நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 10 ஏப்ரல், 2010

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்

காரைக்குடியில் வள்ளல் அழகப்பா செட்டியார் அவர்களின் அறிவுத் திருக்கோயிலாக விளங்குவது அழகப்பா பல்கலைக்கழகமாகும்.

காரைக் குடியெல்லாம் கல்விப் பயிர்வளரக்
கூரைக் குடியெல்லாம் கூன்நிமிர - நீரைப்
புழங்கினால் என்னப் பொருட்செல்வம் எல்லாம்
வழங்கினான் வாழ்க வழி

என்று மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களால் கொடை விளக்கில் புகழப்பெற்ற வள்ளலின் பெயர் தாங்கிய பல்கலைக்கழகம் தமிழுக்கு முதன்மையளிக்கும் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகத்தில் இன்று (10.04.2010) காலை 10 மணிக்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டி அவர்கள் வழங்கினார்கள்.

செம்மொழி நிறுவன விருது பெற நான் சென்னை சென்றிருந்தபொழுது இந்த அழைப்பை முனைவர் மு.பாண்டி அவர்கள் நேரடியாக விடுத்தார்கள்.

முனைவர் மு.பாண்டி அவர்களின் அன்பு அழைப்பை நடைமுறைப்படுத்தத் தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்,மாணவர்கள் மிகச் சிறப்பாகப் பயிலரங்க நிகழ்வைத் திட்டமிட்டுள்ளனர். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சியளிக்க நான் காரைக்குடிக்கு நள்ளிரவு வந்து சேர்ந்தேன். இன்னும் சற்று நேரத்தில் பயிலரங்க நிகழ்வு தொடங்கும். இயன்றால் பயிலரங்க நிகழ்வினைச் செய்தியாக அரங்கிலிருந்து வழங்குவேன்.

கருத்துகள் இல்லை: