நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 2 ஏப்ரல், 2007

வளர்முக நோக்கில் இசையும் இசைக் கலைஞர்களும்

பழந்தமிழகத்தைப் பற்றி அறிவதற்குத் தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் முதலான நூல்கள் பெரும் துணை புரிகின்றன. இந்நூல்களின் வழியாகப் பழந்தமிழரின் வாழ்க்கை முறை, ஒழுக்கம், நிலஅமைப்பு, வணிகம், போர், கலை முதலானவற்றை அறிய முடிகிறது. சங்க நூல்கள் வழிப் பழந்தமிழகத்தை அறிவதுபோல் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய, இலக்கணங்கள், கல்வெட்டுகள் வழியாக இடைக்காலத் தமிழகத்தையும், பிற்கால நூல்கள், பிற வரலாற்று மூலங்கள் வழியாகப் பிற்காலத் தமிழகத்தையும் அறியலாம். இக்கட்டுரை காலந்தோறும் இசை, இசைக் கலைஞர்களின் நிலை எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றித் தமிழ் நூல்களை அடிப்படையாகக் கொண்டு விளக்குவதுடன் இன்றைய நிலையையும் குறிப்பிடுகின்றது.
சங்கச் சமூகத்தில் கலைஞர்கள் பல திறத்தனவராக இருந்துள்ளதை நூல்கள் வழி அறிகின்றோம். பெரும்பாலும் ஐந்து நில மக்களும் இசைத்தும், ஆடியும், பாடியும் மகிழும் வாழ்க்கை முறையினைக் கொண்டு இருந்தனர். ஆண், பெண் வேறுபாடு இன்றிக் கலையுணர்வு கொண்டவர்களாக இருந்தனர்.அவரவர்களின் உடல்நிலைகளுக்கு, பயிற்சிக்கு ஏற்பக் கலைகளில் ஈடுபாடு காட்டியுள்ளனர்.பழந்தமிழ் மக்கள் தொழில்,உழைப்பின்பொழுது கலைகளைப் பயன்படுத்தினர். இது கூத்து, பாட்டு, கருவி முழக்கம் என அமைந்தது.
சமூகத்தில் இருந்த ஆயர், எயினர், கடம்பர் (புறம். 335) கள்ளர், கானவர், குறவர், கோவலர் (அகம் 123, 214) பரதவர், புலையர், மழவர், மள்ளர், மறவர், வினைஞர் அகவன்மகள் (குறுந்.23) குறமகள், குறுமகள் கொடிச்சி முதலானவர்களை இசையுடன் தொடர்புடையவர்களாக நம் நூல்கள் குறிப்பிடுக்கின்றன.இவர்கள் தத்தம் தொழிலின் பொழுது இசையைப் பயன்படுத்தியவர்கள். இவர்கள் ஒரு வகையினர்.
இசையை, கூத்ததை முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்கள் வேறு ஒரு வகையினராகக் கருதலாம். அவர்களுள் அகவலன் (பதிற் : 43:26-28), அகவுநர் (அகம் 113), அகவர் (மதுரை 221-24), ஆடுநர் (புறம் 221-2), இயவர் (ஐங்கு. 215), கண்ணுளர் (மலை. 50), கலப்பயைர் (அகம். 301), கிணைவன் (நற்.108), கூத்தர் (புறம். 28), கோடியர் (புறம். 29), துடியன் (புறம். 2), பரிசிலர், பறையன் (புறம். 335), பாடுநர் (புறம். 33), பாணன் (புறம். 69), பாண்மகன், பொருநர் (பொரு. 1-3), முழவன் (அகம். 352), வயிரியர் (மது. 749), ஆடுமகள் (புறம். 128) கிணை மகள் (புறம். 111), பாடினி (பொரு.47), பாண்மகள் (அகம்.126), பாடுமகள் (பதி.44), விறலி (புறம். 280) எனவரும் பிரிவினர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களைத் தவிர மூன்றாம் வகையினராகச் சூதர், மாகதர், வைதாளிகர் (மதுரை. 670) என்னும் பிரிவினர் இருந்ததையும் அறிய முடிகிறது. மூன்றாம் வகைக் கலைஞர்கள் அரசன் காணும் பொருட்டுத் தம் திறமையை வெளிப்படுத்தியவர்கள். இவ்வாறு கலைஞர்கள் மட்டுமன்றி இசையிலும் கூத்திலும் வல்லுநர்களாக, சுவைஞர்களாக அரசர்களும் இருந்துள்ளனர்.
தமிழ் இலக்கியங்களை நோக்கும் பொழுது கலைகள், பற்றிய வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையாக அமைந்துள்ளது. தமிழில் முதலில் கிடைக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம் சுட்டும் செய்திகளின் அடிப்படையில் கலைகளையும், கலைஞர்களையும் நோக்கும்பொழுது சில செய்திகளைப் பெறமுடிகின்றது. நரம்பின் மறை, யாழ், யாழின் பகுதி, பண் எனும் பெயரில் இசை குறித்த செய்திகளைத் தொல்காப்பியம் குறிப்பிடும். அதுபோல் வண்ணம் (சந்தம்) பற்றிய செய்திகளையும் தருகிறது. மேலும் பொருநர், பாணர், கூத்தர், விறலியர் முதலான கலைஞர்களைப் பற்றியும் அவர்களுக்குச் சமூகத்தில் அமைந்த பணிகளையும் தொல்காப்பியம் குறிப்பிடும். அரசர்களிடம் ஆற்றுப்படுத்துபவராகவும் ஏர்க்களம், போர்க்களம் பாடுபவராகவும் போருக்கு முன்பும், போருக்குப் பின்பும் கருவிகளை முழக்குபவராகவும், அரசனின் பெருமையைப் பாடுபவராகவும் தலைவன் தலைவியருக்கு இடையே ஊடல் ஏற்படும்பொழுது அவற்றை நீக்கும் வாயில்களாகவும் தொல்காப்பியம் கலைஞர்களைக் குறிப்பிடுகிறது. புலவர்களே இசையறிந்த கலைஞர்களாகவும் இருந்துள்ளனர். அதுபோல் அரசர்கள் தகுதியுணர்ந்து பரிசில் நல்கும் அளவில் கலையுணர்வு நிறைந்தவர்களாக இருந்துள்ளனர்.
ஆடியும், பாடியும் கலைவளர்த்த கலைஞர்களின் வகைகளை அவர்களின் செயல்களைச் சங்க நூல்களில் பல இடங்களில் காண முடிகிறது.தொல்காப்பியம் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருளை விளக்கும்பொழுது இசையையும் இசைக் கருவிகளையும் சுட்டுகிறது. தொல்காப்பியச் செய்திகள் மொழிசார்ந்த செய்திகள் எனவே மொழி, மொழிபேசும் மக்கள். வாழ்க்கையைப் பற்றிப் பேசும் பொழுது தேவையான இடங்களில் மட்டும் இசை, கூத்து, பிற கலைகள் பற்றிப் பேசப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியங்களின் பாடுபொருள் காலந்தோறும் மாறிமாறியுள்ளன. சங்கச்சமூகம் என்பது வீரநிலைக் காலமாகக் கருதப்படுகிறது. அதன்பின் காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் இசைவிளக்கம் தெரிகிறது.பல்லவர்காலத்தில் ஊர்தோறும் சென்று பக்தி நோக்கில் பண்ணிசைக்கும் இறையடியவர்களின் கையில் இசை வாழ்ந்தது.பொற்றாளம் வழங்கிய இறைவன் அருளால் இசைத்தமிழ் உயர்நிலையில் இருந்ததை யாழ்முரிப்பண் வரலாற்றால் அறியலாம். நாயன்மார்கள் காலத்துக் கலைநிலையை அவர்தம் திருமுறைகளால் அறியலாம். பண்வகுத்துப்பாடிய பாவலர்களாகப் பழந்தமிழர்கள் இருந்துள்ளனர்.
அமைச்சர் பொறுப்பில் இருந்த சேக்கிழார் பெருமான் மிகுந்த இசையறிவு கொண்டவர். எனவே தம் காலத்தில் நிலவிய இசையமைப்பு, இசைக்கருவிகளைத் தம் பெரியபுராண நூலில் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமிருந்த மிடற்று இசை, கருவி இசை இறையடியவர்களிடம் தங்கியிருந்தது. இது திருப்புகழ் காலம் வரை நீடிக்கிறது.சிற்றிலயக்கியங்களை நோக்கும் பொழுது மீண்டும் மக்களிசையாக இசை மலர்ந்துள்ளது. நாட்டுப்புற இசையாக இருந்த தமிழிசை புலவர்களால் பள்ளு, குறவஞ்சி, காவடிச்சிந்து நூல்களில் அடைக்கலம் புகுந்தது. குறுநில மன்னர்களின் காலத்தில் தேவரடியார்கள், ஓதுவார்கள் அரண்மனைக் கலைஞர்களிடம் இசை தஞ்சம் புகுந்தது.
வேற்று மொழியினரின் படையயடுப்பால் தமிழிசையின் இடத்தைத் தெலுங்கு மொழி பிடித்துக் கொண்டது.தமிழிசைக் கலைஞர்களின் இடத்தை வேற்று மொழியில் பாடுபவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.இன்றைய நிலையில் இசைக்கலை என்பது சமூகத்தின் உயர்சாதிக்காரர்களிடமும் அடித்தட்டு மக்களிடமும் உள்ளதே தவிர, நடுத்தட்டு மக்களிடம் இல்லை. உயர்சாதியினர் இசையினுக்கும் அடித்தட்டு மக்களின் இசையினுக்கும் வேறுபாடு உள்ளது.உடல் உழைப்பு அதிகம் உடைய இசைக்கருவிகளை உயர் சாதியினர் பயன்படுத்துவது இல்லை. தவில், நாகசுரம் போன்ற இசைக்கருவிகளை உயர்சாதியினர் பயன்படுத்தாமல் வீணை, வயலின் முதலான மென்மையான இசைக்கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.
அரசியல் மாற்றங்களால் இசையிலும் மாற்றங்களைக் காண முடிகிறது. அனைத்து இன மக்களும் இன்று இசைக்கலைஞர்களாக மாறி வருகின்றனர். உயர் வகுப்பினரின் வாய்ப்பாட்டு, கருவியிசையைப் பிற இனத்து மக்களும் பயன்படுத்துகின்றனர். ஒரு மதத்தினரின் இசைக் கருவியினைப் பிற மதத்தினரும் வாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேக் சின்னமெளலான நாகசுரம் வாசிப்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல் ஆயர்குல மக்களின் அடிப்படைக் கருவியாக இருந்த புல்லாங்குழல் தேவாலயங்களில் ஒலிப்பதற்குத் தடையிருந்த நிலை இன்று மாறியுள்ளது.
இசைக்கருவிகளை வாசிப்பவர்களிடையே சில இடங்களில் உயர்வு தாழ்வு காணப்படுகிறது. மேடைக்குத் தகுந்தவாறு சிலர் இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது உண்டு. பறை, உடுக்கை, பம்பை, சுரை, உறுமி, கிளாரிநெட், நாகசுரம், தவில் முதலியவற்றை வாசிப்பவர் நிலை வேறு. பிடில், வயலின், வீணை, டிரம்ஸ், வாசிப்பவர்களின் நிலை வேறு. மக்களை மகிழ்ச்சிப்படுத்தவும் உழைப்பின் துன்பத்தைப் போக்கவும் பயன்பட்ட கலையும் கலைஞர்களும் சமூக மாற்றத்தால் பல்வேறு சவால்களை இன்று சந்தித்து வருகின்றனர்.
இசைக்கருவிகள் அறிவியல் தொழில்நுட்பக் காரணங்களால் இசைத் துல்லியம் பெற்றுவிட்டன.யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும்படி கணிப்பொறி மயமாகிவிட்டன. ஒரே விசைப்பலகையில் பலதிற இசைகளை உருவாக்கும் வகையில் கருவி வளர்ச்சி பெற்றுவிட்டது. ஒரு கலைஞரால் ஒரு கருவியை மட்டும் வாசிக்க முடியும் என்ற நிலை மாறி ஒரே கலைஞரே பல கருவிகளை இசைக்கும் ஆற்றல் பெற்றுள்ளார். ஒரு நிலத்தில் உள்ள கருவி வேறொரு நிலத்தில் பயன்படுத்தப்பட்டால் திணை மயக்கமாகக் கருதிய நிலை மாறி ஒரு கருவிக்குள்ளேயே பல கருவிகளை இசைக்கும் மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டது.
ஊர், ஊராகச் சென்று தம் திறமையைக் காட்டிய நிலை மாறி ஒரு இடத்தில் இருந்து உருவாக்கும் கலைப்படைப்புகள் உலகம் முழுவதும் சென்று பரவும் நிலை உள்ளது.இசைக்கலைஞர்கள் சமூகத்தில் மதிப்புக்கு உரியவர்களாக மாறிவிட்டநிலையைப் பார்க்கிறோம். பாட்டுக்கு இசை என்ற நிலைமாறி இன்று இசைக்குப் பாட்டு என்ற நிலை வந்துள்ளது.இசைக் கலைஞர் எடுக்கும் முடிவுக்குப் படைப்பாளர்கள் கட்டுப்பட வேண்டிய நிலையில் இசை ஆதிக்கமும் இசைக்கருவிகளை இயக்குவோரின் ஆதிக்கமும் ஏற்பட்டுவிட்டது.
இசை, இசைகருவிக்கு இருக்கும் மதிப்பைப் போல ஒலிப்பதிவாளருக்கும், ஒலிசேர்க்கையாளருக்கும், பாடகருக்கும், பாடலாசிரியருக்கும் உரிய இடம் இன்று கிடைத்துள்ளது. மொழி தெரியாதவரே வேறு ஒரு மொழிப் பாடலைப் பாடிவிட முடிகிறது.வாயசைப்பு மட்டும் உடையவரே இன்று பாடலைப்பாடியவராக மக்கள் பேசும் நிலைக்கு மக்களின் மனஉணர்வு உள்ளது.உழைப்பை மறக்க, துன்பத்தைப் போக்கப் பயன்பட்ட இசைக் கலை இன்று பொழுதுப்போக்குக் கூறாகவும், கூடுதல் தகுதியைக் காட்டவும் என்று அமைந்துவிட்டது. மேலும் மக்களிடையே உயர்வு தாழ்வை உண்டாக்கிய நிலையும் இசைக்கு எதிர்பாராமல் அமைந்துவிட்டது. இவ்வாறு காலந்தோறும் இசையும், இசைக் கலைஞர்களும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: