நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் தமிழ் இணையப் பயிலரங்கம்


வரவற்கும் தமிழ்த்துறை கட்டடம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் 10.04.2010 காலை 10 மணியளவில் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டி அவர்கள் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி அனைவரையும் வரவேற்றார்.அடுத்து 10.30 மணிக்குத் தொடங்கிய என் உரை பிற்பகல் 1.30 மணி வரை காட்சி விளக்கத்துடன் நீண்டது.

தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக இருப்பதால் எந்த நேரம் மின்சாரம் நிற்கும் என்று தெரியாது.எனவே இந்த முறை மின் இணைப்பும் இணைய இணைப்பும் இருக்கும்பொழுதே இணையத்திலிருந்து காட்ட வேண்டிய பகுதிகளை முதலில் காட்டி விடுவோம் என்று தமிழ்த் தட்டச்சுக்கு உதவும் என்.எச்.எம் எழுதியை நிறுவுவதை முதலில் காட்டித்,தமிழ்த்துறை கணிப்பொறியைத் தமிழில் தட்டச்சிடும்படி முதலில் செய்தேன்.

தமிழ்த்தட்டச்சு விசைப்பலகை வரலாற்றை நினைவுகூர்ந்து தமிழ் 99 விசைப்பலகையை அரங்கிற்கு அறிமுகப்படுத்தி அனைவரையும் தமிழ்த்தட்டச்சுக்கு அழைத்தேன்.மின்னஞ்சல் அனுப்புவது,உரையாடுவது(chat),மின்னஞ்சல் செய்யும்பொழுது அதில் உள்ள அமைப்புகளை (செட்டிங்) எடுத்துரைத்தேன். அனைவரும் உரையாட்டின் விரைவு கண்டு மகிழ்ந்தனர்.இணைய இணைப்பில் இருந்த தமிழ்த்தேனீ,குழலி,மணிகண்டன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரைத்ததும் அவையினர் மகிழ்ந்தனர்.

உதவிப் பதிவாளர் முனைவர் கி.காளைராசன் அவர்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் பல வினாக்களை எழுப்பினார்.அவர் திருப்பூவணம் என்னும் ஊரினர்.திருப்பூவணப் புராணம் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்.பன்னூல் ஆசிரியர்.(அவர் செல்பேசி எண் + 91 94435 01912). கொரியா நா.கண்ணன் அவர்கள் அந்த ஊரினர் என்ற நினைவு எனக்கு வந்து, அவர் பற்றி சொன்னதும் அவையில் இருந்தவர்கள் மகிழ்ந்தனர்.அவரின் தமிழ் மரபு அறக்கட்டளையை உரையின் பிற்பகுதியில் விளக்குவேன் என்றேன்.

கி.காளைராசன் அவர்களுக்கு மின்னஞ்சல் கணக்கு உருவாக்கியதுடன் திருப்பூவணம்1 என்ற பெயரில் வலைப்பூ ஒன்றும் உருவாக்கினேன்.இதுபோல் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் ஒரு வலைப்பூ உருவாக்கித் தங்கள் பகுதி வரலாறு,பண்பாடு,பழக்கவழக்கம், ஆய்வுகள், படைப்புகளை இணையத்தில் ஏற்ற வேண்டும் என்றேன்.அதுபோல் பல்கலைக்கழகங்கள் வலைப்பூ உருவாக்குவதைப் பாடமாக்க வேண்டும் என்றும்,ஆய்வேடுகளைத் தேர்வு முடிந்த பிறகு பல்கலைக்கழக இசைவுடன் இணையத்தில், வலைப்பூவில் ஏற்ற வேண்டும் என்றும் என் விருப்பம் தெரிவித்தேன்.அனைவரும் என் கருத்துக்கு இசைவு தெரிவித்தனர். நம் காளைராசன் ஐயா தம் ஆய்வேட்டை விரைவில் வலைப்பூவில் ஏற்றுவேன் என்று உறுதியுரைத்தார்கள்.

பின்னர் மதுரைத் திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை,தமிழ் விக்கிப்பீடியா,தமிழ் விக்சனரி பற்றி எடுத்துரைத்தும் நூலகம்,திண்ணை,கீற்று உள்ளிட்ட தளங்களைக் காட்டியும் அனைவரையும் இணையத்தில் எழுதும்படியும் வேண்டினேன்.தமிழ் இணையத்துக்கு உழைத்த-உழைக்கும் அறிஞர்கள்,கணிப்பொறித்துறை வல்லுநர்களை நினைவு கூர்ந்தேன்.தமிழாய்வுக்கு இணையம் எந்த எந்த வகையில் உதவும் என்பதையும் அயல்நாட்டுத் தமிழர்களுடனும்,உள்நாட்டுத் தமிழர்களுடனும் இணையத்தில் எவ்வாறு தொடர்புகளை மேம்படுத்திக் கொள்வது என்றும் எடுத்துரைத்தேன்.

இணையத்தின் இன்றியமையாமையை அனைவரும் உணர்ந்தனர்.இதுவரை இந்தத்துறை பற்றி அறியாமல் இருந்தமைக்கு அனைவரும் வருந்தியதையும்,இனி இதில் ஆர்வமுடன் செயல்பட உள்ளதையும் உணர்ந்தேன்.

என் முயற்சிக்கு நல்ல பயன் எதிர்காலத்தில் தமிழகத்தில் விளையும் என்ற நம்பிக்கையுடன் அனைவரிடமும் விடைபெற்றேன்.முனைவர் அறவேந்தன்,முனைவர் கா.கணநாதன், திருவாளர் சிதம்பரம் உள்ளிட்ட தோழர்களையும் முனைவர் காளைராசன்,மற்ற ஆய்வாளர்களையும் சந்திக்க வாய்ப்பு நல்கிய முனைவர் மு.பாண்டி அவர்கள் என்றும் என் நன்றிக்குரியவர்.ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுமாணவர்கள் பயன்பெறும் வண்ணம் இந்தப் பயிலரங்கம் நடந்தது.


முனைவர் மு.பாண்டி


கா.கணநாதன் உள்ளிட்ட பார்வையாளர்கள்


வரவேற்புரையாற்றிய முனைவர் மு.பாண்டி


பார்வையாளர் வரிசையில் கி.காளைராசன்,மு.பாண்டி


அரங்கில் இருந்த ஆய்வு மாணவிகள்


பயிலரங்கம் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்யும் ஆய்வு மாணவி


பயிலரங்கில் நான்

2 கருத்துகள்:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

வாழ்க வளர்க உங்கள் தொண்டு!
காரைக்குடி எங்கள் பகுதி! எங்கள் பகுதி இளம் குருத்துகளுக்கும் இணையத்தமிழ்
குறித்த தங்களின் பயிலரங்கம் பயனுள்ளதாக அமைந்தது மிக்க மகிழ்ச்சியான ஒன்று! நன்றி!

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி ஐயா.