நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 15 ஏப்ரல், 2007

த. கோவேந்தனின் "வானம்பாடி' இதழ் அறிமுகம்


இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியின் பாட்டுத்துறை (கவிதை) மிகச்சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பாரதியார், பாவேந்தரின் வருகைக்குப் பிறகு தமிழ்ப் பாட்டுத்துறையில் வடிவம், உள்ளடக்கம், வெளியீட்டு நுட்பங்களில் பாவலர்கள் தம் கவனம் செலுத்தித் தமிழ்ப் பாட்டுத்துறையை வளப்படுத்தினர். மரபு, புதுப்பா, திரைப்பா, உரைவீச்சு, துளிப்பா (ஐக்கூ), குறும்பா (Limerik), நகைப்பா (Parody) எனப் பல வடிவங்களில் பாவலர்கள் பாட்டுத் துறையைச் செழுமைப்படுத்தினர்.சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம் (1935), குயில்(1947) எனும் பாட்டு இதழ்களின் வருகைக்குப் பிறகு தமிழ்ப்பட்டுத்துறையை வளர்க்கும் பல பாட்டு இதழ்கள் தமிழ்மொழியில் வெளிவந்தன.அவற்றுள் வேலூரிலிருந்து (வடார்க்காடு மாவட்டம்) த. கோவேந்தனால் வெளியிடப்பெற்ற "வானம்பாடி' எனும் பாடல் இதழ் குறிப்பிடத்தகுந்தது. அவ்விதழை இக்கட்டுரை அறிமுகம் செய்கிறது.

வானம்பாடி' இதழ் அறிமுகம் 

வானம்பாடி' இதழ் 22 மு 27 எனும் வடிவில், 15-9-1957இல் ஆசிரியர் த. கோவேந்தன், சைதாப்பேட்டை, வேலூர் எனும் முகவரியிலிருந்து வெளிவந்தது. விலை ஓர் இதழ் 16-காசு; ஆண்டுக்கட்டணம் 2-00. ஒவ்வொரு மாதமும் 15-ஆம் நாளில் வெளிவந்த மாத இதழ் இஃது. "தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்' எனும் பாவேந்தரின் வரிகளை முகப்பு வரிகளாகக் கொண்ட இதழ். ஓராண்டில் 9 - இதழ்கள் வெளிவந்தன. 12,16,20 என்ற பக்கங்களைக் கொண்டு வந்தது. பின்பு இரண்டாம் ஆண்டுத் தொடக்கத்தில் 1 மு 4 கிரவுண் அளவில் 50 பக்கமாக வெளிவரும் என்ற அறிவிப்பு வழி இதழின் வடிவம் வேறுபட்டதை அறிய முடிகிறது. எனினும் அவ் ஏடுகள் பார்வைக்குக் கிடைத்தில. எனவே ஓராண்டில் வெளிவந்த ஒன்பது ஏடுகளின் 128-பக்கச் செய்திகளை மட்டும் இங்கு ஆய்வுக்கு உட்படுத்துகிறது இக்கட்டுரை.

வானம்பாடியின் படைப்புகள்வானம்பாடியில் பெரும்பாலும் மரபுப் பாடல்களே இடம்பெற்றுள்ளன. படைப்புப்பாடல்களும், மொழிபெயர்ப்புப் பாடல்களும் என இவற்றை வகைப்படுத்தலாம். கவிதை குறித்த சில கட்டுரைகளும் உண்டு. படைப்புப் பாடல்களை அறிஞர்கள் த. கோவேந்தன், துரை. மாணிக்கம் (பாவலரேறு பெருஞ்சித்திரனார்), ம. இலெனின் தங்கப்பா, சிவஞானவள்ளல், சாமிபழனியப்பன், சுப்பு ஆறுமுகம், இலால்குடி நம்பி, இரா. வேங்கடபதி, கோ. கந்தசாமி, ஆ. முத்துசிவன், இராமசேடனார், செ. வரதராசன், முருகேச பண்டிதர் முதலானவர்கள் இயற்றியுள்ளனர்.

த. கோவேந்தன் பல்வேறு புனைபெயர்களிலும் (காவேரிக்கவிராயர்) பெயரின்றியும் பல பாடல்களை எழுதியுள்ளார். மேலும் பாவேந்தர் பாரதிதாசன், பாரதியார், மு.வ, புலவர் குழந்தை, அறிஞர்அண்ணா ஆகியோரின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன.மொழிபெயர்ப்புப் பாடல்கள் மேனாட்டுக் கவிதைகள் சில தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைப் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், த. கோவேந்தன் ஆகியோர் மொழி பெயர்த்துள்ளனர். 1.4.58 இதழில் மேலட்டையில் செல்லியின் படமும், உள்ளட்டையில் "வானம்பாடி' எனும் பாடலும் இடம்பெற்றுள்ளன.

செல்லியின் (The Sky Lark) எனும் பாடலைப் பன்மொழிப்புலவர் அவர்கள் "வானம்பாடி' என மொழிபெயர்த்துத் தந்துள்ளார் (22-பாடல்), பெரும்பாவலர் தாகூரின் பாடலை "அன்பு மனத் தொல்லை' எனும் பெயரில் த. கோவேந்தன் மொழிபெயர்த்து நான்காம் இதழின் அட்டைப்பாடலாக வெளியிட்டுள்ளார். வள்ளத் தோளின் பாடல் "காதல்தேர்வு' எனும் தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது (15.5.58), சேக்சுபியரின் கவிதை "வேனில் அழகு ஒப்பாமோ' எனும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்ப்பாடல்கள் சில ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இப்பாடல்கள் சங்கப்பாடல்கள், சமகாலப் படைப்புகள் எனும் இரு நிலையினவாக உள்ளன. சங்கப்பாடல்கள் பலவும் பேராசிரியர் ம. இலெனின் தங்கப்பா அவர்களால் மிகச்சிறப்புடன் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. பின்னாளில் சில ‘INTELLECTUAL BEAUTY’ எனும் பெயரில் (விலை 2.25) தனி நூலாக வெளிவரும் என்ற விளம்பரத்தையும் காண முடிகிறது (ப.15, 1.8.58). திரு. கந்தசாமி அவர்கள் முடத்தாமக்கண்ணியாரின் (அறல்போல்கூந்தல்) பாடலை "The Full Bloom of Woman-hood"எனும் பெயரில் ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளார். பாரதியாரின் "விடுதலை' எனும் பாடல் ‘Liberation’ எனும் பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளதுடன், பாவேந்தரின் "வானம்பாடி' பாடல் தங்கப்பாவால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

தங்கப்பா "வித்துலகீரே' எனும் திருவருட்பாபாடலை, "O worldly men"எனும் தலைப்பில் பெயர்த்து வெளியிட்டுள்ளார்.

தமிழ்ப்பாடல்கள்,தமிழ் மரபுப் பாடல்கள் பலவும் பலதரத்தனவாக வெளிப்பட்டுள்ளன.பெரும்பாலும் காதல், சமூகநிலை, இயற்கை குறித்த பாடல்களாகவே உள்ளன. துரை. மாணிக்கம், தங்கப்பா, சுப்பு ஆறுமுகம், த. கோவேந்தனின் பாடல்கள் முற்போக்கு எண்ணங்களுடன் படைக்கப்பட்டுள்ளன.இவற்றுள் துரை.மாணிக்கத்தின் பாடல்கள் வானம்பாடி, வேண்டாத இந்தி, மதங்காப்பார், உள்ளழகு, என்னடி சொன்னாரவர்?, குச்சுக்குடிசையிலே, குருடர்காதல், ஊர் அறியும்முன், உள்ளத்தனையதுயர்வு, ஆறு எனும் தலைப்புகளில் உள்ளன. இதில் "மதங்காப்பார்' எனும் பாடல் துறவியர்களின் மூடத்தனமான வாழ்க்கையினை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

தங்கப்பாவின் பாடல்களுள் "ஆந்தைப்பாட்டு' எனும் காவியமும் ஆரடா எனக்குப் பெண் கொடுப்பது? எனும் பாடலும் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். இவற்றுள் "ஆராடா எனக்குப் பெண் கொடுப்பது?' எனும் பாடல் இன்றைய சடங்குத்தனமான இல்வாழ்க்கை முறைகளைக் கடிந்துரைக்கின்றது". பணத்தினால் எதையும் சரிப்படுத் திடலாம்பணிந்திடச் செய்யலாம் என்ற குணத்தினைக் கொண்ட குறுமகனா நீ?குப்புற விழுந்துநீ ஓடு!பிணத்தினைப் போய் ஓர் சுடலையில் தோண்டு! பெரும்பணம் அதன்முனர்க் கொட்டு!மணத்தினைப் பின்செய்; மகளினை வழங்கு!மகிழ்வொடும் வாழுவள் அவளே!'' எனும் பாட்டு வரிகளே இதற்குச் சான்றாகும் (பக். 6,1.4.58).

வானம்பாடியின் இதழாசிரியர் பல்வேறு வடிவங்களில் பாடல்களை எழுதியுள்ளார். படைப்பு, மொழிபெயர்ப்பு என இவரின் பங்களிப்பு இருந்துள்ளது. பழந்தமிழ் இலக்கியப் பாடல்களைப் பாட்டு வடிவில் விளக்கும் பல பாடல்களைக் கோவேந்தன் வழங்கியுள்ளார். நற்றிணையின் (196) பாடலை விளக்கும் வகையில் "நிலவே சொல்' (ப.10, 15.10.57) எனும் தலைப்பில் 7 பாடல்களைச் சிந்து அமைப்பில் கோவேந்தன் வழங்கியுள்ளார். மேலும் சமூக நடப்புகளை எதிரொலிக்கும் வகையில் "முதுகுளத்தூர்' கலவரம் பற்றிய பாடல்களையும் கோவேந்தன் வரைந்துள்ளார். நாட்டு நடப்புகள் யாவும் பாட்டு வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இதழில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள், மதிப்புரைகள், நன்றியுரை, பொன்மொழிகள் யாவும் பாட்டு வடிவில் வெளியிடப்பட்டுள்ளதை நோக்கும் பொழுது தமிழ்ப்பாட்டு வழியாக அனைத்துச் செய்திகளையும் சொல்ல முடியும் என்பதை நிலைநாட்டியுள்ளனர்.

வானம்பாடியின் மூன்றாம் இதழில் A.S.Aபேக்கரியின் விளம்பரத்தில், "நலந்தரும் கைவண்ணத்தால் நற்சுவை சீர் வண் ணத்தால் பலர்புகழ் ரொட்டி பிஸ்கட்பண்டங்கள் செய்கின் றோம் யாம்!' (அட்டையின் பின்புறம்)எனும் பாடல்வடிவில் செய்தி பதிவாகியுள்ளது.வானம்பாடியில் எழுதுவோர்க்கு ஆசிரியர் பாட்டு வடிவில் வேண்டுகோள் விடுப்பதை,"எழுதுவோர் உள்ளத் தூறும்எழுங்கவி யுணர்வைத் தாரீர்உழுபுலன் புரட்சி யயன்னும்ஒருபொருள்; சிந்தனைப்பொன்எழுச்சியைத் தூவி, யாப்பின்இசைப்புனல் பாய்ச்சி, வாழ்வின்முழுப்பயன் புத்தார்வத்தைமுரணிலா தனுப்பி வைப்பீர்'' (15.11.58)என்று எழுதியுள்ளார். தம் இதழின் படைப்புகள் சமூக மாற்றத்திற்கு அடிகோல வேண்டும் என்பதை இதிலிருந்து உணரலாம்.

வானம்பாடியின் இதழ் நோக்கம் ஒவ்வொரு இதழும் ஒரு குறிக்கோள் கொண்டே தொடங்கப்படும். அக்குறிக்கோளை எட்டும் வகையில தாம் செயல்படுகின்றோமா என இதழாசிரியர்கள் ஒவ்வொரு நிலையிலும் மதிப்பிட்டுக் கொண்டு செயல்பட்டால் சரியாகத் திட்டமிட்டு இதழை வளர்த்தெடுக்கலாம். இவ்வகையில் கோவேந்தன் ஓராண்டு நிறைவின்பொழுது தம் இதழ்ப்பணிகளை ஆய்வு செய்து பின்வரும் நிலைப்பாட்டினை முன் வைக்கின்றார்.

"இந்த இதழுடன் வானம்பாடிக்கு ஓராண்டு முடிகிறது... தமிழிலக்கியக் காவனத்தே புத்தம் புதிய சுமார் ஐம்பது கவிஞர்களை அறிமுகப்படுத்தி, நூற்றெழுபத்தெட்டுக் கவிதை மலர்களை மணக்க வைத்த பெருமை வானம்பாடிக்கே உண்டென்று எண்ணும்போது உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.வானம்பாடி கவிதை இதழுக்குக் கைம்மாறு கருதாது கவிதைகளைத் தந்துதவிய எல்லாக்கவிஞர்கட்கும் என் இதயம் கனிந்த நன்றி... தமிழருமையை ஆங்கிலமறிந்தார் உணர, புகழ - செந்தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டேன். பயன்கண்டார் பலர்...இறுதியாக... செப்டம்பர் திங்கள் இரண்டாம் ஆண்டின் முதல் இதழ் வெளிவரும். ஒரு சிறு மாற்றம். நூல் "கிரவுண்' 1 மு 4 அளவில் நூலாக 50 பக்கங்களுடன் வெளிவரும். ஆனால் திங்கள்தோறும் வெளியிட இயலாது. எனக்கென்று வேறு வாணிபம் இருப்பதால் திங்கள்தோறும் வெளியிட வானம்பாடி இதழுடன் ஒத்துழைக்க இயலவில்லை'' எனத் தன் வெளியீட்டு முயற்சி பற்றிக் கோவேந்தன் எழுதியுள்ளார்.

பொருள் தட்டுப்பாடு, வணிகச்செயல்பாடுகளால் "வானம்பாடி' இதழைக் கோவேந்தன் நெருக்கடிகளுக்கு இடையேதான் வெளியிட்டுள்ளார். தமிழ்ப் பாடல்புனைவோர் வளரும் நல்ல களமாக "வானம்பாடி' விளங்கியுள்ளது. பாவேந்தர் வழியில் பாடல் புனைவோர் சேர்ந்தியங்கிய "வானம்பாடி' இதழ் இரண்டாம் ஆண்டுகளில் வெளிவந்ததாக அறிய முடிந்தாலும் குறுகிய காலத்தில் தன் கவிதைச் சிறகடிப்பை நிறுத்திக் கொண்டது.

நிறைவுரை

வானம்பாடி இதழ் பாட்டுத்துறையின் வளர்ச்சியில் ஈடுபட்டு மரபுப்பாடல்களும், மொழிபெயர்ப்புப் பாடல்களும் வெளிவருவதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. த. கோவேந்தன், துரை. மாணிக்கம் (பெருஞ்சித்திரனார்), ம.இலெ. தங்கப்பா, சுப்பு. ஆறுமுகம் எனும் பாட்டுத்துறை அறிஞர்கள் நின்று நிலைபெற உதவிய ஏடாக வானம்பாடி திகழ்ந்துள்ளது. பின்னாளில் சோவியத் பாடல்களைத் தமிழாக்கம் செய்பவராகக் கோவேந்தனும், தமிழ்த்தேசியப் பாடல்களைப் புனைபவராகத் துரை. மாணிக்கமும் (பெருஞ்சித்திரனார்), படைப்பு, மொழிபெயர்ப்புத்துறையில் வல்லவராகத் தங்கப்பாவும், வில்லிசைப் பாடகராகச் சுப்பு ஆறுமுகமும் புகழ்பெற்று விளங்க அடித்தளம் அமைத்தது வானம்பாடி எனும் பாட்டு இதழ் எனில் மிகையன்று.

1 கருத்து:

RV சொன்னது…

திரு இளங்கோவன்,

நாட்டுடமை ஆன எழுத்துகள் என்ற தலைப்பில் இந்த வருஷம் நாட்டுடமை ஆக்கப்பட்ட 28 எழுத்தாளர்களை சிறு அளவில் அறிமுகம் செய்ய என் தளத்தில் ( http://koottanchoru.wordpress.com/ ) முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். நான் தமிழ் அறிஞனோ ஆராய்ச்சியாளனோ அல்லன். கொஞ்சம் புத்தகப் பித்து உண்டு, அவ்வளவுதான். சேதுராமன் என்பவர்தான் பல விவரங்களை சேகரித்து இந்த தளத்தின் மூலம் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். பாவலர் நாச்சியப்பனை பற்றிய விவரங்களை உங்கள் பாரதிதாசன் பரம்பரை புத்தகத்திலிருந்துதான் அவர் சேகரித்தார். இன்று தற்செயலாக ஜெயமோகன் அவர்களின் தளத்தின் மூலம் உங்கள் தளத்தை கண்டுபிடித்தேன். உங்களது இரு பதிவுகளை லிங்க் செய்து இன்னும் ஒரு பதிவு எழுதி உள்ளேன். ( http://koottanchoru.wordpress.com/2009/05/01/பாரதிதாசன்-பரம்பரை/ )

நாட்டுடமை ஆன எழுத்துகள் என்ற வேர்ப்பதிவிலிருந்து முடிந்த வரை லிங்க் செய்திருக்கிறேன். ( http://koottanchoru.wordpress.com/2009/03/15/நாட்டுடமை-ஆன-எழுத்துக்கள/ )

உங்கள் கருத்துகள், உதவி, மேல் விவரங்கள் கிடைத்தால் எல்லாரையும் அறிமுகம் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். முடிந்தால் படித்துப் பாருங்களேன்!