அ.கி.இராமானுசன் அவர்கள்
அமெரிக்கா உள்ளிட்ட மேனாடுகளில் இந்திய இலக்கியம் என்றால் சமற்கிருத இலக்கியம் எனவும்,இந்தியமொழி என்றால் சமற்கிருத மொழி எனவும் கருத்து நிலவிய ஒரு காலம் இருந்தது. அதனால் அவ்விலக்கியம், அம்மொழியை அறிவதில் அயலகத்தார் கவனம் செலுத்தினர். பலர் சமற்கிருத மொழியைக் கற்று முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி செய்தனர். அதுபொழுது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, கன்னடத்தைக் கல்வி மொழியாகக் கொண்டு, ஆங்கில மொழியையும் இலக்கியங்களையும் நன்கு கற்றவர் அத்திப்பட்டு கிருட்டிணசாமி இராமானுசன் அவர்கள் ஆவார்.
அமெரிக்காவிற்குக் கல்வியின் பொருட்டும்,பணியின் பொருட்டும் சென்று தமிழை அமெரிக்கா உள்ளிட்ட பிற மொழியினருக்கு அறிமுகம் செய்து உலக அளவில் தமிழ் இலக்கியம் பரவக் காரணமாக இருந்தவர் இவர். இவரை ஏ.கே.இராமானுசன்(ஏ.கே.ஆர்) என அழைப்பது மரபு. இவர்தம் வாழ்வையும் தமிழ்ப்பணிகளையும் இங்கு நினைவுகூர்வோம்.
இராமானுசம் அவர்கள் மைசூரில் 16.03.1929 இல் பிறந்தவர்.இவர்தம் தாய் சேசம்மா அவர்கள் தமிழகத்தைச் சார்ந்த திருவரங்கத்தில் பிறந்தவர்.தந்தை கிருட்டிணசாமி அவர்கள் செங்கற்பட்டு மாவட்டம் அத்திப்பட்டு என்னும் ஊரினர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அப்பொழுது பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் ஒருவரின் அழைப்பில் இராமானுசன் அவர்களின் தந்தையார் கிருட்டிணசாமி அவர்கள் மைசூரில் பேராசிரியர் பணியின்பொருட்டு சென்றவர். இதனால் மைசூரில் வாழ நேர்ந்தது. மைசூரில் இராமானுசம் அவர்கள் பிறந்ததால் கன்னட மொழியை நன்கு பேசவும் கற்கவுமான சூழல் இராமானுசத்திற்கு அமைந்தது.
மைசூர் பள்ளியில் இராமானுசம் அவர்கள் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். பிறகு இண்டர்மீடியட் என்னும் வகுப்பை யுவராசா கல்லூரியிலும், இளங்கலை (ஆனர்சு), முதுகலை (ஆங்கில இலக்கியம்) ஆகிய படிப்புகளை மைசூர் மகாராசா கல்லூரியிலும் பயின்றவர்.ஆங்கில விரிவுரையாளராகக் கொல்லம் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும் பணிபுரிந்தவர்(முனைவர் ஔவை .நடராசன் இவரிடம் பயின்றவர் என அறியமுடிகிறது). பெல்காம் லிங்கராசா கல்லூரியில் சிலகாலம் பேராசிரியர் பணிபுரிந்தார்.பரோடா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
அ.கி.இராமானுசன் அவர்கள் இளமைத் தோற்றம்
இண்டர்மீடியட் வகுப்பில் படிக்கும்பொழுதே இவர் ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் கவிதை எழுதியவர். இல்லசுடிரேட் வீக்கிலி உள்ளிட்ட ஏடுகளில் மாணவப்பருவத்தில் எழுதிய கவிதைகள் வெளிவதுள்ளன. River என்னும் தலைப்பில் இராமானுசன் அவர்கள் எழுதிய பாடல் வைகை ஆற்றைப் பற்றிய அழகியப் படப்பிடிப்பு.
இராமானுசன் அவர்களுடன் பிறந்தவர்கள் ஐவர். பேராசிரியர் சீனிவாசன், இராமானுசன், வேதா, சரோசா, இராசகோபால், வாசுதேவன் ஆகியோர் இவர்களின் குடும்ப உடன் பிறப்புகள். இராமானுசன் அவர்களின் துனைவியார் பெயர் முனைவர் மாலி டேனியல்சு என்பது ஆகும்.இவரும் அமெரிக்காவில் பேராசிரியராக உள்ளார். இராமானுசம் அவர்களுக்கு இரு மக்கட் செல்வங்கள். 1.கிருட்டிணா(கர்னல் பல்கலைக்கழகத்தின் இதழ் ஆசிரியர் பணி)
2.மகள் கிருத்திகா.ஓவியத்துறையில் ஈடுபாடுடையவர்.
அ.கி.இராமானுசன் அவர்கள் (கறுப்பு உடை)உடன்பிறப்புகளுடன்
1958 இல் பூனாவில் உள்ள தக்காணப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பட்டயம் பெற்றவர். அதன் பிறகு 1959 இல் அமெரிக்கா சென்றார். புல்பிரைட் நிதிநல்கை வழியாக நிதியுதவி பெற்று அமெரிக்கா சென்றவர்.1963 இல் மொழியியலில் இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்(முனைவர் ச.அகத்தியலிங்கனார் முனைவர் பட்டம் பெற்றதும் இப்பல்கலைகழகத்தில்தான்).
1962 முதல் துணைப் பேராசிரியராகச் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அவ்வகையில் கார்வார்டு, விசுகான்சின், மெக்சிகன், பெர்கிலி(கலிபோர்னியா) பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தமை குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.இவர் சிக்காகோவில் பணிபுரிந்த பொழுது மிகப் பெரிய பணிகளை அமைதியாகச் செய்துள்ளார். தென்னாசியவியல்துறையை வளர்த்தெடுத்துத் தமிழ் உள்ளிட்ட படிப்பு, ஆய்வுகள் வளரக் காரணமாக அமைந்தார். முனைவர் ச.அகத்தியலிங்கனார் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பேராசிரியர்கள் அ.கி. இராமானுசன் காலத்தில் வருகைதரு பேராசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டு தமிழுக்குச்சிறப்பு சேர்க்கப்பட்டது.
இராமானுசன் அவர்களின் இலக்கியப் பணியையும், இந்தியநாட்டிற்கு ஆற்றிவரும் பெருமை மிக்க செயல்களையும் அறிந்த இந்திய அரசு இவருக்கு 1983 இல் தாமரைத் திரு (பத்மாசிறீ) பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. பல்வேறு இலக்கிய அமைப்புகள், நிறுவனங்கள் இவரின் இலக்கியப் பணியை மதித்துப் போற்றியுள்ளன.மெக் ஆர்தர் பரிசுபெற்றவர்(1983). 1988 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கான இராதாகிருட்டிணன் நினைவு விருது இவருக்கு வழங்கப்பட்டது. 1990 −இல் இராமானுசம் அவர்கள் கலை மற்றும் அறிவியலுக்கான அமெரிக்க கல்விக்குழுவுக்குச் தேர்வு செய்யப்பட்டார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 'மாமன்னன் −இராசராசன் விருது' சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமைக்காக இவருக்கு வழங்கப்பட்ட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கான 'சாகித்ய அகாதமி விருது' 'தி கலெக்ஷன் ஆப் போயம்ஸ்' புத்தகத்திற்காக வழங்கப்பட்டது. (இந்த விருதைப் பெற்றுக் கொண்ட இராமானுசத்தின் மனைவி முனைவர் மாலி டேனியல்சு அவர்கள் பரிசுத்தொகை உரூவா இருபத்தைந்தாயிரத்தைச் சென்னையில் இயங்கிவரும் 'உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு', நூலக வளர்ச்சி நிதியாகக் கொடுத்துள்ளார். மேலும் சுமார் 2000 புத்தகங்களடங்கிய இராமானுசத்தின் வாழ்நாள் புத்தகத் தொகுப்புகளையும் இந்த நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். உரோசா முத்தையா நூலகம் பாதுகாக்கப்படவும் தமிழகத்தில் இயங்கவும் இராமானுசம் பாடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இராமானுசன் ஆங்கிலமொழியில் நல்ல பயிற்சியுடையவர். இயல்பிலேயே கவிதையுள்ளம் கொண்டவர். மேலும் மொழிபெயர்ப்பு, மொழியியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட துறைகளிலும் கவனம் செலுத்தியவர்.இந்திய இலக்கியங்கள், மொழியியல்,நாட்டுப்புறவியலை மேல் நாட்டவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்த பெருமை இவருக்கே உண்டு. இவர் கன்னட மொழியிலும் ஆங்கிலத்திலும் பல கவிதைகள் எழுதியுள்ளார்.
கவிதை எழுதும்பொழுது கவிதை உயிர்பெறும்வரை தொடர்ந்து முயற்சி செய்து எழுதுவார். கவிதைகளை மெருகேற்றி வழங்குவதைக் கடமையாகக் கொண்டவர். கணிப்பொறியில் அமர்ந்து தம் கவிதைப்படைப்புகளை உருவாக்குவதும் அவற்றைப் பொலிவுப்படுத்தவுமாக இருந்தவர். அவர் இறப்பிற்குப் பிறகு அவர் மூன்று குறுவட்டில் வைத்திருந்த 148 கவிதைகள் எட்டுப் பதிப்பாசிரியர்கள் வழியாக The collected poems of A.K.Ramanujan என்னும் பெயரில் வந்துள்ளது.
இவரின் ஆங்கிலக் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கவிதைகளை ஆங்கிலத் தரத்தில் எழுதுவதில் இவர் வல்லவர்.இருபது இந்திய மொழிகளிலிருந்து நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் பெயர்த்து வழங்கியுள்ளார். இவ்வகையில் இடம்பெற்ற 99 இந்தியக் கதைகளில் 10 கதைகள் தமிழ் நாட்டுப்புறக்கதைகள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
இந்திய நாட்டுப்புறக்கதைகள் அடங்கிய நூல்
குறுந்தொகை என்ற சங்க இலக்கியப் பனுவலில் பதினைந்து பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கல்கத்தாவில் நடைபெற்ற எழுத்தாளர்கள் பயிலரங்கில் தொடக்கத்தில் வெளியிட்டார் (1965). பின்னர் 76 குறுந்தொகைப் பாடல்களை மொழிபெயர்த்து The Interior Landscape(அக உணர்வுக்காட்சிகள்) என்னும்பெயரில் 1967 இல் வெளியிட்டார். இதன் வழியாகத் தமிழ் இலக்கியச் செழுமை மேற்குலகத்தினருக்கு அறிமுகமாயின. சிக்காகோ பல்கலைக்கழக வளாகத்தில் தமிழில் உரையாடியபடி மேனாட்டார் உலா வருவதற்குக் காரணமாக ஏ.கே.இராமானுசன் விளங்கியவர்.
புகழ்பெற்ற அக உணர்வுக்காட்சிகள் நூல்
தமிழ் நூல்களை மொழிபெயர்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழ்நூல் செய்திகளை ஆங்கிலத்தில் பொருள் மட்டும் விளங்கும்படி மொழிபெயர்ப்பார்கள் ஆனால் தமிழ்க்கவிதை மரபு, ஆங்கிலக் கவிதை மரபு அறிந்து பெயர்ப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
தமிழ்மரபை உள்வாங்கிக்கொண்டு ஆங்கில மரபைச் சரியாக உணர்த்தி, கற்பவர்கள் உள்ளத்தில் காட்சிகளைப் பதிய வைப்பதில் இராமானுசன் மிகச்சிறந்த ஆற்றல் பெற்றவராகத் தெரிகின்றார். குறுந்தொகையில் இடம்பெறும் பல்வேறு உணர்வுகள் அப்படியே ஆங்கிலம் வழியாக காட்டப்பட்டுள்ளது."நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று" என்னும் பாடலை
Bigger than earth,certainly,
higher than the sky,
more unfathomable than the waters
is this love for this man
of the mountain slopes
where bees make rich honey
from the flowers of the kurinci
that has such black stalks
என்று மிகச்சிறப்பாகப் பெயர்த்துள்ளார்.இராமானுசன் அவர்கள் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்காமல் தமிழ்ப் புலவர் உணர்த்த நினைத்த செய்தி வெளிப்படும்படியாக மொழிபெயர்த்த இடங்கள் பலவாக உள்ளன.
தமிழின் முல்லை,குறிஞ்சி,மருத,நெய்தல்,பாலை நிலத்தின் தன்மைகள் அறிந்து திணை, துறை பாகுபாடு உணர்ந்து மொழிபெயர்ப்பை அமைத்துள்ளார்.தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று உணர்ந்து எழுதியுள்ளார்.தமிழ் இலக்கணத்தில் இடம்பெறும் உள்ளுறை, இறைச்சி பற்றிய புரிதல் இராமானுசத்திற்கு நன்கு இருந்துள்ளதால் அதன் நுட்பங்கள் உணர்ந்து பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் கவிதை எழுதும் ஆற்றல் இராமானுசத்திற்கு இயல்பிலேயே இருந்துள்ளதால் அவரின் மொழிபெயர்ப்பில் ஆங்கில பா மரபுச் செழுமையைப் பார்க்கமுடிகிறது.
புறநானூற்றில் இடம்பெறும் "வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன் னோனே" என்னும் பகுதியைப் பெயர்க்கும்பொழுது a carpenter who tosses off eight chariots in a day என்னும் இடத்தில் சொல்லைப் பொருத்தமாக ஆண்டுள்ளதை அறிஞர்கள் பாராட்டுவர் அதுபோல் 'சிற்றில் நற்றூண் பற்றி'என்னும் பாடலையும் மிகச்சிறப்பாக ஆங்கிலத்தில் இராமானுசன் பெயர்த்துள்ளார்.Poems of Love and War என்னும் மொழிபெயர்ப்புத் தொகுதியும் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களை நன்கு விளக்குவன.
அகமும் புறமும் என்ற நூல்
சங்க இலக்கியங்களை அதன் நடைச்செப்பம் குறையாமல் இவர் பெயர்த்தவர்.
ஆழ்வார்களின் பாடல்களையும் ஆங்கிலத்தில் Hymns for the Drowning என்னும் பெயரில் மிகச்சிறப்பாகப் பெயர்த்துள்ளார்.
ஆழ்வார் பாடல்கள் குறித்த நூல்
இராமானுசன் அவர்கள் தமிழ்மரபு அறியாமல் சில இடங்களில் பொருள்கொண்டு தவறான மொழிபெயர்ப்பு வழங்கியுள்ளதையும் அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. "முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்' என்னும் குறுந்தொகைப் பாடலை மொழிபெயர்த்தபொழுது (Shall I charge like a bull,against this sleepy town... kur.28) என்ற இடத்தில் முட்டுதல் மாடுமுட்டுதல் எனும் பொருளில் ஆண்டுள்ளார். இவ்வாறு இல்லாமல் தலையால் முட்டிக்கொள்வது என்று வருதல் வேண்டும்.
கன்னடமொழியின் புகழ்பெற்ற நூலான அனந்தமூர்த்தியின் சமசுகாரா புதினத்தை ஆங்கிலத் தரத்தில் இராமானுசன் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இந்திய நாட்டுபுறவியல், செவ்விலக்கியம் பற்றி பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.300 இராமாயணம் என்னும் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.எழுத்து,வாய்மொழி இலக்கியங்கள் வழியாகக் கதை வேறுபாடுகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்திய வாய்மொழி மரபு,எழுத்து மரபுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் வெளிநாட்டினருக்கு எடுத்துரைத்தவர்.
புறநானூற்றில் உள்ள "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தொடர் ஆங்கிலம் வழியாக அயல்நாட்டில் பரவ இவர்தம் மொழிபெயர்ப்பு உதவியது.அதுபோல் பக்தி இலக்கியங்கள் குறிப்பாக முருகன் பற்றிய செய்திகள் இவரால் நன்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சிவனைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.
இராமானுசன் அவர்கள் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள நூல்களில் பின்னுரையாக எழுதியுள்ள கட்டுரைகள் மிகச்சிறந்த ஆய்வுரையாக இருந்து தமிழ் இலக்கியம் பற்றிய புரிதலை ஆங்கிலேயர்களுக்கு மிகச்சிறப்பாக வழங்கியுள்ளது. அவ்வகையில் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் சார்ந்து இவர் எழுதியுள்ள ஆய்வுரை போற்றிப்பாதுகாக்கத்தக்கன.
பணி ஓய்விற்குப் பிறகு தமிழ்ப் பணிகளில் ஈடுபட நினைத்திருந்த இராமானுசன் அவர்களுக்குக் கால் வலி ஏற்பட்டது. முதுகு எலும்பில் சிறுகட்டி உருவாகியிருந்தது, பின்னர் அறியப்பட்டது. அறுவைப் பண்டுவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். மயக்க மருந்து கொடுத்த சிறிதுநேரத்தில் மருத்துவப் பயனில்லாமல் 64 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.
இந்திய இலக்கியப் போக்குகள், மக்கள் சிந்தனை, வாய்மொழி மரபுகள், சமூக மொழியியல், மானுடவியல் செய்திகள், செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் யாவும் இராமானுசம் அவர்களால் ஆங்கிலமொழி வழி உலகின் பார்வைக்குச் சென்றுள்ளன. அதுபோல் தமிழ் மொழி, இலக்ககியம் பற்றிய உயர்வான பார்வை மேல்நாட்டாருக்கு ஏற்பட இராமானுசன் அவர்களின் படைப்புகள், பணிகள் வழிகோலின. தமிழ் இலக்கியங்கள் உலகில் பரவக் காரணமான அ.கி.இராமானுசன் அவர்களைத் தமிழர்கள் என்றும் நன்றியுடன் போற்றுவர்.
அ.கி.இராமானுசன் அவர்களின் படைப்புகளில் சில :
சிவன் குறித்த நூல்
1.The Interior Landscape: Love Poems from a Classical Tamil Anthology, 1967
2.Speaking of Siva, 1973
3.The Literatures of India. Edited with Edwin Gerow. Chicago: University of Chicago Press, 1974
4.Hymns for the Drowning, 1981
5.A Flowering Tree and Other Oral Tales from India
6.Poems of Love and War. New York: Columbia University Press, 1985
7.Folktales from India, Oral Tales from Twenty Indian Languages, 1991
8."Is There an Indian Way of Thinking?" in India Through Hindu Categories, edited by McKim Marriot, 1990
9. Hokkulalli Huvilla, No Lotus in the Navel. Dharwar, 1969
10.Relations. London, New York: Oxford University Press, 1971
11.Selected Poems. Delhi: Oxford University Press, 1976
12.Samskara. (translation of U R Ananthamurthy's novel) Delhi: Oxford University Press, 1976
13.Mattu Itara Padyagalu and Other Poems. Dharwar, 1977
14.Second Sight. New York: Oxford University Press, 1986
நனி நன்றி
தமிழ் ஓசை களஞ்சியம்,சென்னை,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 9, 23.11.08
முனைவர் பொற்கோ
முனைவர் நா.கண்ணன்(கொரியா)
நா.கணேசன்,நாசா,அமெரிக்கா
பேராசிரியர் அ.கி.சீனிவாசன்(பேராசிரியரின் தமயனார்)
பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா
முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி
எம்.கண்ணன்
பிரஞ்சு நிறுவன நூலகம்(FIP)
ஆண்டோ பீட்டர்(கணித்தமிழ்ச்சங்கம்)
விக்கிபீடியா
6 கருத்துகள்:
இவர்களை போன்று அறிய அறிஞர்களை வளரும் தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டும் தங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகிறேன் அய்யா!
பேராசிரியர் அ.கி.சீனிவாசன்(அ.கி.இராமானுசன் அவர்களின் தமயனார்) அவர்களின் வாழ்த்து
Dr Elango,
Thanks. Saw your blog. Excellent and succinct writeup on Ramanujan.
srinivasan
-
சிங்கப்பூர் திரு.கிருட்டிணன் அவர்களின் கருத்து :
அன்புள்ள இளங்கோ அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களின் பேராசிரியர் அ.கி.இராமானுசன் அவர்களின் வாழ்க்கை குறிப்பினை
கண்டேன்.
உண்மை கூறுமிடத்து பேராசிரியர் அ.கி.இராமானுசன் பற்றி தமியேன்
இதுவரை அறிந்திருக்கவில்லை. இப்படி பலர் இலை மறை கனியாக
இருக்கிறார்கள்.
அவரின் படைப்புகள் குறிப்பாக தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளில்
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து மற்றவர்களும் அறிய செய்தது
பெரும் பணி. தன்னலமில்லா தமிழ் சேவை.
இப்படி பல அறிஞர்களின் குறிப்பாக தமிழ் அறிஞர்கள அறியப்படாது
இருக்கிறார்கள். இவர்களை அடையாளம் காட்ட இலையால் மறைத்து
இருக்கும் அறிஞர்களை தாங்கள் போன்றவர்கள் வெளிகாட்டுவது மகிழ்ச்சியான
செய்தி, நல்ல பணியும் கூட. வாழ்த்துக்கள். தொடருங்கள்.
அன்புடன்,'
கிருஷ்ணன்
சிங்கை
முனைவர் இளங்கோவன்
வணக்கம். அவசியமான பதிவு, நன்றிகள்.
சில வருடங்களுக்கு முன் பெரிதும் சிலாகித்து பேசப்பட்ட, விக்ரம் சந்திரா எழுதிய ஆங்கில புதினத்தின்
Red Earth and Pouring Rain தலைப்பு ராமானுஜம் அவர்களின் குறுந்தொகை ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பெறப்பட்டது.
வணக்கம் ஐயா.
பேராசிரியர் அ.கி.இராமானுசன் பற்றி தங்கள் பதிவின் வழியாக இப்போதுதான் முதன்முறையாக அறிகின்றேன்.
இத்தகு நல்லறிஞர் பெருமக்களை அறிவதென்பது பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
நற்றமிழ் அறிஞர்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்துவரும் தங்களின் பணி வரலாற்றில் நிச்சியம் இடம்பெறும்.
நன்றி.
நான் பெரிதும் மதிக்கும் பேராசிரியர் அ.கி.இராமானுசன் பற்றி இதுவரை அறியாத பல புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களுக்கு என் நன்றி!
நன்றி - சொ.சங்கரபாண்டி
கருத்துரையிடுக