நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

முனைவர் இராச. கலைவாணியின் தொல்காப்பியத்தில் இசை - தொன்மையும் தொடர்ச்சியும் அறிமுகம்

                     முனைவர் இராச. கலைவாணி

  பேராசிரியர் இராச. கலைவாணி அவர்களின் தொல்காப்பியத்தில் இசை தொன்மையும் தொடர்ச்சியும் என்ற நூலினை அண்மையில் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. 608 பக்கங்களில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நூல் தொல்காப்பியத்தை இசைப்பார்வைகொண்டு நோக்கி எழுதப்பட்டுள்ள அரிய நூலாகும்.

  தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள் என்று பேராசிரியர் வீ. ப. கா. சுந்தரம் அவர்கள் நூல் எழுதியிருப்பினும் முனைவர் இராச. கலைவாணியின் நூல் தொல்காப்பியத்தில் புதைந்துள்ள இசைக்குறிப்புகளைச் சங்க இலக்கியப் பின்புலத்தில் சிறப்பாக விளக்குகின்றது. இன்றைய ஆய்வாளர்கள் பெரும்பாலும் சங்கப் பனுவல்களை மேலோட்டமாகப் பார்க்கும் பார்வை கொண்டவர்களாக உள்ளனர். இச் சூழலில் இராச. கலைவாணி அவர்களிடம் இசைப்புலமை குவிந்துகிடப்பதால் மிக நுட்பமாகத் தொல்காப்பியத்தையும் சங்கப் பனுவல்களையும் ஊடுருவிப்பார்க்கும் ஆற்றல் பெற்றுள்ளதை அவரின் நூல் மெய்ப்பிக்கின்றது.

முனைவர் இராச. கலைவாணி அவர்களைப் படிக்கும் காலத்திலிருந்து  அறிவேன். இசைப் பேராசிரியர் ஞானாம்பிகை குலேந்திரன் அம்மா அவர்களிடம் அவர் இசையாய்வு மேற்கொண்ட நாள் முதல் அவரின் குரல் இசையில் எனக்கு ஈடுபாடு உண்டு. சிலவாண்டுகளுக்கு முன் சங்க இலக்கியத்தில் இசை என்னும் தலைப்பில் அவர் வரைந்த நூல் இசைத்துறையிலும் தமிழ் நூல்களிலும் அவர் நல்ல பயிற்சி உடையவர் என்பதை எடுத்துரைத்தது.

மக்கள் தொலைக்காட்சியில் இராச. கலைவாணி அவர்கள் நாளும் தமிழிசை முழங்கி விளக்கம் சொன்ன பாங்கால் உலக அளவில் புகழ்பெற்ற பாடகராக அனைவருக்கும் அறிமுகம் ஆனவர். அதுபோல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற பெருமைக்குரியவர். இத்துணைச் சிறப்புகளைப் பெற்ற இவரின் நூல்தான் தொல்காப்பியத்தில் இசை என்பது.


தொல்காப்பியத்தில் இசை என்னும் இந்த நூல் நூல் முகவுரை, இசை, பாவகை, பண்கள், இசைக்கருவிகள், இசை வடிவங்கள், இசை அழகணிகள், இசைக்கலைஞர்கள், கூத்துக்கள், நிறைவுரை என்றவாறு இயல் பிரிக்கப்பட்டுப் பொருத்தமான  ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டுள்ளது.

இந்த நூல் தொல்காப்பியத்தை மட்டும் சுற்றிச் சுழலாமல் சங்கப் பனுவல்கள், நிகண்டுகள், சமய நூல்கள், சிற்றிலக்கியங்கள், இசை உருப்படிகள் எனப் பலதுறைச் செய்திகளால் புனையப்பட்டுள்ளது. பன்னூல் பயிற்சியும் இயைத்துக்காட்டும் பேராற்றலும் கொண்ட இராச. கலைவாணி அவர்களின் கடும் உழைப்பு பக்கங்கள்தோறும் மின்னி மிளிர்கின்றன.

 பேராசிரியர் இராச. கலைவாணி அவர்கள் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் உள்ளிட்ட தமிழிசை அறிஞர்களின் ஆய்வு முடிவுகளை உள்வாங்கிக்கொண்டே இந்த நூலை எழுதியுள்ளார். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் உள்ளிட்ட இசைமேதைகளின் உள்ளம் உணர்ந்ததால் தமிழிசைக்கும் தெலுங்கிசைக்குமான வேறுபாடுகளை நுட்பமுடன் துணிந்து பதிவு செய்துள்ளார்.

தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் இசை என்னும் சொல்லை எடுத்துக்கொண்டு விரிவான விளக்கம் தருகின்றார். இசை என்பதற்கு வசப்படுத்துதல், இயக்குதல், பொருந்துதல், உடன்படுதல், நரம்புகளைக் குறித்தல், ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை, துள்ளலிசை என்னும் ஓசை வகைகளைக் குறித்தல், புகழ்   என்னும் பல்வேறு பொருள்களைத் தருகின்ற  ஒரு சொல்லாக இருப்பதைக் காணமுடிகின்றது என்று முடிவு தருகின்றார் (பக்கம் 2).

 இசை என்னும் சொல் முதன்முதலில் இசை(Music) என்னும் பொருண்மையில் தொல்காப்பியம் உரியியலில்தான் இடம்பெற்றுள்ளது என்று உரைத்துவிட்டு, இசைப்பு இசையாகும் என்னும்(உரி.12) என்னும் நூற்பாவை மேற்கோள் காட்டுகின்றார். மேலும் பேராசிரியர் சி. இலக்குவனார் ஆங்கில மொழிபெயர்ப்பில் “Isaippu” means tune என்று கூறுவதையும், முனைவர் ஆல்பர்ட்டு, Isaippu means music என்று கூறுவதையும் எடுத்துக்காட்டித் தம் கருத்துக்கு அரண் சேர்க்கின்றார் (பக்கம் 11). அதுபோல் கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் என்ற இசை ஒலிக்குறிப்புச் சொற்களையும் சிறப்பாக விளக்கியுள்ளார்.

குடிலம் என்ற சொல்லுக்கு இந்த நூலில் பொருத்தமாக விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒரு நரம்பின் அல்லது சுரத்தின் ஒலியை அந்த  நரம்பில் மீட்டாமல் அதற்கு முன்னோ பின்னோ உள்ள நரம்பில் மீட்டி ஒலித்தல் குடிலம் எனப்படும் என்கின்றார் (பக்கம் 35). இந்த நூலில் இசை விரிவாக்கம் (சங்கதி) குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் “சீருடன் உருட்டல்” என்பதுதான் இசைவிரிவாக்கம் என்று அழகிய விளக்கம் தந்துள்ளார். இசைவிரிவாக்கம் குறித்து விளக்குமிடத்துக் கலைவாணி அவர்களின் தமிழ்ப்பற்றும் மான உணர்வும் முன்னிற்கின்றன.

பா வகைகள் என்னும் இரண்டாம் இயல் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் நான்கு வகை பாக்களையும் எடுத்துரைத்து, அதற்குரிய இன்றைய இராகங்களைக் குறிப்பிடுகின்றது. செப்பலோசை சங்கராபரணத்திலும், அகவலோசை ஆரபி இராகத்திலும் துள்ளலோசை கேதார கௌளை இராகத்திலும் தூங்கலோசை என்பது நாத நாமக் கிரியை இராகத்திலும் பாடப்பெறுதல் வேண்டும் என்று பல்வேறு சான்றுகாட்டி நிறுவுகின்றார்.

பண்கள் என்ற தலைப்பில் தொல்காப்பியர் குறிப்பிடும் பண்களைக் குறிப்பிடும்பொழுது மிகக் கவனமாக ஒருபதிவினைச் செய்துள்ளார். பெரும்பண்களில் முதல் பண் முல்லைப்பண் என்பதை அறிஞர்கள் குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா.சுந்தரம் உள்ளிட்ட அறிஞர்கள் உறுதிசெய்வர். அக்கருத்தை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ள திறம் பாராட்டினுக்கு உரியது. முல்லைப்பண், மருதப்பண், குறிஞ்சிப்பண், நெய்தற்பண் ஆகியவற்றுக்கு இன்றைக்கு வழங்கும் இராகங்களின் பெயர்களைப் பண்ணாய்வு மாநாட்டுச் செய்திகளின் அடிப்படையில் நமக்குத் தருகின்றார்.

இசைக்கருவிகள் என்ற தலைப்பில் யாழ், பறை, பிற தோல் கருவிகளைச் சிறப்பாக அறிமுகம் செய்துள்ளார். சங்க காலத்தில் வழக்கில் இருந்த 66 பறைகளின் பெயர்களை நமக்கு அடையாளம் கண்டு தந்துள்ளார்.

இசைவடிவங்கள் என்ற தலைப்பில் இயன்மொழி, உலா, ஊர், வெண்பா, கேசாதி பாதம், பாதாதி கேசம், தசாங்கம், கண்படைநிலை, துயிலெடைநிலை, தூது, தேவபாணி என்னும் இசைவடிங்கள் விளக்கப்பட்டுள்ளன.

இசை அழகணிகள் என்னும் ஆறாம் இயல் தொல்காப்பியத்தில் இடம்பெறும் முடுகு, வண்ணம் எனப்படும் அரிய இசைப்பகுதிகளை விளக்குகின்றது. சிலம்பு, தேவாரம், நாலாயிரம், பிற உருப்படிகளில் உள்ள முடுகு வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியர் குறிப்பிடும் 20 வண்ணங்களை இப்பகுதியில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

இசைக் கலைஞர்கள் என்னும் ஏழாம் இயல் தொல்காப்பியத்தில் இடம்பெறும் கலைஞர்கள், சங்க நூல்களில் இடம்பெறும் கலைஞர்கள் குறித்த செய்திகளை நிரல்படத் தாங்கியுள்ளது. பாணர், கூத்தர், பாடினி, அகவுநர், அகவர், இயவர், கண்ணுளர், கலப்பையர், கிணைவன், கோடியர், துடியன், பறையன், பாடுநர் குறித்த பல்வேறு விவரங்கள் ஓரிடத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

கூத்துக்கள் என்னும் இறுதி இயல் பண்டைக் காலத்தில்  வழக்கில் இருந்த பல்வேறு கூத்துகளைப் பற்றியும் அதனை நிகழ்த்தியோர் பற்றியும் சிறப்பாக விளக்கியுள்ளது. தொல்காப்பியம் குறிப்பிடும் கூத்துகளை நான்கு நிலையில் நூலாசிரியர் தொகுத்துக் காட்டுகின்றார். அவையாவன:

1. போர் நிகழ்வு கூத்துக்கள்
2. அக வாழ்வியல்கூத்துக்கள்
3. தெய்வ வழிபாட்டுக் கூத்துக்கள்
4. பொதுநிலைக் கூத்துக்கள்

 ஒவ்வொரு நிலத்திலும் நடந்த கூத்துகள் குறிப்பாக குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை உள்ளிட்ட சிலப்பதிகாரப் பகுதியில் நடந்த கூத்துகளை நினைவூட்டிப் பண்டைத் தமிழர்களின் கூத்துத் திறமையை ஆசிரியர் நிலைநாட்டியுள்ளார்

நிறைவில் நூலில் விளக்கப்பட்ட செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுக் கற்பார்க்குப் பெருவிருந்தாக உள்ளது.

பண்டைக் காலத்தில் பண்பாட்டிலும் கலையிலும் மேன்மையுற்றிருந்த தமிழினம் இன்றைய திரைப்படத்தாலும், ஊடகங்களாலும், போலி அரசியல் கயவர்களாலும் தம் பெருமை நினையாமல் உழலும் சூழலில் இந்த அரிய நூலினைத் தமிழ்ப் பெருமை மீட்கும் நூலாக உருவாக்கியுள்ள இராச. கலைவாணி அவர்கள் தமிழர்களின் பாராட்டினுக்கு உரியவர்.

பேராசிரியர் இராச. கலைவாணி அவர்களின் வாழ்க்கையையும் என் பக்கத்தில் பதிந்து வைக்கின்றேன்.

பேராசிரியர் இராச. கலைவாணி அவர்கள் மயிலாடுதுறையையில் பிறந்தவர். தந்தையார் பி.டி.இராஜன் சிறந்த ஓவியர். பல்கலை வித்தகர். தாய் மனோன்மணி அம்மையார் சிறந்த பாடகி. இருவருக்கும் ஐந்தாவது மகளாகப் பிறந்தவர். இளமைக்காலம் முதற்கொண்டே முறையாகத் தன் தந்தையாரிடம் செவ்விசையைக் (கர்னாடக இசை) கற்றவர்.

தொடக்கக் கல்வியை மயிலாடுதுறை எ.இ.எல்.சி நடுநிலைப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பை மணவாழநல்லூரிலும் தொடர்ந்து பள்ளி இறுதிவரை மயிலாடுதுறை புனித சின்னப்பர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். இளங்கலையில் இசையை விருப்பப் பாடமாக ஏற்றுத் திருவையாறு  அரசர் கல்லுரியில் இளங்கலை இசை பயின்றார். திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி இராமசாமி கல்லுரியில் முதுகலை இசை பயின்றவர்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (காவடிச்சிந்துப் பாடல்களின் இசைநயம்),  முனைவர் பட்டப் படிப்பு (பாரதியார் பாடல்களின் இசைநயம்) ஆகியவற்றை நிறைவு செய்துள்ளார். அரசு நடத்தும் மாநில அளவிலான கல்வித் தேர்விலும் (SLET) தேர்ச்சி பெற்றுள்ளார்.

               முனைவர் இரா.கலைவாணி கோயமுத்தூர் அவினாசிலிங்கம் பல்கலைகழக இசைத்துறையில் 1997 முதல் 2013 வரை இணைப்பேராசிரியராக இருந்து தற்போது விருப்ப ஓய்வைப் பெற்றுள்ளார்.

    பல்வேறு இசை ஆய்வரங்கங்கள், மாநாடுகள், பன்னாட்டுக் கருத்தரங்குகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

  பாரதி ஓர் இசைக்களஞ்சியம், சங்க இலக்கியத்தில் இசை, தொல்காப்பியத்தில் இசை தொன்மையும் தொடர்ச்சியும், நாட்டுப்புற இசை வடிவங்களில் நாட்டு நலப்பணித்திட்ட விழிப்புணர்வுப் பாடல்கள் ஆகிய நூல் களை வெளியிட்டுள்ளார்.

               களம், 18, 19, 20 ஆம் நூற்றாண்டு இசைக்கலைஞர்களின் தொண்டு (3 தொகுதி), ஊற்று,  தமிழ்நுங்கு ஆகிய நூல்களின் பதிப்பாசிரியர்.

               சங்க இலக்கியத்தில் இசை என்னும் இவருடைய நூலுக்காக மாநில வங்கியின் 2005 -ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான முதற்பரிசை (10,000) பெற்றுள்ளார்.

               2006-2007 ஆம் ஆண்டின் செம்மொழி இளம் அறிஞர் விருதினை மேதகு குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாட்டில் அவர்களிடமிருந்துப் பெற்றுள்ளார் (1 இலட்சம் பணப்பரிசு).

               சென்னை சோமசுந்தர ஆகமத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் இவருக்குத் தமிழிசை மாமணி என்னும் பட்டத்தினை (2009) வழங்கிச் சிறப்பித்துள்ளது.

               2010 ஆம் ஆண்டு தமிழ்த்திணை என்னும் இணையதளம் தனது ஐந்தாண்டு நிறைவினைக் கொண்டாடும்போது இவருக்குத் தமிழ்த்திணை விருது (5.6.2010-ஏற்காடு) வழங்கிச் சிறப்பித்துள்ளது.

               மக்கள் தொலைக்காட்சியில் தமிழ்க்கூடல் என்னும் நிகழ்ச்சியில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேவாரப் பண்களைப் பற்றி இசையுரை ஆற்றியுள்ளார். மயிலாடுதுறை என்.தொலைக்காட்சி, எ.சி.யு.தொலைக்காட்சி ஆகியவற்றில் தேவாரப் பண்கள், ஆண்டாளின் பாசுரங்களை நாட்டிய அடவுகளுடன் சொற்பொழிவாக ஆற்றியுள்ளார்.

சங்க இலக்கியம், தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம், சித்தர் பாடல்கள், காவடிச்சிந்து, பாரதியார் பாடல்கள் ஆகியவற்றைப் பண்ணோடு பாடும் வல்லமை பெற்றவர். இசைத்துறையில் நம்பிக்கை தரும் ஆய்வுகளை நிகழ்த்தும் பேராசிரியர் இராச. கலைவாணி அவர்களின் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்.




*****குறிப்பு:  

இக்கட்டுரைச் செய்திகளை எடுத்து ஆளும் நண்பர்கள்,  கலைக்களஞ்சியம் செய்வோர், வேறு இணையதளங்களுக்கு உருவம் மாற்றும் நண்பர்கள் எடுத்த இடம் சுட்டுங்கள்

கருத்துகள் இல்லை: