நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 1 ஏப்ரல், 2007

' தமிழ் மாணவர்' போப் அடிகளார்


போப் அடிகளார்

  தமிழ் மொழிக்குத் தொண்டாற்றியவர்களை இருவகையில் அடக்கலாம். ஒன்று தமிழகத்தில் பிறந்து, தமிழ்மொழிக்குத் தொண்டு செய்தவர்கள். மற்றொன்று அயல்நாடுகளில் பிறந்து, தமிழின்பால் பற்று ஏற்பட்டு, அம் மொழியைக் கற்றுத் தொண்டு செய்தவர்கள். அயல்நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு வந்து தமிழ்த்தொண்டு செய்தவர்களுள் அறிஞர் போப் அடிகளார் குறிப்பிடத்தகுந்தவர். 

  போப் அடிகளார் அவர்கள் 1820 ஏப்ரல் மாதம் இருபதாம் நாள் வட அமெரிக்காவில் நோவாசுகோசியா என்ற இடத்தில் அமைந்த பிரின்சு எட்வர்ட் தீவில் பெடக் (Bedeque) என்னும் ஊரில் பிறந்தவர். இவரின் தந்தையார் பெயர் சான்போப். தாய் பெயர் கேதரின் யுக்ளோ. போப் அடிகளாரின் பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சியார்ச் யுக்ளோ. போப் அவர்களின் தந்தை இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர். வணிகம் பொருட்டுப் பிரின்சு எட்வர்ட் (வடஅமெரிக்கா) சென்றவர். வணிகத்தில் சிறந்து, புகழ்பெற்றதுடன் கிறித்தவ சமயத் தொண்டராகவும், மதப் பரப்புரை செய்பவராகவும் விளங்கியவர். 

 போப் அவர்களுடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் பத்துப் பேர். அறுவர் ஆண்கள்; நால்வர் பெண்கள். அனைவரையும் இறையுணர்வு நிறைந்தவர்களாகப் பெற்றோர்கள் வளர்த்தனர். இளம் அகவை முதல் போப் அவர்கள் நல்ல கல்வியறிவுடன் நற்பண்புகள் பலவற்றையும் ஒரு சேரப் பெற்றிருந்தார். ஊக்கமும் விடா முயற்சியும் அவருக்குப் பிறவிக் குணங்களாகவே இருந்தன. கிறித்தவ சமயப்பணி புரிவதற்குக் கிரேக்கம், எபிரேயம் முதலான மொழிகள் தேவையெனக் கருதி, அவர் இளம் அகவையில் இம் மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். வெசிலியன் சங்கத்தார் தென்னிந்தியாவில் ஊழியம் செய்வதற்குப் போப் அடிகளாரைத் தகுதி எனக் கருதி 1839-ஆம் ஆண்டு தேர்ந்தெடுத்து அனுப்பினர். 

 தம் பத்தொன்பதாம் அகவையில் போப் அடிகளார் மரக்கலம் ஒன்றில் ஏறி, எட்டுத் திங்கள் செலவு செய்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். எட்டுத் திங்களும் கப்பலில் செலவு செய்யும்பொழுது நாள்தோறும் எட்டுமணி நேரம் தமிழ் மொழியையும், வடமொழியையும் கற்றார். கப்பலில் வரும்பொழுது தமிழகத்தில் உரையாற்றுவதற்குத் தகுந்தபடி சொற்பொழிவு உரை ஒன்றையும் ஆயத்தம் செய்து வந்தார். சென்னையில் "சாந்தோம்' என்னும் இடத்தில், வந்த ஒரு மாதத்திற்குள் தாம் கொண்டு வந்திருந்த கருத்துகளைத் தமிழில் சொற்பொழிவாக நிகழ்த்தினார். அச் சொற்பொழிவுக்கென எழுதப்பட்ட கையெழுத்துப்படிகள் அவர்களின் குடும்பத்தினரிடம் இன்றும் இருப்பதாக நம்பப்படுகிறது. 

  அடிகளார் சென்னையில் இருந்தபொழுது தமிழ், தெலுங்கு மொழிகளைக் கற்பதில் நாட்டம் கொண்டிருந்தார். இவ்வேளையில் வெசிலியன் சங்கத்திலிருந்து போப் அடிகளார் இங்கிலாந்து திருச்சபையில் இணைந்து பணிபுரியத் தொடங்கினார். இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்ததால் நெல்லை மாவட்டம் சாயர்புரம் எனும் ஊருக்குச் சமயப்பணி புரிய போப் அடிகளார் தம் இருபத்தியிரண்டாம் அகவையில் சென்றார். சாயர்புரம் என்பது தூத்துக்குடியிலிருந்து பதினாறு கல் தொலைவில் தென்மேற்கில் உள்ள சிற்றூர் ஆகும். சாமுவேல் சாயர் என்பவர் அவ்வூரை விலைக்கு வாங்கி வழங்கியதால் "சாயர்புரம்' எனப்பட்டது. போப் அடிகளார் காலத்திற்கு முன்பு சாயர்புரம் வளர்ச்சி பெறாத ஊராக இருந்தது. அவர் வருகைக்குப் பின்னர்க் கோயில், பள்ளி, கல்லூரி, விடுதிகள் எனப் பல கலைக்கூடங்கள் சாயர்புரத்தில் தோன்றின. 

 தமிழ்நாட்டில் கிறித்தவ சமயம் பரவ வேண்டுமெனில் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்குக் கிறித்தவ சமய உண்மைகளைக் கற்பிக்க வேண்டும் எனவும், அவ்வாறு கற்றவர்கள் குருமார்களாகப் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் எண்ணினார். எனவே "செமினரி' எனப்படும் கல்லூரியை நிறுவினார். தென்னாட்டில் கிறித்தவம் பரவ போப் அடிகளார் அடிப்படையான சில பணிகளைச் செய்தார். இதனை இடையன்குடியில் பணிபுரிந்த "கால்டுவெல்' அடிகளார் தம் நினைவுக் குறிப்புகளில் எழுதி மகிழ்ந்துள்ளார். 

   சாயர்புரத்தில் போப் அடிகளார் தோற்றுவித்த கல்லூரியின் சிறப்பை உணர்ந்து 1848 - இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் ஒரு நூல் நிலையம் அமைப்பதற்குப் பொருளுதவி செய்தது. கல்விச் சூழல் நன்றாக இருந்ததால் வெளியூர்களிலிருந்து மாணவர்கள் சாயர்புரம் வந்து கல்வி கற்றனர். போப் அடிகளார் இளமைத் துடிப்புடன் இருந்ததால் மாணவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்வார். போப் அடிகளார் தாம் தொடங்கிய கல்லூரிக்குத் தலைவராக விளங்கினார். கல்லூரியில் அவர் மொழிப் புலவராய்ப் பணியாற்றினார். தமிழ் இலக்கியம், கிரேக்கம், இலத்தின், எபிரேய மொழிகளைப் பயிற்றுவித்தார். ஆங்கிலத்தையும் போப் அடிகளார் வழியாக மாணவர்கள் கற்றனர். கணக்கு, மறைநூல் முதலியவற்றைப் பயிற்றுவிப்பதிலும் போப் சிறந்த பட்டறிவு உடையவர். 

  சாயர்புரம் "செமினரி' எனப்பட்ட கல்லூரி தமிழ், கிரேக்கம், இலத்தீனம், எபிரேயம், ஆங்கில இலக்கியம், கணக்கு, தருக்கம், மறைநூல், தத்துவம், வரலாறு எனப் பலதரப்பட்ட பாடங்களும் பயிற்றுவிக்கப்படும் பல்கலைக்கழகத் தரத்தினைப் பெற்றிருந்தது. போப் அடிகளார் இரவு பகல் பாராமல் வகுப்புகளை நடத்தியுள்ளார். இரவு நேரங்களில் எட்டு முதல் பதினொரு மணிவரை வகுப்புகள் நடத்துவது அவருக்கு வழக்கம். இரவிலும் வகுப்புகள் நடைபெற்றதால் ஆசிரியர்கள் தங்குவதற்குக் குடியிருப்புகளும், மாணவர்கள் தங்கிப் பயில விடுதிகளும் கட்டினார். எட்டு ஆண்டுகள் சாயர்புரத்தில் போப் அடிகளார் கல்விப்பணி செய்தார். "நல்ல உணவு, நல்ல கல்வி, நல்ல பிரம்பு, என்பது அவரது கொள்கை. 

  ஒரு கையில் புத்தகமும், ஒரு கையில் பிரம்புடனும் இருப்பராம். போப் அடிகளார் மாணவர்களிடம் கண்டிப்புடன் இருந்ததால் மாணவர்களை இரக்கமின்றி நடத்துவதாகப் பெற்றோர்கள் உணர்ந்து, சிலநேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதையும் அறிய முடிகின்றது. போப் அடிகளார் கல்விப்பணியுடன் சமயப்பணியும் ஆற்றியுள்ளார். இக்காலகட்டங்களில் நூலாசிரியராகப் போப் அடிகளார் விளங்கினார். 

 போப் அடிகளார் தமிழ் மொழியில் நல்ல புலமை பெறுவான் வேண்டி, மகாவித்துவான் இராமானுசக் கவிராயரிடமும், ஆரியங்காவு பிள்ளை என்ற புலவரிடமும் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். நான்கு நூல்களை அக்காலங்களில் எழுதியதாக அறிய முடிகின்றது. அந்நூல்களின் பெயர்கள் கிடைக்கின்றனவே தவிர நூல்கள் கிடைக்கவில்லை. 

  போப் அடிகளார் தம் உடல்நலம் கெட்டதால் 1849 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குப் புறப்பட்டுச் சென்றார். பத்தாண்டுகளுக்குப் பின் அடிகளார் தம் தாய்நாட்டிற்கு மீண்டும் சென்றபொழுது அங்குத் தாம் திருமணம் செய்து கொண்டார். 1850ஆம் ஆண்டில் தம் மனைவியாரை அழைத்துக் கொண்டு இந்தியாவிற்குப் புறப்பட்டார். பல மாதங்களுக்குப் பின் இந்தியா வந்த போப் அடிகளார் தஞ்சையில் சமயப்பணி செய்ய அனுப்பப்பட்டார். 

   தஞ்சையில் கிறித்தவ சமயம் பரவ அடிகளார் பல வகைகளில் பாடுபட்டுள்ளார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் அடிகளாரின் சமயப்பணி நடைபெற்றது. அக்காலங்களில் "வேதநாயக சாத்திரி' எனும் சமயத் தொண்டருடன் போப் அடிகளார் பழகியுள்ளார். தஞ்சாவூரில் போப் அடிகளார் தங்கியிருந்த பொழுது தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியங்களையும் நன்கு கற்றுத் தேர்ச்சி பெற்றார். தஞ்சையில் கிறித்தவ சமயத்தைப் பற்றிப் பயிற்றுவிக்கும் கல்லூரியைத் தோற்றுவித்து 1854 முதல் அக்கல்லூரியின் தலைவராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி இன்று செயிண்டு பீட்டர் மேனிலைப்பள்ளி என்ற பெயருடன் செயல்பட்டு வருகின்றது. 

 தஞ்சையில் வாழ்ந்தபொழுது பல தமிழ் நூல்களை எழுதினார். தமிழ் இலக்கணத்தை எளிய நிலையில் படிக்கும் மாணவர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் மூன்று இலக்கண நூல்களை எழுதினார். இவற்றுள் இரண்டு, இளம் மாணவர்கள் பயிலுவதற்கு வாய்ப்பாக வினாவிடை அமைப்பில் எழுதப்பட்டன. மூன்றாவது நூல் விரிவான இலக்கண நூலாகும். மேலும் ஐரோப்பியர் தமிழ் பயிலுவதற்கு உரிய நூலொன்றையும் எழுதினார். ஆங்கில மக்கள் படிப்பதற்குப் பயன்படும் வகையில் தமிழ்-ஆங்கிலம், ஆங்கிலம்-தமிழ் அகராதி ஒன்றும் தொகுத்தார். 

  பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாய்மொழிவழிக் கல்வி பெறுதல் வேண்டும் என்னும் கருத்துடைய போப் அடிகளார் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த நாட்டு வரலாற்று நூலைத் தமிழ்ப்படுத்தி வெளியிட்டார். "தனிச் செய்யுட் கலம்பகம்' என்ற பெயரில் தொகைநூல் ஒன்றை உருவாக்கி மாணவர்கள் பயன்பெற அளித்தார். ஒழுக்கநெறி காட்டும் நல்ல பாடல்களின் தொகுதியாக அந்நூல் அமைந்திருந்ததால் பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி மற்றவர்களும் படித்து மகிழ்ந்தனர். செய்யுள் நூல்கள் மட்டுமன்றி உரைநடை நூல்களையும் மாணவர்கள் கற்க வேண்டி எழுதி வெளியிட்டார். போப் அடிகளார் முதன்முதல் பாடநூல் எழுதி வெளியிட்டவர் என்பது இங்கு எண்ணத்தக்கது. 

 தஞ்சாவூரில் சமயப்பணி புரிபவர்களுக்கு இடையே ஏற்பட்ட உயர்வு தாழ்வு சிக்கல்களால் அமைதியிழந்த போப் அடிகளார் தாம் ஏற்றிருந்த பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டார். அக்காலத்தில் அவர் பொருள்வளம் இல்லாதவராக இருந்தார். போப் அடிகளாரின் மனைவியும், ஐந்து மக்களும் வருந்தினர். மாட்டு வண்டிகளில் ஏறித் தஞ்சையிலிருந்து புறப்பட்டு 24-நாள் செலவு செய்து (1858 இல்) நீலமலையில் உள்ள உதகைமண்டிலம் சென்று சேர்ந்தார். அங்குப் பள்ளிகள் நிறுவி மாணவர்களுக்குக் கல்வி புகட்டினார். உதகைமண்டிலத்தில் நல்லாசிரியராகப் பணிபுரிந்ததால் மாணவர்களின் வருகை எண்ணிக்கை மிகுதியானது. உதகையில் பொது நூலகம் ஒன்று இருந்தது. அதனை விரிவுப்படுத்தி அனைவரும் கற்கும்படிச் செய்தார். 

  போப் அடிகளாரின் மறைநூல் புலமை பற்றி அறிந்து கந்தர்புரி பேராசிரியர் 1864-இல் மறைநூற் புலவர் எனும் பட்டம் வழங்கினார். உதகையில் தங்கியிருந்த பொழுது போப் அடிகளார் இந்திய வரலாற்று நூல் எழுத ஆய்வு செய்துகொண்டிருந்தார். பிற்காலத்தில் இரண்டு வரலாற்று நூல்களை எழுதினார். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு நூலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு நூலும் இருந்தன. 

   1871 ஆம் ஆண்டு சனவரி மாதம் போப் அடிகளார் பெங்களூருக்கு வந்து பிசப் காட்டன் பள்ளியின் தலைமையை ஏற்றுக் கொண்டார். மிகச் சிறப்பான கல்வியுடன், அழகிய கட்டடங்களையும், விடுதிகளையும் உருவாக்கினார். போப் அடிகளாரிடம் பயின்ற மாணவர்கள் அவர் மறைவுக்குப் பிறகு அவர் நினைவாக ஒரு கட்டடம் கட்டியுள்ளனர். பெங்களூர் பிசப்காட்டன் பள்ளிக்குச் செல்வோர் இன்றும் அக்கட்டடத்தைக் காணலாம். 

 போப் அடிகளார் தமிழகத்தின் பல பகுதிகளிலும், பெங்களூரிலும் வாழ்ந்து கல்விப் பணியும், சமயப்பணியும் புரிந்து 1882-ஆம் ஆண்டில் தமது அறுபத்தியிரண்டாம் அகவையில் இந்தியாவை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். நாற்பத்தியிரண்டு ஆண்டுகள் இந்தியாவைத் தம் தாய்நாடாகப் போப் அடிகளார் எண்ணி வாழ்ந்தவர். 

  இவரை இலண்டனில் உள்ள நற்செய்திக் கழகத்தின் தலைமை நிலையத்தார் அன்புடன் வரவேற்றனர். தஞ்சையில் போப் அடிகளார் பணிபுரிய முடியாமல் போனமைக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கழகத்தார் தம்மைப் பொறுத்தருள வேண்டினர். இலண்டன் கழகத்தார் போப் அடிகளாரை மான்செசுடர் அத்தியட்ச மண்டலத்தின் நற்செய்திக் கழகத்து அமைச்சராகப் பணிபுரிய வேண்டினர். அப்பொறுப்பினைப் போப் அடிகளார் ஏற்றுக் கொண்டார். மூன்றாண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். 

 1885-ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தார் தம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிய வேண்டினர். தமிழும், தெலுங்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியதாக அப்பணி அமைந்தது. அவ்வாறு தமிழ்மொழியைக் கற்பித்து இங்கிலாந்தில் இருந்தபடியே தமிழ்ப்பணி புரிந்தார். இருபத்து மூன்றாண்டுகள் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளைப் பயில்பவர்க்கு ஆசிரியராக விளங்கினார். போப் அடிகளார் நின்று பாடம் நடத்திய இடத்தில் இன்றும் அவர் படம் இடம் பெற்றுள்ளது. போப் அடிகளார் பயன்படுத்திய நூல்கள் சில அங்கு வைக்கப்பட்டுள்ளன. போப் அடிகளாரின் பன்மொழிப் புலமை, பரந்துபட்ட அறிவு, ஆராய்ச்சித் திறமை உணர்ந்த பல்கலைக் கழகத்தார் 1886-ஆம் ஆண்டில் அவருக்கு முதுகலை எனும் பட்டம் வழங்கினர். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சிலநேரம் அவர் எபிரேய மொழியையும் பயிற்றுவிப்பார். கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமற்கிருதம், பிரெஞ்சு, செர்மன் எனப் பலமொழிகளை அறிந்த சான்றோராகப் போப் அடிகளார் விளங்கினார். 

  போப் அடிகளார் தமிழ்இலக்கியம், இலக்கணம், தமிழின் சிறப்புகள் பற்றிய பல கட்டுரைகளைப் பல ஏடுகளில் எழுதியுள்ளார். மாணிக்கவாசகர் பற்றியும், தமிழ்நீதி நூல்கள் பற்றியும் பல திங்கள் ஏடுகளில் எழுதிய அரிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கனவாம். 

 திருக்குறள் நூலினை 1886-ஆம் ஆண்டில் அனைவரும் விரும்பும் வண்ணம் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1893ஆம் ஆண்டில் "நாலடியார்' என்னும் பழைய நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். திருவாசகம் என்னும் நூலை மொழிபெயர்த்து 1900-ஏப்ரல் 24-ஆம் நாள் வெளியிட்டவர். "மணிமேகலை' என்னும் காப்பிய நூலையும் மொழிபெயர்க்கத் தொடங்கினார். ஆனால் அம்மொழிபெயர்ப்பு முற்றுப்பெறவில்லை. 1911-ஆம் ஆண்டு "சித்தாந்த தீபிகை' யில் அது வெளியானது. 

 போப் அடிகளார் தம் வாழ்வின் இறுதிக் காலத்தில் புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட் பயன் என்னும் நூல்களைப் பதிப்பித்துள்ளார். போப் அடிகளார் தமிழ்மொழி, இலக்கியம்மேல் கொண்ட பற்றின் காரணமாக இறப்பிற்குப் பின் தம் கல்லறையில் "ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்' என எழுதினால் மகிழ்வேன் என்ற எண்ணம் கொண்டிருந்தவர். (அவர் கல்லறையில் அவ்வாறு எழுதப்படவில்லை எனத் திரு. பழ. நெடுமாறன் எழுதிய குறிப்பை ஏதோ ஒரு கட்டுரையில் படித்த நினைவு உள்ளது. தவத்திரு. மதுரைஆதீனம் அவர்கள் அவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக ஒரு கூட்டத்தில் பேசக் கேட்டுள்ளேன்.) 

   போப் அடிகளாரின் தொண்டினை நினைவுகூரும் வகையில் 1906-ஆம் ஆண்டு "இராயல் ஏசியாட்டிக் சொசைட்டி' எனும் அமைப்பு அவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கிப் பாராட்டியது. போப் அடிகளாரிடம் பால்மர், மாக்சுமுல்லர், மானியர் வில்லியம்சு, கவிஞர் பிரெளனிங் முதலானவர்கள் பழகி, நண்பர்களாக விளங்கினர். 

 1908 பிப்ரவரித் திங்கள் ஏழாம் நாள் வெள்ளிக்கிழமை போப் அடிகளார் உலாச் சென்று திரும்பியதும் குளிர் தாக்கியதுபோல் தோன்றியது. அதுவே நோயின் அறிகுறியாக அமைந்தது. 11-ஆம் நாள் செவ்வாய்க் கிழமை தம் உலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு எய்தினார். 

 தம்மை ஒரு தமிழ் மாணவராகவே சொல்ல விரும்பிய போப் அடிகளாரின் புகழ் தமிழ் வாழும் காலம் வரை நின்று நிலவும்.

கருத்துகள் இல்லை: