குறளன்பன் புலவர் ஆ.வே.இராமசாமியார்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூரை அடுத்த
வைரிசெட்டிப்பாளையம் என்னும் ஊரில் தமிழ்த்தொண்டும், திருக்குறள் தொண்டும் செய்துவந்து
சான்றோர் குறளன்பன் புலவர் ஆ. வே. இரமசாமியார் அவர்கள் நேற்று (14.08.2014) அதிகாலை 2 மணியளவில்
இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எந்த ஓர்
இலக்கிய நிகழ்வு நடைபெற்றாலும் ஐயா அவர்களை அங்குக் காணலாம். 1987 முதல் ஐயா அவர்களின்
தமிழ்ப்பணியை நான் நன்கு அறிவேன். அவர் மகன் திருவள்ளுவன் அவர்கள் குடந்தை ஓவியக்கல்லூரியில்
பயின்றபொழுது என் மாணவராற்றுப்படை நூலுக்கு ஓவியம் வேண்டி அங்குச் சென்றேன். அப்பொழுது(1989-90
அளவில்) குறளன்பன் ஆ.வே.இராமசாமியார் குறித்து முழுமையாக அறிந்தேன்.
அதுபோல் என் கெழுதகை நண்பரும் தமிழ்ப்பற்றாளரும்,
புலவரின் தலைமாணாக்கருமாகிய சிவ. முத்துக்குமாரசாமி அவர்கள் ஐயாவின் திருக்குறள் தொண்டையும்
பண்பு உள்ளத்தையும் மிக உயர்வாகச் சந்திப்பின் பொழுதுகளில் எல்லாம் எடுத்துரைக்க மகிழ்ந்து
கேட்டுள்ளேன். அதன்பிறகு நடந்த தமிழ்வழிக் கல்வி மாநாடு, உண்ணா நோன்பு அறப்போர்கள்,
திருவள்ளுவர் தவச்சாலை விழாக்கள், தமிழ்ச்சான்றோர் பேரவை விழாக்கள், திருச்சிராப்பள்ளித்
தமிழ்ச்சங்க விழாக்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் விழாக்கள், குளித்தலை தமிழ்க் கா.சு நினைவு இலக்கிப்பேரவை விழாக்களில்
எல்லாம் குறளன்பன் அவர்களைப் பன்முறை கண்டு உரையாடும் பேறுபெற்றுள்ளேன்.
அப்பழுக்கற்ற தூய பண்பாளர் அவர். திருக்குறளைக்
கற்றதோடு அமையாமல் அதன் வழி நின்று காட்டியவர். இன்பத்தில் பங்குகொள்ளும் இற்றைப் போலி
மாந்தர்களிடையே, பழகியோர் துன்பத்தில் இருந்தால் அத்துன்பத்தில் தேடிச் சென்று பங்கேற்ற பெருமகனார்
இவர். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், திருக்குறள் பற்றாளர்கள், தமிழறிஞர்களுக்கு
என் ஆழ்ந்த வருத்தத்தை மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன். குறளன்பன் ஆ.வே. இராமசாமியார்
அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைத்து உலகத் தமிழர்களுக்கு அவர் பெருமைமிகு
பணிகளை நினைவூட்டுகின்றேன்.
ஆ.வே.இராமசாமியார் அவர்கள் திருச்சிராப்பள்ளி
மாவட்டம் துறையூரை அடுத்த ஆலத்துடையான்பட்டி என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர்கள் வேங்கடாசலம்
ரெட்டியார், செல்லம்மாள் ஆகியோரின் அன்பு மகனாக 11.04.1928 இல் பிறந்தவர். இவருடன்
பிறந்தோர் ஆண்மக்கள் மூவரும், பெண்மக்கள் இருவருமாக அமைந்தனர். திருவாட்டி கி. தனம்
அவர்களை இல்லறத் துணையாக ஏற்றுத் திருவள்ளுவன், தொல்காப்பியன் என்னும் மக்கட்செல்வங்களைப்
பெற்று மண்ணுலகில் நீடுபுகழுடன் வாழ்ந்தவர்.
ஆ.வே. இராமசாமியார் அவர்கள் உள்ளூர்த் திண்ணைப்பள்ளியில்
தொடக்கக் கல்வியையும், அடுத்து மேட்டுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் பயின்றும் கல்வி
அறிவு பெற்றார். திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழ்க்கல்லூரியில்
இவருக்குப் பேராசிரியர்களாக வாய்த்த சான்றோர்கள் இராம.கோவிந்தசாமி, அ.அரங்கசாமி, சிவப்பிரகாச
சேதுராயர், எச்.வி. வேங்கடராமர், என்.இராமசாமி ஆவர்.
வைரிசெட்டிப்பாபளையம் சுவாமி விவேகானந்தா
வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
வைரிசெட்டிப்பாளையம் திருக்குறள் பேரவைச் செயலாளராகப் பணியாற்றியவர். 1985 இல் நடைபெற்ற
ஆசிரியர் கூட்டமைப்பின் அறப்போரில் பங்கேற்றுச் சிறை சென்றவர். தமிழ்வழிக் கல்விக்காகத்
தமிழ்ச்சான்றோர் போரவை சென்னையில் நடத்திய சாகும் வரையிலான உண்ணா நோன்பில் பங்கேற்றவர்.
தில்லியில் நடந்த உண்ணாநிலைப்போரிலும் பங்கேற்றவர்.
தம் உழைப்பில் கிடைத்த நிதியில் தாம் பணிபுரிந்த
பள்ளியில் தம் பெற்றோர் பெயரிலும், அல்லூர் தவச்சாலையிலும், குளித்தலை கா.சு. பிள்ளை
நினைவு இலக்கியக்குழுவிலும், தலைநகர்த் தமிழ்ச்சங்கத்திலும் பல அறக்கட்டளைகளை நிறுவித்
தம் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியவர்.
மாவட்ட நூலகம், ஒன்றியத் தொடக்கப்பள்ளி,
தமிழ்த்தாய்த் திருக்கோயில், தமிழ்க்குடில் உள்ளிட்ட அமைப்புகளின் புரவலராகத் திகழ்ந்தவர்.
திருக்குறள் தொடர்பில் 13 நூல்களும், இலக்கியத்
திறனாய்வு அடிப்படையில் 4 நூல்களும் பா நூல்கள் 5, தன்வரலாற்று நூல்கள் 2, பயண நூல்கள்
2, தன்னம்பிக்கைநூல் 1 என்ற அளவில் தமிழுக்கும் மக்களுக்கும் பயன்தரத்தக்க நூல்களை
வழங்கிய பெருமகனார்.
வீடுபோற்றவும், நாடுபோற்றவும் வாழ்ந்த, துன்பத்தைக்
கண்டு அஞ்சாத தமிழுருவான புலவர் ஆ.வே.இராமசாமி அவர்களின் பெருமை இவ்வுலகு உள்ள அளவும் நின்று
நிலவட்டும்.
வீடியோ இணைப்பு
முதுமுனைவர் இரா.இளங்குமரனார் வழங்கும் இரங்கலுரை
1 கருத்து:
இவரைப் பற்றி நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. ஒரு நல்ல மனிதரைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.
கருத்துரையிடுக