நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

கருவறை கல்லறையானது!


கடந்த ஆறு திங்களாக என் வாழ்க்கையில் சுற்றிச் சுழன்ற சூறாவளிப் புயல் கடந்த 16.01.2014 இல் அமைதியைத் தந்து ஓய்ந்தது. ஆம்! என் தாயார் மு. அசோதை அவர்கள் தம் எழுபதாம் அகவையில் இயற்கை எய்தினார்கள். தைராய்டு புற்றுநோய் என்னும் கொடிய நோய்வாய்ப்பட்டு, சற்றொப்ப இரண்டு ஆண்டுகளாக மருத்துவர்களின் நெறிப்படுத்தலில் உயிர்வாழ்ந்த அவர்கள் தமிழர்களின் திருநாளாம் பொங்கலை அடுத்து இயற்கை எய்தியதால் இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளாமல் குடும்ப நண்பர்களுக்கு மட்டும் தெரிவித்து, எளிய முறையில் உடல் அடக்கம் செய்தோம். அதுபோல் 01. 02. 2014 காரி(சனி)க் கிழமை காலை 10 மணிக்கு எங்களின் பிறந்த ஊரான இடைக்கட்டில் படத்திறப்பு நிகழ்ச்சியையும் எளிய முறையில் செய்து முடித்தோம்.

படத்திறப்பு நிகழ்ச்சிக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தர் மாண்புநிறை முனைவர் பொற்கோ அவர்கள் வருகை தந்து எங்கள் தாயார் மு.அசோதை அவர்களின் படத்தினைத் திறந்துவைத்து அரியதோர் நினைவேந்தல் உரை நிகழ்த்திப் பெருமை சேர்த்தார்கள்.
முனைவர் பொற்கோ அவர்கள் படத்தைத் திறந்து வைத்தல். அருகில் காசி.அன்பழகன், மு.அறிவழகன்


படத்தைத் திறந்துவைத்த முனைவர் பொற்கோ, 
மருத்துவர் பூங்கோதை, திரு.காசி.அன்பழகன், மு.அறிவழகன்


முனைவர் பொற்கோ அவர்கள் நினைவேந்தல் உரை

செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் அரியலூர் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளருமான காசி. அன்பழகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் உடையார்பாளையம் குறுநிலமன்னர் (ஜமீன்) குடும்பத்தைச் சேர்ந்தவரும் எங்கள் குடும்ப நண்பருமாகிய திரு. சிவக்குமார் அவர்கள் கலந்துகொண்டு படத்திற்கு மலர்தூவி சிறப்புச் செய்து எங்களுக்கு ஆறுதல் கூறியமை இங்குப் பெருமையுடன் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும்.


உடையார்பாளையம் அரசகுடும்பம் சார்ந்த 
திரு. சிவக்குமார் அவர்கள்


ஆறுதல் கூறிய மருத்துவர் பூங்கோதை அம்மா அவர்களைத் தமிழாசிரியர் இரேவதி செயராமன் அவர்கள் சிறப்பித்தல்

இந்த நிகழ்ச்சிக்கு எங்கள் உறவினர்கள், நண்பர்கள், ஊர்ப் பெரியோர்கள் நேரில் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர். தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாகவும் நேரிலும் ஆறுதல் மொழிகளை உரைத்த அண்ணன் அறிவுமதி, அண்ணன் வ.கௌதமன், சிங்கப்பூர்த் தமிழ்வள்ளல் அண்ணன் எம்..முஸ்தபா, புலவர் செந்தலை கௌதமன், முனைவர் உ. பிரபாகர், பேராசிரியர் திருமாறன் (திருப்பூர்), கவிஞர் ஆறு. செல்வன், திரு. பஞ்சவர்ணம் ஐயா, குவைத்தில் வாழும் தமிழ்நாடன், பழமலை கிருட்டிணமூர்த்தி, எழுத்தாளர் நா. அசோகன், முனைவர் நாக. கணேசன், தம்பி மணிகண்டன், உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் இணையத்தில் பகிர்ந்துகொண்ட தோழர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி.

கரை கடந்த வரலாறு

அம்மா வழக்கம்போல் புதுச்சேரிக்கு வந்தபொழுது ஒருநாள் கழுத்திலிருந்த கட்டியை எங்களிடம் காட்டியதும் காது மூக்குத் தொண்டை வல்லுநர் ஒருவரிடம் மருத்துவம் பார்க்கச் சென்றோம். அந்த மருத்துவரும் ஆய்வு செய்து சில மருந்துகளை எழுதித் தந்தார். மாதம்தோறும் மருத்துவரை அண்மி, மருத்துவம் பார்ப்பது வழக்கமாக இருந்தது. நான் ஊரில் இல்லாத பொழுது என் மனைவி அழைத்துச் சென்று மருத்துவம் பார்ப்பதும் உண்டு. சிலபொழுது ஓமியோ மருத்துவ வல்லுநர் அண்ணன் ப.. இலெனின் அவர்களும் மருந்துகள் தந்து அன்புமொழிகளையும் பகர்வார். இவ்வாறு மாதங்கள் உருண்டோடின.

ஒரு நாள் காது மூக்கு, தொண்டை மருத்துவர் தைராய்டு சார்ந்த ஓர் ஆய்வு செய்யப் பரிந்துரைத்தார். அதன் முடிவைப் பார்த்த மருத்துவர் வேறொரு மருத்துவரிடம் சென்று அறுவைப் பண்டுவம் செய்யும்படி பரிந்துரைத்தார். அவ்வாறு சென்றபொழுது அந்த மருத்துவர் இன்னொரு ஆய்வு செய்யலாம் எனவும் அதன் பிறகு அறுவைக்குச் செல்லலாம் எனவும் குறிப்பிட்டார். அதன்படி இரண்டாவது ஆய்வு நடைபெற்றது. ஆய்வகத்தில் இருந்த நண்பர்கள் அறிக்கையைத் தரும்பொழுது ஐயப்பாட்டுடன் தந்தனர். அந்த அறிக்கையைப்  பார்த்த மருத்துவர் என் தாயாரை வெளியே அனுப்பிவிட்டு என்னிடம் தனித்து, புற்றுநோய்த் தாக்குதல் பற்றிக் குறிப்பிட்டுச் சென்னைக்குச் செல்லும்படி சொன்னார்.

அடுத்த நாளே சென்னைக்குச் சென்று பார்த்தோம். பலநாள் தங்கி ஆய்வு செய்வதும் மருத்துவம் பார்ப்பதுமாக இருந்தோம். இந்த நேரத்தில் இலண்டனில் நடைபெறும் உலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக முன்பே பதிவு செய்திருந்த வானூர்திச் சீட்டுகள் நினைவுக்கு வந்தன. இலண்டன் செல்லும்பொழுது முன்னதாக பிரான்சுக்கு வரும்படி எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா, கவிஞர் பாரதிதாசன் போன்றோர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி பிரான்சு, செருமன், சுவிசர்லாந்து செல்லும்படித் திட்டமிட்டு வானூர்திச் சீட்டுகளும் வாங்கிவிட்டேன். இந்த நிலையில்தான் தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. மருத்துவர்களின் தொடர் அச்சுறுத்தும் அறிக்கைகள் என் பயணத்திட்டத்தை மாற்றும்படி செய்தது.

அதாவது இந்தியாவிலிருந்து நேரே இலண்டன் மட்டும் சென்று குறைந்த நாளில் மீள்வது என்று திட்டமிட்டுப் புதியதாகப் பயணச்சீட்டு வாங்கியதால் செலவு இரட்டிப்பானது. ஒரு கிழமைப் பயணமாக இலண்டன் சென்றிருந்தாலும் மணிக்கொருமுறை தொலைபேசி வழியாக வீட்டினருடன் தொடர்பில் இருந்தேன். என் உடல் இலண்டனில் உலவினாலும் உயிர் புதுவையில் இருந்தது. எது நடந்தாலும் உதவுவதற்கு ஐயா பஞ்சவர்ணம் அவர்கள் ஆயத்தமாக இருந்து என்னை வழியனுப்பி வைத்தார்கள்.

அடையாறு மருத்துவமனை மருத்துவத்தில் பயனில்லை என்று உணர்ந்த தாயாரும் தங்கையும் இடையில் மருத்துவ அறிக்கைகளைக் கூட வாங்காமல் புதுச்சேரி வந்துவிட்டனர். இலண்டனில் இருந்த எனக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

இலண்டனிலிருந்து புதுவை திரும்பியதும் சிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த நண்பர்களின் துணையால் புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்களை அணுகி மருத்துவம் பார்த்தோம். கவிஞர் ஆறு. செல்வம் ஐயா அவர்கள் அன்புடன் முன்வந்து பல உதவிகளைச் செய்தார். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுப் புகழ்பெற்ற மருத்துவர்கள் உற்றுநோக்கி, மருத்துவம் பார்த்தார்கள். புற்றுநோய்த் துறையில் புகழ்பெற்ற மருத்துவர்களுக்கு நோயின் வலிமை தெரிந்தது போலும். நோயை முற்றாகக் குணப்படுத்த முடியாது எனவும் சிறிது நாள் உயிர் வாழ்க்கையை நீட்டிக்க முடியும் என்றும் கூறினர்

இதனிடையே மருத்துவ அறிக்கைகளை அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவரான மருத்துவர் சித்தானந்தம், புற்றுநோய் ஆராய்ச்சியாளர் முனைவர் குணா அம்மா ஆகியோருக்கும் அனுப்பியிருந்தேன். அவர்களுக்கும் நோயின் வீரியம் தெரிந்து, என்னை அமைதிப்படுத்தியும் ஆறுதல் மொழிகள் தந்தும் தேற்றினர்.

இதனிடையை அம்மா உயிருடன் இருக்கும்பொழுதே தம்பிக்குத் திருமணத்தை முடிக்க வேண்டும் என்று கருதி ஒரு கிழமையில் அதற்கான ஏற்பாட்டையும் முடித்துத் திருமணத்தையும் சிறப்பாக நடத்தி முடித்தோம்.

நான் புதுச்சேரியிலும், பிறந்த ஊரிலுமாக அடிக்கடி இருக்க வேண்டியிருந்தது. வெளியூர்ச் செலவுகளை முற்றாகத் தவிர்த்தேன். வழக்கத்திற்கு மாறாகப் பொங்கல் விடுமுறைக்குக் குடும்பத்தினரை ஒரு கிழமைக்கு முன்பாக ஊரில் கொண்டு போய்விட்டுத் தாயாருக்குப் பணிவிடை செய்யும்படி பணித்திருந்தேன். பொங்கலன்று ஊரில் இருந்தேன். மாட்டுப்பொங்கலன்று அலுவல் நிமித்தம் புதுச்சேரியில் இருந்தேன். மறுநாள் (16.01.2014) வைகறையில் புறப்பட்டு ஊருக்குச் சென்றேன். வீட்டை நெருங்கும்பொழுது பணிப்பெண் அம்மாவுக்குப் பாலூட்டி விடைபெற்றார். அந்த இடைவெளியில் நான் வீட்டில் நுழைந்து தாயாரைப் பார்க்கும்பொழுது உயிர் விடைபெற, உடல் மட்டும் அசைவின்றி அமைதியில் மீளாத் துயிலில் இருந்தது.

பல்லாயிரம்முறை
பாடையேறினேன்!
ஒருமுறை
அம்மா!

3 கருத்துகள்:

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

அம்மாவின் மறைவு என்பது நம் நெஞ்சை உலுக்குவது. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மா அம்மாதான். சடங்குகளில் கலந்துகொள்ள இயாலமை வருந்தச் செய்கிறது

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அய்யா மிகவும் வருந்துகிறேன். தங்களின் வலைப்பதிவு பார்த்தே தாயாரின் மறைவுச் செய்தி அறிந்து வருந்தினேன். எனது ஆழ்ந்த இரங்கல் அய்யா.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா