நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 9 நவம்பர், 2008

முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்

முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்
 
     தமிழ்நாட்டு மக்களுக்குச் சிங்கப்பூர் கனவுநாடாக உள்ளது. மிகச் சின்னஞ் சிறு தீவாக உள்ள சிங்கப்பூர் 09.08.1965 இல் மலேசியாவிலிருந்து பிரிந்தது. இரு நாடுகளும் எந்தப் பகை உணர்வும் இல்லாமல் அமைதியாக உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. சிங்கப்பூரில் இயற்கை வளமோ, தொழிற்சாலைகளோ எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் குடிநீருக்கே அண்டைநாடான மலேசியாவை எதிர்பார்த்து இருக்கும் நாடு. மலேசியாவிலிருந்து குடிநீரை விலைக்கு வாங்கினாலும் தூய்மை செய்யப்பெற்ற குடிநீரை மலேசியாவிற்கே வழங்கும் அளவில் முன்னேற்றங்களைக் கொண்ட நாடு சிங்கப்பூர். சட்டத்தை ஒழுங்காக மதிப்பதும், அவரவர்களின் உரிமைக்கு மதிப்பளிப்பதும் அந்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமாகும். சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதைச் சிங்கப்பூரில்தான் காணமுடியும். 

    வானளாவிய கட்டடங்களில் தமிழர்கள் வளமாக வாழும் நாடு சிங்கப்பூராகும். பல தலைமுறைகளாகத் தமிழ் நாட்டுடன் இந்த நாட்டுக்குத் தொடர்பு இருந்துள்ளது. தமிழர்கள் பலர் பல காரணங்களால் சிங்கப்பூரில் குடியேறி அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்துள்ளனர். தமிழர் ஒருவர்தான் இன்று அந்நாட்டின் அதிபராக உள்ளார் என்பது நமக்குப் பெருமை தரத் தக்க ஒன்றாகும். தமிழ்மொழி சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகும். தமிழ்மொழியில் ஏடுகள் பல வெளிவருகின்றன.பல நூல்கள் வெளிவருகின்றன.சிங்கப்பூரில் உள்ள தமிழ் வானொலி மிகச்சிறப்பாகத் தமிழ் ஒலிப்பு முறைகளைக் கையாளும். தவறாக ஒலிப்பது உறுதி செய்யப்பெற்றால் அவரை உடன் பணியிலிருந்து நீக்கிவிடுவர். தமிழுக்கு முதன்மை இருந்த சிங்கப்பூரில் நம் தமிழகத்துத் தனியார் தொலைக்காட்சிகள் புகுந்து மொழியைப், பண்பாட்டைச் சிதைத்து வருவதை அங்குள்ள தமிழர்கள் விரும்பவில்லை. தமிழ் கற்பக்கும் பணியில் பல ஆசிரியப் பெருமக்கள் தமிழகத்திலிருந்து சென்று பணிபுரி கின்றனர். சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்களாக இவர்கள் இருந்தாலும் தாய்த் தமிழகத்தின ருடன் நல்ல தொடர்பில் இருக்கின்றனர். தமிழ் மொழி, இலக்கியம், கற்பித்தல், இணையம் சார்ந்த ஆய்வுகள் பல சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றன. அவ்வாய்வுகளில் ஈடுபட்டுள்ள அறிஞர்களுள் முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். 

     புதுச்சேரி மாநிலத்தின் திருமலைராயன் பட்டனத்தில் 1954 இல் பிறந்தவர். இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற சிவகுமாரன் அவர்களின் வளர்ச்சியில் அவர்தம் ஆசிரியர் பெருமக்கள் சீனிவாச சாத்திரியார். ஆதிநாராயணன், சாமி.தியாகராசன் பேரார்வம் கொண்டவர்கள். ஆ.இரா. சிவகுமாரன் முதுகலைப் பட்டப் படிப்பைத் தமிழ்நாட்டில் முடித்தவர். தமது பெற்றோரின் நாடாகிய சிங்கப்பூரில் குடியேறியவர். கற்றலிலும் கற்பித்தலிலும் ஆர்வமுள்ள இவர் ஆசிரியர் பணியைத் தேர்வு செய்து கடந்த 29 ஆண்டு காலமாகப் கற்பித்தல் துறையில் பணிபுரிந்து வருகிறார். 1995 முதல் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தேசியக் கல்விக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். துணைப் பேராசிரியரான இவர் 2007 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த்துறையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செயல்பட்டு வருகிறார்.
    முனைவர் ஆ.இரா.சிவகுமாரன் 

 இவர் தமிழ்மொழி, இலக்கியம், கணினி, கற்பித்தல் முறைகள் ஆகிய பாடங்களைக் கற்பித்து வருகிறார்.தயாரிப்புடன் சென்று பல்வேறு உத்திமுறைகளைப் பின்பற்றி மாணவர்களின் உளத்தியல் புரிந்து கற்பிப்பதில் வல்லவர். தமிழ்,மலாய். ஆங்கிலம், சீனம் என்னும் நான்கு மொழிச்சூழலில் தமிழ் மாணவர்களுக்குக் கற்பிப்பது சிக்கலான ஒன்றாகும். தமிழகத்திலிருந்து செல்லும் பேராசிரியர்கள் தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ் இலக்கியத்தின் சிறப்பையும் கற்பிப்பதில் வல்லவர்கள்தான் ஆனால் சிங்கப்பூரின் வாழ்வியல் சூழலை உள்வாங்கிக்கொண்டு கற்பிப்பதிலும் பாடத்திட்டம் வகுப்பதிலும் சிவகுமாரன் மிகச்சிறந்த தேர்ச்சி பெற்றவர். தமிழ்மொழியில் எழுதி முனைவர் பட்டம் பெற முன்பு சிங்கப்பூரில் இயலாது. இந்த நிலையை மாற்றி முனைவர் ஆ. இரா. சிவகுமாரன் சிங்கப்பூரின் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் ஆய்வேட்டை எழுதி Ph. D. பட்டம் பெறுவதற்கு முதன் முதலில் வழி வகுத்தார். அதற்குப் பேருதவி புரிந்தவர் நெறியாளராக விளங்கிய முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களாவார். "சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஒரு திறனாய்வு (1965-1990)" என்னும் தலைப்பில் தம்மை முதன்முதலில் பதிவு செய்துகொண்டு கடுமையாக உழைத்துத் தரமான ஆய்வேட்டை உருவாக்கி அளித்துப் பட்டம் பெற்றுள்ளார். ஒவ்வொரு இயலும் ஒரு முனைவர் பட்டம் வழங்கும் அளவுக்குக் கடும் உழைப்பில் மலர்ந்துள்ளன.


    ஆ.இரா.சிவகுமாரன் அவர்களின் நூல் (முனைவர் பட்ட ஆய்வேட்டின் 
ஒரு பகுதி) 

 வரலாறு தெளிவுபெறாமல் இருந்த பல இடங்கள் சிவகுமாரனின் ஆய்வேட்டால் வெளிச்சம் பெற்றன. சிங்கப்பூரின் வரலாறு, சிங்கப்பூருக்குத் தமிழர்கள் சென்ற வரலாறு, தமிழர்கள் இயற்றிய இலக்கியங்கள், நடத்திய ஏடுகள், வெளியிட்ட நூல்கள், தமிழர்களுக்குப் பாதுகாப்பாக விளங்கிய தமிழவேள் சாரங்கபாணியார் பற்றிய செய்திகளை ஆ.இரா.சிவகுமாரன் நன்கு விளக்கியுள்ளார். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் தொடர்பாக முனைவர் பட்ட அளவில் ஆய்வு செய்து முதன் முதலில் பட்டம் பெற்றவரும் இவரே. இவர்தம் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன்(சிங்கப்பூர் தமிழ்க்கல்வி வளர்ச்சியில் மிகப்பெரும் பங்களிப்புகளைச் செய்து வருபவர்) அவர்கள் சிவகுமாரனின் ஆய்வு அறிவு வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் காரணமானவர்கள். 

    ஆ.இரா.சிவகுமாரனின் 'சிங்கப்பூர் மரபுக்கவிதைகள் ஒரு திறனாய்வு', 'சிங்கப்பூர்த் தமிழ்க் குழந்தை இலக்கியம்' என்னும் நூல்கள் சிங்கப்பூரிலும், தமிழகத்திலும் போற்றப்படும் நூல்களாகும். ஆ.இரா. சிவகுமாரன் தனியாகவும் வேறு பேராசிரியர்களோடு இணைந்தும் இதுவரை ஐந்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார். பதிப்பாசிரியராக இருந்து இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். "Old Bubble Cooks" என்னும் சிறுவர் சித்திரக்கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் நன்கு எழுதவும் பேசவும் மொழிபெயர்க்கவுமான ஆற்றல் பெற்றவர். இதுவரை சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல அனைத்துலக ஆய்வரங்குளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் படைத்துள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தாலும், புதுவைப் பல்கலைக்கழகத்தாலும், புதுவை மொழியியல் புலத்தாலும் அழைக்கப்பட்டு அங்குச் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் தொடர்பான, கல்வி சார்ந்த பல சிறப்புச் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளர். தமிழகம்,புதுவை சார்ந்த கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் பலமுறை உரையாற்றிய பெருமைக்கு உரியவர். 

     சிங்கப்பூர் "தமிழ்மொழிப் பாடத்திட்டம் கற்பித்தல்முறை மறு ஆய்வுக் குழுவின்" கூறாகிய 'கற்பித்தல் முறையும் ஆசிரியப் பயிற்சியும்' என்னும் துணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாகச் சேவையாற்றியுள்ளார். தமிழ்மொழி பாட நூலாக்கக் குழுவின் ஓர் அங்கமாகச் செயல்படும், வழி நடத்தும் குழுவில் (Steering committee) உறுப்பினராக இருந்து பல ஆக்கப்பூர்வமான கருத்துகளை வழங்கி வந்துள்ளார். தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தமிழ்ப்பாட நூல்கள் சிங்கப்பூர்க்கல்வி அமைச்சால் வெளியிடப்படுகின்றன. அதன்தொடர்பில் கல்வி அமைச்சின் பாடத்திட்டத்தை ஒட்டிப் பல வகுப்புகளுக்கும் குறு வட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இக் குறுவட்டுகளை உருவாக்கும் நிறுவனத்தின் மதியுரைஞராக இருந்து திறம்படச் செயலாற்றி வருகிறார். தற்பொழுது சிங்கப்பூர் கல்வி அமைச்சால் தயாரிக்கப்படும் தமிழ்மொழிப் பாட நூல்களின் மதியுரைஞராக இருந்து செவ்வனே செயல்படுகிறார். சிஙப்பூரில் தமிழ்க்கல்வி பல்வேறு தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி கற்பிக்கப்படுகின்றது. அக்கருவிகளைப் பயன்படுத்தி தமிழ்மொழியை எளிமையாகக் கற்பிப்பது எவ்வாறு என்பதில் பல சோதனை முயற்சிகளில் ஈடுபட்டவர். 

     சிங்கப்பூரில் சைவமும் தமிழும் தழைப்பதற்குக் கடந்த 25 ஆண்டுகளாக உறுதுணையாக இருந்துவரும் திருமுறை மாநாட்டின் தொடக்கக் காலம் முதல் உறுப்பினராக உள்ளார். இவர் தற்போது அதன் துணைத் தலைவராக விளங்குகிறார். 1983 ஆம் ஆண்டிலிருந்து திருமுறை மாநாட்டின் ஒரு கூறாக நடைபெற்று வரும் திருமுறைப் போட்டிக் குழுவின் ஒருங்கிணைப் பாளராக இருந்து ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டு வருகிறார். திருமுறை மாநாட்டின் வெள்ளிவிழா ஆண்டான கடந்த 2005ஆம் ஆண்டில் (16, 17 ஏப்ரல் 2005) சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கப்பூர் பன்னிரு திருமுறை ஆய்வரங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆய்வரங்க நிகழ்வுக்கொத்தின் பதிப்பாசிரியராகவும் இருந்து பணிபுரிந்தவர். யூனூஸ் சமூக மன்றத்தின் இந்திய நற்பணி செயற்குழுவில் (Eunos Indian Activity Executive committee) 16 ஆண்டுகளாகச் சேவைசெய்து வருகிறார். தற்போது அதன் தலைவராக இருந்து வருவதோடு ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் இணைந்த அல்ஜூனைட் நாடாளுமன்றக் குழுத்தொகுதியின் இந்திய நற்பணி செயற்குழுவின் (Chairman - Aljunied GRC Indian Activity Executive Committee) தலைவராகவும் இருந்து வருகிறார். அதோடு பல இனங்களுக்கிடையே நன்னம்பிக்கையை உருவாக்கும் குழு (Inter Racial Confidence Circle) உறுப்பினராகவும், யூனூஸ் சமூக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். 

     சிங்கப்பூர் மக்கள் கழக நற்பணி செயலவைக் குழுவில் (அல்ஜூனைட் நாடாளுமன்றக் குழுத்தொகுதியைப் பிரதிநிதித்து) ஒருங்கிணைப்பாளராக 2006 முதல் 2008 வரை திறம்படச் செயல்புரிந்து வந்துள்ளார். சிங்கப்பூர் தேசிய நூல் நிலையத் தமிழ்ப் பிரிவு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் ஆக்கபூர்வமான முறையில் செயல்பட்டு வந்துள்ளார். மேலும் சிங்கப்பூர்க் கல்வி அமைச்சிலும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டு அமைப்பிலும், சிங்கப்பூர் சிம் பல்கலைக் கழகத்திலும் பல முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார்.


தமிழ் ஓசை களஞ்சியம்(09.11.08) 

     முனைவர் ஆ.இரா. சிவகுமாரனின் நற்சேவையைச் சிங்கப்பூர் மக்கள் கழகம் (People Association) பாராட்டி இருமுறை நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் சிங்கப்பூர் இந்திய முஸ்லீம் கழகம் "தமிழர் திருநாள் விருது" வழங்கி இவரைக் கெளரவித்துள்ளது. இவர் பணிபுரியும் தேசியக் கல்விக்கழகம், இவரின் கற்பித்தல் பணியைப் பாராட்டும் வண்ணம் 2002-ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் தொடர்ச்சியாக ஐந்துமுறை நல்லாசிரியர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. இவர் 2004ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தமிழவேள் கோ. சாரங்கபாணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபொழுது முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் முன்னிலையில் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இவர் புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரியில் "டாக்டர் ஏ ஆர்ஏ சிவகுமாரன் கல்வி அறக்கட்டளை" என்னும் அறக்கட்டளையை 2004-ம் ஆண்டு நிறுவியுள்ளார். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் முதலாவதாக வரும் மூன்று இளங்கலைத் தமிழ் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி உதவிநிதி வழங்கி வருகிறார். சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இவரின் பெற்றோர் "இராமலிங்கம் அபிராமி" பெயரால் 2004-ல் ஓர் அறக்கட்டளையை நிறுவி உள்ளார். இதன் மூலம் ஆண்டுதோறும் ஒரு தலைப்பில் ஆய்வு செய்யவும் அக்கருத்துகள் கருத்தரங்கில் பகிர்ந்துகொள்ளவும் வழி செய்துள்ளார். அவ்வாறு நடைபெற்ற அறக்கட்டளைப்பொழிவில் 10-6-2005 வெளிவந்த முதல் நூல் முதுமுனைவர் தி.ந. இராமச்சந்திரனின் "பெரியபுராணம் திருமுறைகளின் கவசம்" என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். திருமுறைகளில் ஈடுபாடுகொண்ட குடும்பத்தில் தோன்றிய இவரும் திருமுறைகளில் ஈடுபாடு கொண்டவராவார். 

        புதுவைப் பல்கலைக் கழகம் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் இவரின் பெற்றோர் "இராமலிங்கம் - அபிராமி" பெயரால் 2007-ல் ஓர் அறக்கட்டளையை நிறுவி உள்ளார். சிவகுமாரனுக்கு நல்ல சைவ சமய ஈடுபாடு உண்டு. எனவே சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் முன்னின்று உழைப்பவர். சிங்கப்பூரில் உள்ள அருள் மிகு செண்பக விநாயகர் கோவில் உறுப்பினராகவும் , அருள்மிக உருத்திர காளியம்மன் ஆலய உறுப்பினராகவும் இருந்து சைவமும் தமிழும் வளர உழைத்து வருகிறார். திருமுறை மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் பொறுப்பை வகிக்கிறார்.உலக அளவில் நடைபெறும் பல இலக்கியப் போட்டிகளுக்கு நடுவராக இருந்து பணிபுரிபவர். தமிழகத்து முனைவர் பட்ட ஆய்வேடுகளை மதிப்பிடும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் பணிபுரிபவர். திருமுறைப் போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிங்கப்பூரில் திருமுறைப் பேச்சுப் போட்டி, திருமுறை ஓதும்போட்டி, திருமுறை வண்ணம் தீட்டும் போட்டி, திருமுறை திருவேடப்போட்டி, திருமுறை நாடகப்போட்டி, திருமுறைக் கட்டுரைப் போட்டிகளைச் சிறப்புற நடத்தியவர். சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து உழைத்துவரும் பேராசிரியர் சிங்கப்பூர் தமிழ் வளர்ச்சி பற்றியும் தமிழ்க்கல்வி வளர்ச்சி பற்றியும் ஆராய்ந்து எழுதி, தமிழகத்து மக்களுக்கு வழங்கவேண்டும். 

 நனி நன்றி: 

தமிழ் ஓசை நாளேடு, களஞ்சியம், அயலகத் தமிழறிஞர்கள்,வரிசை 7(09.11.2008),சென்னை. 
முனைவர் சுப.திண்ணப்பன் 
முனைவர் பொற்கோ

கருத்துகள் இல்லை: