நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 17 ஏப்ரல், 2010

இசைத்தமிழ் இன்பத்துப்பால் நூல்வெளியீடு


முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் தி.தியாகராசன் அவர்கள் என்னைச் சிறப்பித்தல்.அருகில் இரா.அனந்தராமன்(ச.ம.உ)

புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பினர் புதுச்சேரியின் இசைறிஞர் எல்.எசு.பி.செயராயர் அவர்கள் எழுதிய இசைத்தமிழ் இன்பத்துப்பால் நூலின் வெளியீட்டு விழாவை இன்று நிகழ்த்தினர்.பல்நோக்குச் சேவா சங்கம் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வரும்படியும் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றமைக்கு எனக்கும் முனைவர் கேசவ.பழனிவேலு அவர்களுக்கும் பாராட்டு நடைபெறும் எனவும் நண்பர்கள் தோட்டம் திருநாவுக்கரசு அவர்களும் புதுவை யுகபாரதி அவர்களும் வீட்டுக்கு வந்து நேரில் அழைப்பு நல்கினர்.புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள் என்றதும் மகிழ்ச்சியுடன் சென்றேன்.

எனக்கிருந்த பல்வேறு பணிகளையும் முடித்துக்கொண்டு விழா அரங்கை அடைவதற்கும் நிகழ்ச்சி தொடங்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது.திருக்குறள் காமத்துப்பாலை எளிய இசைத்தமிழ் உருப்படிகளாகச் (கீர்த்தனைகள்) செயராயர் அவர்கள் இயற்றியுள்ளார். இசையறிஞர் அரிமளம் பத்மநாபன் அவர்கள் இப்பாடல்களைப் பல்வேறு இசைகளில் பாடிக்காட்டியதும் அவையினர் மகிழ்ச்சியடைந்தனர். நாடகத் தமிழாகவும்,இயல்தமிழாகவும் அறிஞர்கள் இந்த நூலின் கருத்துகளை மதிப்பீடு செய்து பேசினர்.

இசைத்தமிழ் இன்பத்துப்பால் நூலை அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் இரா.அனந்தராமன் அவர்கள் வெளியிட்டார்.புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் திரு.தி.தியாகராசன் அவர்கள் எனக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசில் வழங்கினார்கள்.வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் முனைவர் க.தமிழமல்லன் அவர்களும் இசைத்தமிழ் ஆர்வலர் திரு.இராசாராமன் அவர்களும் எனக்கு ஆடைபோர்த்திச் சிறப்பித்தனர்.

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் திருக்குறள் காமத்துப்பால் சிறப்பினை மிக அழகாக எடுத்துரைத்தார்கள்.தொல்காப்பியர் புணர்தல்,பிரிதல்,இருத்தல்,இரங்கல்,ஊடல் என்ற உரிப்பொருளைக் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பண்டைத் தமிழகத்து ஐந்து நில மக்களின் உணர்வைத்தான் திருக்குறளார் ஐந்து பகுப்பாகப் பிரித்து( 5 X 50=250) இருநூற்று ஐம்பது குறட்பாவாகத் திருக்குறள் காமத்துப்பாலைத் தந்துள்ளார் என்று கூறியதும் அவையினர் மகிழ்ந்தனர்.

தம் சொல்லாய்வுத்திறத்தால் திருக்குறள் தெளிசாற்றை வழங்கினார்.தலைவி அமிழ்து, தலைவி பெற்ற மழலைகள் அமிழ்து,அவர் சொல் கேட்டல் அமிழ்து,அவர் தொட்ட உணவு அமிழ்து என்று திருக்குறளை ஐயா நினைவுகூர்ந்தமை மகிழ்ச்சி தந்தது.புலவர் பெருந்தகை இரா.இளங்குமரனாரின் பேச்சில் தமிழ் இலக்கியங்களின் மேற்கோள் ஆட்சி சிறப்பாக இருந்தது. பாவேந்தர் பாடல்வரிகளை எடுத்துக்காட்டியதும்,ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டியதும் சிறப்பாக இருந்தது.


புலவர் இரா.இளங்குமரனார் உரை


புலவர் இரா.இளங்குமரனார் என்னைச் சிறப்பித்தல்,அருகில் திரு.வேலாயுதம்,இராசாராமன்


முனைவர் அரிமளம் பத்மநாபன்


புலவர் இரா.இளங்குமரனாருடன் நான்

நிகழ்ச்சி முடிந்ததும் ஐயா மேடையிலிருந்து இறங்கி வந்து மலேசியப் பயணம் பற்றி என்னிடம் உரையாடினார்கள்.மலேசியாவில் தம் பயணத்தின்பொழுது எழுத்துத்திருத்திகளின் செயல்பாடுகளைக் கண்டித்துப் பேசியதையும்,விரைவில் எழுத்துத் திருத்தம் பற்றிய தமிழறிஞர்களின் கருத்துகள் அடங்கிய நூலினைத் தாம் வெளியிட உள்ளதையும் தெரிவித்தார்கள்.அனைவரிடமும் விடைபெற்று இரவு வீடு வந்துபொழுது மணி 11 இருக்கும்.

கருத்துகள் இல்லை: