வெள்ளி, 26 மார்ச், 2010
புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் கணினியும் தமிழும் செயல்முறை விளக்கம்
ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இரா.வளவன் உரை
புதுச்சேரி இலாசுப்பேட்டையில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இன்று(26.03.2010) மாலை 3.00 மணி முதல் 5.30 மணி வரை கணினியும் தமிழும் என்ற தலைப்பில் செய்முறை விளக்கத்துடன் என் உரை இடம்பெற்றது.ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இரா.வளவன் அவர்கள் தலைமை தாங்கிக் கணினி,இணையப் பயன்பாட்டை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார்.
நான் கணிப்பொறி,இணையத்தின் சிறப்புகளை,செயல்முறைகளை இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்குப் பயிற்றுவித்தேன்.தமிழ்த் தட்டச்சு முதல் தமிழில் வலைப்பூ உருவாக்கம் வரை என் உரை நீண்டது.இணைய இணைப்பு கிடைக்கவில்லை. என் கையில் இருந்த காட்சி விளக்கத்தின் துணையுடன் செய்திகளை எடுத்துரைத்தேன்.
மதுரைத் திட்டத்தில் இருந்த தொல்காப்பியம் மூல வடிவத்தைக் காட்டி அதற்கு இணையான ஒலி வடிவைச் செம்மொழி நிறுவனப் பக்கத்திலிருந்து முன்பே நான் பதிவு செய்து வைத்திருந்ததைக் காட்டி மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் பயிற்றுவிக்க இணையம் உதவுவதை எடுத்துக்காட்டினேன். தமிழின் புகழ்பெற்ற தளங்கள்,தமிழ்க்கணினிக்கு உழைத்தவர்களை அறிமுகம் செய்து அவர்களின் பணிகளை நினைவுகூர்ந்தேன். கல்வி, இலக்கியம் சார்ந்த செய்திகளை ஆசிரியர் பயிற்சி பெறுபவர்கள் பயன்பெறத்தக்க வகையில் எடுத்துரைத்தேன்.
நிறைவாக மாணவர்கள் தங்கள் கருத்துரைகளை வழங்கினர்.தமிழ் விரிவுரையாளர் தேவி. திருவளவன் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.பேராசிரியர்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
பயிற்சியில் பயன்பெற்ற மாணவியர்
மாணவர்கள்-மாணவியர்
கருத்துரைக்கும் மாணவி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
தமிழ் மொழிக்கு அரிய சேவை செய்து வரும் இளங்கோவனுக்கு எம் பாராட்டுகள்
உங்கள் பணி சிறக்கட்டும்
கருத்துரையிடுக