நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 12 ஆகஸ்ட், 2015

மதுரை இராம. விசுவநாதன் அவர்கள்… இராம. விசுவநாதன் 

இருபதாண்டுகளுக்கு முன் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் ஆய்வு மாணவனாகப் பயின்றுகொண்டிருந்த நேரத்தில் நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் மாணவர்களுக்கான ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியை அறிவித்தது. பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதி முதல்பரிசு பெற்றேன். அந்தப் பரிசுக்குரிய தங்கப் பதக்கத்தைக் கொடையாக வழங்கியவர் மதுரை இராம. விசுவநாதன் ஐயா. பாளையங்கோட்டையில் எங்களின் முதல் சந்திப்பு அமைந்தது. அன்று முதல் இன்று வரை என்னுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருபவர்.

இராம. விசுவநாதன் ஐயா ஏற்பாட்டில் முன்பொருநாள் மதுரையில் நடைபெற்ற ஏழிளந்தமிழ் விழாவில் பேச என்னை அழைத்திருந்தார். வ.சுப. மாணிக்கனார் பற்றிப் பேசியதாக நினைவு. மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் என் பேச்சு அமைந்தது. அந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் தமிழண்ணல் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களைச் சந்தித்ததாகவும், அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிய முனைவர் வீர. முத்துக்கருப்பன் ஐயா அவர்களின் முன்னிலையில் பேசியதாகவும் என் நினைவில் பதிவாகியுள்ளது.

இராம. விசுவநாதன் ஐயா ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நன்னெறி, நல்வழி உள்ளிட்ட ஏழு நீதி நூல்களும் இளமையில் படித்தால் வாழ்க்கை செம்மையடையும் என்ற கருத்துடையவர். பண்டைய நாளில் நகரத்தார் பெருமக்கள் பெரும்பாலும் தம் மழலைச் செல்வங்கள் இந்த நெறி நூல்களைக் கற்க வழி செய்துவிடுவார்கள் என்றும் நான் அறிந்துள்ளேன். இராம. விசுவநாதன் அவர்கள் நன்மக்களை உருவாக்கும் நோக்கில் தம் ஆசிரியர் வ.சுப.மாணிக்கம் அவர்களின் நினைவுநாளில் ஆண்டுதோறும்  ஏழிளந்தமிழ் நூல்களிலிருந்து போட்டிகளை வைத்து, மாணவர்களுக்குப் பரிசு வழங்கி ஊக்கப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவ்வாறு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இந்த நிகழ்வு தமிழ் வளர்த்த மதுரையில் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றது.


    இராம. விசுவநாதன் அவர்கள் சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் பிறந்தவர் (27. 01. 1932). பெற்றோர் இராமநாதன் செட்டியார், ஏகம்மை ஆச்சி. இவர் தம் பிறந்த ஊரான நெற்குப்பையில் இளமைக்கல்வி பயின்றவர் (பேராசிரியர் தமிழண்ணல் ஐயா அவர்களின் பிறந்த ஊரும் இதே நெற்குப்பைதான்). ஆறாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர்.

உயர்நிலைக் கல்விக்குப் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இடைநிலை வகுப்பும், இளம் அறிவியல் (வேதியியல்) வகுப்பும் பயின்றவர். இங்குப் பயின்றபொழுது மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பேராசிரியர் இரா. சாரங்கபாணி, பேராசிரியர் முத்துசிவன், பேராசிரியர் தேசிகன் உள்ளிட்ட சான்றோர் பெருமக்களிடம் தமிழ் பயின்றவர்.

பர்மாவில் புகழ்பெற்ற ஆங்சாங் என்னும் தலைவருக்கு இயற்பியல் பயிற்றுவித்த பேராசிரியர் கிருட்டிணன் அவர்களிடம் இயற்பியல் கற்ற பெருமை நம் இராம. விசுவநாதன் அவர்களுக்கு உண்டு.

பட்டப் படிப்புக்குப் பிறகு கலைத்தந்தை கருமுத்து. தியாகராச செட்டியார் அவர்களின் மீனாட்சி ஆலையில் பணி கிடைத்து, இருபத்திரண்டு ஆண்டுகள் அந்த ஆலையில் பணியில் இருந்தார். பணியின் பொருட்டு ஆமதாபாத், கோவை, மும்பை போன்ற இடங்களில் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பிறகு 1972 முதல் தனியாக நூல்வணிகத்தில் ஈடுபட்டுப் பொருளீட்டினார். மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் கொண்ட நம் இராம . விசுவநாதனார் அவர்கள் தம் வணிக நிறுவனத்திற்குக் கங்கை காவேரி வாணிகத்தொடர்பு என்று பெயரிட்டார். எழுத்திலும் பேச்சிலும் மொழிச் செப்பம் விரும்பும் இராம. விசுவநாதனார் அவர்கள் பிறமொழி கலந்து பேசுவோர் தம் நண்பர்களாக இருப்பினும் கடுமையாக இடித்துக் கூறும் வழக்கம் உடையவர்.

அகவை முதிர்ந்த நிலையில் மதுரையில் அமைதி வாழ்க்கை வாழ்ந்துவரும் இராம. விசுவநாதன் அவர்கள் பொருள்பொதிந்த வாழ்க்கை என்னும் தலைப்பில் இதுவரை இருபத்தைந்து தொகுதிகள் நூல்களை எழுதி மணிவாசகர் பதிப்பகம் வழியாக வெளியிட்டுள்ளார். உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்வுகளை நினைவு ஓவியமாக்கி இந்த நூலை மக்களுக்கு வழங்கி வருகின்றார். இந்த நூல்களில் தம் வாழ்க்கைப் பட்டறிவுகளை உணர்வுத் தெறிப்புகளாக வழங்கியுள்ளர். வாழ்வு, கல்வி, மொழி குறித்த பல சிந்தனைகள் இவர் நூலில் குமிழ்விட்டு நிற்கும். பேராசிரியர் கதி. சுந்தரம், பேராசிரியர் இரா. சாரங்கபாணி, பேராசிரியர் பாலுசாமி உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் அணிந்துரைகளால் இந்த நூல்வரிசை சிறப்புடன் விளங்குகின்றது.

தமிழ்ச் சிந்தனையாளர் இராம. விசுவநாதன் அவர்கள் தம் சிந்தனைகளைத் தொடர்ந்து நூல்களாக வடித்துத்தர வேண்டுமாய் அன்புடன் வேண்டுகின்றேன். அவரின்  தமிழுள்ளம் வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.


கருத்துகள் இல்லை: