முனைவர்
க. வீ. வேதநாயகம்
[முனைவர் க. வீ. வேதநாயகம் ஈரோடு மாவட்டம் கணக்கம்பாளையத்தில் பிறந்தவர். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றவர். ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் தமிழாசிரியராகவும், தலைமையாசிரியராகவும், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகவும் பணியாற்றியவர், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவராகவும் பொறுப்பு ஏற்றவர். காரைக்கால் அம்மையாரையும் அக்கம்மாதேவியையும் ஒப்பிட்டு, முனைவர்பட்ட ஆய்வு செய்தவர். பன்னூலாசிரியர்]
முனைவர் க. வீ. வேதநாயகம் அவர்கள் ஈரோடு மாவட்டம் கணக்கம்பாளையத்தில் வீரப்ப முதலியார், இராமாயம்மாள் ஆகியோரின் மகனாக 02.10.1950 இல் பிறந்தவர். கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றவர். அருகில் உள்ள கள்ளிப்பட்டி என்னும் ஊரில் ஆறாம் வகுப்பு முதல் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றவர். மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் (1967-71) தமிழ் பயின்றவர். அப்பொழுது அக்கல்லூரியில் பேராசிரியர்களாக விளங்கிய பெருமக்கள் வெ.சு. அழகப்பன், மு. இராமலிங்கம், சோமா, கோவிந்தராசன், சங்கரநாராயணன் பிள்ளை உள்ளிட்டோர் ஆவர். குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஓராண்டு தமிழாசிரியர் பயிற்சி பெற்று, (1972) புலவர் ஆனவர்.
நீலமலை மாவட்டம் நடுவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1973 இல் ஆசிரியர் பணியைத் தொடங்கிய முனைவர் க. வீ. வேதநாயகம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெ. மேட்டுப்பாளையம் என்னும் ஊரில் 1974 முதல் 1984 வரை ஆசிரியர் பணியாற்றியவர். பின்னர் பங்களாபுதூர் என்னும் ஊரின் அரசு மேல்நிலைப் பள்ளியில் (1984-1990) பணியாற்றியவர்.
மைசூரில் அமைந்துள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் பத்து மாதங்கள் கன்னடம் பயின்று பட்டயச் சான்று பெற்றவர். இக் கன்னட மொழியறிவு இவர்தம் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பெரிதும் உதவியது. 1990 முதல் 1995 வரை பள்ளித் துணை ஆய்வாளராக நிர்வாகப் பணியினை ஏற்றவர். 1995 முதல் 2000 வரை கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியேற்றவர். எழுமாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணியாற்றியும், பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றியும் மாணவர்களின் உள்ளங்களில் தமிழ் பயிற்றுவித்தலால் புகழ்பெற்று விளங்கியவர்.
ஈரோட்டில் அனைவருக்கும் கல்வித்திட்டம் தொடங்கியபொழுது மேற்பார்வையாளராகத் தூக்கநாயக்கன் பாளையத்தில் பணியாற்றியவர். இவர்தம் நிர்வாகத் திறனுக்குப் பரிசு போலக் காசப்பக் கவுண்டன்புதூரின் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகவும் 2007 இல் மலையப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகவும் பணியாற்றியவர். இக்காலகட்டத்தில் இவர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகக் கூடுதல் பொறுப்பையும் வகித்தவர். கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றியபொழுது 2009 ஆம் ஆண்டு மே மாதம் தம் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்.
முனைவர் க. வீ. வேதநாயகம் அவர்கள் பணியிலிருந்தபொழுது தமிழகத் தமிழாசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைசென்றவர். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டவர்(2005-2010)
முனைவர் க. வீ. வேதநாயகம் அவர்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் வழியாக இளம் முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்தவர். இவர்தம் ஆய்வுத் தலைப்பு “ஈரோடு மாவட்டச் சிறுதெய்வ வழிபாடு” என்பதாகும். இவரின் நெறியாளர், ஈரோடு கலைக்கல்லூரியில் பணியாற்றிப் பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் நா. ஆறுமுகம் ஆகும். ஈரோட்டுப் பேராசிரியர் பாலமுருகன் அவர்களின் மேற்பார்வையில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் வழியாகக் காரைக்காலம்மையார் அக்கம்மாதேவி - ஓர் ஒப்பீடு என்னும் தலைப்பில் ஆய்வேடு அளித்து முனைவர் பட்டம் பெற்றவர் (இவ்வாய்வேடு பின்னாளில் வாழ்வியலும் வழிபாடும் என்னும் தலைப்பில் நூலாக்கம் பெற்றது.)
முனைவர் க. வீ. வேதநாயகம் அவர்கள் 11.03.1973 இல் துளசி அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் இல்லறப் பயனாய் மருத்துவர் வே. மோகன்குமார், ஆசிரியர் வே. மணிமேகலை ஆகியோர் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.
திருக்குறள் பேரவை வாயிலாகவும், தமிழ்வளர்ச்சித்துறை நிகழ்வுகள் வாயிலாகவும் இவர் தமிழ்ப்பணியாற்றி வருபவர். முன்னாள் மாணவர்கள் சங்கம், தமிழகத் தமிழாசிரியர் கழகம் முதலான அமைப்புகளில் தம்மை இணைத்துக்கொண்டு தமிழ்ப்பணியாற்றிவரும் இவர் மிகச் சிறந்த ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஈரோட்டுப் புலவர் செ. இராசு அவர்களின் நெறிப்படுத்தலில் கொங்குநாட்டு வரலாறுகளைச் சொல்லும் அரிய நூல்கள் பலவற்றைப் படைத்துள்ளார்.
பவானி ஆற்றையும் அதனை ஒட்டியப் பகுதியையும் தம் பணிச்சூழலுக்கு உரிய பகுதிகளாகப் பெற்ற முனைவர் வேதநாயகம் அப்பகுதியின் மக்கள் வரலாற்றைக் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் தந்துள்ளார். அதுபோல் இராமானுசர் வந்துசென்ற தம் ஊரான கணக்கம்பாளையத்தின் சிறப்பினை “உடையவர் திருவடி” நூலில் சிறப்பாக விளக்கியுள்ளார். “முத்தமிழோடு நடந்த மூவர்” என்னும் தலைப்பில் அமைந்த நூலில் தேவாரத் தமிழ் தந்த ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் வரலாற்றைச் சிறப்பாக வடித்துத் தந்துள்ளார். “நம்ம ஊரு” என்ற தலைப்பில் இவர் எழுதியுள்ள நூலில் தம் பிறந்த ஊரின் சிறப்புகளை உரிய சான்றுகளுடன் விளக்கி எழுதியுள்ளார்.
“புனல்பாய்
மகளிராட வொழிந்த
பொன்செய்
பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்து
வருவானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற, தானே” (பதிற்றுப்பத்து 86)
என்று போற்றப்படும் பவானி ஆற்றின் வளமும் வரலாறும் குறிப்பிட்டு, பவானி போற்றுதும் என்ற தலைப்பில் வேதநாயகம் எழுதியுள்ளார். பவானி ஆற்றின் சிறப்பினையும் அப்பகுதி மக்களின் சிறப்பினையும் தாங்கிய இந்த நூல் தமிழ் இலக்கிய உலகில் என்றும் போற்றப்படும் நூலாகும். தமிழாராய்ச்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் புலவர் முனைவர் க. வீ. வேதநாயகம் அவர்கள் தற்பொழுது கணக்கம்பாளையத்தில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவருகின்றார்.
முனைவர் க. வீ. வேதநாயகம் அவர்களின் தமிழ்க்கொடை:
1. ஈரோடு மாவட்டச் சிறுதெய்வ வழிபாடு, 2009
2. வாழ்வியலும் வழிபாடும், 2010
3. உடையவர் திருவடி, 2015
4. பாவலர் போற்றுதும், 2018
5. முத்தமிழோடு நடந்த மூவர், 2021
6. பவானி போற்றுதும், 2021
.png)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக