நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 26 அக்டோபர், 2016

தமிழால் போற்றப்பட்ட என் வாழ்க்கை!...


பாவலரேறு பெருஞ்சித்திரனார் மு.இளங்கோவனுக்குத் தங்கப்பதக்கம் சூட்டியும், சான்றிதழ் வழங்கியும் வாழ்த்தும் பொழுது(15.10.1989), 
இடம்: செயங்கொண்டம்(அரியலூர் மாவட்டம்)

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை மாணவனாக நான் பயின்றுகொண்டிருந்தபொழுது (1989), அருகில் உள்ள ஊரான செயங்கொண்டத்தில் அமைந்திருந்த தமிழோசை நற்பணி மன்றத்தின் சார்பில் ஓர் ஆய்வுக்கட்டுரைப் போட்டி மாநில அளவில் நடைபெறுவதாகவும், அதில் கலந்துகொள்பவர்களுள் முதல்பரிசுக்குரிய கட்டுரை வரைவோருக்குத் தங்கப்பதக்கம் சூட்டப்பெறும் எனவும் ஓர் அறிவிப்பு ஓலை எங்கள் கல்லூரி அறிக்கைப் பலகையில் ஒட்டியிருந்தது. பேராசிரியர்கள் அந்த அறிவிப்பினைச் சுட்டிக்காட்டிப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு ஊக்கப்படுத்தினார்கள். தாய்மொழிவழிக் கல்வி என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வரைய வேண்டும் எனவும் அறுபது பக்கங்கள் கட்டுரை இருக்க வேண்டும் எனவும் போட்டி நெறிமுறைகளை வகுத்திருந்தனர்.

ஆர்வமுடன் பல நூல்களைப் படித்தும், பேராசிரியர்களுடன் உரையாடியும் கட்டுரையை ஒருவாறு உருவம்கொடுத்து உருவாக்கி அனுப்பியிருந்தேன். பாவாணர் நூல்களையும், பெருஞ்சித்திரனார் நூல்களையும் நான் பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்தபொழுதே என் மாமனார் பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள் எனக்கு அறிமுகம் செய்திருந்த கரணியத்தால் ஒரு தமிழாசிரியருக்கு உரிய தமிழ்த்தெளிவும், எழுத்துப் பயிற்சியும், தனித்தமிழ் நடையும் கைவரப் பெற்றிருந்தேன். கட்டுரை அனுப்பிய சிலநாள் கழித்துப், போட்டிக்கு வந்திருந்த கட்டுரைகளை அறிஞர்கள் மதிப்பிட்டு, என் கட்டுரை முதல்பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் 15. 10. 1989 அன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தனர்.

செயங்கொண்டத்தில் தமிழுணர்வுடன் இயங்கிய திரு. மருத மு. நாவளவன், திரு. குமணன் உள்ளிட்ட தோழர்களின் முயற்சியால் விழா மிகச் சிறப்பாக நடந்தது. பரிசளிப்பு விழாவுக்கு மூத்த தமிழறிஞரும் மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் தலைமாணாக்கரும், தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஏடுகளின் ஆசிரியருமான பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் வந்திருந்தார். ‘ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழ விளங்கி…” எனத் தொடங்கும் தண்டியலங்கார எடுத்துக்காட்டுப் பாடலை நினைவுகூர்ந்து, தமிழின் சிறப்பினை எடுத்துரைத்து ஐயா அவர்கள் அரியதோர் உரை நிகழ்த்தினார்கள். சின்னஞ்சிறு மாணவர்களான எங்களுக்கு அந்த உரை உள்ளத்தில் மொழி, இன, நாட்டு உணர்வினை ஊட்டியது.

தமிழோசை நற்பணி மன்றத்து நிகழ்ச்சியின் நிறைவில் முதல்பரிசு பெற்ற எனக்குத் தமிழின் தலைமகனான பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் திருக் கையால் தங்கப் பதக்கம் சூட்டப்பெற்றது. என் தமிழார்வம் தழைத்து வளர இந்த நிகழ்வு ஓர் அடிப்படைக் காரணமாக அமைந்தது. கடந்த இருபத்தேழு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற விழாவில் எடுக்கப்பெற்ற அந்தப் படம் இன்று என் பேழைகளை ஒழுங்குசெய்தபொழுது கிடைத்தது. என் பணிகளை ஊக்கப்படுத்தி மகிழ்வூட்டும் நல் உள்ளங்களின் பார்வைக்கு இந்தப் படத்தை வைப்பதில் மகிழ்கின்றேன். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் திருமுன்னர் தலைவணங்கித் தங்கப் பதக்கம் சூடிக்கொள்வதை விடவும் வாழ்வில் வேறு என்ன உயர்வு இருக்கமுடியும்?
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் ஒப்பம் தாங்கிய சான்றிதழ்

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கொடுத்து வைத்தவர் ஐயா தாங்கள்
வாழ்த்துக்கள் ஐயா

Dr B Jambulingam சொன்னது…

அனைவருக்கும் இதுபபோன்ற சூழல் அமைவதில்லை. இவ்வாறான அடித்தளங்களே உங்களை மென்மேலும உயர்த்திசெல்கின்றன. பாராட்டுகள்.