நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 21 மார்ச், 2010

தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய சிங்கப்பூர் கோவலங்கண்ணன் அவர்களின் கருத்துரை

சிங்கப்பூரில் வாழும் திரு.கோவலங்கண்ணனார் தமிழ்ப்பற்றும் தமிழ் வளர்ச்சியில் ஆர்வமும் கொண்டவர்.பிறதுறைகளில் கடமையாற்றினாலும் தமிழ்ப்பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர்.மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாவாணர் நூல்கள் வெளிவரவும்,பாவாணர் புகழ் பரவவும் பாடுபட்டு வருபவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழிசை வளர்ச்சிக்கு அறக்கொடை நிறுவியவர்.சிங்கப்பூரில் தமிழறிஞர்களை அழைத்துப் போற்றி வரும் இவர் அண்மையில் எழுத்துச்சீர்திருத்தம் தேவையில்லை என்று எனக்கு எழுதிய மடலைத் தேவை கருதி அவர் இசைவுடன் என் பக்கத்தில் வைக்கிறேன்.அதுபோல் தமிழ் எழுத்துப் பற்றி முன்பு சிந்தித்து வெளியிட்ட அறிக்கையையும் தேவை கருதி வைக்கிற்றேன்.


திரு.கோவலங்கண்ணனார் மடல் கீழே உள்ளது.

இன்று தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாது தேவைப்படுவது தமிழை ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் முழுமையாக ஆளுமைப்படுத்துவதேயன்றி, எழுத்துச் சீர்மையன்று. சீர்மை வேண்டுவோர் முன்பெல்லாம் தட்டச்சையும் கணிப்பொறியையும் காட்டி அவற்றைத் தமிழில் இயக்குவது அரிது என்றும் இடர்ப்பாடு மிக்கது என்றும் கூறிவந்தனர். இன்றோ கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் தமிழை இனிதே பயன்படுத்துகிறோம். கணிப்பொறி அறிவியல் விண்ணைத் தொட்டுவிட்டது. கணிப்பொறியில் தமிழையும் பிற மொழிகளையும் ஒலி ஒளி வடிவில் எளிதில் செலுத்திப் பயன்படுத்தும் வழி பிறந்துள்ளது. விசைப் பலகை (key board)யின்றி, எழுதுகோல் கொண்டு சிலேட்டில் அல்லது தாளில் இயல்பாக எழுதுவது போல் கணிப்பொறி திரையில் இப்போதுள்ள நம் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதிக் கணிப்பொறியில் பதிவு செய்ய முடியும்.

இப்போது இக்கூற்றை விட்டுவிட்டுத் தமிழைத் தங்களால்தான் காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் ‘அறிஞர்கள்’, இன்றையத் தமிழ் வரிவடிவம், நம் குழந்தைகள் தமிழைக் கற்பதற்குத் தடையாகவும் தொல்லையாகவும் இருப்பதாக, மற்றொரு பொய்யான கரணியத்தை முன் வைத்து எழுத்து சீர்மையை வேண்டும் என்கின்றனர்.

இவர்கள் கூறும் கரணியம் பொருந்தாது என்பதனைத் தமிழ்ப் பெற்றோராகிய நாம் நன்கு அறிவோம். நானும் அறிவேன். என் பிள்ளைகளுக்குத் தாய் மொழி சீனம். தந்தை மொழி தமிழ். அவர்கள் எவ்விதச் சிக்கலும் இல்லாமல் தமிழைப் படித்தார்கள். என் தலைமகளுக்குத் தமிழ் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுத்த போதே மற்ற இரு பிள்ளைகளும் தானாகவே கற்றுக் கொண்டார்கள். மேல்நிலை 12 ஆம் வகுப்பு வரை தமிழைப்படித்து நல்ல தேர்ச்சியும் பெற்றார்கள்.இங்கே நாம் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழ் அரிச்சுவடியை ஒரு சில நாள்களில் கற்று, எழுத்துக் கூட்டி, தமிழ் நாளிதழையோ நூலையோ படிக்க இயலும்.சீன மொழியைத் தாய் மொழியாக கொண்ட ஒருவர் சீன நாளிதழையோ நூலையோ படிப்பதற்குக் குறைந்தது இரண்டாயிரம் வரிவடிவங்களை மனனஞ் செய்திருக்க வேண்டும். இது போல் ஆங்கில அரிச்சுவடியைக் கற்ற பின் எழுத்துக் கூட்டி ஆங்கில நாளிதழையோ நூலையோ படித்தல் இயலாது என்பது நாடறிந்த உண்மை.

இவை இப்படியிருக்கத் தமிழைக் கற்றல் கற்பித்தல் கடினம், கடினம் என்று பிதற்றுவது முறையாகுமோ?

எழுத்துச் சுருக்கமோ வரி வடிவ மாற்றமோ நம் மொழியை வாழ வைக்காது. மாறாகச் சீர்குலையச் செய்து விடும்.

மொழி வாழ வளர வேண்டுமென்றால் அது பேச்சு மொழியாகவும் மக்கள் வழக்கு மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழை வாழ வைக்க தமிழ் ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் நிலை நாட்ட வேண்டும்.
அதன் பின் எழுத்து சீர்மை வேண்டின் தமிழறிஞர்கள், மொழி நூல் வல்லார்கள், கணிப்பொறி வல்லார்கள் ஒன்று கூடி முடிவு செய்யலாம்.
வாழ்க தமிழ்!

அன்பன்
வெ.கரு. கோபாலகிருட்டிணன் (வெ.கரு. கோவலங்கண்ணன்),
முதல்வர், வணிகக் கல்விச் சாலை, சிங்கப்பூர்
மடல்நாள் 20.03.2010










கருத்துகள் இல்லை: