சென்னி கல்வியியல் கல்லூரி வளாகம்
பார்வையாளர்களின் ஒரு பகுதி
பார்வையாளர்கள் ஒருபகுதி
திரு.மு.பொன்னிளங்கோ(செயலாளர்)
பேராசிரியர் அமுதா(ஒருங்கிணைப்பாளர்)
முனைவர் கடவூர் மணிமாறன்(பார்வையாளர்)
திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள சென்னி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையம் சார்ந்த ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் நான் வருகை தந்து காட்சி விளக்கங்களுடன் உரையாற்றும்படியும் எனக்கு அந்நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது.
பேராசிரியர் அமுதா அவர்களின் ஏற்பாட்டில் அந்த அழைப்பு எனக்கு விடுக்கப்பட்டது. புதுச்சேரியில் உள்ள எங்கள் வீட்டிற்கு வருகை தந்தும் நேரில் அழைப்பு விடுத்தார்கள். அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று 21.08.2008 இரவு திருச்சிராப்பள்ளியில் உள்ள தமிழ்நாடு விடுதியில் தங்கவைக்கப்பட்டேன். 22.08.2008 காலைக் கடன்களை முடித்து 8.30 மணிக்குக் கல்லூரிக்கு அழைத்துச்செல்ல மகிழ்வுந்து ஏற்பாடாகி இருந்தது.
அதனிடையே பேராசிரியர் தமிழகன் ஐயா அவர்கள் என்னைக் காண வந்திருந்தார். அவருடன் உரையாடி அவருக்கு விடைகொடுத்தேன். பிறகு குளித்தலைப் பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள் வருகை தந்து எங்களுடன் கல்லூரிக்கு வர அணியமானார். பேராசிரியர் அமுதா, கல்லூரிச் செயலாளர் திரு.பொன்னிளங்கோ ஆகியோரும் ஆர்வமுடன் வந்து இணைந்துகொண்டனர்.
அனைவரும் 9.00 மணியளவில் கல்லூரியை அடைந்தோம். கல்லூரிக் கருத்தரங்க அறை பணிநிறைவு நிலையில் இருந்தது. மாணவர்களும், ஆசிரியப் பெருமக்களும் அரங்கை வடிவப்படுத்தி, அமர்ந்தனர்.
22.08.2008 காலை 9.30 மணிக்குத் தொடங்கிய என் உரை முற்பகல் 11.30 மணிக்கு நிறைவடைந்தது. என் உரையில் கணிப்பொறி வளர்ச்சி, கணிப்பொறியில் தமிழ் எழுத்துகள் உள்ளீடான உலகு தழுவிய முயற்சி, இணையத்தில் தமிழ் இடம்பெற சிங்கப்பூர் கோவிந்தசாமி அவர்களின் முயற்சி, முரசு. முத்தெழிலன், சுசாதா, பேராசிரியர் ஆனந்தகிருட்டிணன், முனைவர் மு.பொன்னவைக்கோ உள்ளிட்ட அறிஞர்களின் பங்களிப்பினை நினைவூகூர்ந்தேன்.
முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் முயற்சியால் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தோற்றம்பெற்ற வரலாறு, உலக அளவில் நடைபெற்ற தமிழ் இணையமாநாடுகள், தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை, தமிழ் ஒருங்கு குறி பற்றிப் பேசினேன்.
தமிழ் இணையத்திற்கு அரும்பாடுபட்ட சேந்தமங்கலம் முகுந்தராசு, கோவை காசி ஆறுமுகம், தமிழ்மணத்தை இன்று நிருவகிக்கும் நா.கணேசன், முனைவர் சங்கரபாண்டி, தமிழ் சசி உள்ளிட்ட அன்பர்களின் முயற்சியை நினைவுகூர்ந்தேன்.
தமிழில் வெளிவரும் மின்னிதழ்கள், தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபடும் இணையதளங்களைப் படக்காட்சியாக விளக்கினேன். இணையத்திலிருந்து பல பக்கங்களைத் தரவிறக்கி அவையினர் உள்ளம் நிறைவடையும்படி உரையாற்றினேன். அந்த நிகழ்ச்சியை வாழ்த்தி, செயலாளர் பொன்னிளங்கோ அவர்களும் முனைவர் கடவூர் மணிமாறன் அவர்களும் உரையாற்றினர்.
கல்வியியல் படிக்கும் 200 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இவர்கள் நல்ல மாணவர்களை உருவாக்கும் ஆசிரியப்பயிற்சி பெறும் மாணவர்கள் என்பதால் என் பேச்சு தமிழ் இணையத் துறைக்குப் பலரை இழுக்கும் என நம்புகிறேன்.
பிற்பகல் வேறொரு ஊரில் தமிழ் இணையதள வளர்ச்சி பற்றி உரையாற்ற ஏற்பாடாகி இருந்ததால் அனைவரிடமும் விரைந்து விடைபெற்றுக்கொண்டேன். திருச்சிராப்பள்ளியில் உள்ள நடுவண் பேருந்து நிலையம் வந்து புதுக்கோட்டை செல்லும் விரைவுப் பேருந்தில் ஏறி அமர்ந்தேன்...
2 கருத்துகள்:
தமிழிற்கினிய இளங்கோவன் அய்யா அவ்ர்களுக்கு,
"தமிழ் இணையம் குறித்த விழிப்பையும் பயனையும் அள்ளி வழங்க தொழில்நுட்ப அறிஞர்கள் மட்டுமே என்ற நிலை மாற வேண்டும்.அது எல்லா துறை மக்களும் உணர வேண்டும். அறிய வேண்டும்."
என்று சிந்திக்கும் வேளையிலே செய்துக்காட்டி கணித்தமிழ் உலகில் தனி வரலாறு படைக்கிறீர்கள்.தங்கள் பணி செவ்வண்ணே தமிழுக்கும்,த்மிழினத்திற்கும் பயன்படட்டுமாக.....
அன்புடன் வெ.யுவராசன்.
உங்கள் சேவைக்கு நன்றியும், வாழ்த்துகளும்..
கருத்துரையிடுக