தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்கிற பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது(07.01.2010 மாலைமலர்). தமிழ் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள் எல்லாம் விழிப்புற வேண்டிய காலகட்டம் இது.
மேடைகளிலும், அச்சிலும் பரவுவதற்கு முன்பே இணையத்தில் இது தொடர்பான விவாதங்கள் வேகமாக உலவி வருகின்றன. இணையம் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுவதால் சென்னை,பெசண்டு நகரில் நடப்பதைக் கோடம்பாக்கத்தில் இருப்பவர்கள் அறிவதற்கு முன்பே உலகத் தமிழர்கள் தெரிந்துகொள்கின்றனர்.
'வடவேங்கடம் தென்குமரி' எல்லை கடந்து தமிழும், தமிழர்களும் உலகெங்கும் பரவியிருப்பதால் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் தமிழ் பற்றி இனி முடிவு செய்யமுடியாது. அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருப்பவர்களையும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.
தமிழகத்தில் ஒரு கருத்துப்பொறி வெளிப்படுவதற்கு முன்பே இணையத்தில் தமிழர்கள் கருத்துச் சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். அவ்வகையில் தமிழக அரசு நடத்த உள்ள தமிழ்ச்செம்மொழி, தமிழ் இணைய மாநாடு பற்றி இணையத்தில் பலரும் பலவகையில் உரையாடி வருகின்றனர். அதில் ஒன்று தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய உரையாடலாகும்.
தமிழ் எழுத்துகள் காலந்தோறும் மாறி வந்துள்ளன என்பது வரலாறு. பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், பனை ஓலைகள், அச்சு, கணிப்பொறி என்று பயன்பாட்டுப் பொருளுக்கு ஏற்பத் தமிழ் எழுத்துகள் வரிவடிவ வேறுபாட்டுடன் எழுதப்பட்டு வருகின்றன. தொல்காப்பியர், வீரமாமுனிவர், பெரியார் காலத்தில் தமிழ் எழுத்துகள் தேவை கருதி வடிவ மாற்றங்களைச் சந்தித்துள்ளன.
பழைமைக்குப் பழைமையாக விளங்கும் தமிழ் புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் மொழியாகவும் விளங்குகிறது. கல்வெட்டில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் கணிப்பொறி வந்த பிறகு எந்த வகையான இடையூறும் இன்றி அதில் பயன்பாட்டுக்கு வந்தது. கணிப்பொறி அறிமுகமான சூழலில் தமிழார்வம் உடைய பொறியாளர்கள் சிலர் கணிப்பொறிக்கு ஏற்பத் தமிழ் எழுத்து வடிவங்களை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். ஆனால் அறிஞர் வ.சுப.மாணிக்கம் போன்றவர்கள் இதனை எதிர்த்தனர்.
தமிழ் எழுத்தைத் திருத்த வேண்டும் என்பவர்கள், தந்தை பெரியார் திருத்தி எழுதியதை முன்னுதாரணமா கக் காட்டுகின்றனர். பெரியார் ண,ல,ள,ற,ன என்ற ஐந்து எழுத்துகளும் ஆ,ஐ.ஒ,ஓ, என்னும் நான்கு எழுத்துகளுடன் இணைந்த(ணா,ணை,ணொ,ணோ,லை, ளை,றா, றொ,றோ,னா,னை,னொ,னோ என்று ) 13 எழுத்து வடிவங்களைச் சீர்மைப்படுத்தினார். இது சீர்மைப்படுத்தம் ஆகும். முன்பே பெரியார் எழுத்துத் திருத்தம் தேவை என்று வலியுறுத்தியதுடன் அதனை 1935 முதல் தம் விடுதலை ஏட்டில் நடைமுறைப்படுத்தினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 1978 இல் தமிழ்நாட்டு அரசு தந்தைபெரியாரின் வடிவ மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஓர் ஆணையிட்டது.
அதன் பிறகு எந்த மாற்றமும் வேண்டாம் என்பது தமிழறிஞர்களின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஆனால் சில அறிஞர்கள் இ,ஈ,உ,ஊ எழுத்துகளில் மாற்றம் வேண்டும் எனவும் அவ்வாறு மாற்றினால் 4 x 18 = 72 எழுத்துகளில் சீர்மை காணப்படும் எனவும் வாதிடுகின்றனர். ஆனால், இதைச் சீர்மை என ஏற்றுக்கொள்ள முடியாது. இது முற்றாக மாற்றம் ஆகும். இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.நாம் எழுதும் சொற்களில் இவ்வகை எழுத்துகள்தான் (அதாவது கி,கீ,மு,மூ) அதிகம் புழங்குகின்றன. இவ்வாறு வரும் 72 எழுத்துகளைப் புதிய குறியீடுகளால் எழுதத் தொடங்கினால் கற்றவர்களால் தமிழைப் படிப்பதே இயலாததாகிவிடும். புதியவர்கள் எப்படித் தமிழ் கற்பார்கள்?ஆகவே, சீர்மைக்கும் மாற்றத்திற்கும் அறிஞர்கள் வேறுபாடு உணர வேண்டும்.
இவ்வாறு முப்பதாண்டுக் காலம் எழுத்துத்திருத்தம் வலியுறுத்திவரும் அறிஞர்கள் எதிர்வரும் செம்மொழி மாநாட்டில் தங்கள் விருப்பத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றனர். இவர்களை உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களில் பெரும் பிரிவினர் இணையம் வழியாகக் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொருவரும் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற போர்வையில் திருத்த முனைந்தால் தமிழ்மொழியின் அமைப்பு கட்டுக்குலையத் தொடங்கும் எனவும் இத்தகு செயலால் இதுவரை அச்சான நூல்களைப் படிப்பதில் மிகப்பெரிய சிக்கல் எழும் என்கிற கருத்து வலியுறுத்தப்படுகிறது. எளிமைப்படுத்த என்று முனைந்து தமிழ் வளர்ச்சிக்கு இடையூறு செய்துவிடக்கூடாது என்கிற நியாயமான அச்சத்தையும் பல அறிஞர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சீன, சப்பான் மொழிகள் சிக்கலான குறியீடுகளையும் அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. அவர்கள் இதுபோன்ற திருத்த வேலைகளில் ஈடுபடாமல் உலகில் வெளிவரும் அறிவு நூல்களை உடனுக்குடன் மொழிபெயர்க்கும் வகையிலும் மொழிபெயர்க்கப்பட்டவற்றை மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் வகையிலும் செயல்படுகின்றனர். தாய்மொழிவழிக் கல்விக்கு அங்கெல்லாம் முதன்மையிடம்தான். ஆனால் இங்கு அந்த நிலையில்லை.
பெரும்பாலான தமிழறிஞர்கள் கணிப்பொறி நுட்பம் அறியாதவர்களாக இவ்வளவு காலமும் இருந்ததால் கணிப்பொறிக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்கிற முழக்கம் முன்பு காதுகொடுத்துக் கேட்கப்பட்டது. இம்முழக்கம் இப்பொழுது வலுவிழந்துவிட்டது. ஏனெனில் தமிழறிஞர்கள் இப்பொழுது மடிக்கணினியுடன் வலம்வரத் தொடங்கிவிட்டனர். மதுரையில் அமர்ந்தபடி ஒரு பேராசிரியர் அமெரிக்காவில் சிக்காகோ பல்கலைக்கழக ஆய்வாளருக்குச் சிலப்பதிகாரம் நடத்தும் அளவிற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். எனவே தமிழ் எழுத்துத் திருத்தம் என்றவுடன் இது கணிப்பொறி தெரிந்தவர்கள் எடுக்க வேண்டிய முடிவு என்கிற காலம் மலையேறிவிட்டது. தமிழும்,மொழியியலும், கணினியும், இணையமும் அறிந்த தமிழ்ப்பேராசிரியர்களைக் கேட்டு எடுக்க வேண்டிய முடிவாகிவிட்டது.
கனடா நாட்டில் வாழும் அறிஞர் ஈழத்துப்பூராடனார்(அகவை 82) முதன்முதலாகக் கணிப்பொறி கொண்டு அச்சிட்டு நூல் வெளியிட்டவர் (1984).அவர் நூற்றுக்கணக்கான நூல்களைப் பழைய எழுத்து முறையிலேயே இன்றும் வெளியிட்டு வருகிறார்.இனியும் தொடர்ந்து வெளியிட உள்ளதாகவும் எழுத்துச் சீர்திருத்தத்தால் அச்சிடும் இடம்,தாளின் அளவு,செலவு அதிகரிக்குமே தவிர வேறொரு பயனும் இல்லை என்கிறார். பிற நாடுகளில் நூலகங்களில் உள்ள நூல்களைப் படிக்க ஆள் இல்லாமல் போவார்கள் என்று குறிப்பிடும் அவர் இன்று கல்வெட்டுகளை,ஓலைச்சுவடிகளைப் படிக்க ஆள் தேடுவதுபோல் எதிர்காலத்தில் தமிழ் நூல் படிப்புக்கு ஆள்தேடும் நிலையைத் தமிழுக்குப் புதிய எழுத்துச்சீர்திருத்தம் உண்டாக்கிவிடும் என்று எச்சரிக்கிறார்.
எழுத்துத் திருத்தத்தில் கவனம் செலுத்துவதற்கு மாறாக நம் இணையப்படைப்புகள் உலகம் முழுவதும் செல்வதால் அதற்கேற்ற ஒருங்குகுறியில்(யுனிகோடு)கவனம் செலுத்த வேண்டும். தரப்படுத்தப்பட்ட எழுத்துகளில் இணையத்தில் இருக்கும் படைப்புகள் யாவும் ஒருங்குகுறிக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும். குறிப்பாகத் தமிழர்களின் பொதுச்சொத்தான தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தளம் முதலில் ஒருங்குகுறிக்கு மாறவேண்டும். அதனை அடுத்துத் தமிழக அரசின் தளம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தளம் யாவும் உடனடியாக ஒருங்குகுறிக்கு மாற வேண்டும்.
ஏழாண்டுகளாக(2003) ஒருங்கு குறி பயன்பாட்டுக்கு வந்து உலகெங்கும் இவ்வகை எழுத்துகள் பயன்பாட்டில் இருப்பதைப் புறக்கணிக்கக்கூடாது. தரப்படுத்தப்பட்ட எழுத்துகள் ஒருங்குகுறிக்கு மாற்றுவதற்கு ஆகும் காலம் மிகவும் குறைவாகும். செலவு இல்லை என்றே சொல்லலாம். அரசும் அனைத்துத் துறையினரும் தமிழ் ஒருங்குகுறி எழுத்தில்தான் அச்சிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் தமிழ் வளங்கள் உலகம் முழுவதும் பரவும்.எனவே உலகத் தமிழர்களுக்கு இனிப்பான செய்தி தர அரசு நினைத்தால் ஒருங்குகுறியை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும்.
தமிழகத்தில் புற்றீசல் போல ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகிவிட்டன. அனைத்துப் பிள்ளைகளும் ஆங்கில நூல்களைப் படிக்கின்றனர். அவ்வாறு இருக்கத் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.அதனையும் இல்லாமல் செய்யும் நிலைக்கு எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்துவிடும் எனத் தமிழ்ப்புலவர்கள் அஞ்சுகின்றனர்.எனவே எழுத்துத்திருத்தம் பற்றி இனி யோசிக்கத் தேவையில்லை. எழுதப்பட்டுள்ள நூல்களைப் படிக்க தமிழ்வழிப் பள்ளிகளை அரசு நடத்த வேண்டும் என்பதும் தமிழ்வழிக் கல்விக்கு அரசு ஆணையிடவேண்டும் என்பதும் உலகச்செம்மொழி மாநாட்டின் குறிக்கோளாகவும் அறிவிப்பாகவும் இருக்க வேண்டும் என்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்னும் பழைய எழுத்துவடிவில் எழுதுவதையே வழக்கமாகவும்,வசதியாகவும் நினைக்கும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்று கூறி இப்பேச்சுக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் எழுத்துச்சீர்திருத்தம் தொடர்பிலான பாடம்
நனி நன்றி: தமிழ்ஓசைநாளிதழ்,சென்னைப் பதிப்பு(31.01.2010)
1.அறிஞர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் பேச்சு
2.எழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப்போக்கு,கனடாவில் வாழும் பேராசிரியர் செல்வா கட்டுரை இங்கே
3.தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத்துச்சீர்திருத்தம் பற்றி இங்கே
2திரு.இரவியின் கட்டுரை இங்கே
4.மலேசியா திரு.சுப.நற்குணன் கட்டுரை இங்கே
5.தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய கட்டுரையறிய
எழுத்து மாற்ற வரலாறு என்ற பகுதியைப் பார்க்கவும்
6.திருவாளர் பெரியண்ணன் சந்திரசேகரன் அவர்களின் அரிய கட்டுரை
7.கணியத்தமிழ் நிறுவனம் வா.செ.கு எழுத்துருக்கான அறிவிப்பு
21 கருத்துகள்:
தமிழில் தமிழ் மரபுக்கு இசைய புதிய வரிவடிவங்கள் எழுத முடியாது
அதனால் எந்த மாற்றமும் தமிழின் அழகை கெடுக்கும்
ஒருகால், நாலு சுழி நகரம் கண்டுபிடிக்கலாம்
ஜூன் ஜூலை போல் குகரத்துக்கு போட்டால் காண பொறுக்காது
அன்பின் இளங்கோவன்,
கட்டுரைக்கு நன்றி. பின்வரும் ஆங்கிலக் கட்டுரைக்கும் சுட்டி கொடுங்கள். இதை எழுதிய திரு. பெரியண்ணன் சந்திரசேகர் ஆங்கிலம், தமிழ், சமற்கிருதம் போன்ற மொழிகளை ஆய்வு நோக்கில் படித்து வருபவர்.
http://perichandra.wordpress.com/2010/01/05/tamil-script-reform-its-vacuity-next-to-the-chinese-script/
குழந்தைகளும், வெளிநாட்டவர்களும் தமிழ்மொழியை எளிதாகக் கற்பதற்கு இம்மாற்றம் செய்ய விரும்புகிறார்களாம். இதைப் போல ஒரு அரைவேக்காட்டுத் தனமான ஒரு காரணத்தைச் சொல்ல முடியாது. கடந்த ஏழாண்டுகளாக அமெரிக்காவில் வார இறுதியில் நாங்கள் நடத்தும் தமிழ்ப் பள்ளியில் இங்கு பிறந்து வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறேன். என்னைப் போலவே நிறையப் பேர் அமெரிக்காவின் பிற பகுதிகளில் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். யாரை வேண்டுமானாலும் கேட்டு உறுதி செய்து கொள்ளலாம்.
இங்குள்ள குழந்தைகள் 40 - 50 மணி நேரப் பயிற்சியில் பெரும்பாலான தமிழ் எழுத்துக்களை எளிதாகக் கற்றுக் கொள்கின்றனர். தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதற்குத் தடையாக இருப்பதாக எந்தக் குழந்தையும் எழுத்துக்களைக் குறையாகச் சொன்னதில்லை. பெற்றோர்கள் தம் பிள்ளைகளுடன் தமிழில் பேசாமலிருப்பதே முக்கியத் தடையாகும். தும்பை விட்டு வாலைப் பிடிக்க விரும்புகிறார்கள் குழந்தைசாமி போன்ற அறிஞர்கள்.
தமிழைப் பயிற்று மொழியாகப் படித்து வரும் வசதியற்ற நலிந்த பிரிவு மானவர்களையே இப்புரட்டுச் சீர்திருத்தம் பாதிக்கும். குழந்தைசாமிகளின் பேரன் பேத்திகளையல்ல.
'தமிழுக்கு நலம் செய்வதாகப் போலிப் பரப்புரைகளின் வழியாக வரலாற்றில் தங்கள் பெயர் பதியவேண்டும் என்பதில் சிலருக்கு இருக்கும் பேராசையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும்."' என்ற சுப. நற்குணனின் கருத்தையே நானும் குறிப்பிட விரும்புகிறேன்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
`எழுத்துச் சீர்திருத்தம்' குறித்து ஒரு...:
http://nanavuhal.wordpress.com/2010/01/12/kanavu-5/
தமிழ் எழுத்துகளில் இப்போது செய்யப்படவுள்ள மாற்றங்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதாக பயனளிப்பதாக இல்லை. மாறாக, இந்த மாற்றத்தினால், தமிழ்மொழிக்குப் புதியதொரு நெருக்கடி ஏற்படப் போவது உண்மை.
இன்றைய நடைமுறையில் பயன்படுத்தப்படும் தமிழ் வரிவடிவம் மிகவும் செம்மையாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது என்பதே உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் பொதுவான கருத்தாகும்.
மேலும், கணினி - இணையம் முதலான தொழில்நுட்பத் துறைகளிலும் தமிழ் எழுத்துகளின் பயன்பாட்டுக்கு உரிய நுட்பங்கள் வல்லுநர்களால் செயற்படுத்தப்பட்டுவிட்டன.
இந்தச் சூழலில், இப்போது செய்யப்படும் எழுத்து மாற்றமானது கண்டிப்பாகத் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் வேகத்தையும் மட்டுப்படுத்தும் அல்லது முடக்கிப்போடும்.
தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்துவதில் இருந்த பல்வேறு சிக்கல்கள் களையப்பட்டுவிட்ட இன்றைய சூழலில், இன்னும் சில சிரமங்கள் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, தமிழ் எழுத்துகளை மாற்ற நினைப்பது புதிய வகையிலான பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் புதிய வகை எழுத்து மாற்றத்தை, அயலகத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போனால் தமிழின் நிலைமை என்னவாகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
தமிழர்கள் உலகம் முழுவதும் சிதறி இருந்தாலும் மொழியாலும் தமிழ் எழுத்தாலும் ஒன்றியிருக்கிறார்கள்; தொடர்பு கொண்டிருக்கிறார்கள்; கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.
தமிழ் எழுத்துகளில் செய்யப்படும் மாற்றம் தமிழகத் தமிழர்களையும் அயலகத் தமிழர்களையும் அன்னியப்படுத்திவிடக்கூடும்.
தமிழ்மொழியிலிருந்து பிரிந்து இன்று கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என பல மொழிகள் உருவாகி, மொழி வழியாகத் தனித்தனி இனமாகி பிறகு தமிழுக்கும் தமிழருக்கும் பகையாகி இருக்கின்ற பரிதாப நிலைமை போதாதா?
உலகத் தமிழர்களை நாடுவாரியாக சிறுபான்மை இனமாகப் பிரித்துப்போட்டு சிதறடிக்கும் சூழ்நிலை நமக்குத் தேவையா?
அடிப்படையில் தமிழ்க் கருத்தாடல் வளர உதவிவருகிற யூனிக்கோடு எழுத்துக்கள் உகர, ஊகார உயிர்மெய்களை உடைத்தே வைத்துள்ளது.
உ-ம்:
”மேடைகளிலும், அச்சிலும் பரவுவதற்கு முன்பே இணையத்தில் இது தொடர்பான விவாதங்கள் வேகமாக உலவி வருகின்றன. இணையம் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவுவதால் சென்னை,பெசண்டு நகரில் நடப்பதைக் கோடம்பாக்கத்தில் இருப்பவர்கள் அறிவதற்கு முன்பே உலகத் தமிழர்கள் தெரிந்துகொள்கின்றனர்.”
அவ்வாறும் எழுதுகிற மரபு பல ஆண்டுகளாக இருக்கிறது. உ-ம்: கொடுமுடி சண்முகனார் கட்டுரைகள்.
தமிழின் எழுத்து அமைப்பை அறியவும், எளிமையாய் எழுதவும்
விரும்புவோர் அவ்வாறு படிக்க வசதி அரசு செய்யலாம். உகர உயிர்மெய் வடிவம் பற்றி வேறு வடிவங்கள் வேண்டுமானால் சிந்திக்கலாம்.
உகர, ஊகார உயிர்மெய் எழுத்துச் சீர்மையிலும் ஆர்வம் கொண்ட தமிழறிஞர்கள் பலர் உண்டு.
உ-ம்: பெரியார், புலவர் குழந்தை, கொடுமுடி சண்முகன், பேரா. தி. முத்துக்கண்ணப்பர், வா.செ.கு. புலவர் செ. இராசு, ....
மு. வ., ம.பொ.சி., கி.வா.ஜ. போன்றோரும் உ, ஊ உயிர்மெய் எழுத்துக்களை உடைத்தெழுத வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
தினமணி நாளிதழைத் தமிழ்ப்படுத்திய ஐராவதம் மகாதேவன் ஆசிரியராய் இருந்தபொழுது நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்க்கவும்.
அப்பொழுதே, உயிர்மெய்ச் சீர்மை முழுமையடைய நல்ல ஆதரவு இருந்துள்ளது.
வா.செ.கு. போன்றோர் முயற்சி எடுத்து 1978-ல் மாண்புமிகு எம்ஜிஆர் சில சீர்மைகளைச் செய்தது புரட்சிக்கு வித்திட்டது. பழைய எழுத்து வேண்டும் என்றும் ஓரிருவர் இன்று சொல்லலாம். ஆனால், நடக்குமா?
இப்பொழுது 50-60 மணி நேரம் தமிழ் எழுத்துக்களைக் கற்கும் நேரம் உகர, ஊகாரம் பிரிந்து தெரிகிறபோது பலமணி நேரம் கற்பிக்கக் குறைகிறது.
அதைவிட முக்கியம், உ, ஊ உயிர்மெய்களுக்கு 2 குறியீடுகள் தரும்போது குழந்தைகள் வடிவத்தை மறப்பதில்லை. தமிழ் எழுத்தை மறப்பவர்கள் முதலில் குழம்புவது - உ, ஊ உயிர்மெய்களை மறந்தே திணறுகிறார்கள் என்று கல்வியாளர்கள் பதிவு செய்கிறார்கள்.
அரைக்கிணறு தாண்டிய முயற்சி
போல் 1978 சீர்மை நிற்கிறது. பெரிய முன்னேற்றம் தான் 1978 சீர்மை. உ, ஊ உயிர்மெய் சீராகும்போது அது முழுமை அடையும். வேண்டுவோர் பயன்படுத்திக் கொள்ளட்டும்.
சிறுபான்மையாக இருப்பினும், அம்முறையை வசதி, எளிமை கருதி
பயன்படுத்துவோரை தடைசெய்யக் கூடாது. பயன்படுத்த விருப்புடையார் பயன்படுத்த வழிமுறைகள் செய்யலாம் என்பது என் நிலைப்பாடு.
நா. கணேசன்
தமிழுக்கு நலம் செய்வதாகப் போலிப் பரப்புரைகளின் வழியாக வரலாற்றில் தங்கள் பெயர் பதியவேண்டும் என்பதில் சிலருக்கு இருக்கும் பேராசையே இதற்கு முக்கிய காரணமாக இருக்கக் கூடும்."' என்ற சுப. நற்குணன் அவர்களின் கருத்தையே நானும் குறிப்பிட விரும்புகிறேன்.
இது தான் சரியான கருத்து. சங்க இலக்கியங்களில் இருந்து பயின்று வரும் தமிழை ஆளாளுக்கு மாற்றுகிறேன் பேர்வழி என்று விளையாடுகிறார்கள்.பெரியார் சீர்திருத்தமே எங்களுக்கு குழந்தையில் இருந்து பழகிவந்த எழுத்திலிருந்து மாற சிரமமாக இருந்தது.தமிழுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைக்கட்டுமே.அதைவிட்டு இது வீண் வேலை
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்
(1)
ஐயா நா.கணேசன் அவர்களின் கருத்துகள் தொடர்பாக மறுமொழிய விழைகிறேன்.
1.//அடிப்படையில் தமிழ்க் கருத்தாடல் வளர உதவிவருகிற யூனிக்கோடு எழுத்துக்கள் உகர, ஊகார உயிர்மெய்களை உடைத்தே வைத்துள்ளது.//
உண்மைதான். ஆயினும் யூனிக்கோடு எழுதுவோரில் எத்தனை பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர்? அப்படியே பயன்படுத்தினாலும் அவர்கள் பெரும்பான்மையினரா?
அதே யூனிக்கோட்டில் உகர ஊகாரங்கள் மூலவடிவிலேயே இருக்கிறதே - வருகிறதே.
உ, ஊ காரங்களை மூலவடிவில் எழுத தொழில்நுட்பம் கண்டுவிட்ட பின்னர், அதனை மாற்றி இன்னொரு வடிவமைப்புச் செய்வதற்குக் காலத்தை விரயமாக்குவது தேவையா?
2.//இப்பொழுது 50-60 மணி நேரம் தமிழ் எழுத்துக்களைக் கற்கும் நேரம் உகர, ஊகாரம் பிரிந்து தெரிகிறபோது பலமணி நேரம் கற்பிக்கக் குறைகிறது.//
எழுத்தை வாசிப்பதற்கு நேரம் குறைகிறது என்று புள்ளி விவரம் காட்டுவோர், அவ்வெழுத்துகளை எழுதுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளுவதை கூறாமல் மறைப்பது ஏன்?
ஐயா.வா.செ.கு முன்மொழியும் புதிய அமைப்பிலான உ, ஊ எழுத்துகளை எழுதுவதற்கு அதிக நேரம் மட்டுமல்ல அதிகமான இடத்தையும் எடுத்துக்கொள்கிறது.
3.//அரைக்கிணறு தாண்டிய முயற்சி
போல் 1978 சீர்மை நிற்கிறது. பெரிய முன்னேற்றம் தான் 1978 சீர்மை. உ, ஊ உயிர்மெய் சீராகும்போது அது முழுமை அடையும்.//
உண்மை. உ, ஊ சீர்மை குறித்து சிந்திப்பது ஏற்புடையதே. சீர்மை செய்த பிறகு சீராக இருப்பது மட்டும் முக்கியமல்ல. எளிதாகவும் இயல்பானதாகவும் தமிழ் வரிவடிவத்திற்கு ஏற்புடையதாகவும் இருக்க வேண்டியது இன்னும் முக்கியம் என்று கருதுகிறேன்.
1978 சீர்மையானது அப்படி இருந்ததால்தான் அது பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
4.//வேண்டுவோர் பயன்படுத்திக் கொள்ளட்டும்.//
5.//சிறுபான்மையாக இருப்பினும், அம்முறையை வசதி, எளிமை கருதி
பயன்படுத்துவோரை தடைசெய்யக் கூடாது. பயன்படுத்த விருப்புடையார் பயன்படுத்த வழிமுறைகள் செய்யலாம் என்பது என் நிலைப்பாடு.//
எல்லாவற்றுக்கும் பெரும்பான்மை தேடும் உலகில், இந்த விடயத்தில் சிறுபான்மையைத் துணைக்கு அழைப்பது வேடிக்கைதான்.
அவரவர் விருப்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற சிந்தனை மொழிநலன் கொண்டதாகத் தெரியவில்லை.
தனிப்பட்ட ஒருவரும் தனக்கு எளிமையாக - வசதியாக - ஏற்றதாக உள்ளது என்று சொல்லிக்கொண்டு ஆளாளுக்கு எழுத்துச் சீர்மை செய்துகொள்ளலாம் என்றால்... நான் ஒரு சீர்மையைச் சொல்லட்டுமா?
தமிழில் எதற்கு 247 எழுத்து? எதற்கு வெவ்வேறு வடிவ உகரங்கள்? ஊகாரங்கள்?
அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு அடிப்படை எழுத்தாகிய 30ஐ மட்டும் வைத்துக்கொள்வோம்.
அதிலும், உயிர்நெடில்கள் 7ஐயும் (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ) கழற்றிவிட்டு 23 எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு எழுதலாம்.
இதோ இப்படி:-
அம்ம்அஅ
அஅட்உ
இல்அய்
ஈட்ட்இ
உர்அல்
உஉத்அல்
அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊதல் என எழுதுவதை மேலே காட்டியது போல எழுதலாமா?
அந்த எழுத்து அனைத்தும் கணினியில் சிக்கல் இல்லாமல் வருமே?
எழுத்துகள் கணிசமாகக் குறைந்து விடுமே?
படிக்கும் நேரம் படாரென்று சுருங்கிவிடுமே?
எழுதும் நேரம் 'மாத்திரை' அளவுக்குக் குறைந்துவிடுமே?
இது ஏதோ விதண்டாவாதம் போல் இருக்கலாம். ஆனால், நாளை ஆட்சிக் கட்டிலுக்கு வருவோர் 'தன்னுடைய பெயர் வரலாறு ஆகவேண்டும் என்ற தன்னல எண்ணத்தில்' இதனைச் செய்ய மாட்டார் என்பது என்ன உறுதி?
(2)
3.//அரைக்கிணறு தாண்டிய முயற்சி
போல் 1978 சீர்மை நிற்கிறது. பெரிய முன்னேற்றம் தான் 1978 சீர்மை. உ, ஊ உயிர்மெய் சீராகும்போது அது முழுமை அடையும்.//
உண்மை. உ, ஊ சீர்மை குறித்து சிந்திப்பது ஏற்புடையதே. சீர்மை செய்த பிறகு சீராக இருப்பது மட்டும் முக்கியமல்ல. எளிதாகவும் இயல்பானதாகவும் தமிழ் வரிவடிவத்திற்கு ஏற்புடையதாகவும் இருக்க வேண்டியது இன்னும் முக்கியம் என்று கருதுகிறேன்.
1978 சீர்மையானது அப்படி இருந்ததால்தான் அது பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
4.//வேண்டுவோர் பயன்படுத்திக் கொள்ளட்டும்.//
5.//சிறுபான்மையாக இருப்பினும், அம்முறையை வசதி, எளிமை கருதி
பயன்படுத்துவோரை தடைசெய்யக் கூடாது. பயன்படுத்த விருப்புடையார் பயன்படுத்த வழிமுறைகள் செய்யலாம் என்பது என் நிலைப்பாடு.//
எல்லாவற்றுக்கும் பெரும்பான்மை தேடும் உலகில், இந்த விடயத்தில் சிறுபான்மையைத் துணைக்கு அழைப்பது வேடிக்கைதான்.
அவரவர் விருப்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற சிந்தனை மொழிநலன் கொண்டதாகத் தெரியவில்லை.
தனிப்பட்ட ஒருவரும் தனக்கு எளிமையாக - வசதியாக - ஏற்றதாக உள்ளது என்று சொல்லிக்கொண்டு ஆளாளுக்கு எழுத்துச் சீர்மை செய்துகொள்ளலாம் என்றால்... நான் ஒரு சீர்மையைச் சொல்லட்டுமா?
தமிழில் எதற்கு 247 எழுத்து? எதற்கு வெவ்வேறு வடிவ உகரங்கள்? ஊகாரங்கள்?
அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு அடிப்படை எழுத்தாகிய 30ஐ மட்டும் வைத்துக்கொள்வோம்.
அதிலும், உயிர்நெடில்கள் 7ஐயும் (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ) கழற்றிவிட்டு 23 எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு எழுதலாம்.
இதோ இப்படி:-
அம்ம்அஅ
அஅட்உ
இல்அய்
ஈட்ட்இ
உர்அல்
உஉத்அல்
அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊதல் என எழுதுவதை மேலே காட்டியது போல எழுதலாமா?
அந்த எழுத்து அனைத்தும் கணினியில் சிக்கல் இல்லாமல் வருமே?
எழுத்துகள் கணிசமாகக் குறைந்து விடுமே?
படிக்கும் நேரம் படாரென்று சுருங்கிவிடுமே?
எழுதும் நேரம் 'மாத்திரை' அளவுக்குக் குறைந்துவிடுமே?
இது ஏதோ விதண்டாவாதம் போல் இருக்கலாம். ஆனால், நாளை ஆட்சிக் கட்டிலுக்கு வருவோர் 'தன்னுடைய பெயர் வரலாறு ஆகவேண்டும் என்ற தன்னல எண்ணத்தில்' இதனைச் செய்ய மாட்டார் என்பது என்ன உறுதி?
நல்லவை எங்கிருந்தாலும் சிறப்புக் கிடைக்கும். தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.
எழுத்துகள் அதன் ஆழம் அறிவு என்ற எதுவும் எமக்கில்லை, கணிணியில் தமிழ் தொடர்பான மென்பொருள்கள் எழுதுகிறவன் என்ற முறையில் யுனிகோடில் 65000+ இடங்களிலிருந்து வெறும் 247 இடங்களை பெறாமல் விட்டுவிட்டு இப்போது அதற்காக எழுத்தையே மாற்றுகிறேன் என்பது செருப்புக்காக காலைவெட்டுவது போன்றது... இதனால் கிடைக்கப்போகும் கணிணி வழி பலன் என்ன? data storage, data transfer, data processing இது மூன்றும் தான் கணிணியில் செலவு வைப்பது, இவை மூன்றையும் எந்த அளவுக்கு எளிதாக்கி குறைக்கிறோம் என்பதுவே சிறந்த ஒன்று. இப்போது இந்த எழுத்து சீர்திருத்தத்தால் எமக்கு இந்த மூன்றும் குறையப்போகிறதா என்றால் data processingல் கிடைக்கும் மிகக்குறைந்த விழுக்காடு தவிர மற்றவைகளுக்கு நிச்சயம் இல்லை என்பதே விடையாக இருக்கும்போது எதற்காக இந்த சீர்திருத்தம்? எழுத்து சீர்திருத்தம் என்ற பெயரில் செய்யப்போகும் இதற்கு தயவு செய்து கணிணியை காரணமாக்காதீர்கள்... மெய்யாகவே கணிணி தமிழுக்காக உழைக்கிறோம் என்றால் தமிழக அரசினை பயன்படுத்தி 10 கோடி தமிழர்கள் பயன்படுத்தும் தமிழுக்கு யுனிகோடில் 247 எழுத்துகள் வாங்கி கொடுங்க... எனக்கும் பக்கம் பக்கமாக நிரல் எழுதாமல் மண்டையை உடைத்துக்கொண்டு லாஜிக் எழுதாமல் தமிழ் தொடர்பான அப்ளிகேஷன்கள் எழுதுவோம்
நல்ல பகிர்வு
வாழ்த்துக்கள்
-----
பார்க்க
முடி வெட்டினா மூளை வளருமா ,தமிழ பாத்துக்கறதுக்கு நாங்க இருக்கோம் .
http://nandunorandu.blogspot.com/2010/01/blog-post_1990.html
சீனமொழி எழுத எளிமைப் படுத்தப் பட்ட
வரிவடிவம் சிங்கப்பூரில் பயன்படுத்த
அரசு ஆணையிட்டுள்ளது. ஜப்பான் எழுத்துக்களில்
ஹிரகானா, கதகானா என்ற இரண்டு வடிவங்கள்
உள்ளன. தமிழில் உ,ஊ உயிர்மெய் பிரித்தும்,
பிரிபடாமலும் கற்கலாம் என்பதை அறிந்துகொள்ள
நேரம் அதிகம் எடுக்காது.
சுப. நற்குணன் ஐயா சொல்கிறார்:
>அதிலும், உயிர்நெடில்கள் 7ஐயும் (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)
>கழற்றிவிட்டு 23 எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு எழுதலாம்.
> இதோ இப்படி:-
> அம்ம்அஅ
> அஅட்உ
> இல்அய்
> ஈட்ட்இ
> உர்அல்
> உஉத்அல்
> அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊதல் என எழுதுவதை
> மேலே காட்டியது போல எழுதலாமா?
> அந்த எழுத்து அனைத்தும் கணினியில் சிக்கல் இல்லாமல் வருமே?
ஒரே கேலிதான், போங்கள் :)
இந்திய மொழி எழுத்துக்கள் எதிலும், தமிழ் உட்பட,
உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்கள் உள்ளன.
உயிர்மெய் எழுத்து உருவாக துணைக்குறி ஒன்றுடன்
எழுதுதல் இலக்கணம்.
பழைய றா, ணா, ளை, ... எல்லாவற்றுக்கும் துணைக்குறி
பிரித்து வைத்தோம். றா = ற்ஆ என்று எழுத யார் சொன்னார்.
நூறு பேர் பலவிதமாகச் சொன்னாலும், எது சாத்தியமோ
அதைச் செய்யலாம். உதாரணமாக, தமிழர் உ,ஊ உயிர்மெய்
எழுத்துக்கள் இலக்கணம் கூறுவதுபோல் சார்பெழுத்துக்கள்
என்று கற்பிக்க உடைத்தெழுதுவதும் வேண்டுவோர் செய்யலாம்
என்ற அரச அறிக்கை வெளியிடலாமே. அம் மரபும் பெரியார்
காலமுதலே உள்ளது. விடுதலை இன்றளவும் கடைப்பிடிக்கிறது.
தமிழர்க்கு வள்ளுவர் புத்தாண்டு, இந்து சமயப் புத்தாண்டு
என்று இரு புத்தாண்டு தினங்கள் உள்ளன. மேலும் ஒன்று:
தமிழில் 247 எழுத்துக்கள், நடைமுறையில் 313 எழுத்துக்கள்
இருப்பதை அவதானிக்கவும்.
நன்றி
நா. கணேசன்
காலம் உணர்ந்து வந்திருக்கும் முக்கியமான கட்டுரை.
//தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது//
இந்த அறிவிப்புக்கான தொடுப்பு, அல்லது உள்ளடக்கம் கிடைக்குமா?
நன்றி.
-இரவி
(1)
//சுப. நற்குணன் ஐயா சொல்கிறார்:
>அதிலும், உயிர்நெடில்கள் 7ஐயும் (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)
>கழற்றிவிட்டு 23 எழுத்தை மட்டும் வைத்துக்கொண்டு எழுதலாம்.
> இதோ இப்படி:-
> அம்ம்அஅ
> அஅட்உ
> இல்அய்
> ஈட்ட்இ
> உர்அல்
> உஉத்அல்
> அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊதல் என எழுதுவதை
> மேலே காட்டியது போல எழுதலாமா?
> அந்த எழுத்து அனைத்தும் கணினியில் சிக்கல் இல்லாமல் வருமே?
ஒரே கேலிதான், போங்கள் :)//
இந்தக் கேலியை உணர்ந்துகொண்டுள்ள ஐயா நா.கணேசன் போன்றோர்,
இணையத்தில் வலம் வரும் எழுத்துச் சீர்மை குறித்த 30 நிமிட காணொளியில் கொட்டிக்கிடக்கும் கேலியையும் கண்டிப்பாக உணர்ந்துகொள்ள முடியும்.
அது குறித்தும் கருத்து சொன்னால் நல்லது.
(2)
இன்று தமிழ்க்கல்விக்கு ஏற்படுள்ள தேய்மானத்திற்குக் தமிழ் எழுத்து வடிவங்கள் / குறியீடுகள் தாம் முழுக்காரணம் என்பதுபோல தோற்றத்தை உண்டாக்கி..
எழுத்தைச் சீர்திருத்தினால், தமிழ் கற்பது எளிதாகிவிடும்!
எழுத்தை மாற்றினால், உலகம் முழுவதும் தமிழர்கள் ஓடிவந்து ஒன்றுகூடி தமிழ் படிப்பார்கள்!
எழுத்து சீர்மை நடப்புக்கு வந்தால், தமிழை மறந்துவிட்ட மொழிசியசு, ரியூனியன் நாட்டுத் தமிழர்கள் ஆர்வம் பொங்கப் பொங்கத் தமிழ் படிப்பார்கள்!
இ,ஈ,உ,ஊ ஆகிய எழுத்துகளை சீர்மை செய்தால், உலக மொழிகளுக்கு நிகராகத் தமிழ் வளர்ந்துவிடும்!
எழுத்துச் சீர்மை நடப்புக்கு வந்தால், கணிமை உலகில் தமிழ் கொடிகட்டி பறக்கும்!
என்றெல்லாம் பளபளப்பு காட்டி.. கவர்ச்சி ஊட்டி.. மெருகு ஏற்றி.. மேல்பூச்சு பூசி.. எழுத்துச் சீர்மை என்ற பெயரில் பாரிய திட்டம் முன்னெடுத்து நடத்தப்படுகிறது.
இதனால், தொன்மைத் தமிழின் தொடர்ச்சி துண்டிக்கப்படும்.. தொப்புள்கொடி உறவு அறுபடும்.. தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சிகள் சூம்பிப் போகும்.
இதனை நன்கு உணர்ந்தே, இப்போது இந்தச் சீர்மை முன்மொழியப்படுகிறது.
(ஒருவேளை வலிந்து அமுல்படுத்தப்பட்டாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை)
//தமிழர்க்கு வள்ளுவர் புத்தாண்டு, இந்து சமயப் புத்தாண்டு
என்று இரு புத்தாண்டு தினங்கள் உள்ளன.//
ஒரு மொழிக்கு இரண்டு வகையான வரிவடிவம் இருப்பது ஆக்கத்திற்கு வழிசெய்யுமா?
//தமிழில் 247 எழுத்துக்கள், நடைமுறையில் 313 எழுத்துக்கள்
இருப்பதை அவதானிக்கவும். //
தமிழுக்குள் நடைமுறையில் 313 எழுத்து என்றால், கிரந்த இகர, ஈகார, உகர, ஊகாரங்களுக்கு ஐயா.வ.செ.கு அவர்களின் எ.சீர்மை விரிவு செய்யப்படாமை ஏன்?
கிரந்தம் அப்படி இருக்க வேண்டும். ஆனால், தமிழ் சீரழிந்தால் தாழ்வில்லையா?
தெளிந்தவர்கள் தெளிவு சொல்லவும்.
நல்ல கட்டுரை. நாக.இளங்கோவனின் பதிவில் கண்ட http://nayanam.blogspot.com/2010/02/3.html
தொடுப்பிலிருந்து வந்தேன்.
//மெய்யாகவே கணிணி தமிழுக்காக உழைக்கிறோம் என்றால் தமிழக அரசினை பயன்படுத்தி 10 கோடி தமிழர்கள் பயன்படுத்தும் தமிழுக்கு யுனிகோடில் 247 எழுத்துகள் வாங்கி கொடுங்க... எனக்கும் பக்கம் பக்கமாக நிரல் எழுதாமல் மண்டையை உடைத்துக்கொண்டு லாஜிக் எழுதாமல் தமிழ் தொடர்பான அப்ளிகேஷன்கள் எழுதுவோம்//
வழிமொழிகிறேன். வரிசைக்கிரமமாக 247 + கிரந்த வடிவங்கள் பெற்றால் தமிழ் நிரல்கள் எழுதுவது மிகவும் எளிதாகும்.
//
இணையத்தில் வலம் வரும் எழுத்துச் சீர்மை குறித்த 30 நிமிட காணொளியில் கொட்டிக்கிடக்கும் கேலியையும் கண்டிப்பாக உணர்ந்துகொள்ள முடியும்.//
அதைவிட்டு சிலநாட்களில் கற்றுக்கொள்ளக்கூடிய 9 வகை வடிவங்களை, 72 குறியீடுகள் என்று கணக்கிட்டு மலையாக்கி படம் காட்டுவது, மக்களை மடையர்களாக நினைப்பதுபோல் உள்ளது.
இருக்கும் தமிழை முதலில் வளர்க்கச் சொல்லுங்கள். அனைவரையும் பயன்படுத்த வையுங்கள்!
தமிழ் மொழி சம்பந்தப்பட்ட மென்பொருட்களை/தயாரிப்புகளை, இலவசமாக மக்களுக்கு எடுத்து செல்லட்டும், பிறகு சீர்திருத்தங்களை பற்றி கட்டாயம் யோசிக்கலாம்
//தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?// இல்லை.தேவையில்லை.தமிழர்களோட மூஞ்சி சீர்திருத்தம்,மூளை சீர்திருத்தம் தான் அவசர தேவை.
தமிழ் எழுத்துருக்களை மாற்றுவதெல்லாம்
வேண்டாத வேலை.!
இப்போதே பண்டைய தமிழ் எழுத்துகளை நம்மால் படிக்க இயலவில்லை..
அதனுடைய மாற்றமே இதற்குக் காரணம்.!
மாற்றம் தேவைதான்..ஆனால் அது இந்த வகையில் இருக்க வேண்டாம் என்பதே என் கருத்து! நன்றி!
முக்கியமாக செய்ய வேண்டிய நல்ல அரும்பணிகள் நாம் முன் கொட்டிக் கடக்க, இந்த 'மொழிச் சீர்த்திருத்தம்' என்ற போர்வையில் மொழியை இன்னும் சீரழிப்பது தேவைல்லாத ஒன்று. அரசியல் ஆதாயம் தேடும் ஒன்று. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் எதிர்ப்புப் பதிவிர்க்கும் ஆதரவாக எனது பதிவினை இங்கு மேற்கோளாக காட்ட விரும்புகிறேன்:
http://thamizhththendral.blogspot.com/2010/03/blog-post_4129.html
கருத்துரையிடுக