நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் பற்றிய என் உரை...


கல்லூரி முகப்பு

22.08.2008 இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து பேருந்து புறப்படும்பொழுது மணி பகல் 12. பேருந்தைவிட என் மனம் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியாக இருந்தபொழுது 1994-95 அளவில் ஒரு முறை அக்கல்லூரியில் அறிஞர் தமிழண்ணல் முன்னிலையில் தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புறச் சாயல்கள் என்னும் பொருளில் பேச பெருந்திரளான மாணவர்கள் நடுவே அறிஞர் பழ.முத்தப்பனார் அவர்கள் என்னை அழைத்துச் சென்ற காட்சி என் மனக்கண்ணில் விரிந்தது.

அப்பொழுது நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாக இருந்தேன்.என் தமிழார்வம் கண்ட பேராசிரியர் தா.மணி ஐயா அவர்கள் என்னை அங்கு அழைத்துச் சென்றவர் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தி.அதே பேராசிரியர் தா.மணி ஐயா அவர்கள் அக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்ற நாள் முதல் மீண்டும் ஒருமுறை என்னை அங்குப் பேச வருமாறு அழைப்பு விடுத்தவண்ணம் இருந்தார்.

பேராசிரியர் தா.மணி ஐயா அவர்கள் மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். உணர்வாளர். மாணவர்கள் உள்ளம் உவக்கும்படியாக வகுப்புகளை ஆக்கப்பூர்வமாக நடத்தும் இயல்பினர். அவரின் அன்பு அழைப்பின் வண்ணம் அங்கு இணையம் சார்ந்த பேச்சு நிகழும்படி திட்டமிட்டிருந்தோம்.

மேலைச்சிவபுரியை அடைவதற்குப் பேருந்து வதிகள் குறைவு. குறிப்பிட்ட பேருந்துகளே செல்லும். சிலமணி நேர இடைவெளியில் செல்லும்படியான சிற்றூர் சார்ந்த சூழல். திருச்சிராப்பள்ளியிலிருந்து புதுக்கோட்டை அடைந்தேன். புதுக்கோட்டையில் பேருந்து ஏறியபொழுதே தெரிந்துவிட்டது.

இன்று சிறிது காலம் தாழ்ந்தே செல்ல நேரும் என்று உணர்ந்தேன். நான் ஏறிய வண்டி தனியார் வண்டி. காரையூர் உள்ளிட்ட ஊர்களைச் சுற்றிக்கொண்டே அப்பேருந்து செல்லுமாம். சற்றொப்ப 40 அயிரமாத்திரியை (கி.மீ) 2 மணி நேரத்தில் அப்பேருந்து கடந்தது. ஒரு மணிநேரத்தில் செல்லவேண்டிய தூரத்தை 2 மணிநேரத்தில் கடந்ததால் விழாவிற்கு உரிய நேரத்திற்குச் செல்ல முடியவில்லை. காலம் தாழ்ந்ததும் மாணவர்கள் நிகழ்ச்சி நடைபெறவில்லை எனக் கலைந்து சென்றுகொண்டிருந்தனர்.

என்னை அழைத்த பேராசிரியர் தா.மணி ஐயா உள்ளிட்டவர்கள் பெருங்குழப்பத்தில் இருந்தனர். பொன்னமராவதியில் இறங்கி, தானி ஒன்று பிடித்துகொண்டு கல்லூரி வாசலை அடைந்த பொழுது மணி மூன்றிருக்கும்.

அதன் பிறகு மாணவர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது என்ற வகையில் முனைவர் பட்டம், இளம் முனைவர் பட்டம், முதுகலை மாணவர்கள், பேராசிரியர்கள் என ஐம்பதின்மர் நடுவே என் உரைஅமைந்தது.

பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கி 4.25 வரை என் உரை 'பவர் பாயிண்டு' என்னும் காட்சி விளக்கத்துடன் இருந்தது. தமிழ் மாணவர்கள் ஆங்கிலம் தெரியவில்லையே எனக் கலங்கவேண்டாம். கணிப்பொறி, இணையத்தைப் பயன்படுத்த ஆங்கில அறிவு தேவையில்லை. அனைத்து மென்பொருள்களும் தமிழில் வந்துவிட்டன. தமிழ் ஆய்வாளர்கள், மாணவர்கள் கணிப்பொறியை, இணையத்தைப் பயன்படுத்தி அறிவைச் செழுமையடைய வைக்கமுடியும். அதற்குரிய பல வசதிகள் இணையத்தில் உள்ளன.தமிழில் மின்னிதழ்கள் வெளி வருகின்றன.

பல்வேறு தன்னார்வலர்கள் தமிழ் நூல்களை மின்னூல்களாக்கியுள்ளனர். தமிழ்மரபு அறக்கட்டளை, மதுரைத்திட்டம், தமிழ்மணம், விருபா, திரட்டிகள் பற்றி எடுத்துரைத்தேன். மாணவர்களுக்கு நான் எடுத்துரைத்த செய்திகள் முற்றிலும் புதியனவாகத் தெரிந்தன. பல்வேறு இணையத்தள முகவரிகளை அவர்கள் ஆர்வமுடன் குறித்து வைத்துக்கொண்டதைப் பார்த்தால் சிலரேனும் தமிழ்இணையம் பயன்படுத்த முன்வருவார்கள் என உணர்ந்துகொண்டேன்

மின்னஞ்சல், உரையாடல் வசதி,தமிழ் விக்கிபீடியா பற்றி எடுத்துரைத்துச் சுருக்கமாக என் உரையை அமைத்துக்கொண்டேன். பேராசிரியர் முனைவர் தி.பூங்குன்றன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தி அவையினருக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார். நிகழ்ச்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை முனைவர் தெ.திருஞானமூர்த்தி, முனைவர் போ.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர். மாலை ஆறு மணியளவில் பேருந்தேறி, சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி வழியாக மதுரையை அடையும்பொழுது இரவு ஒன்பது மணியிருக்கும். ஒன்பது மணிக்குதான் நினைவுக்கு வந்தது. பிற்பகல் உணவுகூட உண்ணாமல் பேருந்துப் பயணம் செய்ததும், உரையாற்றியமையும்.

என் வருகைக்காகப் பேராசிரியர் முத்துராமன் அவர்கள் (வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நூலகப் பொறுப்பாளர்) மூடுந்து வைத்துக்கொண்டு மாணவர்களுடன் காத்திருந்தார். அவர் அன்பில் அடுத்த நாள் நனைந்தேன் ...


முனைவர் தி.பூங்குன்றன்


மேடையில் பேராசிரியர்கள்


பார்வையாளர்கள்

4 கருத்துகள்:

S.Lankeswaran சொன்னது…

ஐயா தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள். திருச்சியில் தாங்கள் எந்தக் கல்லூரியில் உரையாற்றினீர்கள் அது தொடர்பான நிழற்படங்களை வெளியிட்டால் மகிழ்வோம்.

இணையம் வழி தமிழ் பரப்புவோம்.

Tech Shankar சொன்னது…



அய்யா. நான் பள்ளத்தூர்க்காரன்.

என்னுடைய மனைவி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் எம்ஃபில் தமிழ் முடித்து இப்போது பெங்களூரில் எஸ்.சி.டி கல்வியியல் கல்லூரியில் பணியாற்றுகிறார்கள். நானும் பெங்களூரில்தான் பணியாற்றுகிறேன்.

நமது உள்ளூர் பெருமக்கள் ஆங்கிலம் தெரிந்தால்தான் இணையத்தில் இயல்பாகத் திரிய முடியும் என்றெண்ணிக் கவலைப்படுகின்றனர்.

உங்களைப்போன்ற அறிஞர் பெருமக்கள், கணினியை ஆங்கிலம் அறியாதோர் பலருக்கும் அறியச்செய்யும் பணியை அருமையாய்ச் செய்கின்ற புலமை பெற்றுள்ளதை நினைத்துப் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

நமது உள்ளூர் மக்களுக்குப் பேருந்து வசதியும், மின் வசதியும் 2008ல் கூடக் கிடைப்பது அரிதாக உள்ளது. அதற்கு உங்கள் கட்டுரையே உதாரனம்.

எனினும் கணினி வசதியும், கணினியில் அகலக்கற்றை வசதியும் அவர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதே எங்களது ஆசை.

அன்புமணி சொன்னார் - "குடியரசுத் தலைவருக்கு என்னவிதமான மருத்துவ வசதி கிடைக்கிறதோ, அதே வசதி சாதாரண ஏழைக் குடிமகனுக்கும் கிடைத்திட வேண்டும்".

இதை ஒவ்வொருவரும் மனதில் கொண்டால் 2020ல் என்ன 2010லேயே இந்தியா வல்லரசாகிவிடும். நன்றி அய்யா.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பள்ளத்தூர் ஐயா வணக்கம்
தங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி.
மு.இ

arunan சொன்னது…

ஐயா தங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.
தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். தற்போதைய முதல்வரின் பெயர் சில இடங்களில் தா. மணி என்றும், பல இடங்களில் தே. மணி என்றும் வந்துள்ளது.
பயனுள்ள பதிவுதான்!