நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 7 மார்ச், 2010

புதுச்சேரி அருகில் இராசேசுவரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையத்தமிழ் அறிமுகம்


அ.அழகிரிசாமி,குமாரசிவ.இராசேந்திரன்,மு.இளங்கோவன்,மா.சற்குணம், குமாரசிவ. சிவக்குமார்

புதுச்சேரியை அடுத்துக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பொம்மையார்பாளையம் ஊரில் மயிலம் திருமடத்திற்கு உரிமையான இராசேசுவரி மகளிர் கல்லூரி சிறப்பாக இயங்குகிறது.

இக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் அ.அழகிரிசாமி அவர்களின் அன்பு அழைப்பால் 05.03.20010 இல் நடைபெற்ற தமிழ்மன்ற விழாவில் பேராசிரியர்கள்,மாணவர்கள் என மொத்தம் அறுநூறு ஆர்வலர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

காலையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பேராசிரியர் க.சசிதேவி அவர்கள் வரவேற்புரை வழங்க,சிவத்திரு.குமாரசிவ.இராசேந்திரன் அவர்கள் தலைமையுரை வழங்கினார்.முனைவர் அ.அழகிரிசாமி அவர்களின் முன்னிலையில் நடந்த விழாவில் சிவத்திரு.குமாரசிவ.சிவக்குமார்,முனைவர் மா.சற்குணம்(முதல்வர்,மயிலம் கலைக்கல்லூரி) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முந்திரிக்காட்டு நடுவில் அழகிய கலைக்கோயிலாக இராசேசுவரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.என்னுடைய "இயங்குமோடம்" மிகச் சிறப்பாக இயங்கியது.அரங்கில் இருந்தபடியே பல நாடுகளைச் சேர்ந்த நண்பர்களுக்கு இணைய அறிமுகம் விழா பற்றி செய்திகள் தந்தேன்,பலரும் வாழ்த்துரைத்தனர்.திறந்தவெளி அரங்கு என்பதால் என் காட்சி விளக்கம்(பவர் பாயிண்டு) கடைசி வரிசையில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.எனினும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் பேசியதால் அனைவரும் சுவைத்துக் கேட்டனர்.தமிழ்த்தட்டச்சு தொடங்கி, தமிழில் உள்ள மின்னஞ்சல் வசதி,வலைப்பூ,நூல்கள்,விக்கிப்பீடியா,மின்னிதழ்கள் என அனைத்துத் தமிழ் வாய்ப்புகளையும் எடுத்துரைத்தேன்.

இந்த நிகழ்வுக்கு வாழ்த்துரை வழங்க வந்திருந்த மயிலம் கல்லூரி முதல்வர் முனைவர் மா.சற்குணம் அவர்கள் விரைவில் தங்கள் கல்லூரியில் இத்தகு செய்திகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என என்னை அன்புடன் கேட்டுக்கொண்டார்கள்.விரைவில் பயிலரங்கமாக நடத்த வேண்டும் என்று கல்லூரி தாளாளர் திரு.இராசேந்திரன் அவர்களும் வேண்டுகோள் விடுத்தார்.இந்த நிகழ்வுக்குப் பொம்மையார் பாளையம் சார்ந்த ஊர்ப்பெரியவர்களும் வந்திருந்தனர்.அனைவருக்கும் புரியும் வண்ணம் உரையாற்றியதால் என் உரைக்கு நல்ல வரவேற்பு இருந்ததை நான் உணர்ந்தேன்.


திரு.குமாரசிவ.இராசேந்திரன்(தாளாளர்)


முனைவர் அ.அழகிரிசாமி(முதல்வர்)


பங்கேற்ற மாணவியர்கள்(ஒரு பகுதி)


பங்கேற்ற மாணவியர்கள்(ஒரு பகுதி)


பார்வையாளர்கள்


நான் உரையாற்றும் காட்சி

கருத்துகள் இல்லை: