நவிரமலையின் தூரக் காட்சி
சங்க நூல்களில் ஆற்றுப்படை நூல்களைக் கல்லூரிப் பருவத்தில் ஆர்வத்துடன் கற்றுள்ளேன். அதன் வெளிப்பாடாக மாணவராற்றுப்படை (1990), அச்சக ஆற்றுப்படை(1992) என்னும் நூல்களை மாணவப் பருவத்தில் எழுதி வெளியிட்டேன். அந்நூல்கள் என் யாப்புப் பயிற்சியை இன்றும் காட்டி நிற்கின்றன.
இந்நூலுள் ஒன்றான அச்சக ஆற்றுப்படையைப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற பொழுது என் வகுப்புத் தோழி அ. மாதவி அவர்களிடம் காட்டினேன். அவர்கள் தம் தந்தையார் புலவர் அப்பாசாமி அவர்களிடம் காட்டியுள்ளார். அப்பாசாமி ஐயா அவர்கள் அந்நாளில் தமிழ் நூற்கடல் தி.வே.கோபாலையர் அவர்களின் உதவியாளராக ஆராய்ச்சிப் பணிகளில் துணை நின்றவர். நூலில் ஈர்ப்புண்ட அப்பாசாமி ஐயா அவர்கள் கோபாலையர் அவர்களிடம் அச்சக ஆற்றுப்படையைக் காட்டப் புலவர் பெருமகனார் அந்நூலின் சுவையருந்தி வாயாரப் பாராட்டிக்கொண்டு இருந்துள்ளார்.
மாணவப்பருவத்தில் இதுபோல் மரபுப்பாடல் எழுதுபவர்கள் இக்காலத்தில் இருக்கின்றார்களா? என வியந்த வியப்பே அப்பாராட்டிற்குரிய காரணமாகும். என் பேராசிரியர் க. ப. அறவாணனார் அவர்கள் ஒருநாள் என்னை அழைத்து, அண்மையில் தாம் கோபாலையர் அவர்களைச் சந்தித்ததாகவும், அச்சக ஆற்றுப்படை இயற்றிய என்னைக் காண விரும்பியதாகவும் என் பேராசிரியர் அவர்கள் சொல்லி, இசைவுகொடுத்து என்னைக் கோபாலையர் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.
புதுச்சேரி, பிரெஞ்சு நிறுவனத்திற்குச் சென்று கோபாலையர் அவர்களின் இடம் சார்ந்தேன். புத்தகத்தை வைத்துக்கொண்டு பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். பிரெஞ்சுக்கார மாணவர் ஒருவர் அப்பாடத்தை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தார். சுவாமி வணக்கம். பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள் என அறிமுகம் ஆனேன்.
அச்சக ஆற்றுப்படையை நினைவூட்டியதும் அருவி வழிந்தோடுவதுபோல் என் பாட்டு வரிகளைச் சுவாமிகள் சொல்லிக்கொண்டே வந்தார்கள். நிறைகாண்தோறும் பூரித்த அந்த தமிழுள்ளம் சிறு சிறு அரில்களைக் கண்டெடுத்துக் காட்டியது. அவற்றை வழுவில எனும் தன்மையிலும் நிறுவிக்காட்டினார்கள். அவர்களின் அறிவு கண்டு மருண்ட யான் சுவாமி தங்கள் பாராட்டிற்கு நன்றி. நீங்கள் சொன்ன அந்தப் புகழ் மொழிகளைக் கையெழுத்தில் அன்புகூர்ந்து எழுதியருளுங்கள் என மன்றாடினேன்.
ஓரிரு நாள் கழித்துத் தம் இல்லம் வந்து வாங்கிச் செல்க என அன்போடு தெரிவித்தார்கள். அவ்வாறே சில நாள் கழித்துச்சென்று அவர்தம் கையெழுத்தில் அவர்தம் மதிப்புரையை வாங்கி வந்தேன். பின்வருமாறு எழுதி உதவினார்கள்.
''அச்சகம் ஒன்றனான் விழைந்த நற்பயன் முழுமையாகப் பெற்றான் ஒருவன் அவ்விழைவான் அலமருவான் ஒருவனை அவ்வச்சகத்துக்கு முழுப்பயன்கொள்ள ஆற்றுப் படுத்தலாக அமைந்த இவ்வாற்றுப்படைச் செய்யுள் இனிய எளிய தமிழ்நடையான், இடைப்பட்ட ஊர்கள்,யாறுகள் இவற்றின் வரலாற்றுப் பின்னணியைத் தெரித்துக் கற்பாருக்கு விருந்தாக அமைந்துள்ளது. இளைஞர் மூத்தோர் இவர்தம் கடமைகளை உணர்த்தித் தன்மை நவிற்சியே பெரும்பாலும் அமைய இப் பிரபந்தத்தை யாத்த இளங்கவிஞர் இத்துறையில் புலன் அறிந்து யாக்கும் நிலனறி சான்றோராய்த் திகழ எம்பெருமான் அருளுவானாக''
என எழுதித் தி.வே.கோபாலையர் என்று ஒப்பமிட்டு,13.03.1993 என நாளிட்டு வழங்கினார்கள்.
இச் சான்றினைப் பெற்ற பிறகு அறிஞர் தி. வே. கோபாலையர் மேல் விடுதல் அறியா விருப்பினன் ஆனேன்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் ஆய்வு மாணவனாக இருந்தபொழுது நடைபெற்ற கருத்தரங்குகளுக்கு வந்தபொழுது அவர்களுக்குப் பணிவிடை செய்வதை மிகப்பெரும் பேறாக எண்ணிச் செய்தேன்.
அதுபோல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தபொழுது சங்க இலக்கியம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ''சங்கப் பாடல்களில் நாட்டுப்புறவியல் கூறுகள்'' என்ற கட்டுரையைப் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் தலைமையில் படித்தேன். பார்வையாளர் வரிசையில் அறிஞர்கள் தி.வே.கோபாலையர், சோ.ந.கந்தசாமி, பெ.மாதையன், ந.கடிகாசலம் உள்ளிட்டவர்கள் அமர்ந்திருந்தனர். கட்டுரையைப் படித்து முடித்ததும் அவைத்தலைவர் சுப்பு ரெட்டியார் எழுந்து என் இளமைப் பருவத்தையும், தோற்றத்தையும், கட்டுரை உருவாக்கத்தையும், படைத்த முறையையும் கண்டு வியந்து, இவ்விளைஞர் இதே முறையில் சங்க இலக்கியத்தைக் கற்பதிலும் ஆய்வுசெய்வதிலும் ஈடுபட்டால் தமிழகத்தின் வருங்கால மிகச் சிறந்த பேராசிரியராக விளங்குவார் என யான் வணங்கும் திருப்பதி ஏழுமலையான் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்'' என்று அவைக்கு என்னை நம்பிக்கையுடன் சுட்டிக்காட்டினார்கள்.
அப்பொழுது தி.வே.கோபாலையர் அவர்கள் கட்டுரை பற்றியும் உரையாசிரிர் பெருமக்கள் பற்றியும் பல கருத்துகளை வியந்து சொன்னார்கள். அந்த நாளில் அங்கு வந்த தி.வே. கோபாலையர், தஞ்சைத் தமிழ் அறிஞர் ச.பாலசுந்தரம், இலக்கணப் புலவர் முனைவர் இரா. திருமுருகனார் ஆகியோருடன் இணைந்து ஒரு படம் எடுத்துப் பாதுகாத்து வருகிறேன். இவ்வாறு அறிஞர்களின் தொடர்பும் யான் பயின்ற திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் புலமைப் பின்புலமும் சங்க நூல்களில் எனக்கு நல்ல ஈடுபாட்டை ஏற்படுத்தின.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், தங்கப்பா ஆகியோரின் மரபுப் பாடல்கள் நற்றமிழில் பாடல் புனையும் வேட்கையை ஏற்படுத்தின. புறநானூற்றுப் பாடல்கள் போல் தமிழ் மறவர்களின் வீரத்தைப் புகழ்ந்து பல பாடல்களைக் கல்லூரிப் பருவத்தில் இயற்றினேன். இவற்றுள் சில அச்சேறியுள்ளன.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பரம்பரை என்ற பொருளில் முனைவர் பட்டம் 1997 இல் பெற்றாலும் தக்க கல்விப் பணியோ, ஆராய்ச்சிப் பணியோ அமையாமல் நிலையில்லாத பணிகளில் சில காலம் இருந்தேன். அந்த நிலையில் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியளித்துப் புலவர் இலக்குமி பங்காரு அடிகளார் தமிழ்ப்பணிக்கு வழிவகுத்தார்கள்(1999). அப்பணி எனக்கு அமைவதற்குப் பெருங்கருணை காட்டியவர்கள் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் தலைவரும் வள்ளலார் கொள்கைகளில் பேரீடுபாடு கொண்டவர்களும் திருக்குறள் பற்றாளருமான திருநிறை. கோ. ப. அன்பழகனார் ஆவார்கள்.
அப்பொழுது கலவையை அடுத்திருந்த ஆர்க்காடு நகருக்கும், செய்யாறு, வந்தவாசி, காஞ்சிபுரம் ஆரணி பகுதிகளுக்கும் பேருந்தில் செல்லும் பொழுது ஒப்பனை கலையாத முகங்களுடன் பல கூத்துக் கலைஞர்கள் பேருந்துகளில் செல்வதைக் கவனித்தேன். கூத்தராற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை நினைவுகள் தோன்றும். அப்பகுதி எனக்குச் சங்க இலக்கியப் பகுதிகளாக என் கண்முன் விரியும். நற்றிணையில் புகழப்படும் ஆர்க்காட்டில் வாழ்ந்ததை மிக உயர்வாக நினைக்கிறேன்(1999-2005).
கலவையில் பணிபுரிந்தபொழுது அறிஞர் மா.இராசமாணிக்கனார் அவர்களின் பத்துப்பாட்டு ஆராய்ச்சியைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மலைபடுகடாம் நூல் பாடப்பெற்ற பகுதிகளைப் பார்வையிடும் வேட்கை மிக்கிருந்தது. பொறிஞர் கு. வேங்கடாசலம் என்னும் அறிஞர் செங்கம் அருகில் உள்ள வளையாம்பட்டு ஊரில் வாழ்வதாகவும், அவர் நன்னன் நாடு என்னும் இதழ் நடத்துவதாகவும்,நவிரமலை விழிப்புணர்வுப் பயணம் மேற்கொண்டவர் எனவும் அறிந்தேன்.
பொறிஞர் கு.வெங்கடாசலம்
அவரைக் காண்பதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருமாறு திருவண்ணாமலையில் மின்துறையில் பணிபுரிந்த என் நண்பர் தமிழியலன் அவர்களை வேண்ட, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். ஒருநாள் வளையாம்பட்டு சென்று அறிஞர் வெங்கடாசலனாரைக் கண்டு உரையாடினேன். அவரின் நவிரமலை ஆய்வு முயற்சிகளை அறிந்து வியந்தேன். நன்னன்நாடு இதழ்களைப் பெற்றுக்கொண்டும், அவர் பேச்சைப் பதிவு செய்துகொண்டும் படமெடுத்துக்கொண்டும் திரும்பினேன்.
நன்னன் நாடு இதழ் முகப்பு
திரும்பும் வழியில் செங்கத்திலிருந்து போளூருக்குப் பர்வதமலை அடிவாரமாகவே பேருந்தில் வந்தேன். வரும் வழியில் பர்வதமலை செல்லும் வழி என்னும் பலகைகளைக் கண்டபொழுது யானுற்ற இன்பம் யாருற்றார்? என்னும் நினைவே நிற்கிறது. அந்நாளில் பொறிஞர் வேங்கடாசலனாரிடம் உரையாடிய பொழுதுதான் நவிரமலையின் பல சிறப்புகளை அறிந்தேன்.
மலைபடுகடாம் உரையைக் கற்றபொழுது பர்வதமலை, திரிசூலகிரி என்னும் பெயர்கள் அம்மலைக்கு உண்டு என்பதை அறிந்திருந்தேன்.
பர்வதமலை பற்றிய ஒரு நூல் உ.வே.சா. நூலகத்தில் இருப்பதை நண்பர்கள் வழியாக அறிந்தேன். அதனைப் பார்க்க உ.வே.சா. நூலகம் சென்றேன். என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் அந்நூல்களைப் பார்க்க ஆவன செய்தார்கள். ஆய்வுக் குறிப்புகள் பலவற்றையும் சொன்னார்கள். அங்கு வந்த சில அன்பர்கள் பர்வத மலை பற்றியும் அம் மலைப் பயணம் குறுவட்டில் விற்கிறது எனவும் தெரிவித்திருந்தனர். பொதிகைத் தொலைக்காட்சியில் அம் மலைப் பயணம் காட்டப்பட்டது என்பதும் அறிய நேர்ந்தது. காஞ்சிபுரத்தில் அக் குறுவட்டுக் கிடைக்கும் என்ற விவரமும் தெரியவந்தது.
வேலூர் சார்ந்த தமிழ்ப்புலவர்கள், மூத்த தமிழறிஞர்களைக் காணும் பொழுதெல்லாம் நவிரமலை பற்றியே என் பேச்சு இருக்கும். வேலூர்ப் பேராசிரியர் பட்டாபிராமன் அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. பேராசிரியர் அவர்கள் பல அரசுக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். மொழிபெயர்ப்பு வேலைகளில் கவனம் செலுத்தியவர்கள். மொழிபெயர்ப்பு குறித்த நூல் எழுதியவர்கள்.அவர் மாணவர் ஒருவர் பாலாசி என்பவர் அருணகிரிமங்கலம் என்னும் ஊரில் இருப்பதையும் அவர் மலைப் பயணத்திற்கு உதவுவார் எனவும் பேராசிரியர் கூறியிருந்தார்கள்.
பாலாசி அவர்களின் வழியாக நவிரமலையைக் கண்டு மகிழலாம் என்னும் நினைவில் பலநாள் கடந்தன. ஒருநாள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் வாய்ப்பினை வேலூர் முத்துரங்கம் கல்லூரியில் மேற்கொண்டிருந்தேன். மலைபடுகடாம் பாடவகுப்பு. மாணவர்களுக்குப் பாடத்தின் ஊடாக, இந்த நூலை (மலைபடுகடாம்) இங்கு அமர்ந்து படித்தலிலும் அருகே உள்ள நவிரமலை, செங்கம் முதலான பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்ட பிறகு படித்தல் வேண்டும் என்றேன். மேலும் நவிரமலையில் ஏற முடியாமல் அறிஞர் இராசமாணிக்கனார் திரும்பியதையும் குறிப்பிட்டேன்.
அப்பொழுது அங்கு பயின்றுகொண்டிருந்த மாணவி இரீட்டா என்பவர்கள் தாம் பர்வதமலைப் பகுதிக்கு அருகிலிருந்து வருவதாகவும், மலையேற்றம் பற்றியும் மலையேற உகந்த நாள் பற்றியும் தெரிவித்தார்கள். அப்பொழுது சில மாணவர்கள் தாம் நவிரமலை ஏறியுள்ளதாகவும், அம் மலைப்பயணத்தின் கடுமையையும் தெரிவித்தனர். வகுப்பு நவிரமலையைத் தாண்ட முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.
இயல்பிலேயே நவிரமலை பற்றி அறிய பல முயற்சி செய்த எனக்கு இம் மாணவர்களின் துணையுடன் நவிரமலையில் ஏறிவிடுவது என்று முடிவு செய்தேன். நவிரமலை பற்றி உ.வே.சா நூலகத்தில் படித்த நூல் மலைப்பயணத்தின் அச்சத்தை எனக்கு மிகுவித்திருந்தது. எனினும் அறிஞர் மா. இராசமாணிக்கனார்க்குக் கிடைக்காத உதவிகளும் வாய்ப்புகளும் எனக்குக் கிடைத்துள்ளது. அவற்றைப் பயன்படுத்தித் தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியை விளக்கமாகப் படிக்கலாமே என நினைத்து மாணவர்களிடம் நாளைக்கே மலைப்பயணம் செல்லலாம் என்று விருப்பம் தெரிவித்தேன்.
மறுநாள் ஆகத்துப் பதினைந்து தன்னுரிமை நாள் விடுமுறை என்பதால் மலைப்பயணம் உறுதிசெய்யப்பட்டது. ஆகத்துப் பதினைந்து காலை ஆறு மணிக்குப் போளூர் பேருந்து நிலையம் வந்துவிடுவதாகச் சொல்லி ஆர்க்காடு வந்தேன்.என் அன்பிற்குரிய மாணவர்கள் கா. இரமேசு, விவேகானந்தன், செல்வம்(குடியாத்தம்) போளூரில் காத்திருப்பதாகச் சொன்னார்கள்.
இரவு நேரத்தில் பயணத்திட்டம் பற்றித் திட்டமிட்டேன். வேலூர் மாவட்ட தொலைபேசி அட்டவணையை எடுத்துப் பாலாசி என்னும் பெயரில் அருணகிரி மங்கலத்தில் உள்ள பாலாசிகளுக்கெல்லாம் தொலைபேசியிட்டுத் தமிழ் முதுகலை கற்ற, பேராசிரியர் பட்டாபிராமனின் மாணவர் பாலாசி அவர்களிடம் என் திட்டம் சொன்னேன். நாளை காலை வருவதாகவும் உரைத்தேன். அவரும் அவர் நண்பர்களுடன் காத்திருந்தார். சொன்னவாறு ஐம்பது கல் தொலைவுள்ள போளூரில் காலை ஆறு மணிக்கு நின்றேன். என் மாணவர்களும் கூடினர். அருணகிரிமங்கலம் சென்றோம்.
பாலாசி அவர்கள் காத்திருந்தார். இன்சுவை உணவு படைத்த அவர்களின் தாயரின் கைச்சுவையை வாழ்நாளில் மறவேன். தண்ணீர்க் குடுவைகள், உணவுப் பொட்டலங்கள், தின்பண்டங்கள் எடுத்துக்கொண்டு உள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவர், அந்த நவிரமலைக் கோயிலில் முன்பு பணிபுரிந்த சாமியார் ஒருவர் என எங்களின் மலைப்பயணக்குழு ஆர்வமாகப் புறப்படும்பொழுது காலை எட்டரை மணி இருக்கும்.
வழியில் கண்ட காட்சிகளுக்கெல்லம் பாலாசி விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார். வழியில் தெரிந்த கோயில்களில் வழிபாடுகள் செய்தபடியும் இரேணுகாம்பாள் கோயில் பற்றி அறிந்து மலையடிவாரம் சென்றோம். என் கவனம் முழுவதும் மலையுச்சியில் உள்ள காரியுண்டிக் கடவுளைப் பற்றியும் மலைக்காட்சிகள் பற்றியும் இருந்தன.
மலையில் ஏறும்பொழுது வழியில் சிறு பாம்புக்குட்டியைக் கண்டதும் ஏதோ கெட்ட சகுணமாக நினைத்தனர். எங்கள் ஆர்வத்தை மலையுச்சியின் உயரம் படிப்படியே தணிவித்தது. ஆம் சரளைக்கற்கள், நெடுங்குத்துகள், ஆபத்தான வழுக்குகள் இவற்றைக் கடந்தும் படம்பிடித்தபடியும் சென்றோம். சாமியார் அவர்கள் பல கதைகளைச் சொன்னபடி அவர் விரைந்து மலையேறுவார். சிறிதுதூரம் சென்று எங்களுக்காகக் காத்திருப்பார். இங்கு அமரலாம் என்பார். எங்கள் விருப்பம்போல் அயர்ந்து, அமர நினைத்தால் இன்னும் சிறிது தூரம் சென்றால் காற்றோட்டமான இடம் இருக்கும். அங்கு அமரலாம் என்பார். அவர் வழிகாட்டலில் சென்றோம்.
மலையிலிருந்து கீழே பார்த்தால் நாம் கடந்துவந்த அகல்பாதை
கோடாகக் காட்சி தருகிறது
மலை ஏறும்பொழுது முதலில் காணப்படும் வேல்
நவிரமலை ஒட்டிய சவ்வாது மலைக்காட்சி
நன்னனின் கோட்டை தூரக்காட்சி
மலைமேல் ஒரு மலை
அவர்களிடம், சாமி நீங்கள் ஏன் மலையிலிருந்து இறங்கி கீழே வாழ்கின்றீர்கள் என்றேன். பன்னிரண்டு ஆண்டுகள் மலையிலேயே இருந்த அவர் கீழே இறங்கி வரும்பொழுது தம் கடந்த கால வாழ்க்கையைச் சொல்வதாகச் சொன்னார்கள். கடப்பாறை நெட்டு, கணக்கச்சி ஓடை முதலானவற்றின் கதைகளைச் சாமியார் எங்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். இடையில் நன்னனின் கோட்டை அமைப்பு இருப்பதை உணர்த்தினார்கள். அதனைப் படம்பிடித்துக் கொண்டேன். அக் கோட்டையின் பன்முகக் கோணங்களை அறிந்து கோட்டை இருந்ததற்கான வாய்ப்புகளை உறுதிசெய்து கொண்டோம்.
கடப்பாறை நெட்டு என்னும் பகுதி ஆபத்தான பகுதியாகும். நேர்ச்செங்குத்தாக மலையில் அடிக்கப்பெற்றுள்ள கடப்பாறை போன்ற ஆணிகளைப் பற்றிக்கொண்டும் சங்கிலிகளைப் பற்றிக்கொண்டும் ஏற வேண்டும். மலைபடுகடாம் ஆசிரியர் 'குறவரும் மருளும் குன்றம்' என்றது இப்பகுதியைப் போலும். தேர்ச்சக்கரம் போன்ற தேனடைகள் இன்றும் உள்ளன. மேக முழக்கம் கேட்டபடி இருந்தது. இடையில் சுனைகள், கோட்டை அமைப்புகள், பாதுகாப்பு அரண்கள் உள்ளன.
கணக்கச்சி ஓடை என்னும் பகுதி ஆபத்தானது. ஒரு மலைப்பகுதியிலிருந்து இன்னொரு மலைப்பகுதிக்குத் தாவிச் செல்வது போன்ற அமைப்பு உள்ளது. இவ்விடத்தில் கணக்கன் ஒருவனும் அவன் மனைவியும் செல்லும் பொழுது கணக்கன் தவறி விழுந்து விட்டதாகவும், அவன் பிரிவாற்றாமல் மனைவியான கணக்கச்சி மலையிலிருந்து உருண்டு உயிர் துறந்ததையும் குறிப்பிட்டனர்.
அவ்வாறு ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்குத் தண்டவாளம் போன்ற இரும்பின் பகுதிகளை இன்று இட்டு வைத்துள்ளனர். ஒரு மணியளவில் பன்னிரண்டு கல்தொலைவுள்ள மலைப்பகுதியில் ஏறினோம். சிறிது நேர ஓய்வுக்குப்பிறகு இறைவழிபாட்டில் நண்பர்கள் ஈடுபட்டனர்.
மலையுச்சியில் சிறு கருங்கல் கோயில் உள்ளது. சில சிலைகள் உள்ளன. கதவு இல்லை. இரவு பகல் எந்த நேரமும் மக்கள் வந்து வழிபடுவார்களாம். முழுநிலவு நாளில் கூட்டம் அதிகம். வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்களாம். கைப்பேசி இணைப்புகளும் கிடைக்கின்றன. மேகம் மூட்டமாக இருக்கும். இடி இடிப்பது அதிகம். போகர் சிலை இருக்கின்றது. காரியுண்டிக்கடவுளான சிவனின் சிலையும், அம்மையின் சிலையும் உள்ளது.
மலையுச்சியில் அவசரத் தேவைக்குச் சில பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றின் விலை மலையளவு அதிகம். அவற்றைக் கீழிருந்து உறிகளில், மூட்டைகளில் சுமந்துசென்று விற்கின்றனர். குளுக்கோசு, தண்ணீர் பாக்கெட்டுகள், படையல் பொருள்கள் சில கிடைக்கும். பலகோணங்களில் அப்பகுதியைப் படம்பிடித்துக்கொண்டு, உணவு உண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு கீழே இறங்க முயன்றோம். அதற்கு முன்பாகக் குழுவினர் அனைவரும் நினைவாகச் சில படங்களை எடுத்துக்கொண்டோம்..(தொடரும்)
தொடர்புடைய பதிவுகள்: நவிரமலை
(இதில் வழங்கப்பட்டுள்ள இணைப்புகள் வழியாகச் சென்று வேறு படங்களையும், செய்திகளையும் கண்டுகொள்க. படங்களை எடுத்தாளுவோர் இசைவு பெறுக)
4 கருத்துகள்:
முனைவர் இளங்கோவன்,
படிக்க படிக்க ஆவலை தூண்டும் கட்டுரை. தொடர்ந்து எழுதுங்கள்.
அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்
அன்புடையீர்
எங்கள் கல்லூரியின் கருத்தரங்க அறிவிப்பு மடலைக் காண http://www.ksrcasthamizh.blogspot.com/ எங்களின் வலைப்பக்கத்துக்கு வாருங்கள்.
அருமையான ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
தங்களை வலைச்சர்த்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.
கருத்துரையிடுக