நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

நாம் ஒன்று நினைக்க…

கல்லூரி மாணவனாக இருந்தபொழுது நூல் எழுதும் வேட்கை எனக்கு ஏற்பட்டது.என் பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்களிடம் படிக்கவும் ஆய்வு செய்யவும் வந்தபொழுது அந்த எண்ணம் பன்மடங்கு வளர்ச்சி பெற்றது.ஆண்டுக்கு ஒரு நூல் வெளியிட வேண்டும் என்று தம் மாணவர்களுக்கு ஐயா அன்புக்கட்டளை இடுவார்கள்.எங்களைப் பார்க்கும்பொழுது இந்த ஆண்டு என்ன நூல் வெளிவருகிறது என்பதே அவர் முதல் வினாவாக இருக்கும்.

மாணவர்கள் வெளியிடும் நூல்களை ஒரு விழா வைத்துத் தக்க அறிஞர்களை அழைத்துத் துறை சார்பில் விழா நடத்துவார்கள்.என் அச்சக ஆற்றுப்படை என்ற நூலைப் புதுச்சேரியில் நான் பயின்றபொழுது ஐயா நடத்திய விழாவில் வெளியிட்டார்கள்.

புலவர் இ.திருநாவலன் என்ற தமிழாசிரியர் அந்த நூலைப் பெற்றுக்கொள்வதாக இருந்தது. அன்னார் போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டு மருத்துவமனையில் இருந்ததால் விழாவுக்கு வரமுடியவில்லை. ஆனால் ஒரு வாழ்த்துப் பா அனுப்பியும் ஒரு பொன்னாடை அனுப்பி வைத்தும் என் முயற்சியை ஊக்கப்படுத்தினார்.அந்த ஆடையைப் போர்த்தி எனக்குச் சிறப்பு செய்து,நூலைப் பெற்றுக்கொண்டவர் பதிப்பாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் ஆவார்(1992-93).

புலவர் இ.திருநாவலன் அவர்கள் எனக்குப் பின்னாளில் புதுச்சேரியில் வளர்ப்புத் தந்தையாக இருந்து உதவி வருபவர்.அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக மாறியது தனிக்கதை.இவ்வாறு நூல்வெளியீடுகளில் மகிழ்ந்திருந்த காலகட்டம் ஒன்று என் வாழ்வில் இருந்தது.

விடுதலைப்போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் என்ற ஓர் அரிய நூலை யான் பதிப்பித்து என் பிறந்த ஊரில் வெளியிட்டேன்(1995 சனவரி).அந்த விழாவுக்குப் பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் க.ப.அறவாணன்,பேராசிரியர் முனைவர் கோ.வீரக்குமரன் (கேரளா,வேளாண்மைப் பல்கலைக்கழகம்), அண்ணன் அறிவுமதி யாவரும் வந்திருந்தனர்.

உள்கோட்டை சனதா மாணிக்கம் அவர்கள் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவரின் குருகாவலப்பர்கோயில் அரிசி ஆலையில் விழாவை நடத்தினார்கள்.துரையானர் அடிகளின் மகனார் திருநாவலர்காந்தி உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர்.என் ஆசிரியர் குடந்தை கதிர். தமிழ்வாணன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.மிகச்சிறப்பாக நடந்த அந்த விழாவுக்குப் புதுச்சேரியிலிருந்து வந்த என் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் செ.குறுக்குச்சாலையில் இறங்கி,அவ்வூர் சோழ அரசன் இராசேந்திர மாமன்னன் நடமாடிய மண் என்று அங்கிருந்து விழா நடைபெற்ற நான்கு கல் தொலைவையும் கங்கைகொண்ட சோழபுரம், குருகாவலப்பர்கோயில் ஆகிய கலைச்சின்னங்களைக் கண்டபடி அம்மா தாயம்மாளுடன் நடந்தே வந்தார்.நாங்கள் மகிழ்வுந்து ஏற்பாடு செய்தும் அதில் ஏறவில்லை. உந்துவண்டி ஆள் இல்லாமல் தனியே வந்தது.இது நிற்க.

அதன் பிறகு நூல் பல நான் எழுதியிருந்தாலும் வெளியீட்டு விழா என்று ஒன்று வைப்பதில்லை. விலக்காக என் திருமணத்தின்பொழுது என் முனைவர் பட்ட ஆய்வேடான பாரதிதாசன் பரம்பரை என்பதை வெளியிட நினைத்தோம்.முதல்நாள் வரும் அறிஞர்கள் இலக்கியம் சார்ந்து பேசட்டும் என்ற ஆர்வமே அதற்குக் காரணம்.பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் இரா.இளவரசு,புலவர் கதிர். தமிழ்வாணன்,அண்ணன் அறிவுமதி,திரைப்பா ஆசிரியர் பா.விசய்(பா.விசய் திருமணத்தின்பொழுது(எங்கள் ஊரான உள்கோட்டையில்) முதல் நாள் நூல்வெளியீட்டுக்கு வித்திட்டதும் இந்த விழாதான் காரணம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.நூல் வெளியிட்டனர்(2002).

இதன் பிறகு பணிச்சூழலால் பல ஊர்களில் வாழ நேர்ந்தது.பல நூல்கள் எழுதப்பட்டாலும் எங்கும் நூல் வெளியீடு நடக்கவில்லை.விழா நடத்தும் செலவில் இன்னொரு நூல் வெளியிட்டுவிடலாம் என்ற எண்ணமே காரணமாகும்.பல நூல்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதும் சோம்பலுக்கு ஒரு காரணம்.இதுவும் நிற்க.

சென்ற ஆண்டு யான் முயன்று எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் என்ற இரு தொடர்களை அணியபடுத்தி நூலுருவாக்க நினைத்தேன்.நண்பர் அண்ணன் மதிராசு அவர்களிடம் நூல் வடிவப்படுத்தத் திட்டமிட்டேன்.அவர் மிகச்சிறந்த கலைஞர். வடிவமைப்பாளர். ஆனால் அதனிடையே மின்னஞ்சலில் தொடர்பில் இருந்து, அச்சுத்தொழிலுக்காக வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த தமிழ் அலை இசாக் அவர்களின் கலை உணர்வை வரவேற்க, அவரிடம் நூல் வடிவப்படுத்தும் பணியை ஒப்படைத்தேன்.

மின்னஞ்சலிலும் நேரிலுமாக நூல் வடிவப்படுத்தும் முயற்சி தொய்வின்றி நடந்தது.நூல் வெளிவந்தது.ஊடகத்துறை சார்ந்த பல நண்பர்கள் உதவி புரிந்ததால் என் நூலுக்குத் தீராநதி,அம்ருதா.உயிர்மை,கொழுந்து(இலங்கை),தினத்தந்தி,தினமணி,தினமலர் உள்ளிட்ட பல ஏடுகளில் நல்ல மதிப்புரை வந்தது.

புதுச்சேரியில் ஒரு சிறு வெளியீட்டு விழா வைத்து நூலை அனைவருக்கும் அறிமுகப் படுத்தலாம் என்று நண்பர்கள் ஆசையைத் தூண்டினார்கள்.யாரை அழைப்பது எப்படி நடத்துவது என்று பார்த்தபொழுது நம் கொள்கைக்கும்,மதிப்புக்கும் உரியவர்களை அழைக்க முடிவு செய்தோம்.பலரும் பல காரணங்களைச் சொல்லி நிகழ்ச்ச்சிக்கு வரமுடியாத நிலையைக் கூறினார்கள்.சிலரை உணர்வு சார்ந்து அழைத்தபொழுது போக்குவரவு தொடர்பில் முரண் ஏற்பட்டது.வானூர்தி வழியாக வருவதற்கும், சென்னையிலிருந்து புதுவைக்கு மகிழ்வுந்தில் வருவதற்கும் ஏற்பாடு செய்யச் சொன்னார்கள்.ஏழைப்புலவனால் இதற்கெலாம் என் செய இயலும்?.சிலர் பணி நெருக்கடி சொல்லிப் பின்வாங்கினர்.

விழாவுக்கு முன்பே நாள்குறித்து,சிறப்பு விருந்தினர்களைத் தேடிக்கொண்டிருந்தோம்.அரங்கிற்கு முன்பே பதிந்துவிட்டதால் உரிய நாளில் நடத்தியாதல் வேண்டும்.விழா ஏற்பாட்டுக்கு முன்வருவதாகச் சொன்ன நண்பர்கள் யாவரும் பின்வாங்கிக்கொண்டதால் நானும் ஓட்டுநர் ஏசுதாசன் ஐயாவும் அலைந்து திரிந்து அழைப்பு அடிப்பது முதல் அழைப்பு கொடுப்பது வரையிலான பணிகளைக் கவனித்தோம்.

அழைப்பிதழ் அடிக்கும்பொழுது….

சிறப்பு விருந்தினர் தேர்வு நான்கு நாளுக்கு முன்புதான் உறுதியானது.அவர் கல்வி நிலையில் உயர்பொறுப்பில் இருப்பவர்.புதுச்சேரிக்கு அவர் இயல்பாக வரும்நிகழ்வை அறிந்தேன்.அந்த வருகையை இதற்குப் பயன்படுத்தலாம் என்று நினைத்து ஒப்புதல் பெற்றோம்.அழைப்பிதழ் அச்சடித்து மூன்று நாளில் விழா ஏற்பாடுகளை முடித்தாதல் வேண்டும்.எனவே இன்றே அழைப்பிதழ் அச்சிட வேண்டும் என்று நினைத்து நண்பர் ஒருவரின் அச்சகத்திற்குச் சென்றோம்.

ஏழுமணிக்கெல்லாம் பணிபுரியும் பெண்கள் வீடு திரும்புவார்கள். ஆறு மணியளவில் அச்சுக்கூடம் சென்றோம்.கைவேலைகளை முடித்து எங்கள் பணியைத் தொடங்கினார்கள். முதலில் அழைப்பிதழ் அச்சிடத் தட்டச்சு செய்தார்கள்.முதற்கட்டமாக அழைப்பிதழில் இடக்கூடிய பெயர்களை முடிவு செய்யவே மணி ஏழைத் தொட்டது.இனிப் பெயர்களைச் சேர்க்கவோ நீக்கவோ எங்களுக்குக் காலம் வாய்ப்பாக இல்லை.ஒருவழியாகத் தட்டச்சிட்டு அதனை வரிசைப்படுத்தல், அழகுப்படுத்தல் வேலைகள் நடந்தன.

முதற்கட்டமாக முதல்படியை அச்சிட்டு வழங்கினார்கள்.மெய்ப்பு நோக்கினோம்.சில எழுத்துத் திருத்தங்கள்,எழுத்து மாற்றங்களைச் சொன்னோம் மாற்றியவண்ணம் இருந்தார்கள். அப்பொழுது தட்டச்சிட்டவரின் அருகில் இருந்த வேறொரு தட்டச்சருக்கு ஒரு தொலைபேசி, அச்சக உரிமையாளர் வழியாக வந்தது.அச்சுக்கூடம் எங்கும் ஒரே அழுகை.அச்சுக்கூடத்தில் பெருஞ்சோகம் கப்பியது.

மகிழ்ச்சியாக வேலை நடந்த இடத்தில் இப்பொழுது ஏன்?எதற்கு?அதற்காக இப்படியா?எல்லாம் தொலைக்காட்சியால் வந்தது?என்ற பேச்சாக மாறியது.இருக்கும் ஒரு மணி நேரத்தில் அச்சிட்டு இன்று இரவே சிறப்பு விருந்தினருக்கு அழைப்பிதழ் அனுப்பியாதல் வேண்டும்.அச்சக உரிமையாளர் கடையை மூட ஆயத்தமானார்.அதற்குள் அழுதுகொண்டிருந்த அம்மையாரை தானியொன்று பிடித்து வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.நானும் அழைப்பிதழ் தட்டச்சிட்டவரும் மட்டும் கடையில் இருந்தோம்.என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.மற்ற பணியாளர்கள் உடன் பணியாற்றும் பணியாளர் குடும்பத்தில் இவ்வாறு நேர்ந்துவிட்டதே என்று அவர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில் நான் அழைப்பிதழை அழகுப் படுத்தவோ,சரிபார்க்கவோ,அல்லது வேறு அச்சுக்கூடத்தில் அச்சிடவோ நேரம் இல்லை.எனவே தட்டச்சிட்ட அவரிடம் மன்றாடி கணிப்பொறியில் உள்ளதை ஒரு மூலப்படி(மாஸ்டர்)ஒன்று எடுத்துக்கொடுக்கும்படி வேண்டினேன்.துன்பச்சூழலிலும் என் நிலை உணர்ந்து ஒரு படி எழுத்துக்கொடுத்தார்கள்.

அதனைக் கொண்டுபோய் வேறு ஓர் அச்சகத்தில் அச்சிட்டுத்தர வேண்டினேன்.மணி அப்பொழுது எட்டரை.அச்சுக்கூடம் பூட்டுவதற்கு அணியமாக இருந்தது.வேண்டா வெறுப்பாக என் வேலையை ஏற்றுகொண்டார்கள்.தாள் வாங்க வேண்டும் என்றனர்.கடைக்குத் தொலைபேசியிட்டு இவ்வளவு தாள்,உறை வேண்டும் என்றனர்.தானியில் கால் மணி நேரத்தில் தாள் கொண்டு வந்தேன்.

அரைமணிநேரத்தில் அச்சிட்டுகொடுக்க வேண்டினேன்.பத்து மணியளவில் அச்சிட்டுக் கொடுத்தனர்.அடுத்த கால் மணி நேரத்தில் தனித்தூது அலுவலகம் சென்று அழைப்பிதழில் முகவரி எழுதி மடலைப் பதிவு செய்தேன்.வெளியூர் உறைகளை வாங்க மறுத்தனர். ஏனென்றால் வண்டிகள் புறப்படத் தயார் நிலையில் இருந்தன.தொடர்ந்து அதே நிறுவனத்தில் பதிவு செய்வதால் கருணைகொண்டு வாங்கிக்கொண்டனர்.மிகபெரிய போராட்டத்துக்கு இடையே அழைப்பிதழ் தனித்தூது அலுவலகத்தில் சேர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.நாளை சிறப்பு விருந்தினர் கையினுக்குக் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.அமைதியாக வீடு வந்து சேர்ந்தேன்.

மீண்டும் ஒரு முறை அழைப்பிதழைப் பெருமிதத்துடன் எடுத்துப் பிறந்த குழந்தையைத் தடவிப் பார்ப்பதுபோல் பார்த்தேன்.அப்பொழுதுதான் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது தெரிந்தது.வரவேற்புரை,நன்றியுரை பெயர்கள் எல்லாம் பெரிய எழுத்தில் இருந்தன.சிறப்பு விருந்தினர் பெயர் சற்றுச் சிறிய எழுத்தில் அச்சேறியிருந்தது.இதனைக் கண்டால் சிறப்பு விருந்தினருக்கு வருத்தம் ஏற்படத்தான் செய்யும்.இவ்வளவு விரைவில் நடந்ததைச் சிறப்பு விருந்தினருக்கு எடுத்துச்சொல்ல வாய்ப்பே எங்களுக்கு அமையவில்லை.

சிறப்பு விருந்தினர் புதுச்சேரி வந்திருந்தும் விழாவுக்கு வரமுடியவில்லை.வந்த அறிஞர்களை வைத்துகொண்டு அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் நூல் வெளியீடு கண்டது.
அது சரி. இப்படிப் பெரிய தவறு நடக்கும் அளவுக்கு அச்சுக்கூடத்தில் பணிசெய்த அந்த பணியாளர் குடும்பத்தில் என்னதான் நடந்தது?.அவர்களின் ஒன்பது வயதுக்குழந்தை தற்கொலை செய்துகொண்டதாம். நூல்வெளியீட்டு விழாவில் மற்றவர்கள் பாராட்டியது உங்களுக்குத் தெரியும். எனக்கு அந்தத் தாயின் அழுகுரல் அன்றும், இன்றும் கேட்டுகொண்டே உள்ளது…

3 கருத்துகள்:

சீதாலட்சுமி சொன்னது…

குழந்தையின் மரணம். அதிலும் தற்கொலை. தாங்கிக் கொள்ளக்கூடிய சோகம் அல்ல. தங்க்ள் பணியை முடித்துக் கொடுத்த்தே அதிசயம். அச்சில் ந்டந்தது பிழையல்ல. பெற்றவனின் தடுமாற்றம்.
நிகழ்வுகளை அருமையாகத் தொகுத்துள்ளீர்கள். முடிவில் கண்ணிருடன். நான் கலங்கிவிட்டேன்
சீதாம்மா

Innamburan சொன்னது…

ஏதோ பெரிய விசனம் என்று நினைத்தேன். இந்த அளவு தாங்கொண்ணா துயரம் என்று தோன்றவில்லை.வாழ்க்கையின் சோதனைகள் சில சமயம் கொடுமையானவை.
இன்னம்பூரான்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

///////அது சரி. இப்படிப் பெரிய தவறு நடக்கும் அளவுக்கு அச்சுக்கூடத்தில் பணிசெய்த அந்த பணியாளர் குடும்பத்தில் என்னதான் நடந்தது?.அவர்களின் ஒன்பது வயதுக்குழந்தை தற்கொலை செய்துகொண்டதாம். நூல்வெளியீட்டு விழாவில் மற்றவர்கள் பாராட்டியது உங்களுக்குத் தெரியும். எனக்கு அந்தத் தாயின் அழுகுரல் அன்றும், இன்றும் கேட்டுகொண்டே உள்ளது…/////////


பதிவை வாசிக்கத் தொடங்கி சிறிது நேரத்தில் எல்லாம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலுடன் தொடர்ந்தேன் . ஆனால் இறுதி வரிகளை வாசிக்கும்பொழுது . ஒரு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்திவிட்டது நண்பரே . நிகழ்வுகளை நேர்த்தியான எழுத்து நடையில் மிகவும் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவேன் .