நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 24 நவம்பர், 2016

தனித்தமிழ் இலக்கிய ஆய்வரங்க நினைவுகள்…


முனைவர் வி. முத்து அவர்கள் சிறப்பிக்கப்படுதல்

இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழிக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. இவற்றைச் சமற்கிருத வல்லாண்மை, இந்திமொழித் திணிப்பு, ஆங்கிலத் திணிப்பு, ஊடகப் பெருக்கத்தால் ஏற்பட்டுவரும் மொழிச்சிதைவு என்று பட்டியலிடலாம். இவ்வாறு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும் தனித்தமிழ் இயக்கத்தாரின் எழுச்சி இவற்றை அடையாளம் கண்டு, தடுத்து நிறுத்துவதில் துணைசெய்துள்ளது.

மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எழுத்தாலும், பேச்சாலும் மக்களிடம் தனித்தமிழ் என்ற சுடரை ஏற்றி வைத்துள்ளனர். இவர்களின் வழியில் வந்த அறிஞர்கள் தொடர்ந்து ஆய்வுகளாலும், உரைகளாலும் தமிழ் மலர்ச்சிக்குப் பாடுபட்டு வருகின்றனர். நூற்றாண்டைக் கடந்து இப்பணி தொடர்ந்து நடந்து வருகின்றது.

அயலகத்தில் இருக்கும் தமிழர்கள் தனித்தமிழ் இயக்கப் பணிகளை நினைவுகூர்ந்து, தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடினாலும் நம் நாட்டில் இருக்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தமிழாய்வு நிறுவனங்களில் பணிபுரிவோர்க்குத் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வோ, ஆர்வமோ இருப்பதாகத் தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கில் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு தமிழ் வளர்க்கும் அமைப்பினர் உள்ளனர்ஆனால் அங்கொன்றும் இங்கொன்றும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிகழ்வுகள் நடந்து வருகின்றனவே தவிர ஒட்டுமொத்தமான தமிழகத்திலும் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு குறித்த நிகழ்வுகள் நடைபெறாமை எம் போலும் இளையரைக் கவலைகொள்ளவே செய்கின்றது.

தவத்திரு மறைமலையடிகளார் தம் அனைத்துத் துறை ஆராய்ச்சியையும் தமிழ் நலம் நோக்கி அமைத்தமையை இங்குக் கவனத்தில்கொள்ள வேண்டும். மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பல்துறை ஆய்வுகளைபணிகளைச் செய்தமையை இங்கு எண்ணிப்பார்த்தல் வேண்டும். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் படைப்பிலக்கியங்கள் வழியாக, குறிப்பாகப் பாட்டு இலக்கியங்கள் வழியாக ஒரு மிகப்பெரும் தமிழ் எழுச்சியைத் தமிழகத்தில் உண்டாக்கியமையை இங்கு நினைத்துப் பார்த்தல் வேண்டும். தமிழுக்கு இவர்களால் மிகப்பெரும் அடித்தளம் அமைக்கப்பட்டாலும் தனித்தமிழ் என்னும் காலத்தேவைக்குரிய மொழிக்காப்புப் பணிக்கு மக்கள் முன்வராமைக்குரிய காரணத்தைக் கண்டுணரவேண்டும். அரசு இந்த முயற்சியில் கவனம் செலுத்த வேண்டும்; அரசுசார் நிறுவனங்கள் பன்மடங்கு முன்வந்து பணியாற்ற வேண்டும். தமிழமைப்புகள் ஒன்றுதிரண்டு தனித்தமிழின் தேவை குறித்துப் பொதுமக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். ஊடகத்தில் இதுகுறித்த உரையாடல்கள் நிகழ்த்தப்பெற வேண்டும் என்று கூறத் தோன்றுகின்றது.

பண்பாடு காக்கும் நம் திருவிழாக்களைக் கல்வி நிறுவனங்கள் கொண்டாட முன்வருதல் போல மொழிக்காப்பு முயற்சியையும் ஆர்வமுடன் கொண்டாட முன்வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்மொழியின் வளர்ச்சி ஏறுமுகத்தில் இருக்கும். இந்த நினைவுகளுடன் புதுவையில் தனித்தமிழ் இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தனித்தமிழ் குறித்த ஆய்வரங்கம் நடைபெற்றது. புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இந்த நிகழ்ச்சிக்குத் திரளாக வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து அவர்கள் தலைமையேற்க, ஆணையர் திரு. . தியாகராசன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். பாவலர் மு. பாலசுப்பிரமணியன் முன்னிலையுரையாற்றவும், பேராசிரியர் இரா..குழந்தைவேலனார் வாழ்த்துரை வழங்கினார். பெருஞ்சித்திரனாரின் பாவியங்கள் என்ற தலைப்பில் மு.இளங்கோவன் உரையாற்றினார். பெருஞ்சித்திரனாரின் ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து என்ற மூன்று நூல்களையும் அறிமுகம் செய்வதாக இவர் உரை அமைந்தது.

முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி அவர்களின் உரை பாவேந்தரின் பாவியங்கள் என்ற தலைப்பில் அமைந்து, கண்ணகி புரட்சிக்காப்பியம், மணிமேகலை வெண்பா என்னும் இருநூல்களை அறிமுகம் செய்வதாக இருந்தது.

மேற்குறித்த பாவியங்கள் குறித்த வினாக்களுக்கு விடைபகரும் நிகழ்வும் இடம்பெற்றது.


முனைவர் க. தமிழமல்லன் அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது

முனைவர் க. தமிழமல்லன் உரை

மு.இளங்கோவன் உரை

முனைவர் நிர்மலா கிருட்டினமூர்த்தி உரை

புதுவைத் தமிழறிஞர்கள்

பார்வையாளர்கள்

கருத்துகள் இல்லை: