நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 22 ஜனவரி, 2010

பாவலர் மாநியின் குறளாயிரம்(அணிந்துரை)

மரபுமீறி எழுதினால் ஒரு சாகித்திய அகாதெமிப் பரிசிலோ, அரசின் உயர் பரிசில்களோ அல்லது தனியார் அமைப்புகள் வழங்கும் பரிசிலோ இப்பொழுதெல்லாம் கிடைத்துவிடுகிறது என்று இளைஞர்கள் பலரும் புதுப்பாவில் புகுந்து விளையாடும்(!)போக்கு தமிழ்ப்பா உலகில் நிலவுகிறது.பழந்தமிழ் இலக்கியங் களிலோ,பாரதி,பாவேந்தர்,பெருஞ்சித்திரனார்,தங்கப்பா,சுரதா,முடியரசன்,புலமைப்பித்தன்,காசி ஆனந்தன் போன்ற மரபறி புலவர்களின் நூல்களிலோ சிறிதும் பயிற்சியில்லாமல் நாளும் புற்றீசல் போல் புதுப்புது நூலட்டைகளில் வாழும் இப்போலிப் பாவலர்களின் எழுத்துகளைக் கண்டு மனம் சாம்பிக் கிடந்த எனக்கு அம்மா மாநி அவர்களின் குறளாயிரம் என்னும் நூல் படிக்கும் வாய்ப்பால் மகிழ்ச்சி ஏற்பட்டது.பாவேந்தர் பிறந்த மண்ணில் உயிரோட்டமாகக் குறட்பாவில் எழுதும் வல்லமையுடைய பெண்பாவலர் கண்டு உள்ளபடியே மகிழ்கிறேன்.

அகவை முதிர்ந்த அண்மைக் காலத்தில்தான் இவர்கள் அறிஞர் இரா.திருமுருகனார்,பாட்டறிஞர் இலக்கியன் போன்ற அறிஞர் பெருமக்களிடம் முறையாக யாப்பறிந்து பாடல்புனைய வந்துள்ளார்.எடுத்த எடுப்பில் கட்டளைக்கலித்துறை,கலி விருத்தம் என்று இவர் பேச்சில் யாப்புலகச்சொற்கள் புறப்பட்டு வருவதை உரையாடலில் கண்டு உவகையுற்றேன்.தொடர்ந்து பல மரபு நூல் படைக்கும் திட்டம் உள்ளதை அறிந்து நெஞ்சார வாழ்த்துகிறேன்.

குறட்பாவில் திருவளுவர் பெருமானுக்குப் பிறகு பலர் பாவினைப் புனைந்திருந்தாலும் எந்த நூலும் திருக்குறள் அளவிற்கு மக்களிடம் அறிமுகம் ஆகாமல் போய்விட்டன.என் பேராசிரியர் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் அருட்குறள் என்று ஒரு நூல் எழுதியுள்ளதையும் அறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் மாணிக்கக்குறளையும் பேராசிரியர் தங்கப்பா அவர்கள் குறள்வடிவில் ஒரு நூல் எழுதி வருவதையும் யான் அறிவேன்.நண்பர் ய.மணிகண்டன் அவர்கள் இத்தகு முயற்சியில் இறங்கியவர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தகுந்தது.

திருவள்ளுவர் இருந்திருந்தால் இந்த உள்ளடக்கத்தில்தான் குறட்பாக்களை எழுதியிருப்பார் என்று எண்ணும் அளவுக்கு மாநி அவர்கள் இருபது,இருபத்தொன்றாம் நூற்றாண்டு மக்கள் வாழ்க்கைக்கு முதன்மை வழங்கி இந்த நூலை எழுதியுள்ளார்.

மக்கள் வாழ்க்கையில் உள்ள பல்வேறு சிக்கல்களை நினைவூட்டும் முகமாகவும்,மாந்த வாழ்வைச் சிக்கலின்றி எவ்வாறு அமைத்துக்கொள்வது என்று வழிகாட்டும் வகையிலும் பல குறட்பாக்கள் உள்ளன.திருக்குறளின் கருத்துகளைத் தழுவியும் பல குறட்பாக்கள் உள்ளன.மற்ற அறிஞர் பெருமக்களின் நூல் செய்திகளை நினைவூட்டும் வகையிலும் பல குறட்பாக்கள் உள்ளன.

மக்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ள உடல்தேய்வு(எயிட்சு)நோய் முதல் ஞெகிழிகள் பயன்பாட்டால் இயற்கைச்சீரழிவு ஏற்படுகிறது என்பது வரையில் வாழ்க்கையை முதன்மைப்படுத்தும் பல குறட்பாக்களைத் தெளிந்த நடையில் இயற்றியுள்ளதைக் காணலாம்.மிகவும் பயிற்சி பெற்ற பாவல்லாருக்குதான் சுருங்கிய வடிவான குறட்பா யாப்பில் பாவடிக்க முடியும்.ஆனால் வளர்ந்து வரும் பாவலரான மாநி அவர்கள் சில தெறிப்பான குறட்பாக்களையும் உள்ளத்தில் பதியும் குறட்பாக்களையும் தந்துள்ளார்.

கடவுள்,வழிபாடு எனும் தலைப்பில் தொடங்கும் நூலில் வானம் நிலவு என்ற தலைப்புகளில் இயற்கை போற்றும் குறட்பாக்கள் உள்ளத்தில் தங்குகின்றன.

"அந்தியில் வந்திடும் அந்த நிலாவும்
பந்தியில் அப்பளமாய்ப் பார்"(23) எனவும்

"மின்மினிக் கூட்டமாய் மேல்வானில் விண்மீன்கள்
என்னே கலையின் எழில்"(24) எனவும்

"வானமே கூரையாய் வாழும் ஏழைக்குத்
தானமாய் நின்றது வான்"(30) எனவும்

"வெட்டி எடுத்த விரல் நகம் வானில்காண்
குட்டிப்பிறை நிலவின் கூன்"(33) எனவும்

இடம்பெறும் குறட்பாக்கள் மீண்டும் ஓர் அழகின்சிரிப்பை-சிலிர்ப்பை நமக்கு நினைவூட்டுகின்றன.

"ஓட்டைச் சுமந்துமே ஊர்ந்திடும் நத்தையென
ஏட்டைச் சுமக்கும் இளசு"(55)

எனும் குறட்பா இன்றைய பிஞ்சு மழலைகள் சுமக்கும் பொத்தகப் பொதிகளை நினைவூட்டி வருத்துகிறது.இக்குறட்பாவில் உவமை காட்டி விளக்கும் பாவலர் ஆசிரியராக இருந்து மாணவர்களை வளர்த்தெடுத்த தாயுள்ளத்தினர் என்பதால் இவரால் மிகச்சிறப்பாகப் படம்பிடிக்கமுடிகின்றது.

தமிழும் தமிழரும் பல வகையில் கலப்புண்டு கிடக்கும் சூழலில் தமிழில் பிறமொழிச்சொற்கள் கலப்பதைக் குறட்பாக்கள் சில கண்டிக்கின்றன.அதுபோல் தமிழர்கள் தங்கள் தலைப்பு எழுத்தைக்கூடத் தமிழில் பொறிக்காமல் பிறமொழியில் ஒப்பமிடுவதை வருத்தத்துடன் நூலாசிரியர் கண்டிக்கிறார்.

"செம்மைத் தமிழ்மொழியில் சேர்க்காதீர் வேற்றுமொழி"(65)
என்று ஆணையிடுவதிலிருந்தும்

"தமிழ்க்கை யெழுத்தா? தகுமா எனவே
தமிழரே கேட்டிடல் தாழ்வு"(66)

என்று பாடுவதிலிருந்தும் பாவலரின் தமிழுள்ளம் நமக்கு நன்கு விளங்குகிறது.

அரசுகள் தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் தமிழில் தம் ஊழியர்கள் கையொப்பமிடவேண்டும் என ஆணைகள் பிறப்பித்தும் எருமைத்தமிழர்கள் அசைந்துகொடுத்த பாடில்லை.சில தமிழாசிரியன்மாரே தமிழில் கைச்சாத்திடாத இழிநிலைமையை என்னென்பது?ஓர் மரபுவழி தமிழ்கற்ற குடும்பம் சார்ந்த ஓர் தமிழ்ஆசானே கையொப்பத்தை ஆங்கிலத்தில் இடுவதைக் காணும்பொழுது நெஞ்சு பதைக்கிறது.இவர்களிடம் உருவாகும் மாணவர்களுக்கு எங்கிருந்து தமிழ்ப்பற்று வரும்?

"கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க"என்ற பாவேந்தர் நடமாடிய மண்ணில் இத்தகு பேரவலம் நடப்பதுதான் நெஞ்சை அதிரச்செய்கிறது.பிறநாட்டார் யாரும் இதுபோன்ற செயலுக்கு நாணாமால் இருக்கம்மாட்டார்கள்.இவற்றையெல்லாம் கடிந்துரைப்பதில் இக்குறட்பாக்கள் வலிவுடன் இயங்குகின்றன.

தமிழினிமை பற்றி பாடும் பாவலர் மாநி அவர்கள்

"காவடியும் சிந்தும்,கவின்கண்ணிச் சந்தமும்
யாவரும் இன்புறும் யாப்பு"

என்று பாடுவதில் ஒரு நுட்பம் தங்கியிருப்பதை நாம் உணரவேண்டும். முனைவர் இரா.திருமுருகனார்தான் இத்தகு காவடிச்சிந்து,கண்ணி,சந்தம் பாடுவதில் தமிழகத்திலேயே பேரறிவு பெற்றவர்கள்.அவர்களிடம் பயின்றதனால் ஆசிரியரைச் சிறப்பிக்கும் வகையில் இதனைப் பதிவு செய்துள்ளார்.சிந்து,வண்ணம் என்றால் நமக்கு முனைவர் இரா.திருமுருகனார் நினைவுக்கு வருவதுபோல் நம் பாவலர் மாநி அவர்களுக்கு அவர் ஆசிரியர் சிறப்புற்ற துறைகள் நினைவுக்கு வந்தன போலும்(!).

தமிழ்ச்சூழல் நலம்பெற பாடிய பாவலர் சுற்றுச்சூழல் சிறப்புறவும் பாடியுள்ளார்.

"சாய்க்கடைநீர் வீதியில் தங்கக் கொசுக்களும்
பாய்விரிக்க நோய்வரப் பாழ்(103)

என்று இயல்பான நடையில் நமக்கு அறிவுரை பகர்கின்றார்.

குறிஞ்சி,மருதம் ,நெய்தல்,பாலை நிலங்கள் பற்றி பாடும் பகுதிகள் நமக்குச் சங்க நூல்களையும் சிற்றிலக்கியங்களையும் நினைவூட்டுகின்றன.

"இரியல் குரங்கும் எழுமரம் தாவிப்
பெருங்குரல் கூட்டும் பெரிது(119)

என்று பாடும்பொழுது குறிஞ்சிநிலக் குரங்கின் செய்கை நமக்குப் புலனாகிறது.

"செம்பவழம் வெண்முத்தும் சேர்க்கக் குளித்திடுவார்
அம்மணிகள் அள்ளவே ஆழ்ந்து"(133)
எனவும்

பல்வகை மீன்களும் பல்வகைச் சோழிகளும்
நல்கிடும் தண்கடல் நமக்கு(137)

என்று கடல்படு பொருள்களை நமக்கு நினைவூட்டுகின்றமை சிறப்பான பகுதிகளாகும்.

பெண்களுக்குக் குமூகத்தில் இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்துரைக்கும் குறட்பாக்களும்,இயற்கை வளங்களைத் தடுக்கும் பிற மாநிலத்தார் சூழ்ச்சிகளும்,விழிக்கொடை சிறப்பும்,இந்தி எதிர்ப்பும், ஈழத் தமிழர் விடுதலையும் பாடும் வகையில் இந்த நூல் குமூக அக்கறையுடன் பாடப்பட்டுள்ளது எனலாம்.ஈவு இரக்கமற்று,உயிர்களை அழித்தொழித்த அரக்கன் இராசபட்சேயின் கொடுஞ்செயல்களையும் இந்த நூலில் மாநி அவர்கள் பதிவு செய்துள்ளார்.சமகால நிகழ்வுகளை நினைவுப்படுத்தும் வரலாற்று ஆவணமாகவும் இந்த நூல் எதிர்காலத்தில் விளங்கும். தமிழ்க்குடமுழுக்கு, போலித்துறவிகள்,இல்லறம்,காதல் எனும் பல பொருண்மைகளில் பாடல்கள் இந்த நூலில் செழித்துக்கிடக்கின்றன.

பாவாணர்,இரா,.திருமுருகனார் என்னும் இரண்டு அறிஞர்களின் தமிழ்ப்பணியைக் குறட்பாவில் அம்மையார் வழங்கியுள்ளார்.

"சாதிப்போர் தேவையில்லை; சாதிப்போரே தேவையென
வாதிப்போரை வாழ்த்துவம் வா"(395)

என்று நம்பிக்கையூட்டும் வரிகளை இளைஞர்களுக்குத் தருகிறார்.நம்பிக்கை வரிகளை வழங்குவதில் பாவலர் மாநி சிறப்பிடம் பெறுகின்றார்.

உலக நாடுளின் சூழ்ச்சியால் தமிழீழக் கனவு பின்னுக்குத் தள்ளப்பட்டதை நினைவூட்டும் பல குறட்பாக்களைக் காணமுடிகிறது.ஆனால் நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும் என்றும்,

"பூத்திடும் ஈழத்தில் பூவாய்த் தனிநாடு
காத்திரு கண்முன் எழும்(348)

என்றும் உலகத்தமிழர்களை ஈரடிகளில் நம்பிக்கை மருந்து தந்து தேற்றுகின்றார்.

வகையுளிக்காகச் சொற்களை உடைத்தெழுதுவதைத் தவிர்த்திருக்கலாம்.சொற்கள் உடைபடாமல் பாட்டியற்ற மிகப்பெரும் சான்றோர்களுக்கே வாய்க்கும் போலும்!

குறட்பா என்ற பழந்தமிழ் யாப்பை மிகச்சிறப்பாக ஆண்டு நடப்பியல் செய்திகளை வரலாற்றுக் குறிப்புகளாக வழங்கியுள்ள பாவலர் மாநியின் குறளாயிரம் காலம் கடந்து நிற்கும் வலிமை பெற்றுள்ளது.

1 கருத்து:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

குறட்பாக்களும், குறட்பாக்களுக்குத் தங்கள் அணிந்துரையும் (சூடான)ரசிக்கத் தக்க நல்ல பொருத்தம்.
அன்புடன்,
க.னா.சாந்தி லக்‌ஷ்மணன்