பேராசிரியர் த.பழமலை நூல்களுக்கு இடையே...
பேராசிரியர் த.பழமலை
பேராசிரியர் தங்கப்பாவுக்கு அடுத்து நான் கண்ட இயற்கை ஈடுபாட்டுப் பாவலர்களுள் பேராசிரியர் த.பழமலை குறிப்பிடத் தகுந்தவர். அவர் நூல்கள் எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பாக அவர் பெயர் எனக்கு அறிமுகமாகியிருந்தது (1991). தமிழ்வழிக் கல்வி குறித்த ஒரு மாநாடு தஞ்சையில் நடந்தபொழுது அவர் பாடல் இசைப்பதாக இருந்தது. ஒருமுகப் பறையை அடித்துக்கொண்டு பாடுவார் என நண்பர்கள் சொன்னார்கள். அப்பொழுது நான் வேறு ஒரு அன்பரைப் பார்க்கச் சென்றுவிட்டதால் அவர் பாடலைக் கேட்க முடியாமல் போனது. ஆனால் நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்கள் நன்கு இருந்தன என அன்பர்கள் சொல்லக் கேட்டேன்.
அதன் பிறகு தங்கப்பா இல்லத்தில் பழமலையின் சனங்களின் கதை நூல் இருந்தது. இரவல் பெற்று அதனைப் படித்தேன்.பெருஞ்சித்திரனார், பாவேந்தர் பாடல்களில் ஈடுபட்டுக் கிடந்த எனக்குப் பழமலையின் பாடல்கள் புதியனவாகத் தெரிந்தன. பின்னாளில்தான் தெரிந்தது மக்கள் வாழ்க்கையை மண்மொழியில் பதிவு செய்யும் ஒரு முயற்சி வேகமாகப் பரவி வளர்ந்த வரலாறு. அண்ணன் அறிவுமதி உள்ளிட்ட சிலரின் படைப்புகளில் இத்தகு மண்மணம் கமழும் சில படைப்புகளைக் காணமுடியும். இரத்தின.கரிகாலன், இரத்தின. புகழேந்தி, கண்மணி குணசேகரன், பட்டி .சு. செங்குட்டுவன், தமிழியலன், செஞ்சி தமிழினியன், பச்சியப்பன் உள்ளிட்ட பாவலர்கள் இம்மரபை வளர்த்தவர்கள் எனில் மிகையன்று.
பழமலை தனக்கு முன்னோடி மரவாடியில் போதிமரம் எழுதிய எழிலவன்தான் எனப் பல அரங்குகளில் பெருந்தன்மையாகக் குறிப்பிடுவது அவரின் உயர்பண்பு காட்டுவதாகும். பேராசிரியர் பழமலையின் சனங்களின் கதை படித்த பிறகு இதுதான் நமக்கான கவிதை என அறிந்தேன். அதில் இடம்பெறும் கீழைக்காட்டு வேம்பு கவிதையில் இடம்பெறும் பழமலையின் அம்மாவின் வாழ்க்கையும், எங்கள் அம்மாவின் வாழ்க்கையும் ஒன்றாக இருந்ததால் அக்கவிதை என் உள்ளத்தில் ஓர் இயக்கத்தை உண்டு பண்ணியது. அது முதல் பழமலையின் நூல்கள், இதழ்களில் வரும் கவிதைகளை உற்றுப் படிக்கத் தொடங்கினேன். 1997 ஆம் ஆண்டிற்குப் பிறகு பழமலையுடன் நேரடியாகப் பழக எனக்கு வாய்ப்பு அமைந்தது.
விளிம்புநிலை மக்கள் கலை இலக்கியப் படைப்பாளிகள் சந்திப்பில் நன்கு அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. என் ஆர்வத்தை ஒரு தந்தையாக இருந்து ஊக்கப்படுத்துவார். ஒரு ஆசிரியராக இருந்து வழிகாட்டுவார். நெறிப்படுத்துவார். நண்பராக இருந்து அறிவுரை கூறுவார். தமக்கு அறிமுகமானவர்களிடம் என் இலக்கிய ஆர்வம், இலக்கிய முயற்சிகளை மனந்திறந்து எடுத்துரைத்து உளங்கனியப் பாராட்டுவார்.
பழமலை கவிதைகளை மட்டும் எழுதுபவர், எடுத்துரைப்பவர் எனக் கருத வேண்டாம். அவருக்கு மிகச் சிறந்த வரலாற்று அறிவு உண்டு. பழைமைகளைத் தேடிப் பதிவு செய்ய வேண்டும் என்ற அக்கறை உடையவர். பழைமையைப் பதிவு செய்வதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் உண்டு. அரசியல் சமூகச் சிக்கல்களில் முன்னின்று பேசும் பொதுவுடைமை எண்ணம் கொண்டவர். கல்லூரிப் பேராசிரியர்கள் தங்கள் ஊதியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். நம் பழமலையோ மாணவர்கள் முன்னேற்றம், வறுமையில் கிடக்கும் மக்கள் எழுச்சி பெற்று ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதற்காக எழுதுபவர். பேசுபவர். போராட்டக் களங்களில் முன்னிற்பவர். தொடர்ந்து பல்வேறு இலக்கிய அமைப்புகளில் இயங்குபவர்.
அழகின் சிரிப்பில் த.பழமலை
இயற்கையில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய குரோட்டன்கள் குறித்த நூல் இயற்கை ஆர்வலர்களால் விதந்து பேசப்படும் நூலாகும். அதுபோல் இவர் வாழும் விழுப்புரத்தில் கட்டப்பெற்றுள்ள வீட்டை ஒட்டிச் சிறு தோட்டம் அமைத்துள்ளார். அதில் பல்வேறு வகையான மரங்கள், மலர்ச்செடிகள், மூலிகைகள் வைத்துப் பாதுகாத்து வருகிறார். நகர நெருக்கடியில் மாந்தன் மூச்சுவிட நேரம் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பொழுது எளிய உழவர்போல் தண்ணீர் பாய்ச்சுவதும், வழியடைப்பதுமாக இருப்பார். அத்தோட்டத்தில் பார்க்கும்பொழுது அவர் நமக்கு ஒரு வேளாண்மைத் தொழில் செய்யும் உழவர் பெருமகனாகவே காட்சியளிப்பார்.
தமிழிலக்கிய உலகில் நிலைபெற்ற பெயராக விளங்கும் இவரின் படைப்புகள் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை என்பதும், அறிமுகம் செய்யப்பெறவில்லை என்பதும் ஒரு குறையேயாகும். இவர் படைப்புகள் இவருக்கு ஒரு சாகித்திய அகாதெமி பரிசையோ, அல்லது தமிழக அரசின் பரிசையோ பெற்றுத்தரவில்லை. அவ்வாறு பெறாமல் இருப்பது ஒன்றே இவர் உண்மையான படைப்பாளி என்பதற்குப் போதுமான சான்றாகும். சாகித்தியம் பேசும் குழுக்களில் பரிசுபெறுவது என்றால் அது ஒரு தனிக்கலையாகும். அரசியல்வாணர்களின் எடுபிடிகளாக, ஊதுகுழலாக, கைப்பாவைகளாக இருப்பவர்களுக்கே அத்தகுப் பரிசில்களும், பதவிகளும், விருதுகளும் போய்ச் சேர்ந்துள்ளன என்பதை அப்பட்டியலை ஒருமுறை நோட்டமிடும் எளிய அறிவுடையவருக்கே புரிந்துவிடும்.
இவ்வகையில் அடங்காமல் மக்கள் பணிபுரியும் பழமலையின் படைப்புகள் குறிப்பிடும்படியான பரிசில்களைப் பெறவில்லை என்பதும் தமிழகக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் முழுமையாக ஆய்வு செய்யப்பெறவில்லை என்பதும் அவருக்குப் பெருமையே தவிர நமக்குதான் சிறுமையாகும்.
பெரும் படைப்பு உணர்ச்சி கைவரப்பெற்ற பழமலையின் தொடர்பு நான் புதுச்சேரிக்கு வந்தபிறகு வலுப்பெறும் காலம் வாய்த்தது. ஆம். அவர் மகன் மருத்துவர் ப.உ.இலெனின் அவர்கள் புதுச்சேரியில் புகழ்பெற்ற ஓமியோ மருத்துவராகப் பணிபுரிகின்றார். அவரைப் பார்த்துப் பழகும்படி பேராசிரியர் பழமலை அடிக்கடி மடலிலும். தொலைபேசியிலும் குறிப்பிடுவார். அவ்வண்ணம் வளர்ந்த உறவு வலுப்பெற்றது. இத்தகு பாச உணர்வும் படைப்புணர்வும் கொண்ட பழமலையின் வாழ்க்கைக் குறிப்பை என் பக்கம்வழி இணைய உலகம் வாழும் தமிழர்களுக்குப் பதிவு செய்கிறேன்.
பழமலை வாழ்க்கைக் குறிப்பு:
அரியலூர் மாவட்டம் குழுமூரில் (பெண்ணாடம் - மாத்தூர் தொடர்வண்டி நிலையத்திற்கு மேற்கே உள்ள ஊர்) வாழ்ந்த தங்கவேல் படையாட்சி, குஞ்சம்மாள் (வாலாம்பாள்) ஆகியோருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் பழமலை. பெற்றோருக்கு முதல் இருமக்கள் பிறந்து இறந்தனர். மூன்றாவது குழந்தை அமராவதி பெண்குழந்தையாகும். ஆண்குழந்தை வேண்டிப் பெற்றோர் திருமுதுகுன்றம் பழமலைநாதர் கோயில் இறைவனிடம் பாடு கிடந்தனர். அவ்விறைவனின் அருளால் பிறந்ததாக நினைத்துத் தம் குழந்தைக்கு அவ்விறைவனின் பெயரான பழமலை என்பதை இட்டனர். இவருக்குப் பிறகு மூன்று குழந்தைகள் பிறந்தனர் என்பது கூடுதல் செய்தியாகும்.
03.02.1943 இல் பிறந்த பழமலை குழுமூர் ஊராட்சி மன்றத் தொடக்கப் பள்ளியில் படித்தார். பிறகு திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) அத்தை வீட்டில் தங்கிப் படித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆறாண்டுகள் படித்தார் (1960-1966). 20.07.1966 இல் கிருட்டிணகிரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணியை ஏற்றார்.
கடலூரில் (திருப்பாதிரிப்புலியூரில்) சு.உமா அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.
பேராசிரியருக்கு மூன்று மக்கள் செல்வங்கள். 1.மருத்துவர் ப.உ.இலெனின், புதுச்சேரியில் உள்ளார். 2. நீதியரசர் ப.உ.செம்மல், 3. பொறிஞர் ப.உ.தென்றல். அனைவரும் தக்க பணிகளில் சிறப்புற்று விளங்குகின்றனர்.
பழமலை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டம் (எம்.ஃபில்) பெற்றவர். கிருட்டிணகிரி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட ஊர்களில் திறம்படப் பேராசிரியர் பணிபுரிந்தவர். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து (19.04.1991- 31.05.2001) ஓய்வு பெற்றவர். பேராசிரியர் பழமலை அவர்கள் மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதால் இன்றும் அவரைப் பழைய மாணவர்கள் மிக உயர்வாகப் போற்றி மதிக்கின்றனர்.
த. பழமலையின் தமிழ்ப்படைப்புகள் :
கவிதை
1.சனங்களின் கதை, 1988,1996
2.குரோட்டன்களோடு கொஞ்ச நேரம், 1991
3.இவர்கள் வாழ்ந்தது, 1994
4.இன்றும் என்றும், 1998
5.முன் நிலவுக்காலம், 1999
6.புறநகர் வீடு, 2000
7.இரவுகள் அழகு, 2001
8.வேறு ஒரு சூரியன், 2002
உரைநடை
நரபலி நூல்
9.அண்ணன் குப்புசாமி இன்னும் ஆழமானவர்-வாழ்க்கைக் குறிப்புகள், 1978
10.நரபலி:தெய்வங்கள்,திருவிழாக்கள், 2002
11.திருக்குறளார் வீ.முனிசாமி வாழ்வும் பணியும், 2003
12.பாம்புகள் சிறுகதைகள், 2003
13.தெரியாத உலகம், 2004
14.தருமபுரி(தகடூர் நாட்டுத் தகடூர்) மண்ணும் மக்களும், 2005
தருமபுரி நூல்
திருக்குறளார் வீ,முனிசாமி நூல்
பாடல்கள்
15.துப்பாக்கிகாரனின் புல்லாங்குழல் பாடல்கள்-12
16.நாங்கள் பாடினோம், 2006
நாங்கள் பாடினோம்
பேராசிரியர் த.பழமலை முகவரி:
த.பழமலை
37, இளங்கோ வீதி, சீனிவாசநகர், வழுதிபிராட்டி(அ.நி),
கண்டர்மானடி (வழி), விழுப்புரம் மாவட்டம் -605 401
(விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் நடைதூரத்தில் வீடு உள்ளது)
8 கருத்துகள்:
தமிழிற்கினிய இளங்கோவன் அய்யா அவர்களுக்கு அன்பு வணக்கம்.
தங்களின் "வாழும் அறிஞர்களின் வரலாற்று பதிவுகளை இணைய உலகில் பதியும் பணி" எதிர்வரும் புது வரலாற்றுக்கு அடித்தளம்.
இப்பணி ஒட்டுமொத்த தமிழுலகம் சார்பாக எழுதப்படும் தமிழ் வரலாறு.
கட்டுரையை படிக்கும் போது எந்த ஒரு சலிப்பும் இல்லாமல் தங்கள் பாணியில் படிக்கும்படியாக எழுதியுள்ளீர்கள்.
ஆங்காங்கே எழுத்துப்பிழை காணப்படுகிறது.அதனையும் பார்க்கவும்.
தாங்கள் இப்பதிவை மின்தமிழ் மடலாடற்குழுவிலும் இடம்பெற செய்வது மகிழ்ச்சிக்குரியது.
தொடர்க தமிழ்ப்பணி.
இணைவோம் தமிழர்களாய்..! இயற்றுவோம் தமிழால்...!!!
அன்புடன்...வெ.யுவராசன்.
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே !
--- புறநானுறு
இத்தகு தமிழ் ஆர்வலர்களை கொண்ட நாடும்
அவர்களை தமிழ் உலகம் அறிய செய்யும்
இளங்கோவன் போன்றவர்களை கொண்ட
இந்நாடும் நல்ல நாடே ! வாழ்க ! பாராட்டுகள் !
ஏ.சுகுமாரன்
puduvaisugumaran.blogspot.com
அன்புடையீர்,வணக்கம்.
எழுத்துப் பிழைகள் விரைவு காரணமாகவும்,என் கண்பார்வையில் சில நேரம் ஏற்படும் மங்கல் தன்மையாலும் ஏற்பட்டுவிடுகிறது(கண்ணாடி அணிகிறேன்). யானே செய்தியைத் திரட்டி, எழுதி, தட்டச்சிட்டு, படம் எடுத்து,மின்வருடி என் பக்கத்தை உருவாக்குவதால் ஓரிரு பிழைகள் மலிந்துவிடுகின்றன. கண்ணில்படுவோர் அன்புகூர்ந்து மின்னஞ்சலில் தெரிவிக்க நன்றியுடன் திருத்திக்கொள்வேன்.இடித்துரைத்த தோழருக்கு நன்றி.
மு.இ
அன்புத் தம்பி முனைவர் மு.இளங்கோவன்
பாட்டில் வாடாது பைந்தமிழ்க்
காட்டில் வாழ்கின்ற பாவலர்க்
கூட்டைப் பட்டிய லாக்கும்
ஏட்டை அளிக்கும் இளங்கோ வாழி!
இவண்
முனைவர் இர.வாசுதேவன்
naNbar Pazhamalaiyin padamum katturaipOl iyalbAka uLLadhu.
-Devamaindhan
அய்யா,
வாழ்வோரை வாழ்த்தாமல், வீழ்த்த நினைக்கும் உலகில் உரியவர்களை உரிய நேரத்தில் அறிமுகப்படுத்தி பாராட்டுரைக்கும் தாங்கள் வாழி.
நனி...நன்றி...
அன்பு நண்பர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம்.
வாழும் தமிழறிஞர் வரிசையில் பேராசிரியர் பழமலய் குறித்த செய்திகள் உலகத் தமிழர்களுக்குத் தேவையானது என்பதைக் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். தங்களே செய்திகளை ஊர்விட்டு ஊர் சென்று தேடி, சேகரித்து, பின் அதை தாங்களே தட்டச்சு செய்து, படங்களை வருடி அதையும் இணைத்து அப்பப்பா இத்தனை பணிகளையும் தாங்களே ஒருவரே செய்வது என்பதை கொஞ்சம் துணைக்கு ஆட்களை வைத்துக் கொண்டு உதவிகளைப் பெற்றிட ஆலோசனை வழங்குகிறேன். அப்படியே உடல் நலத்தையும் பேணுங்கள். தொடர்ந்து உழைக்க நலம் பேணுதல் உதவிடும். தொழில் நுட்பம் அறிந்த நான் இப் பணிகளைத் தானே செய்து மகிழ்ச்சியும் பெற்றிருக்கிறேன். மனதுயரமும் அடைந்திருக்கிறேன்.
தங்களின் பணி தொடரவேண்டும் என்ற விருப்பின் அடிப்படையில் தங்களின் பணியைப் பாராட்டி மகிழ்கிறேன்.
வாழ்க நின் தமிழ்ப் பணி.......
தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன்
ஆசிரியர் www.tamilthinai.com
அன்புள்ள பேராசிரியர் தி.நெ.
அவர்களுக்கு வணக்கம்.தங்கள் அன்பான மடலுக்கும், ஊக்குவிப்பிற்கும் நன்றி.என் வளர்ச்சியில்,வாழ்வில் அக்கறை கொண்ட தங்களுக்கு நன்றியன்.
மு.இ.
கருத்துரையிடுக