளுடைய கரிகால் வளவன் முன்பாக நிற்க ஆற்றல் அற்றவரகளாக வாகைப்பறந்தலை என்ற ஊரில் கரிகாலன் வெற்றிபெற, அவனை எதிர்த்தொன்பது மன்னர்களும் ஒன்பது குடைகளைப் பகற்பொழுதில் விட்டுவிட்டுச் சென்றனர்.

அகநானூற்றின் (246)பாடலில் மேலும் சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

"காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்,
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய,
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
மொய் வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே" (அகம்.246,9-14)

 சினமும் பேராற்றலும், பெரும் புகழும் வாய்த்த கரிகால் வளவன் வெண்ணிவாயில் என்னும் இடத்தில் பகையரசர்களை அவர்களின் பேரொலி எழுப்பும் வீரமுரசு போர்க்களத்தே கிடக்க, வேளிர் பதினொருவர், இருபெரு வேந்தர்களை நிலைகெட்டுப் போகும்படி அவர்களின் படையாற்றலை அழித்தான்.அந்த நாளில் அவனின் தாய் பிறந்த அழுந்தூரில் மகிழ்ச்சி ஆர்ப்பு எழுந்தது.

 கரிகாலன் கழார் என்னும் ஊரில் பெரிய சுற்றத்துடன் இருந்து புனலாட்டைக் கண்டு மகிழ்ந்த பொழுது,சிறந்த வேலைப்பாடு அமைந்த வீரக்கழல் காலில் புரள,கரிய கச்சணிந்து அடிவயிற்றில் மணியும் கட்டிக்கொண்டு, கஞ்சத்தாளம் ஒலிக்கப் புனலாடலை விரும்பி ஆடும் ஆட்டனத்தியின் அழகை விரும்பிக் காவிரியாறு அவனைக் கவர்ந்துகொண்டது. ஆட்டனத்தி ஆதி மந்தியின் கணவன் ஆவான். கணவனை இழந்த பிறகு ஆதிமந்தியுடன் வாரிசு இல்லாமல் கரிகாலனின் ஆட்சிக்குப் பிறகு அவன் மரபு இல்லாமல் ஆகியிருக்கும்.

இதனை,

"கழாஅர் முன்துறை,
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண,
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,
இரும் பொலம் பாண்டில், மணியொடு தௌ¤ர்ப்ப,
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,
காவிரி கொண்டு ஒளித்தாங்கு"(அகம்.376)

என்னும் பாடலால் அறியலாம்.

கரிகாலன் பற்றி கழாத்தலையார் பாடியது

"உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்"(புறம்.65)
சேரமான் பெருஞ்சேரலாதான் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தி இப்பாடலில் பதிவாகியுள்ளது.


கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் பாடியது


"நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால்வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
5 வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?"(புறம் 66)

 கரிகாலனைப் பழந்தமிழ் நூல்கள் பாடியுள்ளதுடன் பிற்கால நூல்களும் பாடியுள்ளன. அவற்றுள் விக்கிரமசோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப் பரணி உள்ளிட்ட நூல்களில் வரும் குறிப்புகள் சிறப்பாகச் சுட்டத்தக்கன.

"தெள்ளருவிச்
சென்னிப் புலியேறு இருத்திக் கிரிதிரித்துப்
பொன்னி கரை கண்ட பூபதி" விக்கிரம சோழன் உலா

"தலையேறு
மண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்
கண்கொண்ட சென்னிக் கரிகாலன்" -குலோத்துங்க சோழன் உலா

முழுகுல நதிக்கரசர் முடிகொடு வகுத்தகரை
முகில்தொட அமைத்தது அறிவோம்
இருபுறமும் ஒக்க நினது ஒருபுலி பொறித்த வட
இமகிரி திரித்தது அறிவோம்"- குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்

"தொழுது மன்னரே கரைசெய் பொன்னி"
- கலிங்கத்துப் பரணி

"செண்டுகொண்டு கரிகாலன் ஒருகாலின் இமயச்
சிமயமால்வரை திரித்து அருளி,மீள அதனைப்
பண்டு நின்றபடி நிற்க இது'என்று முதுவில்
பாய்புலிக் குறிபொறித்து அது மறித்த பொழுதே"- கலிங்கத்துப் பரணி

"தத்துநீர் வரால் குறிமி வென்றதும்
தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்
பத்தொடு அறுநூறு ஆயிரம் பெறப்
பண்டு பட்டினப்பாலை கொண்டதும்"- கலிங்கத்துப்பரணி

பிற்கால நூல்களும் உரையாசிரியர்களும் கரிகாலனையும் திருமாவளவனையும் ஒன்றாகவே கருதும் போக்கைக் காணமுடிகிறது. அதுபோல் இருவரின் போர்வெற்றி,சிறப்புகளையும் மயங்கியே கூறுகின்றன.


ஆய்வறிஞர் கு.சிவமணி


அறிஞர்கள் தியாகராசன், கு.சிவமணி

(குடந்தை அரசு கல்லூரியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய சங்க இலக்கியம் காட்டும் சோழநாட்டியல் என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு சங்க இலக்கியம் காட்டும் கரிகாற் சோழன் என்ற தலைப்பில் 22.02.2010 இல் உரையாற்றினேன். பூம்புகார் அறிஞர் தியாகராசன், அறிஞர் கு.சிவமணி உள்ளிட்டவர்கள் அரங்கில் இருந்தனர். பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்தினார். தமிழ் ஆய்வுச்சூழலில் புதிய பார்வையில் இக்கட்டுரை உருவாகியுள்ளது. விரித்து எழுதப்படவேண்டிய இக்கட்டுரை பற்றி மாற்றுக் கருத்துகளை அறிஞர்கள் முன்வைக்க இடம் உண்டு. தமிழக வரலாற்றில் சீர்காழி மிகவும் முதன்மையிடம் பெறும் ஊராக உள்ளதை இத்தலைப்பில் ஆராயும்பொழுது உணர்ந்தேன். பூம்புகார் ஆய்வுகளுக்கு எந்த அளவு முதன்மை தருகின்றோமோ அந்த அளவு சீர்காழி கடலாய்வுகளுக்கு முதன்மை தரவேண்டும். வழக்கம்போல் இல்லாமல், தமிழ்ப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் இக்கட்டுரையை எடுத்துப் பயன்படுத்தும் போது எடுத்த இடம், எழுதிய ஆசிரியன் பற்றிய குறிப்பை வழங்க வேண்டுகிறேன். தமிழாய்வில் புதிய பார்வையை வழங்கிய என் பேராசிரியர் முனைவர் பே.க.வேலாயுதம் ஐயாவுக்கு நன்றி.)

3 கருத்துகள்:

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Santhappanசாந்தப்பன் சொன்னது…

மிகவும் பயனுள்ள கட்டுரை.

விளக்க உரைகளும், எடுத்துக் காட்டுகளும் அருமை!

maya சொன்னது…

தங்களுடைய இந்த கட்டுரை அருமை