நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 1 ஏப்ரல், 2007

வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமுக்கல் மலை

நெடுஞ்சாலைகள் போடுவதற்குத் தேவைப்படும் கருங்கல் சல்லிகளை அரைக்கும் இயந்திரங்கள் பேரிரைச்சல்போட...சரக்குந்துகள் சல்லிகளை ஏற்றிக்கொண்டு வேகமாகத் திரிய...மக்களின் அன்றாட நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டு நூற்றாண்டுகள் பலவற்றைக் கண்டபடி பெருமுக்கல் மலை நிற்கிறது. இயற்கைவளம் செறிந்த வரலாற்றுச் சுவடுகளை ஏந்திக்கொண்டு நிற்கும் மலையைப் பணமுதலைகள் குடைந்து எடுப்பதற்குக் கைகறைபடிந்த சில அதிகாரிகள் காவலர்களாக நின்றதை, இம் மலையின் இழந்த பகுதிகளைக் காணும் பொழுது அறியமுடிகிறது.

ஆம்! இயற்கைவளம் நிறைந்த மருதநிலப்பரப்புகளுக்கு இடையே பெருமுக்கல் மலை சுனைநீர் வசதியுடனும், இயற்கையான குகையமைப்புகளுடனும் விளங்குகிறது. எனவே தவநினைவில் வாழ்ந்த துறவிகளுக்கு விரும்பத்தக்க இடமாக இம்மலை முற்காலத்தில் இருந்துள்ளது. பின்னாளில் இவர்களின் முயற்சிகளால் கோயில் கட்டும் சூழல் அமைந்தது. தொடக்கத்தில் செங்கல்கோயில்களும், பின்னாளில் கற்றளிக் கோயில்களும் தோற்றம் பெற்றன. சோழர்கள், பாண்டியர்கள், சம்புவரையர்கள், விசயநகர அரசர்களின் காலங்களில் சிறப்புப் பெற்றிருந்த இம்மலை இன்று தம் வரலாறுகளைச் சிதைத்துக்கொண்டு, உருமாறி நிற்கின்றது.

கோட்டைகளும், பாதுகாப்பு அரண்களும் கொண்டு பெருமாள், சிவன், அம்மை, பிள்ளையார் முதலான தெய்வங்கள் இருந்த இடம் இன்று அடையாளம் காணமுடியாதபடி சிதைந்துள்ளது. கோயிலில் இருந்த சிலைகள் பலவும் சிதைக்கப்பட்டு, இடம்மாறிக்கிடந்தன. அதனை அண்மைக் காலத்தில் மக்கள் எடுத்து உரிய இடங்களில் வைத்தனர். பல இடங்களில் தடயங்கள் இருந்தாலும், சிலைகள் இல்லை. இக்கோயிலில் இருந்த கல்வெட்டுகள் பலவும் இடம்மாறிக் கிடக்கின்றன. அழகிய கட்டட அமைப்புகள், தூண்கள் சிதைந்து கிடக்கின்றன. முனிவர்கள் சிலர் தங்கி மருத்துவத்திற்குத் தேவையான மூலிகைகள் இடித்து வழங்கியது போன்ற அமைப்புக் கோயிலில் உள்ளது. உடைந்த கல்வெட்டுகளும், முற்றுப்பெறாத கல்வெட்டுகளும் மலைக்கோயிலில் பல உள்ளன.அரிய வரலாற்று உண்மைகள் பல இக்கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. எதிரிப்படையயடுப்புகளாலும், சரியான பராமரிப்பு இன்மையாலும் கோயிலும், சிலைகளும், கோட்டைகளும், கல்வெட்டுகளும் அழிபாட்டு நிலைக்குச் சென்றன.

பாழடைந்த மண்டபங்கள் போல் காட்சியளிக்கும் கோயில்களைக் கொண்ட பெருமுக்கல் மலையின் இயற்கையழகு நம்மை வியப்படையச் செய்கின்றது. திரைப்படங்கள் எடுப்பதற்குரிய வகையில் அழகு மிகுந்த இடமாக இம்மலை உள்ளது. இதனை எவ்வாறு அடைவது?விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் "பெருமுக்கல்' உள்ளது. திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் பேருந்துகளில் ஏறி 12 கி.மீ பயணம் செய்தால் பெருமுக்கல் ஊரை அடையலாம். பேருந்து நிறுத்தத்திலிருந்து இரண்டு கி.மீட்டர் தூரம் நடந்தால் மலையடிவாரத்தை அடையலாம். குறுக்கு வழியிலும் செல்லலாம். மலையடிவாரத்திற்கு நல்ல சாலை வசதியும் உள்ளது. மலையுச்சியை அடைய இரண்டு வழிகள் உள்ளன.ஒருவழியாக ஏறி இன்னொரு வழியாக இறங்குவது கூடுதலான காட்சிகளைக் காண உதவும்.

மலையடிவாரத்தில் சிவன்கோயில் உள்ளது. அழகிய வேலைப்பாடுகளும், பழைமையும் கொண்ட கோயில் சிதைந்து இருண்டுக் கிடக்கின்றது. கட்டட அமைப்புகளும், சுற்றுச்சுவர்களும் சிதைந்து பராமரிப்பு இன்றி உள்ளன. பல தொன்மையான கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. இக்கோயிலை நோட்டமிட்டபடி, மேலே மலைக்குச் செல்லும் வழியில் பிள்ளையார் சிலை ஒன்று சிதைந்து உள்ளது. (அயல்தேசத்தவர் படையயடுப்புகளில் இது சிதைந்திருக்கலாம்). மலையுச்சியை அடைய படிக்கட்டு வழிகள் உள்ளன. வழியில் உள்ள பாறைகளில் கல்வெட்டுகளையும் காணலாம். வேலைப்பாடுகளுடன் அமைந்த படிக்கட்டுப்பாதைகள் மூடப்பட்டு,புதிய பாதைகள் வழியாக மேலே செல்லலாம்.மக்கள் மலைப்பகுதியையும்,கோயில்பகுதிகளையும் சிதைக்காமல் இருப்பதற்குத் தமிழகஅரசு பாதுகாக்கப்பட்ட இடமாகக் குறிப்பிட்ட பகுதியை அறிவித்துள்ளது.

படிக்கட்டுகள் வழியாக மலையுச்சியை அடையும்பொழுது அறிவிப்புப்பலகையில் ""முதலில் செங்கல்கோயிலாக இருந்த இக்கோயில், விக்கிரம சோழன் காலத்தில் (கி.பி. 1118-35) கற்கோயிலாக மாற்றப்பட்டது. இக்கோயிலின் இறைவன் பெயர் தமிழில் திருவான்மிகை ஈஸ்வரமுடையார் என்றும், பெருமுக்கல் உடையார் என்றும், வடமொழியில் "முக்கயாசலேஸ்வரர்' என்றும் வழங்கப்படுகிறது. பாறைகளில் 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, சம்புவரைய, விசயநகரமன்னர்கள், கோயிலுக்கு வழங்கிய நன்கொடைகளைக் குறிக்கின்றன'' என்று இடம்பெற்றுள்ளது.பெருமுக்கல் எனும் ஊர் சோழர் காலத்தில் "சயங்கொண்ட சோழ மண்டலத்து ஒய்மாநாடான விசைய ராசேந்திர வளநாட்டு பெருமுக்கிலான கங்கைகொண்ட நல்லூர்' என்று அழைக்கப்பட்டது.

பெருமுக்கல் மலையின் உச்சியில் ஏறிச்சென்று காணும்பொழுது மிக நீண்டதூரம் இயற்கையழகு பரந்து விரிந்து கிடைப்பதைக் காணமுடியும. சிவன்கோயிலின் கருவறையின் பின்புறப் பகுதிகள் பீரங்கிகளால் தாக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டுள்ளது. பீரங்கியில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளின் சிதைவுகள் மலைப்பகுதியில் சிதறிக் கிடந்ததை அண்மைக்காலம் வரை மக்கள் கண்டுள்ளனர்.பெருமுக்கல் மலையில் முன்பு சிவன்கோயில் அருகில் பெருமாள்கோயில் இருந்ததாகவும், அது முற்றிலுமாக அழிந்துவிட்டது எனவும் கூறுகின்றனர். சிவன்கோயிலைக் கட்டுவதற்குப் பொருள் உதவி புரிந்த காக்குநாயகனின் உருவமும், அவனது கட்டளையின்படி கோயிலைக் கட்டிய பெரியான் திருவனான சிறுத்தொண்டனது உருவமும், கோயில் சைவாசாரியன் திருச்சிற்றம்பலமுடையான் அன்பர்க்கரசு பட்டனது உருவமும் சிற்பங்களாக உள்ளதைக் கல்வெட்டியில் துறை அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.கோயிலை ஒட்டி இரண்டு அழகிய சுனைகள் உள்ளன. ஒன்று நீராடவும், ஒன்று குடிநீருக்காகவும் பயன்படுத்தப்பட்டது. கோயிலைச் சார்ந்து நந்தவனங்கள் இருந்துள்ளதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அதனை உறுதிசெய்துவதுபோல் நீர் இறைக்கக் கல்லில் அமைக்கப்பட்ட நீர் இறைப்பு அமைப்புகள் இன்றும் காணப்படுகின்றன.

மேலும் கோயிலில் விளக்கெரிக்க முப்பத்திரண்டு பசுக்களும், ஒரு எருதும் என்ற அடிப்படையில் பல தேவரடியார் பெண்கள் தானம் வழங்கி உள்ளனர். மேலும் "கோதையாழ்வியான புரவுவரி நங்கை' திருக்காமக்கோட்டத்தில் விநாயகப் பிள்ளையாரை எழுந்தருளுவித்ததை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. அன்றைய சமுதாயத்தில் நிலவிய நில விற்பனை முறை, நிலத்தை அளக்கும் முறை, கோயில் வழிபாட்டு முறை, கோயிலுக்கு நிலம் வழங்கியவர்களின் பெயர்கள், ஊர்ப்பெயர்கள் முதலியன பற்றி பலகல்வெட்டுகள் பேசுகின்றன. மரக்காணம் சார்ந்த ஊர் மக்கள் 30 பேர் கையயழுத்திட்டு இவ்வூர் இறைவனுக்கு நிலமும், உப்பளமும் வழங்கியுள்ளதை (கி.பி. 13 நூற்றாண்டு) ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

பெருமுக்கல் மலையில் "சீதா குகை' என்ற குகை உள்ளது. இக்குகையில் பல கீறல் உருவங்கள் காணப்படுகின்றன. இக்கீறல் உருவங்கள் கி.பி. 4000 அளவினது எனவும், பெருங்கற்காலத்தைச் சார்ந்தது எனவும், கி.பி. 6,7 நூற்றாண்டினது எனச் சிலரும் கூறுகின்றனர். இவ்வுருவங்களில் மனித உருவங்களாகச் சில தெரிகின்றன. சில அடையாளக் குறியீடுகளாகக் காணப்படுகின்றன. உண்மையறியாத நம் மக்கள் சீதைக்கு மகப்பேறு நடந்த இடம் இது எனவும், அவள் மகப்பேறு வலியால் துடித்தபொழுது கைகால் அசைத்துக் கீறியது இவ்வுருவம் எனவும் செவி வழியாகச் சொல்கின்றனர். ஆனால் சீதாகுகை என்பதைச் சொல்லாய்வு அடிப்படையிலும், இருப்பிடச்சூழலை நோக்கும் பொழுதும் சீதம் என்பது குளிர்ச்சி எனப் பொருள் கொண்டு குளிர்ச்சி பொருந்திய குகை எனப் பொருள் கொள்வதில் தவறில்லை.அதற்கு ஏற்ப வெயிற்காலங்களில் இக்குகை அமைப்பில் சில்லென்ற காற்று இனிமையாக வீசுகின்றது.

மலையின் மேல் அனுமார் கோயில் ஒன்று உள்ளது. இதில் அனுமார் சிலை உள்ளது. கதவு இல்லாமல் இக்கோயில் உள்ளது. இக்கோயிலின் சுற்றுப்புறச் சுவர்களில் அழகிய வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டு மகிழலாம். குரங்குகள் மிகுதியாக இம்மலையில் உள்ளன. கோலெடுத்தால் குரங்குகள் அடங்கும்.சுனைப்பகுதிகளில் கட்டட அமைப்புகள் சிதைந்து காணப்படுகின்றன. நந்தி உருவங்கள் பல சிதைந்து கிடக்கின்றன. கருங்கல்லில் தண்ணீர்த்தொட்டி போன்ற அமைப்பு உள்ளது. சுனைநீர் எந்தக் காலத்திலும் குறையாமல் உள்ளது. இதில் சிலைகள், பொருள்கள் கிடக்கலாம் என மக்கள் நம்புகின்றனர். இந்தச் சுனைநீரில் மக்கள் பல்வேறு அசுத்தங்களைச் செய்தாலும் அதன் தூய்மை கெடாமல் சுனைநீர் உள்ளது.

பெளர்ணமி நாள்களிலும், மாசி மகத்திலும் இக்கோயிலுக்குக் கூட்டம் அதிகமாக வருகிறது. மூலிகைகள் பல இம்மலையில் உள்ளன. இவ்வூரில் 32 கோயில்களும் 32 குளங்களும் இருந்ததாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வூரில் பழைய பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது. முகமதியர் படையயடுப்புகள், ஆங்கிலேயப் படையயடுப்புகளால் இக்கோயில் சிதிலமடைந்துள்ளதை வரலாறு குறிப்பிடுகிறது. இயற்கை எழில் வாய்ந்த இம்மலை வரலாற்று ஆய்வாளர்களுக்கும், இறைவழிபாட்டினர்க்கும், இயற்கை விரும்பிகளுக்கும் சென்று வரத்தக்க சிறந்த இடமாகும்.


1 கருத்து:

Unknown சொன்னது…

திரு முனைவர் அவர்களின் முயற்சி மேலும். தொடரட்டும் வாழ்த்துகள்