நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 25 ஏப்ரல், 2007

தமிழில் ஒப்பாரி இலக்கியம்

தமிழ்மொழி தொன்மைச் சிறப்புடையதாகும். இம்மொழி பேச்சு வழக்கு, எழுத்து வழக்குகளைக் கொண்டது. ஏட்டு இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி இலக்கியம் இம்மொழி பேசும் மக்களிடம் தோற்றம் பெற்றுவிட்டது. வாய்மொழி இலக்கிய வடிவங்களில் ஒன்று பாட்டு இலக்கியமாகும். இப் பாட்டு இலக்கியம் மக்களின் உடல் உழைப்பு நேரங்களில் தோற்றம் பெற்றது. உழைப்பு ஒலிகளில் இருந்தே பாட்டு வடிவங்கள் தோற்றம் பெற்றன என்பது மனித சாரம் நூலாசிரியரின் கருத்து. பாட்டு என்பது தமிழக மக்களைப் பொறுத்தவரை பிறப்பு முதல் இறப்பு வரை ஊடாடி நிற்கின்றது. பிறப்பில் தாலாட்டுப் பாடலாகவும். மறைவின் பொழுது ஒப்பாரிப் பாடலாகவும் வெளிப்படும் பாங்கினை நாட்டுப்புறவியல் அறிஞர்கள் குறிப்பிடுவர்.இங்கு ஒப்பாரி என்னும் வாய்மொழி வடிவம் பற்றி எண்ணிப் பார்ப்போம்.

ஒப்பாரி என்பது இறந்தவர்களை நினைத்துக் கண்ணீர் விட்டுக் கதறி அழும் பெண்கள் பாடுவது. இவ்வாறு பாடும் பொழுது மாரடித்துக் கொண்டும் பாடுவது உண்டு. ஒப்பாரியை "ஒப்பு' எனவும் "பிலாக்கணம்' எனவும் குறிப்பது உண்டு. "பினக்கானம்' என்பதே பிலாக்கணம் எனப்படுகிறது. தொன்மைக் காலத்தில் கையறு நிலைப்பாடல், புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு, அழுகைப்பாட்டு என நம் முன்னோர்கள் ஒப்பாரியை அழைத்தனர்.

ஒப்ப + ஆரி எனப் பிரித்து ஒப்புச் சொல்லி அழுதல் என ஒப்பாரிக்குச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி விளக்கம் தருகிறது. ஒப்பாரி என்பது பெண்களுக்கே உரிய வழக்காற்று வடிவமாக உள்ளது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஒப்பாரி வடிவம் வழங்கப்படுகிறது என்பதைப் பின்வரும் நூற்பா வழி அறியலாம்.

""மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
ஆய்ந்த பூசல் மயக்கத் தானும்
தாமே ஏங்கிய தாங்கரும் பையுளும்
கணவ னோடு முடிந்த படர்ச்சி நோக்கிச்
செல்வோர் செப்பிய மூதா னந்தமும்
நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து
தனிமகள் புலம்பிய முதுபா லையும
கழிந்தோர் தேஎத் தழிபடர் உறீஇ
ஒழிந்தோர்புலம்பியகையறுநிலையும்'' என்பது தொல்காப்பியம்.

உறவினர்கள் இழவு வீடுகளுக்குச் செல்லும் போது "இழவு கொடுத்தல்' என்னும் பெயரில் மாரடித்து அழத் தொடங்கும் பொழுது ஒப்பாரி பாடப்படும். இறந்து கிடப்பவரின் நெருங்கிய உறவினர் முறையாகவும், சில நேரங்களில் முறையற்று வாய்க்கு வந்த வகையில் எல்லாம் இழப்பை எண்ணி அழுது புலம்புவர். மார்பிலும், தலையிலும் அடித்துக் கொள்வர். தமக்கு நெருங்கிய உறவினர் வந்தவுடன் அவர்களிடம் தம் கையற்ற நிலையைச் சொல்லியவாறு அழுது புலம்புவர்.

நிறைவாழ்வு வாழ்ந்தவர் இறந்தார் என்றாலும் ஒப்பாரி சொல்வதில் பஞ்சம் இருக்காது. திடீர்ச் சாவு நிகழ்ந்த பொழுது பாடப்படும் ஒப்பாரிக்கும் நிறை வாழ்வு வாழ்ந்த பெரியவர்கள் இறந்த பொழுது - எதிர்பார்த்த சாவுகள் நிகழும் பொழுது பாடப்படும் ஒப்பாரிக்கும் வேறுபாடு உண்டு.

பின்னைய நிகழ்வில் உரை சொல்லி அழும் மரபு உண்டு. இவ்வாறு பாடப்படும் பாடல் இரண்டு, மூன்று மணிநேரம் கூட நீண்டு செல்வது உண்டு. உறவு முறைகளின் நெருக்கத்திற்கு ஏற்ப ஒப்பாரிப் பாடலின் கால அளவு மாறுபடும். நெருங்கிய உறவினர் என்றால் நீண்ட நேரமும் தூரத்து உறவினர் என்றால் குறைந்த நேரமும் ஒப்பாரி சொல்வர். தமிழகத்தில் சில பகுதிகளில் கூலிக்கு ஒப்பாரி சொல்லி அழுவதும் உண்டு. அரவாணிகள் சொல்லும் ஒப்பாரி தனி வகையின.

ஒப்பாரி என்பது தாய், தந்தை, மகன், மகள், கணவன், அண்ணன், தங்கை, அக்கா உறவு முறைகளுக்கு ஏற்பப் பாடப்படுவதும் உண்டு. ஒரு பாடலைச் சூழலுக்கு ஏற்ப மாற்றிப் பாடி ஒப்பாரி ஆக்குவது பெண்களுக்குக் கைவந்த கலையாக உள்ளது. ஒப்பாரி என்னும் வாய்மொழி வடிவம் உணர்வு மயமான சூழலில் பாடப்பட்டாலும் அதிலும் வடிவ ஒழுங்கு, அணியமைப்பு, எதுகை, மோனை, இயைபு, முரண், கற்பனைநயம் எனப் பல அழகுகள் உள்ளன. தமிழகம் முழுவதும் பாடப்படும் ஒப்பாரிப் பாடல்களை எடுத்து ஆராயும் போது சில அமைப்பு முறைகளில் ஒன்று பட்டுக் காணப்படுவதை அறிய முடிகிறது.

ஒப்பாரிப் பாடல்களில் இறந்தவர்களின் குணநலன், பெருமை, சிறப்பு முதலியன சிறப்பாகப் பேசப்படும். இறந்தவருக்கும் தனக்கும் உள்ள உறவு, நெருக்கம், அவரை இழந்த பிறகு தான் அடைய உள்ள துன்பம் முதலியன ஒப்பாரிப் பாடலைப் பாடுபவர் குறிப்பிடுவார். "குழந்தை பெற்றவளுக்குத் தாலாட்டும் கணவனை இழந்தவளுக்கு ஒப்பாரியும் தானே வரும்' என்பது தமிழகப் பழமொழி.ஒப்பாரிப் பாடல்கள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்களால் பாடப்படுகிறது. அதுபோல் தமிழர்கள் வாழும் இலங்கை, மலேசியா முதலான நாடுகளிலும் இவ்வடிவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாழும் மலையின மக்களும், பழங்குடி மக்களும் ஒப்பாரிப் பாடல்களைப் பாடி வருகின்றனர். கொல்லிமலைப் பகுதியில் வாழும் மலை வாழ் மக்களின் வாழ்வில் இறப்பு நிகழும்போது ஒப்பாரி பாடுகின்றனர். இதனைக்,

"கோட மழபேஞ்சி - நா
குயிலா (ள்) நனஞ்சிவந்தா - ஏ ஆயா நா(ன்)
என்ன பெத்த குயிலா இருந்துவிட்டால் -
எ(ன்)கூந்தல் ஒனத்திருந்தே
கொடிச்சீல மாத்திருந்தே
கொடிமணியச் சூடிருந்தே
என்னபெத்த குயிலா போனோடனே - நா
கூந்த ஒனத்திலேயே -
நாகொடிச்சீல மாத்திலியே - நா கொடிமணியச் சூடிலியே -
நாகொடிய வர ஞாயமுண்டோ'' (கொல்லிமலை மக்கள் பாடல்கள், ப. 290)

என்னும் பாடல் வழி அறியலாம்.

ஒப்பாரிப் பாடல்கள் துன்பத்தின் வடிகாலாக அமைவதுடன் பெண் சமுதாயத்தின் நிலையினைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதுவரை பூவும், பொட்டும் வைத்திருந்த நிலை மாறுவதையும் தீய சகுணமாக மக்கள் கருதுவதையும் மங்கல நிகழ்வுகளில் பங்கேற்பதைச் சமூகம் விரும்பாததையும் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. தந்தை, தாய், இறந்த பிறகு நாத்திமார் தங்களைக் கொடுமைப் படுத்துவார்கள் என்பதைச் சில பாடல்கள் குறிப்பிடுகின்றன.

கணவனை இழந்த பெண் தனக்கு வேறு ஆறுதல் தருபவர் இல்லை என்பதை,

"செஞ்சி மலையோரம் - அந்தச்
சீரங்கத்து ரோட்டோரம்
சீமான காணுமின்னு - நான்
சீத பொலம்பி வந்தேன்
செஞ்சிமல தட்டானுந்தான் - அந்தச்
சீரங்கத்து ஆசாரியும்
சீமான போலநல்ல
செலயயழுதித் தாரேனுன்னான்
செஞ்சிமல தட்டான்கிட்ட -
செலஎழுதி வாங்கிவந்தேன்
செலையுந்தான் பேசுலய்யா,
சீத குற ஆறலய்யா' (நாட்டுப்புறவியல், பக்கம் 140)

என்னும் பாடல் வழி அறியலாம்.அறிவியல் தொழில்நுட்ப உலகில் நாகரிக மயக்கத்தில் ஒப்பாரி சொல்லி அழுதல் என்னும் வழக்கம் பரவலாக மறைந்து வருகிறது. சிற்றூர்ப்புறங்களில் மட்டும் இவ்வடிவம் குற்றுயிரும் குலையுயிருமாக உள்ளது. நெஞ்சை உருக்கும் இக்கலை வடிவம் சமூக நடப்பியலைத் தாங்கி உள்ளதால் இதனைப் பதிவு செய்வதும், பாதுகாப்பதும் காலத்தேவையாகும்.

முனைவர் மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி
புதுச்சேரி

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

I love it. great!

பெயரில்லா சொன்னது…

very nice - loveable tamil culture.